எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனீபாவின் மானுட நேயம்!

எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனீபாவின் மானுட நேயம்!எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா கிழக்கில் முஸ்லீம் / தமிழ் மக்களுக்கிடையில் இனிரீதியான கலவரச்சூழல் நிலவிய காலகட்டத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் பற்றி முகநூற் பதிவொன்றினை இட்டிருந்தார். அண்மையில் நான் வாசித்த , என்னைப் பாதித்த பதிவிது. வைத்தியர் குகதாசனை அவர் வீட்டின் முன் நின்ற வெறிபிடித்த கும்பலொன்றிலிருந்து எவ்விதம் காப்பாற்றினார் என்பதை அப்பதிவில் அவர் பதிவு செய்திருக்கின்றார். ஆவணப்படுத்தப்பட வேண்டிய பதிவிது. எழுத்தாளர் ஹனீபா அவர்களைச் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன். அவரைப்பற்றி நான் என் முகநூற் பக்கத்தில் இட்டிருந்த இக்குறிப்புக் கிடைத்த எதிர்வினைகள் சிலவற்றையும் இங்கு பதிவு செய்கின்றேன்.

எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா அவர்களின் பதிவு கீழே:

“நேற்றுப் போலிருக்கிறது. கிழக்கில் தமிழ் முஸ்லிம் இனச்சங்காரம் நிகழ்ந்து 32 வருடங்கள். அந்த சித்திரை மாதம், எனக்குள் பெரும் வேதனையையும் வலியையும் விளைவித்தது. அந்த வலி இன்னும் தொடர்வதுதான் மிகப் பெரும் கொடுமை. அந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள், வாழைச்சேனையில் டாக்டர் குகதாசன் MBBS ஐயா அவர்களின் வீட்டின் முன்னால் பெரும் கும்பலொன்று திரண்டு நிற்பதாக செய்தி கிடைத்தது. ஊரில் அப்பொழுது நான் பெயர் பெற்ற LTTE ஆதரவாளன்.

அந்த இடத்திற்கு உடனே விரைந்தேன். அங்கே, குகதாசன் ஐயா முன் விறாந்தையின் நிலைப்படியில் தவித்துக் கொண்டிருந்தார். பெண்கள், பிள்ளைகள் என்று அவரைச் சுற்றி பதட்டத்தோடு நின்றார்கள். அந்தக் காட்சியை விபரிப்பதற்கு வார்த்தைகள் இன்றி முட்டுப்படுகிறேன். என்னைக் கண்டதும் இளைஞர்களில் சிலர் பின்வாங்கினார்கள். இன்னும் சிலர் என் முன்னாலேயே கண்களில் தீப்பிழம்பாக காட்சி தந்தார்கள். அவர்களை நோக்கி, நான் இவ்வாறு சொன்னேன்:

“தம்பிமாரே! நீங்கள் ஒவ்வொரு பிள்ளையும் உங்கள் தாயின் வயிற்றில் இருந்த பொழுது, இந்த டாக்டர் ஐயாதான் அந்த வயிற்றைத் தடவி உங்களையும் தடவி நீங்கள் சௌக்கியமாக இருப்பதாக உங்கள் தாயிடம் சொல்லி தைரியமூட்டியவர். என்ன நியாயம் நீங்கள் இன்று இந்த மனிதருக்கு முன்னால் இந்தக் கோலத்தில் நிற்பது? உடனடியாக இந்த இடத்தை விட்டு நீங்கள் விலகிச் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் நடப்பது வேற விடயம்” என்றேன்.

தெருச் சண்டியர்களுக்கு ஒரே பதில். நாமும் ஒரு தெருச் சண்டியராக மாறுவதுதான். வந்தவர்கள் ஒவ்வொருவராக திரும்பிப் போனார்கள். நான் உள்ளே போய் அமர்ந்து ஆறுதல் சொல்லி விட்டு வந்தேன்.

சில நாட்களில் ஐயா அந்த வீட்டை காலி செய்து விட்டு திருகோணமலைக்கு அவரது உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டதாக அறிந்தேன். குகதாசன் ஐயா அவர்கள், 1958ல் வாழைச்சேனை அரசினர் ஆரம்ப வைத்தியசாலையில் வைத்திய அதிகாரியாக கடமை புரிந்தவர். எனது தகப்பனாரின் நண்பர். பின்னாளில் எனக்கும் நண்பர். எனது மனைவி கருவுற்ற போது, அதிக அக்கறையும் அன்பும் காட்டியவர். 1957ம் ஆண்டு தனிச்சிங்களச் சட்டம் அமுலுக்கு வந்ததும் ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேறி வாழைச்சேனை மர்ஹூம் TLT ஹாஜியாருடைய வீட்டில் தனியார் மருத்துவமனை நடத்தியவர். கல்குடா தொகுதியின் முதலாவது தனியார் மருத்துவமனையும் இதுவே. மருந்துக்காக ஒரு ரூபா ஐம்பது சதம் அல்லது இரண்டு ரூபா. இதுதான் அவரது ரேட். வைத்தியத் துறையை தெய்வ பணியாக முன்னெடுத்துச் சென்றவர். இத்தனைக்கும் ஐயா சாயி பக்தர். பின்னாளில் வந்தாறுமூலை பல்கலைக்கழகத்திலும் ஒரு வருகை தரு விரிவுரையாளராகப் பணி புரிந்தார்.”

எதிர்வினைகள்:

Terrence Anthonipillai:மனிதம் இன்னும் சாகவில்லை என்பதற்க்கு ஜாயா அவர்கள் வாழும் நல்ல உதாரணம்.1985 ஆம் ஆண்டு அனுராதபுரத்தில் நடந்த இனக்கலவரத்தின்போது நான் முஸ்லீம் நண்பர்களுடன் பள்ளிவாசல்துறையில் 1மாதகாலம் பாதுகாப்பாக இருந்தது இப்பதிவை வாசிக்கும் பொழுது ஞாபகம் வருகிறது. Friend in need is friend indeed

Jeyaruban Mike Philip: ஹனிபா ஐயா சிறந்த மானிடன். என் நெஞ்சத்தோடியைந்த மானுஷீகன். அவருக்கு அன்பைத்தவிர வேறொரு மாற்றுந்தெரியாது. அசலான முஸ்லிம் என வாழ்த்தறைய விரும்புகிறேன். என்றாவது ஒருநாள் சிலம்பு வரிசைக்கு இவரை இழுப்பேன். தோற்றாலுமென்ன.. மனுசன், மாங்கன்றுகளைப் பற்றிய அறிவில் என்னைத் தோற்கடித்தே புஜபலங்காட்டுவார்! அசலான மனிதர்களை நாம் இழக்கவில்லை.. அசலுக்கும் நகலுக்குமான வித்தியாசங்களை உண்மையிலேயே நாம் இழந்துவிட்டோம்.

Cheran Rudhramoorthy:  //அசலுக்கும் நகலுக்குமான வித்தியாசங்களை உண்மையிலேயே நாம் இழந்துவிட்டோம்.// இதுதான் பாசாங்குப் பின் நவீனத்தின் விளைவு. அரசியலிலும் வாழ்விலும் கலையிலும்.

Navaratnam Uthayakumar: Slm Hanifa ஐயா அவர்களின் பல பதிவுகளை  நான் படித்து வருகிறேன் அவரின் படத்தினையும், பதிவினையும் கண்டால் மனதில் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி தோன்றும் காரணம் அவர் தனது பதிவுக்குள் பல பொக்கிசங்களை அடுக்கி வைத்திருப்பார் அவரின் பதிவினை அமைதியாக இருந்து படித்து முடிக்கும் போது மனதில் புதுவிதமான உட்சாகமும், நம்பிக்கையும் தோன்றும். இன்றைய சூழலில் நான் கண்ட விசித்திரமான மனிதர் அவர் காலங்களால் அழிக்கப்பட முடியாத வல்ல சீவன் அவர். என்றும் எல்லா தலைமுறைகளாலும் போற்றப்பட்டுக்கொண்டிக்ககூடிய மாமனிதர் அவர். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ வேண்டுகிறேன்.

Balachandran Muthaiah: மறைந்த முத்துலிங்கம் ஐயாவுக்கு அடுத்து முகபுத்தகத்தில் நான் கண்ட இன்னுமொரு அதிமானுடன்!

Siva Murugupillai: ஆகஸ்ட் 8, 2017 ம் அன்று மட்டக்களப்பு அம்பாறை என இருநாள் பயணம் சென்றேன் முக்கியமாக மூவரை சந்திப்பதே என் இலக்கு அதில் ஓட்டமாவடியில் வசிக்கும் ஹனீபா வை முதலில் சந்தித்தேன் 3 மணி நேரமாக உரையாடினோம் முக்கியமாக முஸ்லீம் தமிழ் மக்கள் இடையே பலப்படுத்தப்படவேண்டிய சகோதரத்துவ உறவு முஸ்லீம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுவரும் ‘மார்க்கம்’ ஐ மீறிய கட்டுப்பாடுகள்… செயற்பாடுகள்… என்று விரிந்து சென்றன எமது கருத்துப் பரிமாற்றங்கள். எங்களுடன் இறுதியில் இலண்டனில் இருந்து வந்த சபேசனும் இணைந்து கொண்டார். இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபையில் முஸ்லீம் காங்கிரசின் மாகாண சபை உறுப்பினராக செயற்பட்ட போது பழகிய அறிமுகம் இருந்ததும் எமக்கு உதவிகரமாக இருந்தது .’அவளும் ஒரு பாற்கடல்’ என்ற அவரின் சிறுகதை தொகுப்பு புத்தகத்தை எனக்கு அன்புடன் வழங்கினார். எனது இலங்கை பயண அனுபவமான ‘ எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த…..’ என்ற தொடரில் இந்த சந்திப்பை விபரித்தும் இருந்தேன்.

Kalaichellvan Kumarasamy : இவ்வாறான பதிவுகள் இன சகவாழ்வினை மேம்படுத்தும் உற்சாகத்தை ஏற் படுத்தும்.

ngiri2704@rogers.com