ஈழத்து ஆக்க இலக்கியப் படைப்பாளியும் மல்லிகைப்பந்தல் தோழருமான எழுத்தாளர் நாவல்நகர் ப.ஆப்தீன் அவர்கள் சுகவீனமுற்ற நிலையில் கடந்த 9 ஆம்திகதி கொழும்பில் தனது 77 ஆவது வயதில் காலமானார். அவரது மறைவு ஈழத்து இலக்கிய உலகில் மட்டுமல்ல மல்லிகைப்பந்தல் தோழமை வட்டத்திலும் ஒரு வெறுமையை ஏற்படுத்தி விட்டது.
மலையகத்தைப் பிறப்பிடமாகக் கொண்டிருந்தாலும் பல்வேறு பிரதேசங்களில் ஆசிரியராகப் பணியாற்றியதன் காரணமாக, முற்போக்கு சிந்தனையுடன் மனித நேயப் பார்வையுடன் சமூகப் பொறுப்புணர்ச்சியுடன் படைப்புக்களைத் தந்தவர்.
மல்லிகையால் வளர்த்தெடுக்கப்பட்ட படைப்பாளி. இவரது முதலாவது சிறுகதைத் தொகுப்பு “இரவின் இராகங்கள் ” மல்லிகைப்பந்தல் வெளியீடாக வந்தது. அதே தொகுப்பு தமிழகத்தில் NCBH இல் மறுபதிப்பாக வெளிவந்தது. அடுத்த அவரது சிறுகதைத் தொகுப்பும் மல்லிகைப்பந்தல் வெளியீடாக “நாம் பயணித்த புகைவண்டி ” எனும் பெயரில் வந்தது.
இவர் எழுதிய. ” கருக் கொண்ட மேகங்கள் ” நாவல் சிங்கள-தமிழ்-முஸ்லிம் மக்கள் இடையே நிலவும் ஒருமைப்பாட்டை எடுத்துக்காட்டும் ஒரு நாவலாக வெளிவந்தது.
இறுதியாக கொடகே வெளியீடாக வந்த இவரது “கொங்காணி” எனும் சிறுகதைத் தொகுப்பு மலையக மக்களின் வாழ்வியலை அவர்களின் சொல்லாடல்களுடன் சொன்னது மட்டுமல்லாமல், சமகால ஈழத்து மக்களின் வாழ்வியலையும் உணர்ச்சிபூர்வமாக எடுத்துக் காட்டிச் சென்றுள்ளது.
மலாய் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தமையால் இலங்கை வாழ் மலாய் சமூகத்தினரை அடையாளப்படுத்தும் வகையிலான ஒரு வரலாற்று நாவலை எழுதிக் கொண்டிருந்த நிலையில் மறைந்து விட்டார். அவரது மறைவு ஈழத்து இலக்கியத்திற்கு மட்டுமல்ல மல்லிகைப்பந்தல் தோழமை வட்டத்தினருக்கும் ஒரு பெரும் இழப்பு என்றே சொல்லவேண்டும்.
அவரது இறுதிச்சடங்கு 10.10.2015 காலை கொழும்பில் நடைபெற்றது.
தகவல்: முருகபூபதி letchumananm@gmail.com