எழுத்தாளர் யேசுராசா அவர்கள் அண்மையில் தனது முகநூற் பதிவொன்றில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:
“நா. பார்த்தசாரதியின் ‘குறிஞ்சிமலர்’, ‘பொன்விலங்கு’, போன்ற நாவல்களை எனது பதின்ம வயதில் விருப்புடன் வாசித்திருக்கிறேன். ஒழுக்க விழுமியங்களையும் இலட்சிய நோக்குகளையும் எம்மனதில் விதைத்தவை அவை (மு. வரதராசனின் படைப்புகளும் அவ்வாறான வையே!). தற்போது எமது விமர்சகர் பலர், இவர்களது படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை; இன்றைய நிலையில் அவை இலக்கியமாக என்னைக் கவருமா என்பதை, மறுபடி வாசித்த பின்னர்தான் கூற முடியும்.”
இதற்கான எனது எதிர்வினை: நிச்சயமாகக் கவராது. ஆனால் அவை உங்கள் வாசிப்பின் ஒரு காலகட்டத்தை நினைவூட்டுவதால் நிச்சயம் அவற்றைக்கையிலெடுத்ததும் மகிழ்ச்சியைத்தரும். இன்றைய நிலையில் அவை இலக்கியமா என்று பார்க்கக்கூடாது. அன்றைய நிலையில் ,உங்களது இளமைபருவத்தில், அவை உங்களைக் கவர்ந்ததா என்பதுதான் முக்கியம்.ஏனென்றால் இன்று நீங்கள் இவ்வளவுதூரம் வளர்ந்திருக்கின்றீர்கள் என்றால் அதற்குக் காரணம் அன்று நீங்கள் குறிஞ்சி மலர், பொன்விலங்கு போன்ற வெகுசனப்படைப்புகளை வாசித்து, வாசிப்பதில் ஆர்வம்கொண்டு வளர்ந்ததால்தான். அவையெல்லாம் ஒருவரின் வாசிப்பின் பரிணாம வளர்ச்சியில் தவிர்க்க முடியாத படிக்கட்டுகள்.