கவிதை: பாரைவிட்டுப் போனதேனோ !

எழுத்தாளர் பாலகுமாரன்

– அண்மையில் மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் நினைவுக் கவிதை. –

குங்குமம் பொட்டும் குறுகுறுத்த பார்வையும்
எங்குமே பரந்துநிற்கும் எழிலார்ந்த கற்பனையும்
பொங்கிவரும் தமிழுணர்வும் பொறுப்பான எழுத்துக்களும்
எங்களுக்கு அளித்துவிட்டு எங்குசென்றீர் சித்தரையா   !

எழுதிக் குவித்தகை எப்படித்தான் ஓய்ந்ததுவோ
அளவின்றி  பலவற்றை ஆர்வமுடன் தந்தீர்கள்
வழுவின்றி வைகத்தில் வாழும்வகை எழுத்தாக்கி
வழங்கிவிட்டு ஏனையா மனமேங்க வைத்துவிட்டீர்        !

வெள்ளுடையில் மேடையேறி வெளியாகும் கருத்துக்களை
அள்ளிநாம் பருகிவிட ஆசையுடன் இருக்கின்றோம்
வெண்தாடி வெள்ளுடையில் வேறுயார் இங்குள்ளார்
வித்தகரே சித்தரையா விரைவாகச் சென்றதேனோ     !

பரிசுபல பெற்றாலும் பல்லக்கில் ஏறாமல்
பக்குவத்தைக் கடைப்பிடித்து பலபேரும் மதிக்கநின்றாய்
படைக்கின்ற அத்தனையும் பயனாகும் பாங்கினிலே
படைத்தளித்து விட்டுத்தான் பாரைவிட்டு அகன்றனையோ    !

உன்நாவல் அத்தனையும் உரமாக இருக்குமையா
வெவ்வேறு விதமாக விறுவிறுப்பாய் தந்துநின்றாய்
தமிழ்படிப்பார் யாவருமே தலைமீது வைப்பார்கள்
அறிவான எழுத்தாலே அனைவரையும் ஆண்டுவிட்டாய்   !

முக்காலமாய் உந்தன் எழுத்துக்களை பார்த்திடலாம்
முதற்காலம் முற்போக்கு முகிழ்த்ததையே பார்க்கின்றோம்
இடைக்காலம் வெள்ளித்திரை ஈர்த்துவிட இருந்துவிட்டாய்
இக்காலம் இறைபக்தி எழுத்தாக்கி எழுச்சிபெற்றாய்     !

குடும்பத்தை உயர்த்துதற்கு கொடுத்துநின்றாய் பலகருத்தை
குலவிளக்காம் பெண்கள்தமை குன்றேத்திப் பலபுகன்றாய்
நலமிக்க சமுதாயம் நாட்டில் வரவேண்டுமென்று
நாளெல்லாம் எழுதிவிட்டு நாயகரே சென்றதேனோ        !

படைப்புலம் அழுகிறது பத்திரிகை அழுகிறது
பாலகுமாரன் ஐயா பசுந்தமிழும் அழுகிறது           
பரவசமும் பக்குவமும் பாங்காக படைத்தளித்த
பாலகுமாரன் ஐயா பாரைவிட்டுப் போனதேனோ    !

jeyaramiyer@yahoo.com.au