வ.ந.கிரிதரனின் நான்கு சிறுகதைகள்: கணவன்! ஒரு முடிவும் விடிவும்! மனித மூலம்! பொந்துப்பறவைகள்!

சிறுகதை வாசிப்போமா?–  தாயகம் (கனடா), சுவடுகள் (நோர்வே) ஆகிய சஞ்சிகைகளில் வெளியான சிறுகதைகள் இவை. எனது ‘அமெரிக்கா’ தொகுப்பிலும் அடங்கியுள்ளன.  இவற்றில்  சுவடுகள் (நோர்வே) சஞ்சிகையில் வெளியான ‘பொந்துப்பறவைகள்’  சிறுகதை. சிங்கப்பூர் கல்வி அமைச்சு பாடசாலை மாணவர்களுக்கான தமிழ்ப்பாடக் கல்வித்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. – வ.ந.கி –

எனது கதைகள் வ.ந.கிரிதரன் — அமெரிக்கா தொகுப்புக்கான என்னுரை. –

மேது புலம் பெயர்ந்த சூழலில் ஏற்படும் நிலைமைகளையும், அதேசமயம் எமது நாட்டுப் பிரச்சனைகளை மையமாக வைத்தும் என் படைப்புக்கள் எழுந்துள்ளன. இன்றைய புலம்பெயர்ந்த எமது தமிழ்த் தலைமுறையைப் பொறுத்தவரையில், புலம் பெயர்ந்த நாட்டுச் சூழலிற்கும், புலத்தின் நினைவுகளிற்குமிடையில் அகப்பட்டு ஒரு வித திரிசங்கு வாழ்க்கை நடத்தும் தலைமுறை. இத்தலைமுறையினரில் நானும் ஒருவன் என்ற வகையில் எனது படைப்புகளில் புலத்தின் பிரச்சனைகளையும், புலம் பெயர்ந்த நாட்டுச் சூழலின் நிலைமை களையும் சித்தரிப்பதை என்னால் தவிர்க்க முடியாது. நிறப்பிரச்சனை யென்பது புலம் பெயர்ந்து வாழும் குழலின் முக்கியமான பிரச்சனை. புலம் பெயர்ந்த ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சனை. நாளைய எம் தலைமுறையும் இதற்கு விதிவிலக்கல்ல. எமது படைப்புக்கள் இப்பிரச்சினையை வெளிப்படுத்தும் அதேசமயம் புதிய சூழலின் ஏனைய பிரச்சனைகளையும், ஆராய வேண்டும். பூர்வீக இந்தியர்களின் பிரச்சினை, இந்நாட்டுப் பொருளாதாரச் சூழலால் உருவாகும் நிர்ப்பந்தங்கள், வாழ்வில், அவற்றாலேற்படும் தாக்கங்கள், பெண்களின் நிலைமை, புதிய சூழல் நம்மவர் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கங்கள், அனுபவங்கள்இவற்றையெல்லாம் நாம் எம் படைப்புகளில் வெளிப்படுத்த வேண்டும். அதேசமயம் நாட்டுப்பிரச்சனை காரணமாக ஓடிவந்தவர்கள் நாங்கள். அப்பிரச்சனையை மீண்டும் மீண்டும் கூறுவதென்பது தவறானதல்ல, தவிர்க்க முடியாததும் கூட.

அண்மைக் காலமாக எம்மவர்களில் சிலர் ‘புலம் பெயர்த்த எழுத்தாளரின் படைப்புக்கள் தொடர்ந்தும் பிறந்த நாட்டுப் பிரச்சனைகளை, விரக்தியையே புலப்படுத்தி வருகின்றன. இவர்கள் புகுந்த நாட்டுச் குழலை மையமாக வைத்துப் படைப்புக்களை உருவாக்க வேண்டும்’ என்ற கருத்துப்பட கூறி, எழுதிவருகின்றார்கள். இவர்களது கருத்துப்படி புகுந்தநாட்டுச்சூழலை வைத்து எழுதுவதுதான் இலக்கியத்தரமானதாக அமையுமென்ற நோக்கமும் இழையோடுகின்றது. இவர்களெல்லாம் ஒன்றை உணரவேண்டும். தரமான படைப் பென்பது எதனைப் பற்றியதாகவும் இருக்கலாம்.இரண்டாம்உலக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட யூத எழுத்தாளர்களின் படைப்புகளில் சிறந்த படைப்புக்கள் அவர்களது சொந்த நாட்டுப் பிரச்சனையை மையமாக, வைத்து எழுந்தவையே. உதாரணமாக போலந்து யூத இனத்தைச் சேர்ந்து ஜேர்ஸி கொஸின்ஸ்கியின் Painted Birds என்ற மிகப் பிரபலமான நாவலைக் குறிப்பிடலாம். 1991 இல் தற்கொலை செய்து கொண்ட கொஸின்ஸ்கியின் படைப்புக்கள் பிரச்சனைக்குரியவை. நிறமூட்டப் பட்ட பறவைகள்’ (Painted Birds) நாவலில், யூதச் சிறுவனாக யுத்தச் சூழலில், நான்காண்டுகளாக கிழக்கு ஐரோப்பியநாடுகளில் அலைந்து திரிந்த தனது சொந்த அனுபவங்களையே கொளின்ஸ்கி விபரிக்கின்றான். இன்று இந்தப்படைப்பு: ஆங்கில இலக்கியத்தின் முக்கிய படைப்புக்களில் ஒன்றாக விளங்குகின்றது. இதனை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும். கொஸின்ஸ்கியால் அவர்மேல் அவரது சொந்த நாட்டு அரசியல்நிலைமை ஏற்படுத்திய பாதிப்பை மறக்கமுடியவில்லை, அதனைப்படைக்காமல் இருக்கவும் முடியவில்லை.

என் கதைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. என் சொந்த நாட்டுப் பாதிப்புக்களை என்னால் மறக்கமுடியாது. என்கதைகள் அவற்றிலிருந்து தப்பவும் முடியாது. அதேசமயம் புதிய சூழலின் தாக்கங்களிலிருந்தும் என்னால்தப்பமுடியாது. என்படைப்புக்கள்அவற்றை வெளிப்படுத்தவே செய்யும். ஆனாலும் அப்படி வெளிப்படுத்தும் போதுகூட என்நாட்டுப் பிரச்சனையின் சாயல் அவற்றினூடே வெளிப்படத்தான் செய்யும்.

 


1. சிறுகதை: கணவன்  – வ.ந.கிரிதரன் –

பல்கனியிலிருந்து எதிரே விரிந்திருந்த காட்சிகளில் மனம் ஊன்றாத வனாகப் பார்த்தபடிநின்றிருந்தான் சபாபதி. கண்ணிற்கெட்டியவரை கட்டங்கள். உயர்ந்த, தாழ்ந்த, அகன்ற, ஒடுங்கிய கட்டடங்கள். டெஸ்மண்ட் மொறிஸ் கூறியது போல் மனிதமிருகங்கள் வாழ்கின்ற கூடுகள். நகரங்கள் மனித மிருகங்கள் வாழுகின்ற மிருககாட்சிச்சாலை என்று அவர் குறிப்பிட்டதில் தவறேதுமிருப்பதாகத் தெரியவில்லை. பார்க்கப் போனால் இன்றைய மனிதனின் அடிப்படைப் பிரச்சினை களிற்கு ஒரு வகையில்நகரங்களும் காரணமாயிருக்கலாம். மிருகங்களை கூண்டுகளில் அடைத்து வாழ நிர்ப்பந்திக்கும் போது அவற்றின் இயல்புகளில் ஏற்படும் மாற்றங்கள் பல, நகரத்தில் செறிந்திருக்கும் கட்ட டக் கூண்டுகளிற்குள் அடைப்பட்டுக் கிடக்கும் மனித மிருகங்களிலும் காணப்படுகின்றனவாம், நகரத்தில் இருந்து கொண்டுதானே இன்றைய மனிதன் சக மனிதன் மேல் அதிகாரத்தைப் பிரயோகிக்கின்றான். X=Y Y=Z, ஆகவே X-Z என்ற வகையான கணித சாத்திரத்திற்குரிய தர்க்க நியாயத்தின்படி பார்க்கப்போனால் இன்றைய மனிதனின் பிரச்சினைகளிற்கு முக்கிய காரணம் நகரத்து மனிதன் என்றல்லவா ஆகிவிடுகின்றது. இது பற்றியெல்லாம் சிந்திக்கும் மனநிலையில் சபாபதி இருக்கவில்லை.

வழக்கத்தை விட குளிர் இந்த வருடம் அதிகம். இன்னும் பனிமழை பொழியத் தொடங்கவில்லை. டொரன்டோ வந்த புதிதில் இவனிற்கு குளிர்காலம் நெருங்கும் போதே தலையிடி தொடங்கி விடும். ஊர் ஞாபகம் தோன்றிவிடும். கசோரினா பீச்சில் ஒருமுறை மூழ்கிஎழவேண் டும் போலிருக்கும்.நவாலிமண்கும்பிகளிற்கருகில் சாய்ந்தபடி விரிந்து கிடக்கும் வயல்வெளிகளை தொலைவில் தெரியும் காக்கைதீவுக் கடற் கரையை, கல்லுண்டாய் வெளியைக்காற்றிலாடும்பனைப் பெண்களை ரசிக்க வேண்டும் போலிருக்கும். வருடம் செல்லச் செல்ல டோரண்டோ இவனிற்குப் பழகிவிட்டது. குளிர் காலமும் ஸ்னோவும் முன்புபோல் இவனை இப்பொழுதெல்லாம் அதிகம் பயப்படுத்துவதில்லை. பழகி விட்டன. இப்பொழுதெல்லாம் நேரத்துடனேயே இருட்டி விடுகின்றது. நாலரை ஐந்து மணிக்கெல்லாம் இருள் கவிந்து விடுகின்றது. இலேசான இருளில் தூங்குவதற்குத்தயாராகயிருக்கின்றது கட்டடக்காடு உயர்ந்து, நீண்டு தொலைவில் சீ என். கோபுரம் இவ்வளவு தொலைவிலும் வடி வாகத் தெரிகின்றது. வழக்கமாக இவற்றையெல்லாம் ரசிக்கும் மனதிற்கு ஒரு கிழமையாக விடுமுறை. பானுவைப் பற்றித்தான் மீண்டும் மீண்டும் குமைந்து போய்க்கிடக்கின்றது. பானுமதிஇவனது இல்லாள் இல்லாள் இல் வருவதற்கு இன்னும் ஒரு மணியாவது செல்லும். இந்தப் பிரச்சி னைக்கு எப்படியாவது இன்று முடிவொன்றைக் கண்டு விடவேண்டும். மனதிற்குள் தீர்மானித்தவனாக உள்ளே செல்கின்றான். சென்றவன் ‘டக்கிளா”வையும் மார்கரீட்டா”வையும் எடுத்து அளவாகக் கலந்து பிரிட்ஜிலிருந்து ஐஸ் கட்டிகளை எடுத்துப் போட்டபடி மீண்டும் பல்கனிக்கு வருகின்றான். ஊரிலிருந்த காலத்தில் இவனது பிரியமான மதுபானங்கள், உடனிறக்கிய பனங்கள்ளும், குரங்கும் (நம்மூர்ச் சாராயம்தான்), குரங்கென்று பெயர் வைத்த மகராசிக்கு வாயில் சக்கரையை அள்ளித்தான் போட வேண்டும். நமது மூதாதையர் யார் என்பதில் சந்தேகப்படுபவர்களின் சந்தேகத்தைத் தீர்த்து வைத்துவிடும் வல்லமைமிக்கது அந்தக் குரங்கு. இந்நாட்டுக்குடிவகைகளில் இவனிற்கெதுவுமே பிடிக்கவில்லை. எவ்வளவு குடித்தாலும் குரங்கின் அந்தக் கிக் இவனிற்கு இப்பொழுதெல்லாம் வருவதில்லை. ஒரு வேளை இவனிற்கு வயசாகிவிட்டதன் அறிகுறியாகயிருக்கலாம். ஆனால் இந்த டக்கிளா (மெக்ஸிகோவின் புகழ்பெற்ற மதுவகை) மட்டும் ஓரளவிற்கு இவனுக்கு பிடித்தமானது.

டக்கிளாவின் அறிமுகம் இவனிற்குக் கிடைத்தற்குக் காரணமே “கிட்டார் அடிக்கப் போனதுதான். ‘கிட்டார் அடிப்பதற்கும் ‘டக்கிளா’ விற்கும் என்ன சம்பந்தமென்று மூக்கில் விரலை வைத்துவிடாதீர்கள். “கிட்டார் அடிப்பது என்பது ரெஸ்டாரண்டில் கோப்பை கழுவதற்குரிய பரிபாசை அவ்வளவுதான் கனடா வந்த புதிதில் இவன் செய்த முதல் வேலை கிட்டார் அடிதான். கிரேக்கனுடைய ரெஸ்டாரன்ட் வேலை செய்வதில் கவுண்டமணி அடிக்கடி கூறுவதுபோல் இவன் ஒரு மாடு மாதிரி. கிரேக்கர்களிற்குமாடு மாதிரி வேலை செய்பவர்களை நல்லாப் பிடிக்கும், மாடு மாதிரி வேலை வாங்கவும் நல்லாப் பிடிக்கும். அதேசமயம் நீங்கள் மட்டும்.நன்கு வேலை செய்து விடுகிறீர்களென்று வைத்துக் கொள்ளுங்கள். அவர்களை மாதிரி உங்களைக் கவனிக்க வேறு யாராலுமே முடியாது.

இவன் ஏற்கனவே கனடா வருவதற்கு முன்பு கிரேக்கக்கப்பலொன் றில் வேலை செய்திருந்தான். கிரேக்கர்களைப் பற்றிச்சிறிது அறிந்திருந் தான். க.பொ.த. (சாதாரணம்) பரீட்சை எடுத்த காலத்தில் பெளதிகத்தில் ஆர்க்கிமிடிசு போன்ற கிரேக்க விஞ்ஞானிகளைப் பற்றிச் சிறிது படித்திருந்தான். மனித சமுதாயநாகரீக வளர்ச்சியில் கிரேக்கர்களிற்கு முக்கியமான பங்கொன்று உண்டு. ஒரு காலத்தில் கொடிகட்டி வாழ்ந்த இனம் நம்மவரைப் போல கிரேக்கர்களிற்குப் பிடித்த இன்னுமொரு விடயம் பழம்பெருமை பேசுவது, அதுவும் நம்மவரைப் போல்தான். ஆர்சிமிடிசு பற்றியோ பிளேட்டோபற்றியோ கூறிவிட்டால் உடனடியாக மகிழ்ந்து விடுவார்கள். கிரேக்கர்களைப் பற்றிய அறிவு சபாபதிக்குக் கிரேக்கர்களுடன் வேலை செய்யும் போதெல்லாம் கை கொடுக்கத் தவறுவதேயில்லை. இவனது ‘கிரேக்க” அறிவிலும், வேலைசெய்யும் பண்பிலும் அகமகிழ்ந்து போன ரெஸ்டாரண்ட் சொந்தக்காரனான பீட்டர் வேலை முடிந்து வீடு செல்லும் சமயங்களில் இவனிற்குத் தன் கையாலேயே மது வகைகளிலொன்றை அதற்குரிய ‘கொக்டெயிலுடன்’ அளவாகக் கலந்து கொடுப்பான். வேலைக்களைப்பு நீங்க அதனைச் சுவைத்தபடி இவன் அரிஸ்டாட்டில் பற்றிக் கூறுவதை ஆர்வமாகக் கேட்பான், ‘ஆங்கிலேயன்கள் தான் எல்லாப் பிரச்சனைகளிற்கும் காரணம், உங்களுடைய நாட்டை மட்டுமல்ல எங்களைக் கூடக் குட்டிச்சுவராக்கியவர்கள் இவர்கள் தான்’ என்று அடிக்கடி பீட்டர் கூறுவதுண்டு. அந்த ரெஸ்டோரண்ட் அனுபவம்இன்று இவனிற்குக் கை கொடுக்கின்றது.

ஒரு மிடறை விழுங்குகின்றான். நெஞ்சிற்கு இதமாகவிருக்கின்றது. மீண்டும் பானுமதியின் நினைவுகள்…

பிரச்சினை இதுதான். இவனிற்கும் பானுமதிக்கும் திருமணம் முடிந்து ஒரு வருடம் தான். ஒரு வருடமாக ஏற்படாத பிரச்சினை ஒரு கிழமையாக ஏற்பட்டுவிட்டிருந்தது. அதற்குக் காரணம் போன கிழமை இவன் காதுகளில் விழுந்த ஒரு கதைதான்.

நண்பனொருவன் வீட்டில் நடந்த சிறு பார்ட்டியொன்றில் அடிபட்ட கதைதான் இவன் நெஞ்சில் பிரச்சினைத் தீயை வளர்த்துவிடக் காரணமாகயிருந்தது. குடிபோதையில்நண்பர்கள் அண்மைக் காலமாக ஏஜண்டுகள் என்ற பெயரில் ஒரு சிலர் பண்ணும் திருவிளையாடல்களைப் பற்றிக் கதைத்துக் கொண்டிருந்தார்கள். தாய்லாந்திலும், சிங்கப்பூரிலும் சீரழிந்து கொண்டிருக்கும் அப்பாவிப் பெண்களைப் பற்றிக் கண்ணிர் விட்டுக் கொண்டிருந்தார்கள். நண்பர்களிலொருவன் ஏஜண்ட் வேலை செய்பவன். ‘ஏஜண்ட்’ மாரைப் பற்றித் தரக் குறைவாகக் கதைக்கும் ஏனைய நண்பர்களைப் பார்த்துச் சீறினான்.

‘எல்லாஇடங்களிலும் கிரிமினல்கள் இருக்கத்தான் செய்யிறான்கள். அதற்காக எல்லா ஏஜண்ட்மாரைப் பற்றியும் கூடாமல் கூறுவது தவறு’ என்பது அவனது வாதம். உண்மைதான். ஏஜண்டமாரென்று ஒருத்தரும் இல்லையென்றால் இன்று கனடாவில் நம்மவரின் சனத்தொகை பெருகியிருக்கப் போவதில்லைதான். ஊசித்துளைகளிற் குள்ளும் தலையை நுழைத்துவிடும் ஒட்டகங்கள் அல்லவாநம்முடைய ஏஜண்டுகள்.

சபாபதி கூட ஏஜண்ட் ஒருவன் மூலமாக வந்தவன்தான். எல்லா மட்டத்திலும் கிரிமினல்கள் இருப்பதைப் போல் தான் ஏஜண்ட்காரர் விசயத்திலும் இருக்கின்றது என்பதுதான் அவனது எண்ணம். இன்று நம்மவர் சீரழிந்து கொண்டிருப்பதற்குக் காரணமே நாட்டுநிலைமைதான்.  நாட்டுநிலைமைதானே எல்லோரையும் ஒடஒட விரட்டி வைக்கிறது. அதனால்தானே பிரச்சினைகளும்.நாட்டு நிலைமை மட்டும் சீராகட்டும் தற்போதுநடைபெறும் சீரழிவுகள் அரைவாசியாகக் குறைந்துவிடும் என்று நண்பனொருவன் கூறிக் கொண்டிருந்தான். அது வரையில் சபாபதிக்குப் பிரச்சினையே ஏற்படவில்லை. அதன் பிறகு ஏஜண்ட் ஒருவனைப் பற்றி அவர்கள் கதைக்கத் தொடங்கியதும்தான் பிரச்சினை ஆரம்பமாகியது. ரொராண்டோவில் மனைவி பிள்ளைகளென்று வாழும் ஏஜண்ட் ஒருவனைப் பற்றிய கதை அது. அந்த ஏஜண்ட் தான் இவன் மனைவி பானுமதியையும் கூட்டி வந்தவன். சந்தேகத் தீ விசுவரூபமெடுத்து விட்டது. இந்த ஏஜண்டுடன் ஒரு மாதமளவில் பானுமதி சிங்கப்பூரில் நின்றிருக்கின்றாள். நினைப்பதற்கே சங்கடமாகியிருந்தது.இவனையே பைத்தியமாக்கும் அழகு பானுமதியினுடைய அழகு. மதமதர்த்த உடல்வாகு. எவ்வளவுதான் நெகிழ நெகிழ ஆடைகள் அணிந்தாலும் அவளால் திமிறித் துடிக்கும் அழகுகளை ஒளித்து வைக்கவே முடிந்ததில்லை. இவனது சந்தேகம் சுவாலைவிட்டுப் படர்வதற்குக் காரணமே அவளது அந்தப் பேரழகுதான். மீண்டும் ஒரு மிடறை விழுங்கினான். உள்ளே சென்ற மது இலேசாக வேலை செய்யத் தொடங்கியது.

கேட்டு விடுவோமா? மனதை அரித்துக் கொண்டிருக்கின்ற சந்தேகத்தைக் கேட்டு விடுவோமா? எப்படி கேட்பது காறித் துப்பி விடமாட்டாளா? கேட்காவிட்டால்இவனிற்கு மண்டை வெடித்து விடும் போலிருந்தது. என்ன செய்வது? அவளும் தான் மாடு மாதிரி தொழிற்சாலையொன்றில் வேலை செய்கின்றாள். களைத்து வரும் அவளிடம் எப்படிக் கேட்பது? எவ்வளவிற்கு அடக்க முயன்றானோ அவ்வளவிற்கு மனஉளைச்சல் அதிகரித்துக் கொண்டேயிருந்தது.

கிறிஸ்டினா அடிக்கடி கூறுவாள். “யாரைத்திருமணம் செய்தாலும் இந்தியன் ஒருவனை செய்யவே மாட்டேன்.”

‘ஏன் கிறிஸ்டினாஇந்திய ஆண்களை மாதிரிப் பொறுமை சாலிகள் ஒருத்தருமேயில்லை அது உனக்குத் தெரியுமா?”

“சும்மா பொய் அளக்காதே, சபாபதி உங்களுடைய ராமாயணம் பார்த்திருக்கின்றேன். உங்களுடைய கடவுள் ராமனே மனைவியை நம் பாமல் சந்தேகப்பட்டுத் தீக்குளிக்க வைக்கவில்லையா? ‘கிறிஸ்டினா இவனுடன் கிரேக்க ரெஸ் டோரண்டில் வெயிட்ரஸ்ஸாக வேலை பார்த்தவள். சிலர்நிறத்திமிர் பிடித்தவர்கள். அதிகம் கதைக்க மாட்டார் கள். இவள் அவர்களில் சிறிது வித்தியாசமானவள், அவளைப் பொறுத்த வரையில் சிறிலங்காவோ, பாகிஸ்தானோ, பங்களாதேசோ, இந்தி யாவோ. இப்பகுதிகளிலிருந்து வருபவர்கள் எல்லோருமே இந்தியர் கள்தான். இந்த விசயத்தில்இவள்நிறவெறிபிடித்தவர்களிலிருந்து சிறிது வேறுபட்டவள். நிறவெறிபிடித்தவர்களிற்குஇப்பகுதிமக்கள் யாவருமே ‘பாக்கி’கள். அவ்வளவுதான் வித்தியாசம். ‘சபாபதி! உங்களுடைய ராமனைப் பார், கடவுளென்று வைத்துக் கொண்டாடுகிறீர்கள். சொந்த மனைவியையே அவனால் நம்ப முடியாமலிருக்கின்றது. அவன் என்ன காரணம் சொன்னாலும் சீதையைத்தீக்குளிக்க வைத்தது.தவறு.”

‘ராமன் உண்மையில் மனைவியைச் சந்தேகிக்கவில்லை அவனிற்குத் தெரியும் அவள் உத்தமி என்பது. உலகிற்கு அவளது நேர்மையை வெளிப்படுத்தத்தான் அவன் அப்படிச் செய்தான்’

‘அப்படிச் செய்வதைத் தான் பிழை என்கின்றேன். கடவுளின் அவதாரமான ராமனே இப்படிச் செய்வது மக்களையும் மனைவியைச் சந்தேகிப்பது சரியான செயலெனநம்பச் செய்து விடுகின்றது.’

‘அதிலென்ன தவறு. ‘ ‘அதுதான் தவறென்கின்றேன். திருமணமென்பது சாதாரண விடயமொன்றல்ல. வாழ்க்கை முழுவதும் ஒருவரையொருவர் நம்பி வாழும் ஒரு வகையான உறவு. இதற்குப் பரஸ்பர நம்பிக்கை மிகவும் அவசியம். ஒருவர் உரிமையை மற்றவர் மதிக்க வேண்டும். சீதை விரும்பியாஇராவணனிடம் போனாள்? ஊர்கந்தேகப்படுவதாக வைத்து ராமன் சீதையை எவ்வித சந்தேகமுமின்றி ஏற்பதாக இருந்திருந்தால் ராமாயணத்தை எனக்குப் பிடித்திருக்கும். எங்களைப் பார்திருமணம் செய்யும் மட்டும் நாங்கள் மனம் போனபடி வாழ்கின்றோம்.முடித்த பிறகோ கடந்தகாலத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. ஆனால் இந்தியர்களானநீங்களோ. நீங்கள் எத்தனை பேருடனும் செல்வீர்கள் உங்களிற்கு உங்கள் மனைவி மட்டும் பத்தினியாகயிருக்க வேண்டும்’

கிறிஸ்டினாவின் குரல் காதில் ஒலிக்கின்றது. அருகிலிருந்து அவளிற்கேயுரிய சிரிப்புகதைப்பது போலிருக்கின்றது. இன்னுமொரு மிடறை விழுங்குகின்றான் சபாபதி மனது இன்னமும் இலேசாகி உடைகின்றது. ‘பானுவிடம் கேட்பதற்கு என்ன தகுதி எனக்கிருக் கின்றது? கேட்பதற்குரிய தார்மீகமான காரணம் தான் ஏதாவதிருக் கின்றதா? மனைவிஎன்ற ரீதியில் அவள் எனக்கென்னகுறை வைத்தாள்? அவளிடம் என் சந்தேகத்தைக் கேட்பது புருஷன் என்ற என் ஸ்தானத்திற்கு மாசு கற்பித்து விடாதா? ஒரு மனைவியைச் சந்தேகப்படுவதே தவறான செயலென்றால். சந்தேகப்படுவதற்குரிய தகுதியாவது எனக் கிருக்கின்றதா?

சபாபதிக்கு வெறி ஏற ஏற பழைய நினைவுகள் சில படம் விரிக் கின்றன. நெஞ்சுப் புற்றுக்குள்ளிருந்து வெளி வந்தாடும் நினைவுப் பாம்புகள். அப்பொழுது அவன் இளமையின் ஆரம்ப படிக்கட்டில் காலடி வைத்திருந்தான். கப்பலில் வேலை செய்யத் தொடங்கியிருந்த சமயம் தாய்லாந்து அழகிகளிற்கும் தென்னமெரிக்க அழகிகளிற்கு மிடையில் உள்ள வித்தியாசங்களைக் கணக்கிட்டுக் கொண்டிருந்த காலம். அவன் எப்பொழுதாவது பானுமதியிடம் தனது கடந்த காலத் தைப் பற்றிக் கதைத்திருக்கின்றானா? ஒரு சமயம்நாளைக்கு கப்பலில் வேலை செய்பவர்கள் சிலரின் இதுபோன்ற லீலா விநோதங்களைக் கேட்டுவிட்டு சந்தேகப்பட்டு இவனிடம் வந்து பானுமதி விளக்கம் கேட்டால் எப்படியிருக்கும்?

“எங்களைப்பார்திருமணம் முடிந்தபிறகுநாங்கள் கடந்த காலத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை ஆனால் இந்தியர்களானநீங்களோ.’

கிறிஸ்டினா அன்று நீ சொன்னதன் பொருளை என்னால் உணர முடியாதிருந்தது ஆனால் இன்று…

சபாபதி மிஞ்சியிருந்த கடைசிப்பகுதி யையும் விழுங்குகின்றான். விண்விண்னென்று வலித்துக் கொண்டிருந்த தலையிடிக்கு என்ன நேர்ந்தது? பானுமதி வரும் நேரமாகிவிட்டது. வேலை முடிந்துகளைப்புடன்வரும் மனைவிக்குச்சூடாக ஒரு கப்காப்பி போட்டுக் கொடுக்கக் கூடாதா? சபாபதிகளைத்து வரும் மனைவியை வரவேற்பதற்குத் தயாராகின்றான். கிறிஸ்டினா மட்டும் இதனைக் கண்டிருந்தால் நிச்சயமாக இந்தியக் கணவர்களைப் பற்றிய தனது கருத்தை மறுபரிசீலனை செய்திருப்பாள்.

நன்றி: தாயகம் 4.12.94

 


2. சிறுகதை: ஒரு முடிவும் விடிவும் – வ.ந.கிரிதரன் –

– மணிவாணன் என்னும் பெயரில் தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் எழுதிய சிறுகதைகளிலொன்று. –

சிறுகதை வாசிப்போமா?மெல்லமெல்ல இருண்டு கொண்டிருக்கிறது. அந்தியின் அடிவானச் சிவப்பில் சிலிர்த்துப் போன கதிரவன் பொங்கி எழுந்த காதலுடன் அடிவானைத்தழுவிதன்னை மறந்து கொண்டிருந்தான். பரந்து விரிந்து அமைதியில் இருந்தது குளக்கரை, பறவைகள் கூட்டம் கூட்டமாய் தத்தமது உறைவிடங்கள் நாடிப்பறந்த வண்ணம் இருந்தன. இந்த நேரத்திலும் சில மீன் தொத்திகள் பேராசையுடன் இரைக்காக அருகில் உள்ள மரக்கொப்பொன்றில் காத்துக்கிடக்கின்றன. அமைதியில்இதமாக தென்றல் வீசியபடி இருந்தது.

குளக்கரையில் மேட்டில் பரந்திருந்த புற்றக்கரையில் அலைந்து கொண்டிருந்த குழந்தையின் மேல் கையும் விரிந்திருந்தநீர்ப்பரப்பில் பார்வையுமாக யமுனா கூர்ந்த பார்வை. அகன்ற நெற்றி. அடர்ந்திருந்த கூந்தலைமுடிந்துவிட்டிருந்தாள். சாதாரணநாற்சேலையில் செக்கச்சிவந்த உடல்வாகு. எந்நேரமும் கனவு காணும் அந்த அழகான கண்களில். அந்த சோகம்.

இவளிற்குஇந்தநிலை வந்திருக்க வேண்டாம். எனக்குள் ஒருமுறை கூறிக் கொண்டேன். பாழாய்ப் போன சமூகத்தின் மேல் கோபம் கோபமாய் சலிப்பும் வெறுப்புமாய் வந்தது அவளது இந்தநிலைக்கும் இந்த சிந்தனையோட்டங்களும் நடைமுறைகளும் அல்லவா காரணம்.

நீண்ட நாட்களின் பின்னால் கொழும்பில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவன் அந்நியப் படைகளின் வெளியேற்றத்துக்கு பின் கிராமம் வந்திருந்த என்னை முனாவின் இந்த கோலம் பெரிதும் சித்திரவதை செய்தது. சிறுவயது முதலே ஒன்றாக ஓடி விளையாடி இந்த மண்ணில் என்னுடன் வளர்ந்தவள். என்னை விட இரு வயதுகள் மூத்த வள். அவளது அறிவும் அந்த அழகும். இரண்டு வருடங்களுக்கு முன் தான் அவளுக்கு கலியாணம் ஆகியிருந்தது. அவளது கலியாணத்துக்கு கூட நான் போகவில்லை. மோதலும் இரத்தக் களரியுமாக நாடிருந்த சூழ்நிலையில் நடந்த அந்த கல்யாணதினத்தன்று சந்தேகத்தின் பேரில் கொழும்பில் கைது செய்யப்பட்ட இளைஞர்களில் ஒருவனாக நான் இருந்தநிலையில். .. இந்த இருவருடங்களில் எத்தனையோ மாறுதல்கள். வாழ்வே ஒரு மோதல்தான் தப்பிப்பிழைத்தல்தான்.இந்த மோதல்களிற் குள் இன்னுமொரு மோதலாக தப்பிப்பிழைத்தலாக, நடந்து முடிந்து போன சம்பவங்கள். இன்று மழை விட்டும் தூவானம் விடாதநிலை. மோதலும் அழிவுமாகப் போய்விட்டிருந்த கடந்த காலத்தின் ஒரு அவமானகரமான கணத்தில் படையினன் ஒருவனின் மிருக உணர்வு களுக்கு பலியாகிப் போன யமுனாவின் கதை.இது யார்தவறு? அவ ளென்ன விரும்பியா இந்த தவறைச் செய்தாள்? நாதியற்ற குழலில் வேலியே பயிரை மேய்ந்த கதையில் கருகிப் போனது யார் குற்றம்?

காந்தி பாரதியிலிருந்து எத்தனை எத்தனையோ பேர் பெண் விடு தலை சமூதாயச் சீர்திருத்தம் அது இதென்று மேடைக்கு மேடை கத்திக் கத்தி கூப்பாடு போட்டதுதான் மிச்சமாகப் போனதா?

‘உயிரைக் காக்கும், உயிரினைச் சேர்ந்திரும் உயிரினுக்குயிராய் இன்பமாகிடும் உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா! ஊது கொம்புகள், ஆடுகளி கொண்டே’ பாரதியின் பாடல் ஞாபகத்தில் எழுகிறது கூடவே ஏளனம் கலந்த ஒரு விதஇளநகையும் பரவிட. தியாகராசன்.அவன் தான் யமுனாவின் புருசன். அம்மி மிதித்து அருந்ததிகாட்டி ‘உயிருள்ள வரை என் கண்ணின் மணி போல் காப் பேன்’உறுதிகூறிகைப்பிடித்த பெண்மையை சோதனை நேர்ந்த இக்கட் டான சந்தர்ப்பத்தில் ஆறுதலும் அரவணைப்பும் தந்து அன்பு செய்து காக்க வேண்டிய நேரத்தில் ஆண்மைத்தனத்தையே இழந்து ‘மானம் கெட்டவள், கற்பிழந்தவள்’ எனத் தூற்றிச் சென்று விட்ட பாவி ஒரு குழந்தைக்குதாயான யமுனாவின்நிலை என் நெஞ்சில் வேதனையைப் பெருக்கிற்று. ஏற்கனவே ஒரு மிருகத்தால் கொத்திக்குதறப்பட்டிருந்த யமுனாவின் வேதனைதீருமுன்னரே இன்னுமோர் பேரிடி. கற்பு. கற்பு என்பது மனத்துடன் கூடுதலாக சம்பந்தப்பட்டிருக்க வேண்டுமே அன்றி பெண்களை வெறுமனே அடக்கி ஒடுக்கும் கருதுகோளாக இருக்கவே கூடாது.

தியாகராஜன் ஏன் அவ்விதம் நடந்து கொண்டான். ‘ராஜேந்திரா நான் பாரதியல்லடா முற்போக்கு பேச. என் மனைவி இன்னொருத் தனால் கெடுக்கப்பட்டாள் என்ற நினைப்புடன் அவளுடன் வாழ்வ தென்பது என்னால் நினைக்கவே அருவருப்பாய் இருக்கிறதடா’

‘தியாகு. யமுனா என்ன வேண்டும் என்றா தவறிப் போனாள். ஆறுதலும் அரவணைப்பும் தரவேண்டியநீஇவ்விதம் பேசலாம்? ஒரு கணம் குழந்தையைநினைத்துப் பாரேன்.”

‘ராஜேந்திரா, குழந்தையை நான் பொறுப்பெடுக்கத் தயார் ஆனால் அதற்கு யமுனாசம்மதிக்கமாட்டாள் என்று கேள்விப்பட்டேன். நீயே நினைத்துப் பார். றோட்டாலை யமுனாவோட போகேக்கை பின்னால் வாற குத்தல்களை ஏற்றுக் கொண்டு வாழ ஆண்மைக்கே இழுக்காகப்படவில்லையா…’

ஆண்மைக்கே இழுக்கா. ஆண்மைக்கு இழுக்கு அது இல்லை யடா. உனது செயல்தான் ஆண்மைக்கே இழுக்கடா. உண்மையாகப் பார்க்கப் போனால் ஒருவிதத்தில் தியாகராசனின் இந்த நடத்தைக்கு காரணம் இந்த சமூகமும் அல்லவா. இந்த சமுதாயம். இங்கு நிலவும் கோட்பாடுகள். இதனால் தானே தியாகராசன் அவ்விதம் நடந்து கொள்கிறான். அவனால் அவன்வாழும் சூழலையும் மீற முடியவில்லை.

அந்தச் சூழல் அவன் மேல் ஏற்படுத்திய பாதிப்பையும் மீற முடிய வில்லை. கதிரவன்தொலைவில் அரைவாசிதன்னைத்தொலைத்துவிட்டி ருந்தான். முன்னை விட இருள் கூடி இருந்தது. இரை பார்த்துக் கொண் டிருந்த அந்த ஒரு சில மீன் கொத்திகள் கூட போய் நெடுநேரமாகிவிட்டி ருந்தன. இதமான தென்றல் மட்டும் இதமாக வீசியபடி. யமுனா அரு கில்இருந்த சிறு சிறுகற்களை குளத்தில் எறிந்து அதனாலேற்படும் வட்ட வட்டமாகப் பரவும்நீரலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். குழம்பி யிருந்த எனது நெஞ்சிலும் ஒரு வித தெளிவு. நானும் ஒரு முடிவு செய்து கொண்டேன். தெளிவான ஆனால் உறுதியான முடிவு. என் முடிவை அவளிடம் கூறினேன். ஒருகணம் அவள்திகைத்துப் போனாள் சிறிது நேரம் அத்திகைப்பின் விளைவாக எழுந்த மெளனத்தில் மூழ்கிக் கிடந்தாள்.

‘ராஜேந்திரா”அவள் கண்கள் கலங்கின. அவளால் மேலே பேசவே முடியவில்லை. அவளால் என்ன பேசமுடியும்? அவள் வாழ்ந்த சமூக அமைப்பு அப்படி. அவளோ மணமானவள். ஒரு குழந்தை வேறு உள்ளவள். இந்த இளம் வயதிலேயே வெறிமிருகம் ஒன்றால் கடித்துக் குதறப்பட்டு கணவனாலும் கைவிடப்பட்ட நிலையில் இருப்பவள். ஆனால் அவளும் ஒரு பெண் தான். அவள் நெஞ்சிலும் உணர்வுகள் பொங்கத்தான் செய்யும் என்பதை இச்சமுதாயம் என்ன நினைத்துப் பார்த்தாதீர்ப்புச்சொல்லப் போகிறது?

எனக்கு இவளுக்கும் இடையில் இப்படி ஒரு தொடர்பு இருப்பதை அறிந்தால் ஊரவர்கள் என் அம்மா, உறவினர்கள் காறித்துப்ப மாட்டார்களா? காமவெறி பிடித்தவள் அப்பாவிப் பெடியனை வளைத்துப் போட்டாள்-இவ்விதம் வாய்க்கு வந்தபடி அவளைக்கிழிக்க மாட்டீர்களா? ஒரு ஆண்எத்தனைதிருமணங்கள் செய்து கொண்டாலும் யாரும் கவலைப்படப் போவதில்லை. ஒரு அறுபது வயதுக் கிழவன் பதினாறு வயதுச்சிறுமியை கலியாணம் செய்யலாம். ஒன்றல்லஇரண்டு மூன்று கள்ளத் திருமணங்கள் கூடச் செய்து கொள்ளலாம். யாருமே கவலைப்படப் போவதில்லை. ஆனால் ஒரு பெண். அதிலும் யமுனா வைப் போல் அனாதரவானநிலையில் உள்ள பெண் ஒரே ஒருமுறையே வாழும் இந்த வாழ்வில் பெரும்பகுதியைதுணையின்றி பெண்ணாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக உள்ளத்து உணர்வுகளை கொன்றடிக்கி துறவியாக வாழ வேண்டும். இதுதான் சமூகநியதி. சமூதாயம் வேண்டு வது அதைத்தான். இவற்றை நான் உணர்ந்திருந்தேன் அதனால்தான் என் முடிவில் உறுதியாயிருந்தேன். ஆனால் யமுனாவோ அருகில் புற்றரையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை நோக்கினாள். பரிதாபமாக என்னை நோக்கினாள்.

மீண்டும் நானே தொடர்ந்தேன்.

‘யமுனா திருமணம் என்பது ஒரு வரை ஒருவர் புரிந்து விளங்கி ஒன்று சேர்வதுதான். ஆனால்தியாகராஜனின் நடத்தை அவன் உங்களுக்கு ஏற்றவன் இல்லை என்பதைத்தான் காட்டுகிறது. என்னைப் பொறுத்தவரை உங்களது இந்த இக்கட்டான நேரத்தில் உங்களிற்கு தேவை ஒரு துணை பாதுகாப்பு தரக்கூடிய ஆதரவும் அன்பும் கலந்த துணை. அது சிறுவயது முதலே உங்களுடன் பழகி வளர்ந்தநானாக ஏன் இருக்கக் கூடாது?”

‘ராஜேந்திரா, நீஇலேசாகக் கூறிவிட்டாய். ஆனால் இது எத்தனை பேரின் எதிர்ப்பை உருவாக்கும் தெரியுமா. உங்கம்மா. ஊரவர்கள். எல்லோரும் என்னைத் தானே திட்டுவார்கள். அவர் என்னைக் கைவிட்டது சரிதான் என்றல்லவா கூறுவார்கள். எனக்காக நீயேன் உன் வாழ்வை வீணாக்குகிறாய். என் வாழ்க்கையைப் பற்றி கவலைப்படும் பொறுப்பை என்னிடமே விட்டுவிடு’

இவ்விதம் கூறிய யமுனா சிறிது நேரம் மெளனமாக இருந்தாள். எல்லாவற்றையும் தாங்கித்தாங்கி அடங்கிவிட்ட பெண்மையல்லவா பேசுகிறது. ஆனால் நானோ. என் முடிவில் உறுதியாய் இருந்தேன்.

‘யமுனா அம்மாவைக்காலப்போக்கில் சமாதானப்படுத்த என்னால் முடியும். நீங்கள் மட்டும் சரியென்று சொல்லுங்கள். அது போதும் எனக்கு உங்களை இந்நிலைக்குதள்ளிவிட்ட சமூக கோட்பாடுகளைப் பற்றிநான் கவலைப்பட வேண்டாம். நாமிருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால் அதுவே போதும்.’

இவ்விதம் கூறியவன் அவள் கண்களையே உற்று நோக்கினேன். அவளோ மெளனமாக எனது கண்களை உற்றுநோக்கினாள். அந்த மெளனத்தில் பொருளை நான் உணர்ந்து கொண்டேன் அதில் பொங்கிய தூய உணர்வுகளை அன்பினை காதலை, நம்பிக்கையைநன்றியைநான் உணரமுடிந்தது.

‘யமுனா’அவளை வாரியணைத்துக் கொள்கிறேன்.

என்பிடிக்குள் தன்னை அடைக்கலமாக தன்னையே தந்த யமுனா அந்த அணைப்பில் தன்னையே மறந்தாள். அடிவானோ, கதிரவனின் முழுமையான இழப்பில் தழுவலில் சிலிர்த்துநாணிக்கிடந்தது

நன்றி: தாயகம் (கனடா)


3. சிறுகதை:  மனித மூலம்

சிறுகதை வாசிப்போமா?கடந்த ஒரு மணிநேரமாக இவன் நடந்துகொண்டிருக்கின்றான். யார் இவன் என்கின்றீர்களா? வேறு யாருமில்லை. இவன்தான். இவன் இவனேதான். அவன் அவனேதான் என்று சொல்வதில்லையா? அது போல்தான். இவனும்இவனேதான். இவனிற்குக் கொஞ்சநாட்களாகவே ஒரு சந்தேகம். என்னவென்று கேட்கின்றீர்களா?

வேறொன்றுமில்லை. வழக்கமாகநம்நாட்டு வேதாந்திகளிற்கு வரும் சந்தேகங்களில் முக்கியமானதொன்றுதான். ‘நான் யார்.நானென்றால் நான் யார்? இது தான் இவனது சந்தேகம். அதற்கு முன்னால் நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். அது என்ன? அதுதான் இவன் நடந்து கொண்டிருக்கின்ற பாதை, ‘நான் கடந்து வந்த பாதை’ என்றிருக் கின்றதே அது போல் தான் இவன் கடந்து கொண்டிருக்கின்ற இந்தப் பாதையும். இவன் சிறுவனாகயிருந்தபோது இந்தப் பாதையைப் பற்றி இவன் நடந்து கொண்டிருக்கின்ற பாதை. நான் கடந்து வந்த பாதை’ என்றிருக்கின்றதே அது போல்தான் இவன் கடந்து கொண்டிருக்கின்ற இந்தப் பாதையும். இவன் படித்திருக்கின்றான். இன்னமும் ஞாபகத்தில் இருக்கின்றது. இவனிற்குப்புவியியல் கற்பித்த ஆசிரியையின் ஞாபகம் கூட இருக்கின்றது. இவ்வளவுஞாபகசக்திமிக்க இவனிற்கு இவனைப் பற்றி மட்டும் அப்படியெப்படி சந்தேகம் வரலாம் என்கின்றீர்களா? பொறுங்கள்! சற்றே பொறுங்கள். அதற்கு முன் இவன் கடந்து செல்கின்ற பாதையைப் பற்றிச்சிறிது பார்ப்போம்.

‘யங்’ஸ்ட்ரீட். உலகப் புகழ் பெற்ற “யங் வீதி. அடடா. அவன் வேறு யாருமில்லை. இவன் வேறு யாருமில்லை. கனடா மனிதனே தான் என்கின்றீர்களா? சந்தேகமில்லை. இவன் கனடா மனிதனேதான். அதோ தெரிகின்றதே. உலகின் உயர்ந்த கோபுர வகை கட்டடம். அதுதான் சி.என்.கோபுரம். அது போதும் இவன் கனடாமனிதன்தான் என்பதற்கு. ஆனால் அதிலும் ஒரு சிக்கல். கனடா வீதியொன்றில் நடப்பவன் கனடா மனிதன்தான் என்று வைத்துக் கொண்டால் நிச்சயம் இவன் கனடா மனிதன்தான். ஆனால் அப்படியும் சொல்வதற்கில்லை. கனடா புகழ் பெற்ற செல்வந்தநாடு. சர்வ வல்லமை பொருந்திய அதி வீரபராக்கிரம அமெரிக்காவின் அண்டைநாடு. அதிலும் ரொரண்டோ பல்வேறு உலக அதிசயங்களை உள்ளடக்கிய மாபெரும் நகரங்களில் முக்கியமானதொன்று. உல்லாசப் பிரயாணிகளிற்கா குறைச்சல். இவர்களைத் தவிர அடைக்கலம் நாடி வரும் அகதிகள். ஆபிரிக்கர் கள். ஆப்கானியர்கள். ஆசியர்கள். இந்தியர்கள். இந்தியர்கள் வேறு ஆசிரியர்கள் வேறு. முழிபிதுங்காதீர்கள். ஆசியர்களென்று இங்கு பொதுவாக சீன உபகண்டநாடுகளைச் சேர்ந்தவர்களைத்தான் குறிப்பிடுகின்றார்கள். அது தான். வேறொன்றுமில்லை. அப்படி யென்றால் இவன் யார்? யார் இவன்? இவனுடன் தான் சிறிது நடந்து சென்று பார்ப்போமே. ஒரு வேளைபுரிந்து விடலாம். இவனைப் பார்த்தால் தாடி வளர்த்து சடைபின்னிச் சாமியாரைப்போலல்லவா இருக்கின்றது. நதிமூலம் அது இது என்பது போல் ரிஷிமூலம் தெரிவதில்லை என்கின்றார்களே. ஒரு வேளை இவன் மூலமும் இந்த வகையானது தானா?நம்பிக்கையை இழந்து விடாதீர்கள். சற்றும் பொறுமையாகத் தான் இவனைப் பின்தொடர்ந்து பார்ப்போமே. ‘மீன் டைம்.’ அடடா, எனக்கும் இங்கு வந்த இந்த ஆறு மாதத்தில் தாய் மொழியே மறந்து விடும் போலிருக்கின்றதே. அதாவது இவனைப்பின்தொடர்ந்து கொண்டு இவனைப் பற்றி அறிய முயன்று கொண்டிருக்கின்ற அதே சமயம்இவனது உடை, தோல்நிறம் என்பவற்றைச்சிறிது ஆராய்ந்துதான் பார்ப்போமா. உடை. கந்தல்தான் கனடாவில் கந்தலா. கந்தல் மனிதர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அதுவும் கனடாவில். சொன்னால் நம்ப மறுப்பார்கள். நமக்கேன் வம்பு. சரி இவனது தோலின் நிறம். நிச்சயமாக வெள்ளையில்லை. அழுக்கு உடல் முழக்கப்பரவியிருப்பதால்தாடி மண்டிக்கிடப்பதால் சொல்வதற்கில்லை. தளர்ந்து விடாதீர்கள். நம்பிக்கைக்கு இன்னும் இடம் இருக்கத்தான் செய்கின்றது.

இதோ இப்பொழுது புகழ்பெற்ற ‘ஈட்டன் சென்ட’ரைக் கடந்து யங்வீதியில் வடக்காக ‘டன்டாஸ் வீதியைக் கடந்து நடந்து கொண்டி ருக்கின்றான். ‘ஈட்டன் சென்டர் இருக்கின்றதே. கனடாவின் வீட்டை விட்டு ஓடி வரும் இளசுகளின் ஆரம்ப அடைக்கல மாளிகை இதுதான். இங்கிருந்து தான் இவர்களில் பெரும்பாலோனோர் உலகின் மிகப் பழமை வாய்ந்த தொழில் செய்வதற்கு அடியெடுத்து வைக்கின்றார்கள். ஆனால் இவனிற்கு இது பற்றியெல்லாம் கவலைப் பட நேரமெங்கே யிருக்கின்றது. விரைவாக வடக்கு நோக்கிநடந்து கொண்டிருக்கின்றான். ‘சன்சிபாரை’க் கடந்து விட டான். ‘சன்சிபார்’ என்ற ஆபிரிக்க நாடொன்றின் ஞாபகம் வந்து விட்டதா? ஆனால் அது வேறு; இது வேறு. இது வேறு வகையானதொரு ‘சன்சிபார் நிர்வாண அழகிகளின் ஆடல் களிற்குப் புகழ்பெற்ற களியாட்ட மாளிகை. இது போன்ற பல களியாட்ட மாளிகைகளை இந்தப் புகழ்பெற்ற “யங் வீதியில் நீங்கள் காணலாம். ஆனால் இவன்தான் சாமியாரைப் போல் தெரிகின்றானே. சாமிக்கு இந்த ‘காமிக்கிற விஷயங்களிலெல்லாம் தான் கவலையில்லையே (வேறொன்றுமில்லை. சிறு வயதிலிருந்து அண்ணாத்துரை, கருணாநிதி போன்ற அடுக்கு மொழி விற்பன்னர்களின் நூல்களைப் படித்ததால் ஏற்பட்ட பழக்கம்தான் இந்த ‘சாமி (காமியெல்லாம்) சாமி வடக்கு நோக்கிநடந்து கொண்டேயிருக்கின்றார். ஒரு வேளை வடக்கிருக்கப் போகின்றாரோ? சாமி அதாவது இவன் இப்பொழுது வெலஸ்லியைக் கடந்து விட்டான்(ர்). இந்த கொலிஜ்ஜிற்கும் வெலஸ்லியிற்கும்
இடைப்பட்டயங் வீதிக்கு மேற்காகயிருக்கின்ற பகுதியிருக்கின்றதே இது ஒரு வித்தியாசமான பகுதி. பகலில் தெரியும் இதன் தோற்றத்திற்கும் இரவில் தெரியும் இதன் தோற்றத்திற்கும் 180பாகை வித்தியாசமுண்டு. இறுக்கமாக ஒட்டிய டெனிம் ஜீன்ஸ் அணிந்து ஆணழகர்களை இங்கு நீங்கள் அப்பொழுது காணலாம். இரவு ராணிகள், இரவு ராஜாக்கள் இப்படி பல்வேறு வகையான ராச்சியங்களை உள்ளடக்கியமாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் தலைநகர்தான் இந்த “யங் வீதி எல்லாம் இரவில் தான். பகலில் இந்தப் பூனையும் பால் குடிக்குமா ரகம்தான்.

அது சரி அந்த இவனிற்கு என்ன நடந்துவிட்டது. அடடா நல்ல வேளை ஒன்றுமே நடக்கவில்லை. அதோ போய்க் கொண்டிருக் கின்றானே. இன்னமும், வடக்காக. விரைந்துதான் நடப்போமா.

பல்வேறு திசைகளிலுமாகப் பல்வேறு மனிதர்கள்.

சீனர்கள்,

யவனர்கள்,

ரோமர்கள் அதாவது இத்தாலியர்கள்,

ஆங்கிலேயர்கள்,

அராபியர்கள்,

இஸ்ரேலியர்கள்,

ஆபிரிக்கர்கள்,

வட அமெரிக்கர்கள்,

போர்த்த்கேயர்கள்,

ஜெர்மானியர்கள்,..

சிலர் தெற்காக நடக்கிறார்கள்.

சிலர் மேற்காக.

சிலர் கிழக்காக.

சிலர் வடக்காக.

இன்னும் சிலரோ குறுக்காக.

எதிரே தடித்த, அடர்ந்த மீசையுடன் ஒரு ஆங்கிலேயன். நடுத்தர வயதினன். அலட்சியமும் அகங்காரமும் படர்ந்த முகத்தினன். தெற்கு நோக்கி வந்து கொண்டிருந்தான். இவன்’ வடக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தான். இவனும் கவனிக்கவில்லை. அவனும் கவனிக்கவில்லை. சிறு மோதல். எரிச்சலுடன் ஆத்திரத்துடன் இவனைத் திரும்பிப் பார்க்கின்றான் தெற்கு நோக்கிப் போய்க் கொண்டிருந்தவன்.

வடக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தவனின் தோற்றம் அவனிற்கு அருவருப்பைத் தருகின்றது போலும். வார்த்தைகள் உதிருகின்றன.

‘. டேர்ட்டி இன்டியன்’ இவன் எதையுமே கவனிக்கவில்லை. தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றான்.   

யார் இவன். ? இலேசாகப் புரிகின்றதா? இந்தியனாகயிருப்பானோ?

பலவகையான இந்தியர்கள் இருக்கின்றார்கள். இவன் அவர்களில் எந்த வகை?

சிவப்பா. மேற்கா. கிழக்கா. யார் இவன்?

எதிரே இன்னுமொருவன் வருகின்றான்.

தலை மொட்டையடித்து இராணுவ உடையணிந்த சிப்பாயைப் போல் , யார் இவன்?

தோற்தலையர்களில் ஒருவனோ.

இவனும் தெற்கு நோக்கிச் சென்று கொண்டிருப்பவன். வடக்கு நோக்கிச் சென்று கொண்டிருப்பவனைக் கண்டதும் இவன் இதழ்களில் ஏளனம் கடந்ததொரு. புன்னகையாகத்தானிருக்க வேண்டும்.

புன்னகையைத் தொடர்ந்து வார்த்தைகள்.

‘பாக்கி.’

வடக்கு நோக்கிச் சென்று கொண்டிருப்பவன் இவை எதனையுமே கவனிக்கவில்லை தொடர்ந்து வடக்கு நோக்கிச் சென்று கொண்டுதானிருக்கின்றான்.

யார் இவன்?

‘பாக்கி’ என்றழைக்கப்படுகின்றானே. பாகிஸ்தானைச் சேர்ந்தவனாகயிருப்பானோ? இந்தியனா?

பாகிஸ்தானைச் சேர்ந்தவனா? அல்லது. யார் இவன்?

இவன் ஒரு மனிதன்.

நிச்சயமாகத் தெரிகின்றது.

ஒரு தலை, இரு கண்கள், இரு கைகள், இரு கால்கள்.

நிச்சயமாக மனிதன்தான்.

மனிதன் என்று சொல்வதால் பெண்விடுதலைப் பிரியர்களே சண்டைக்கு வந்துவிடாதீர்கள். மனிதர்களில் ஒருவர் என்று சொல்லும்படி வற்புறுத்திவிடாதீர்கள். சந்தேகமில்லாமல் இவன் ஒரு மனிதன் தான் அதில் மட்டும் சந்தேகமில்லை. அது சரி அப்படியென்றால் இவன் அந்த வகையான மனிதன். ? அட அவனிற்குத்தான் அவனைப் பற்றிச் சந்தேக மென்றால் உங்களிற்கும் வந்து விட்டதா? நதி மூலம் ரிஷிமூலம் தான் தெரியவில்லையென்று பார்த்தால், இந்த மண்ணில் மனித மூலம் கூடத் தெரியவில்லை.\

– தாயகம் ! 15.4.1994 –


4. சிறுகதை: பொந்துப்பறவைகள்!

– சுவடுகள் (நோர்வே) சஞ்சிகையில் வெளியான சிறுகதை. சிங்கப்பூர் கல்வி அமைச்சு பாடசாலை மாணவர்களுக்கான தமிழ்ப்பாடக் கல்வித்திட்டத்தில் உள்ளடக்கிய சிறுகதை. –


சிறுகதை வாசிப்போமா?இரண்டு நாட்களாக இலேசாகயிருந்த வலி இன்று அதிகமாகி விட்டிருந்தது. முருகேசனுக்கு இந்த மூட்டுவலி ஒன்றும் புதிதான தொன்றல்ல. இலங்கையில் இருந்த சமயத்திலிருந்தே அடிக்கடி வந்து வந்து தொந்தரவு செய்து கொண்டிருந்ததொன்றுதான். உடம்பு பலவீனப் பட்டுப் போகும் சமயம் பார்த்து வந்து மூட்டுகளைப் பிடித்து விடும். முக்கியமாக கால்மூட்டுகளையும்தான்தாக்குவது வழக்கம். இலேசாகத் தொடங்கி மூட்டுகள் கொதிக்கத் தொடங்கி விடும். நடக்க முடியாது. காரணமில்லாத எரிச்சலும் வலியும் அதிகமாகி மூட்டுகளைப்பிளந்து விடலாமாவென்றிருக்கும். ஆரம்பத்தில் கீல்வாத மென்று தான் சந்தேகப்பட்டார்கள் பலவித இரத்தப் பரிசோதனைகளுக்குப் பிறகு அவனிற்கிருப்பது கீல்வாதமல்ல ஒரு விதமானமூட்டுவலிதான் என்பது நிருபணமாகியது. இதற்காக எந்த நேரமும் அவன் கைவசம் விட்டமின் பிகுளிகைளையும் டெட்ராசைக்கிளின் கப்சூல்களையும் வைத்திருப்பது வழக்கம். கனடா வந்த புதிதில் ஆரம்பத்தில் ஒருமுறை வந்த பொழுது அவனது குடும்ப வைத்தியரான டாக்டர் பொங் அக்யூபங்சர் முறையிலான ஒரு முறையைக் கடைப்பிடிக்கும் படி அறிவுரை கூறியிருந்தார். பொதுவாக மூட்டு வலிக்கத் தொடங்குவதற்குமுன்னர் அப்பகுதியைச் சுற்றி ஒரு வித உளைவு தொடங்கிவிடும். மூட்டுவலி வருவதற்கான முன்னெச்சரிக்கை அத்தகைய சமயங்களில் எல்லாம் எந்தக்கால்மூட்டு வலிக்கத்தொடங்குகிறதோஅந்தப்பக்கத்துக்கையின் கட்டை விரலுக்கும் அடுத்த விரலுக்கும்இடைப்பட்ட பகுதியை அழுத்தி அழுத்திவிட்டுவர வேண்டுமென்பது டாக்டர்பொங்கின் ஆலோசனை. அதற்குப்பிறகு முருகேசன் டாக்டரின் ஆலோசனையே பின்பற்றி வந்தான். ஐந்து வருடங்களாக வலிதலைகாட்டவேயில்லை. டாக்டர் பொங் உண்மையிலேயே கெட்டிக்காரன்தான். சைனாக்காரங்கள் கட்டையன்கள் என்றாலும் சரியான விண்ணன்கள்தான். ஐந்து வருடங்களாக தலைகாட்டாதிருந்த வலி மீண்டும் கடந்த இரண்டு நாட்களாகதலைகாட்டத் தொடங்கிவிட்டிருந்தது. இதற்கு முருகேசன் தான் காரணம். வழக்கமாக மூட்டு உளையத் தொடங்கியதுமே பின்பற்றவேண்டிய டாக்டரின் ஆலோசனையை பின்பற்ற அவன் தவறிவிட்டான். கடந்த இரண்டு கிழமைகளாக சரியான ஓவர்டைம். ஒழுங்காக நேரத்திற்கு சாப்பாடில்லை. உடம்பு நன்கு பலவீனப்பட்டுப் போய் விட்டிருந்தது. வலியை வரவிடக்கூடாது. வந்துவிட்டாலோ குறைந்தது இரண்டுநாட்களாவது அடம்பிடித்து இருந்துவிட்டுத்தான் செல்லும், ஆஸ்பிரினை நான்கு மணித்தியாலத்திற்கு ஒரு முறை இரண்டிரண்டாகப் போட்டுவர வேண்டும். சாதாரண ஆஸ்பிரின் அல்ல, எக்ஸ்ட்ரா ஸ்ரென்த் ஆஸ்பிரின் ஆஸ்பிரினைப் பாவிக்க ஆலோசனை கூறியதும் டாக்டர் பொங்தான்.

சோபாவில் படுத்திருந்தபடி டி.வியைப் பார்த்துக்கொண்டிருந்தான். கடந்த நான்கு மணித்தியாலங்களாக வலி அதிகமாகிநடக்கமுடியாத நிலைமைக்குத் தள்ளப்பட்டிருந்தான். ஆஸ்பிரினை ஒழுங்காக எடுத்துவந்தால் இரவு வலிகுறைந்துவிடும். இதுமட்டும் பொறுமையாக யிருக்க வேண்டும். இத்தகைய சமயங்களில் அவனுக்கு ஊரிலிருக்கும் அம்மாவின் ஞாபகம் வந்துவிடும். அவனை அப்படி இப்படி அசைய விடமாட்டாள். வெந்நீரால் மூட்டுகளுக்கு ஒத்தடம் கொடுத்து விடு வாள். அவளுக்கு எப்பொழுதுமே அவனென்றால் செல்லம்தான்.

இத்தகைய சமயங்களில் அத்தகைய ஆறுதலும் வேண்டித்தான் இருக்கிறது. அதையெல்லாம் இங்கு எதிர்பார்க்க முடியாது. அவன் தனித்து இந்த பச்சிலர் அப்பார்ட்மெண்டில் வாழ்கிறான். காங்கிரீட் காட்டினுள் ஒரு பொந்து வாழ்க்கை. அவனிற்கு எதிர்ப்புறமாகவுள்ள பொந்தில் ஆங்கிலக் குடும்பம், இடப்புறம் ஒரு சீனக்குடும்பம். வலப்புறமாக. ஒரு யமேக்கன், ‘இந்த யமேய்கன் கறுவல்களை யெல்லாம் அடித்துக்கலைக்கவேண்டும். குடியும் பெட்டையும் மருந்தும் இருந்தால் இதுகிற்குக் காணும் ஒழுங்காக உழைத்துப் படித்து வாழ இதுகளாலை முடியாது. களவெடுக்கிறதும் சுட்டுத்திரியிறதும். சீ.’ இதுமுருகேசனின் கறுப்பினத்தவர்களைப் பற்றிகுறிப்பாக யமேய்க்கன் நாட்டுக் கறுப்பின மக்களைப்பற்றி எண்ணப்போக்கு. இவ்விதம் முத்திரை குத்தும் பழக்கம் அவனது தொட்டிற்பழக்கம் சுடுகாடுவரை போகாமல் விடாது. தொப்பி பிரட்டிகள், மோட்டுச் சிங்களவன் என்ற கருதுகோள்களின் பரிணாம வளர்ச்சி.

நேரம் சென்றுகொண்டிருந்தது.

எத்தனை நேரம்தான் டி.வியைப் பார்த்துக் கொண்டிருப்பது. அலுத்துவிட்டது. டி. வி. சத்தமே எரிச்சலையும் தலையிடியையும் தரத் தொடங்கியது. டி.வியை நிற்பாட்டினான்.

நோய்வருமட்டும் நோயற்றவாழ்வின் அருமை தெரிவதில்லை. இத்தகைய சமயங்களில்தான் தெரிந்துவிடுகிறது. இனி ஒழுங்காக உடம்பைக் கவனித்துக் கொள்ளவேண்டும். சாப்பாட்டைச் சரியாக நேரத்திற்கு எடுக்க வேண்டும்.

இந்தச்சமயம் பார்த்து பயர் ‘அலார்ம்’ அடிக்கத் தொடங்கியது. இந்த ‘அலார்ம்’ அடிப்பதே இங்கு ஒரு முக்கியமான பிரச்சினை.

எல்லாமிந்த கறுவல்களின்ற சேட்டைதான். விளையாட்டுக்கு அடித்துவிட்டு ‘பயர்பிரிகாட்’ ஒடித்திரிவதைப் பார்ப்பதில் இவங்களிற் கொரு திரில்.

இவ்விதமாக முருகேசன் எண்ணினான். வழக்கமாக அலாம் அடித்துவிட்டு சிறிது நேரத்திலே ஒய்ந்து விடும். ஆனால் இம்முறை ஒய்வதாகத் தெரியவில்லை. விடாமல் அடித்துக்கொண்டே இருந்தது.

வெளியில் மனிதர்கள் ஒடித்திரியும் நடமாட்டம் அதிகரித்தது. ஏதோ ஒரு புளோரில் இருந்து பெண்கள் சிலரின் கூக்குரல் கேட்டது. முருகேசன் சிறிது கலவரமடைந்தான்.

வெளியில் பயர்பிரிகாட்டின் சைரன் பலமாக ஒலிக்கத் தொடங்கியது.

ஏதோ உண்மையாகவே நடந்திருக்க வேண்டும்போல் முதன்முறையாக முருகேசன் உணர்ந்தான். இன்னும் ‘அலார்ம்’ விடாமல் அடித்துக் கொண்டே இருந்தது.

முருகேசன் எழும்புவதற்கு முயன்றான். மூட்டு பலமாக வலித்தது. அசைய முடியவில்லை. இலேசானமணமொன்று மூக்கைத்துளைத்தது. எங்கோ, ஏதோ எரியும் வாசனை. முருகேசனின் கலவரம் அதிகரிக்கத் தொடங்கியது. இந்த இக்கட்டிலிருந்து எப்படித்தப்புவது? ‘கடவுளே! எப்படியாவது என்னைக் காப்பாற்றிவிடு’ பொதுவாக முருகேசனுக்கு கடவுள்நம்பிக்கை அதிகமில்லை; ஆனால் இத்தகைய சமயங்களில்தான் கடவுள் நம்பிக்கை அதிகமாகி விடுகின்றது. எரியும் வாசனையைத் தொடர்ந்து பல்கனிப் பக்கமாக இலேசான புகை பரவிக் கொண்டிருந்தது தெரிந்தது. வெளியில் ஒடிக்கொண்டிருந்த மனிதநடமாட்டம் குறைந்து மெல்ல மெல்ல ஓய்ந்துபோய் விட்டது. எல்லோரும் ஒடிப்போய் விட்டார்கள். முருகேசன் தனித்துப் போய் விட்டான். இப்படியே முடிந்துவிட வேண்டியதா? எப்படி தானிருப்பதை வெளியில் தெரியப்படுத்துவது? முருகேசனுக்கு ஒரு வழியும் தென்படவில்லை. ஊர்நினைவு உடனடியாக எழுந்தது. ஆவலும் எதிர்பார்ப்புமாக அம்மா, அக்கா, தங்கச்சிமார், தம்பி. ‘ஒரு லைப் இன்சூரன்ஸ் கூட எடுத்து வைத்திருக்கவில்லையே. எடுத்திருந்தாலாவது கொஞ்சக் காசாவது அவர்களுக்குக் கிடைக்கும்’முருகேசன் முடிவைநோக்கித்தன்னைத் தயார்ப்படுத்துவதில் ஈடுபட்டான். ‘வருவது வரட்டும் எதிர்கொள்ள வேண்டியதுதான். ‘புகையின்காரம் அதிகரிக்கத் தொடங்கியது. கண்கள் எரியத் தொடங்கின. தொண்டை செருமத் தொடங்கியது. இறுதிமுறை யாக எழும்புவதற்கு முடிவுசெய்தான். முடியவில்லை. முயற்சியைக் கைவிட்டவனாக சோபாவில் ஆயாசத்துடன் சாய்ந்தான்.

இந்தச் சமயம் பார்த்து கதவு பலமாகத் தட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்த பலமான குதல். ‘எனிபொடி இன்?’

அந்தக் குரல் அவனுக்கு நன்கு விளங்கியது. பக்கத்து வீட்டு யமேக்கனின் குரல். பலமுறை அந்தக் குரலை இவன் கேட்டிருக்கிறான்.

முருகேசனுக்கு தென்பு மீண்டும் அதிகரித்தது. கடவுள்தான் யமேக்கனின் உருவில் வந்ததாகப் பட்டது. பதிலிற்குப் பலமாக இவன் கத்தினான்.

“ஐ ஆம் கியர் ஐ ஆம் கியர். ஐகனட் வோக்மான்.  காவிங் ஜாயின்ட் ப்ராப்ளம்.’ யமேக்கனுக்குஇவனது உச்சரிப்புசரியாக விளங்கவில்லை. பலமாக மீண்டும் கதவைத்தட்டினான்.

‘ஒப்பின் யுவர் டோர் மான்: குயிக் குயீக் பில்டிங் இஸ் இன் பிளேம்ஸ்,” முருகேசன் மீண்டும் பலமாகக் கத்தினான்.

‘பிரேக் த டோர். பிரேக் த டோர் ‘ யமேக்கனுக்கு இவன் ஏதோ இக்கட்டில் இருப்பது விளங்கியது. பலமாக கதவை மோதினான். அவனுடைய உருக்கு உடம்பு வலிமைக்குமுன்னால் கதவுஈடுகொடுக்க முடியவில்லை. உள்ளே உடைத்து வந்தவனைப் பார்த்து

‘ஐ கான்ட் வோக் மான்’ என்றபடி தன் கால் மூட்டைக் காட்டினான் முருகேசன். வெளியில் புகையின் செறிவு அதிகரிக்கத் தொடங்கியது. உள் நடைபாதையிலும் புகை பரவத் தொடங்கியது. யமேக்கன் கொஞ்சமும் தாமதிக்கவில்லை. முருகேசனை அலாக்காகத் தூக்கியவனாக வெளியேறினான்.

‘ஏ மான் யு லுக் ஸ்கின்னி, பட் டூ ஹெவி மன்’ என்று அந்தச் சமயத்திலும் ஜோக் அடித்துவிட்டுப் பலமாகச் சிரிக்கவும் அந்த யமேக்கன் தவறவில்லை. முருகேசனுக்கு அதிசயமாகவிருந்தது. அவன் முதல் முதலாக கறுப்பர்களைப் பற்றிய தன் கணிப்பீட்டை மாற்றியது அன்றுதான். அந்த மாற்றம் கூடச் சுயநலத்தால் விளைந்ததொன்றாக இருந்ததையெண்ணி முருகேசன் உண்மையிலேயே வெட்கித்துப் போனான்.

நன்றி: சுவடுகள் (நோர்வே)

ngiri2704@rogers.com