“காலையில் ஆதவன்
கதிரொளியால்
சிரிக்கும் போது
சரீரம் சிணுங்குகிறது.
மாலையில்
சூரியக்காதலன்
மங்கும்போது
மனமும் மயங்குகிறது.
இயற்கையே
உன் படைப்பில்
இன்பமும் இன்னலும்
செயற்கையாய்
கலந்த கலவையா….
இன்பவானில்
சிறகடிக்கும்
மானிடர்களும்
றெக்கை முளைத்த
பறவையா…..”
“எவரெஸ்ட்டில் ஏறி
என்முகம் பூரிக்கிறது.
இமயமலையை
விலைக்கு வாங்கி
இதயத்தில் பூட்டுகிறேன்.
இராமேஸ்வர பாலமும்
வழிவிடுகிறது
புதிய இராமாயணம்
படைக்கிறேன்.
விண்ணில் பறக்கும் போது
சூரியன் என்னை
முத்தமிட்டது.
ஆஸ்கார் விருதும்
என் தலைமையில்
அடடா….!
என்ன அற்புதம்
பசியினில்
இப்படியே எத்தனையோ
புலம்பல்
விட்டத்தைப் பார்த்தபடியே…..!
பசியினில் கூட
பயங்கரம்.
பாமரனுக்கு வறுமைதானா
நிரந்தரம்.”
“நிஜங்கள் கனவுகளாக
கனவுகள் நிழல்களாக
சொல்லும் செயலும்
நேர்மையின்றி செல்ல
வெற்றி மட்டும்
தடம் மாறுவதேன்.
படிப்பு என்பது போதனையா!
படித்ததனால் வருவது
சோதனையா!
மயக்கமும் கலக்கமும்
மாணவர் பருவத்தில் இல்லை.
தயக்கமும் குழப்பமும்
வேலை கிடைக்கும் வரை
தொல்லை.
டாஸ்மார்க்கை விட
பாஸ்மார்க் வாங்கியவரின்
கூட்டம் அலைமோதுகிறது
வேலைவாய்ப்பு அலுவலகங்களில்……
எத்தனைமுறை
புதுப்பித்தும்
அத்தனைமுறையும்
ஒரே பதில்
‘இங்கு வேலை காலியில்லை ‘
காலாவதியானது காலம்.
இது யார் போட்ட கோலம்.”
“ஒருவேளை உணவுக்கு
ஒரு வேலை இல்லை.
படித்த பட்டம்
ஒவ்வொரு வாசலாய்
ஏறுவது தொல்லை.
ஏட்டில் எழுதியும்
“மை “
உலரவில்லை.
வறுமையை அழிக்க
அழிப்பான்
இன்னுமா கிடைக்கவில்லை.
பட்டங்கள் பயன்படுமா!
திட்டங்கள் நடைமுறையாகுமா!
திண்டாட்டம் குறைந்தால்
கொண்டாட்டம் கூடும்.
மன்றாடுகிறது
தரமிகு இளைஞர் கூட்டம்
வேலையில்லா பட்டதாரியாய்…….”
drrksir121314@gmail.com