பழங்குடிகளின் பண்பாட்டினையும்,வாழ்க்கை முறையினையும் இன அடையாளங்களையும் இனங்காணத் துணைபுரிவது, அவர்கள் மேற்கொண்டுள்ள மரபார்ந்த தொழில்களாகும். இத்தொழில்கள் அவர்தம் வாழ்நிலைக்கும் சூழலுக்கும் ஏற்ப மாறுபட்டாலும் இயற்கையோடு இயைந்த வாழ்வினையும்,பண்பாட்டினை அடிப்படையாக கொண்டுள்ள பழங்குடிகள் அனாதி காலம் தொட்டு இடையறாமல் மேற்கொண்டு வரும் தொழில் என்பது காடுபடு பொருட்கள் சேகரித்தல் என்பதாகும். வேட்டையாடித் தங்களது உணவுத் தேவையினைப் பூர்த்தி செய்த பழங்குடிகள், அதற்கடுத்த நிலையில் செய்யும் தொழிலானது காடுபடு பொருட்களைச் சேகரிப்பதாகும். ‘மீன்பிடித்தல், தேன் எடுத்தல் ,காட்டில் கிடைக்கும் காய்கனிகள், கொட்டை வகைகள், கிழங்குகள், கீரைகள்,முதலானப் பொருட்களைச் சேகரித்தல், மரப்பட்டைகள், நார், மரப்பொருட்கள் போன்றவற்றைச் சேகரித்து பிற மக்களுக்குக் கொடுத்து அவர்களிடம் இருந்து தேவையான பொருட்களைப் பெறுதல் ஆகியவை மூலம் உணவுத் தேவைகளை ஈட்டும் முறையை காடுபடு பொருட்களை சேகரிக்கும் முறையாகும்’. இவ்வாறு காடுபடு பொருட்களைச் சேகரித்து, தங்களது தேவைகளுக்கும், பண்டமாற்று முறையாகவும் பயன்படுத்தும் முறையானது பொதுவான ஒன்றாக பழங்குடிச் சமூகங்களிடையே இருந்து வருகிறது. இந்நிலையானது கூடலூரில் வாழும் தொல்பழங்குடிகளான குறும்பர், காட்டுநாயக்கர், பணியர் ஆகியோரிடம் எவ்வாறு உள்ளது என்பதை ஆராயும் முகமாக இக்கட்டுரை அமைகிறது.
மீன்பிடித்தல்
வனம் சார்ந்த பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் மீன்களை பின்வரும் முறைகளில் பிடிக்கின்றனர். மடைமாற்றம் செய்தும், வலைபோட்டும், தூண்டில் வைத்தும், முறம் போன்ற கருவி கொண்டும் பழங்குடியினர் மீன்பிடிப்பதைக் இப்பகுதியில் காணமுடிகிறது. மீன் பிடிப்பதில் பெரும்பாலும் பெண்களே ஈடுபடுகின்றனர். இவற்றுள் பழங்குடிகளிடம் மேற்காணும் மீன்பிடி முறையானது பரவலாகக் காணப்படுவதை அறிய முடிகிறது.
காட்டு நாயக்கர் பழங்குடிகளுள் ஆண்களும் பெண்களும் இணைந்து அடர்வனப்பகுதி களில் மீன்பிடிக்கின்றனர். இவர்கள் காடுகளில் கிடைக்கும் ‘காரைக்காய்’ எனப்படும் ஒரு வகையான காயினை நன்றாக அரைத்து அதனை நீரில் கலந்து விடுகின்றனர். இவ்வாறு செய்வதால் மீன்கள் மயக்கமுற்று நீரின் மேற்பரப்பில் வந்து மிதக்கின்றன. இம்மீன்களை அவர்கள் பிடிக்கின்றனர். ஆண்கள் காரைக்காயினைப் பறித்து வரும் பணியிலும் மீன்பிடிக்கும் பணிகளிலும் பெண்கள் அதனை அரைப்பதிலும், நீரில்கலக்கி விடுவதிலும் ஈடுபடுகின்றனர். தவிர மிகக் குறைந்த அளவில் மீன்களைத் தூண்டிலிட்டும்; பிடிக்கின்ற வழக்கமும் உள்ளது.
பெட்டக்குறும்பர்கள் மீன்பிடிக்கும் முறையானது மடைமாற்ற முறையாகும். கோடைக் காலங்களில் ஓடையின் வளைவான பகுதிகளில் உள்ளவற்றில் நீரை மடை மாற்றம் செய்து மீன்களை ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் தங்குமாறு செய்து அதனைத் துண்டு, வேட்டி போன்றவற்றை வலையாக பயன்படுத்தி மீன் பிடிக்கின்றனர். தவிர முதுமலை தெப்பக்காட்டில் வாழும் பெட்டக்குறும்பப் பெண்கள் அங்குள்ள மாயார் ஆற்றுப் பகுதியில் தூண்டிலிட்டு மீன்பிடிப்பதை இன்றளவும் காணமுடிகிறது. தேனு குறும்பர் என்ற பிரிவினர் வாழும் பகுதிகள் குறைந்த அளவில் நீர் நிலைகள் உள்ளதால் அவர்கள் மீன்பிடிக்கும் தொழிலைப் பெருமளவில் மேற்கொள்வதில்லை.
முள்ளுக்குறும்பர் பழங்குடிகளில் ஆண்கள் வேட்டையாடுவது எவ்வாறு அவர்களது பண்பாட்டு நிகழ்வோ அதைப்போல, பெண்கள் மீன் பிடிப்பதும் மிக முக்கியமான தொழிலாக உள்ளதைக் காணமுடிகின்றது. இவர்களிடம் பெண்களின் முதன்மையானப் பொருள் ஈட்டும் நிகழ்வாக மீன்பிடித்தல் உள்ளது. இவர்களும் காட்டு நாயக்கரைப் போல் நீரில் காரைக்காயை கலந்து மீன்களை மயக்கமுறச் செய்து மீன்பிடிக்கும் முறையையும் பின்பற்றுகின்றனர். தவிர ‘கோர்த்த’ எனப்படும் பெரிய முறம் போன்ற மூங்கிலால் ஆன பாயினைக் கொண்டும் மீன்பிடிக்கின்றனர். அவ்வாறு ‘கோர்த்தாவில்’ கிடைக்கும் மீன்களை ‘மீனு கூட்ட’ எனப்படும் சிறிய கூடை போன்ற வடிவமுடைய ஒன்றைக் கழுத்தில் கட்டிக் கொண்டு அதில் இடுகின்றனர். இம்முறையானது இப்பழங்குடிகளிடம் மட்டுமே காணக் கூடியதாகும். தவிர, இவர்களது பண்பாட்டு நிகழ்வுகளான திருமணம், இறப்புச்சடங்கு, திருவிழாக்கள் ஆகியவற்றில் பெண்கள் மீன்பிடித்து வந்து அதனை ‘தெய்வப்பெரா’வின் முன் படைத்துவிட்டே பகிர்ந்து கொள்கின்றனர். எனவே, முள்ளுக்குறும்பர் வாழ்வில் மீன்பிடித்தல் என்பது மிக இன்றியமையாத பெண்கள் மேற்கொள்ளும் தொழிலாகவும், சடங்கு சார்ந்த பண்பாட்டு நிகழ்வாகவும் இருப்பதை அவதானிக்க முடிகிறது.
பணியர்களிடம் மீன்பிடித்தல் என்பது முக்கியமான தொழிலாக இருந்துள்ளது. இவ்வினத்தில் ஆண்களும், பெண்களும் மீன் பிடிப்பதில் ஈடுபடுகின்றனர். பணியர்கள் மீன்பிடித்த முறையினையும், அது தடைசெய்யப்பட்ட முறையினையும் பின்வரும் அறிக்கை தெளிவுறுத்துகிறது.
‘கூரிய பற்களைக் கொண்ட பெரிய அளவிலான வைக்கோல் வாரியின் அமைப்புடையனவாக மரத்தால் செய்யப்பட்ட பொறிகள் பள்ளங்களின் குறுக்கே பற்களின் முனை, கீழ் நோக்கியபடி இருக்க நீரின் போக்கோடு சற்றே சாய்ந்த கோணத்தில் உறுதியாகப் பொருத்தப்பட்டிருந்தன. வெள்ளப் பெருக்கின்போது பாதுகாப்பினைத் தேடி நீரோடைகளின் பக்கங்களின் அமைந்த இப்பள்ளத்தாக்குகளுக்கு வரும் சிறுமீன்களைப் பிடிக்கவே இவை அமைக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும், இவைகளை முதுமலை வனப்பகுதியில் ஓடும் ஆற்றில் அமைத்தவர்கள் பணியர்களே’. இம்முறையில் மீன் பிடித்தலைத் தடைசெய்து 1907ஆம் ஆண்டு சட்டம் கொண்டுவரப்பட்டது. இது அம்மக்களுக்குத் தமுக்கு அடித்து தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு பணியன்கள் மீன் பிடித்தல் தடைசெய்யப்பட்டபோதும் அவர்கள் வேறு நீர் நிலைகளில் மீன் பிடித்தனர். இன்றளவும் இவர்கள் முந்தைய மீன்பிடிக்கும் பொறியிலான முறையைக் கைவிட்டு, மடைமாற்றம், தூண்டில் போன்ற முறைகளைக் மேற்கொண்டு மீன் பிடிக்கின்றனர். இவ்வாறு மேற்காணும் பழங்குடிகளிடம், அதிலும் குறிப்பாகப் பெண்களிடம் மீன் பிடிக்கும் முறை உள்ளதைக் காண முடிகிறது.
நீர் நிலைகளில் மீன்பிடித்தல் என்பதைத் தவிர பழங்குடிப் பெண்கள் நண்டு, நத்தை முதலானவற்றையும் பிடித்து தங்களது உணவுப் பொருட்களாகக் கொள்கின்றனர். வயல் பகுதிகளிலும், கால்வாய் ஓரங்களில் காணப்படும் நண்டு ‘பால் நண்டு’ எனப்படுகிறது. இது வெண்மை கலந்த பழுப்பு நிறமாக இருக்கும். ஆறு முதலான ஓடும் நீர் நிலைகளில் ‘பாறை நண்டு’ எனப்படும் கறுப்பு நிற நண்டு இருக்கும். இவ்விரு நண்டுகளையும் பழங்குடியினர் உணவாகக் கொள்கின்றனர். இது பழங்குடிகளிடம் பரவலான ஒன்றே தவிர, நத்தை எனப்படுவது, புதிதாக உழும் வயலில் காணப்படும் நத்தை இனத்தை சார்ந்த ‘ஊரி’ என்பதையும் பணியர் பழங்குடிகள் உணவாகக் கொள்கின்றனர். இது வேறு எப்பழங்குடிகளிடமும் இல்லாத உணவுப் பழக்கமாகும்.
தேன் எடுத்தல்
காடுபடு பொருட்கள் சேகரிப்பதில் மிக முக்கியமான தொழிலாக இன்றளவும் உள்ளது ‘தேனெடுத்தல்’ என்பதாகும். காரணம் இத்தொழிலை மிகவும் நேர்த்தியாகச் செய்யும் திறன் பெற்றவர்கள் பழங்குடிகளேயாவர். தேனெடுப்பது என்பது கூடலூர்ப் பகுதியில் தொழிலாகப் பழங்குடிகள் செய்கின்றனர்.
காட்டு நாயக்கர்கள் எனும் வனம் சார்ந்த பகுதிகளில் வாழும் இப்பழங்குடிகள் தேனினை இரண்டு வகையாகப் பிரிக்கின்றனர். அவை ‘ஜேனு’, ‘துடை’ என இதில் ‘ஜேனு’ என்பது உயர்ந்த மரங்களில் இருந்து எடுக்கும் தேனாகும். ‘துடைஜேனு’ எனப்படுவது பொந்துகள், புற்றுகள் போன்றவற்றில் காணலாகும் தேன்கூடுகளில் இருந்து எடுக்கும் தேனாகும். இவற்றுள் உயர்ந்த மரங்களில் இருந்து எடுக்கும் தேனே மிகவும் மருத்துவ குணம் நிறைந்தது என்கின்றனர். இவ்வகைத் தேனிற்குக் கூடுதல் விலையும் உள்ளது. இவர்கள் மூங்கிலால் ஆன ஏணிகளை மூன்று, நான்கென இணைத்து அதனை உயர்ந்த மரங்களில் பிணைத்து அதன் மீது ஏறி தேன் எடுக்கிறார்கள். இம்முறையானது சங்க இலக்கியத்திலும் காணப்படுகிறது. மேலும், பருவமழைத் துவங்கியதும் கிடைக்கும் தேன் மிகவும் சிறந்தது என்கின்றனர். தேனடைகளில் இருந்து வீசும் மணத்தைக் கோண்டே தேன் இருப்பதை உணர்கின்றனர். தேய்பிறை நாட்களில் மட்டுமே தேன் எடுக்கின்றனர். இது அவர்களது மரபார்ந்த அறிவைக் காட்டுகிறது. இவர்கள் மூங்கிலைப் பிணைத்து தேனெடுக்கும் முறையானது சங்க இலக்கியத்தில் காணலாகும் தேனெடுக்கும் முறையோடு (மால்பு – மலைபடுகடாம்) ஒத்துள்ளது எனலாம். இவர்கள் தேன் தவிர அதனோடு சேர்ந்த மெழுகினையும் எடுக்கின்றனர். தற்பொழுதைய நிலையில் காட்டு நாயக்கர் இடையே தேன் எடுத்து விற்பனை செய்வது மிக முக்கியமானத் தொழிலாக உள்ளதைக் காண முடிகிறது. தேனெடுப்பதில் ஆண்கள் மட்டுமே ஈடுபடுகின்றனர்.
குறும்பர்களும் காட்டு நாயக்கர்களைப் போல தேனெடுப்பதைத் தங்களது முதன்மைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். இவ்வினத்துள் தேனுகுறும்பர் எனப்படும் இனமானது தேன் எடுப்பதைக் கொண்டே அடையாளப்படுத்தப்படுகிறது. இன்றளவும் இத்தொழிலை முதன்மைத் தொழிலாகக் கொண்டுள்ளதைக் காண இயலுகிறது. தேனு குறும்பர் என்ற இனத்தவர் ‘நீலகிரி மலைகளில் தேனடைகளைச் சேகரிக்கின்றனர். தேன் குறிஞ்சி மலர்கள் பூக்கள் பூக்கும் பருவத்தில் மிகுதியாகவும் தரமானதாகவும் கிடைக்கிறது எனவும், தேனெடுக்கும் பக்குவ நிலையை அடையாத ஒரு தேன் கூடு அவர்கள் கண்ணில் படுமானால் சில குச்சிகளை ஒரு குறிப்பிட்ட அமைப்பில் அதன் கீழ் வைத்து விடுவர். இந்த அடையாளமானது வேறு குறும்பர்கள் அந்தத் தேனடையில் கை வைக்காதபடி தடுக்கும் என தேனு குறும்பர்கள் தேனெடுக்கும் முறையை கூறுகின்றனர்’ இவ்வாறு தேனெடுக்கும் தேனு குறும்பர்கள் அதனை பண்டமாற்றும் முறையாகவும், விற்பனையாகவும் செய்து வருவதைக் இன்றளவும் காண முடிகிறது. பணியர், பெட்டக்குறும்பர் போன்று இந்தப் பழங்குடிகளும் தேனெடுக்கின்றனர். பணியர் தேனினைப் ‘புற்றுத்தேனு’ ‘கொதுகுதேனு, ‘மரத்தேனு’, ‘கொம்புத்தேனு’ என நான்கு வகையாக அதன் தன்மையில் பகுக்கின்றனர். ஆனால், பணியர், காட்டு நாயக்கரைப் போன்றோ தேனு குறும்பரைப் போன்றோ தேனெடுப்பதைத் தொழிலாகக் கொள்ளவில்லை. மிகச்சிறிய அளவில் தங்களது தேவைக்கு ஏற்றாற்போல் எடுத்துக் கொள்கின்றனர். அதுபோலவே, முள்ளுக்குறும்பரும் தேனெடுப்பதைக் குறைந்த அளவிலேயே கொண்டுள்ளனர். எனவே, தேனெடுத்தலை முதன்மையானத் தொழிலாகக் கொண்டவர்கள் காட்டு நாயக்கரும் தேனு குறும்பரும் அமைகின்றனர்.
கீரைகள்
காடுபடு பொருட்களுள் பெண்கள் சேகரிக்கும் உணவுப் பொருளாக விளங்குவது கீரையாகும். இக்கீரையானது ஒவ்வொரு நிலப்பகுதியின் தன்மைக்கும் ஏற்றாற்போல் பல்வேறு வகைகளில் காணப்படும். அத்தகைய நிலையில் கூடலூர்ப் பகுதியில் பல்வேறு கீரை வகைகள் காணப்படுகின்றன. அவற்றை பழங்குடியினர் தங்களது மொழிக்கேற்ப பெயரிட்டு அழைக்கின்றனர். கீரையினைக் காட்டு நாயக்கர்கள் ‘சீர சொப்பு’ எனவும், பெட்டக்குறும்பர் ‘கீரேக்ரி’ எனவும், தேனு குறும்பர் ‘சொப்பு’ எனவும் முள்ளுக்குறும்பரும், பணியரும் ‘சீரா’ எனவும் அழைக்கின்றனர். மேற்காணும் பழங்குடிகள் அனைவரும் கீரையைத் தங்களது முக்கிய உணவாகக் கொள்கின்றனர். கீரையின் வகைகளாக ‘வல்லார சொப்பு’ ‘தட்டு சீர’, ‘முருங்க சொப்பு’ ‘செறுகீர சொப்பு’, ‘கும்பள சொப்பு’இ ‘தக்லி ஏக்ரி’ போன்றவை பொதுவான கீரை வகைகளாக உள்ளன. தவிர ‘சுருளி சீரா’, ‘சேமஞ்சொப்பு’ ‘கோசு சொப்பு’, ‘கப்ப சீர’ ஆகியன பழங்குடிகள் மட்டுமே உண்ணும் கீரை வகைகளாக உள்ளன. இது பொதுவான உணவாக எல்லாப் பழங்குடிகளிடமும் காணப்படுகின்றது.
கிழங்குகள்
கிழங்குகள் ‘நூரே கிழங்கு’, ‘நூற்றே கிழங்கு’, ‘சாப்பே கிழங்கு’, ‘வள்ளிக் கிழங்கு’, ‘காய்ச்சல் கிழங்கு’ முதலான கிழங்கு வகைகளைக் காடுகளில் இருந்து அகழ்ந்தெடுத்து வருகின்றனர். இக்கிழங்குகளுள் ‘நூற்றே கிழங்கு’ சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது. இப்பணியைப் பெண்களே மேற்கொள்கின்றனர். தவிர ‘பாவாட்டா’ என்ற கிழங்கை மருந்துக்காக விற்பனை செய்கின்றனர். இத்தகைய நிலையில் கிழங்குகளைப் பழங்குடிகள் பயன்படுத்துகின்றனர்.
கொட்டைகள், பட்டைகள்
பல்வேறு மருத்துவப் பயன்களைக் கொண்ட கொட்டைகள், மரத்தின் பட்டைகள் ஆகியவற்றைப் பழங்குடி இனப் பெண்கள் சேகரித்து விற்பனை செய்கின்றனர். அவற்றுள் ‘தேத்தாங்கொட்டை’ என்பதும் ‘சோப்புக்காய்’ என்பதும் முக்கியமான கொட்டைகளாகும். சோப்புக்காய் சோப்பின் உற்பத்திக்காகத் தேனு குறும்பர்கள் காடுகளில் சேகரித்து விற்பனை செய்கின்றனர். பட்டைகளுள் ‘கொன்றை’, ‘கொய்யா’, ‘மா மரம்’, ‘குளிர்மாவு’, ‘ஈட்டி’ முதலானவற்றின் பட்டைகளைச் சேகரித்து விற்பனை செய்கின்றனர். அவர்களும் பயன்படுத்துகின்றனர். பெரும்பாலும் இப்பணிகளில், பழங்குடிப் பெண்களே ஈடுபடுகின்றனர்.
புல்
வீடுகள், மாட்டுக் கொட்டைகைகள், தேயிலைக்கன்றுகளுக்கு பந்தல் அமைத்தல், முதலான தேவைகளுக்காகப் புல் தேவைப்படுகிறது. வனப்பகுதிகளில் காணப்படும் ‘மாணிப்புல், ‘தெர்ப்பப்புல்’ போன்ற புல்வகைகளைக் கூரை வேய்வதற்கும், ‘தைலப்புல்’ என்பதைத் தேயிலைக் கன்றுகளைக் கோடையின் கடுமையிலிருந்து காப்பதற்கும் சேகரித்து தருகின்றனர். இப்பணிகளில் பழங்குடி ஆண், பெண் இருபாலரும் ஈடுபடுகின்றனர்.
விறகு
விறகு வெட்டுவது பழங்குடிகளுள் மிகச்சிலர் செய்யும் பணியாகும். காடுகளில் காணப்படும் காய்ந்த விறகுகளைக் கொண்டு வந்து வீடு, கடைத் தேவைகளுக்காக கொடுத்து அதற்கு ஈடாகப் பொருளோ, பணமோ பெற்றுச் செல்வதைக் காணமுடிகிறது. எக்காரணத்தைக் கொண்டும் வனப்பகுதிகளில் பச்சை மரங்களை இவர்கள் வெட்டுவதில்லை என்பது இங்குக் குறிப்பிடத்தக்கதாகும்.
காடுபடு பொருட்கள் சேகரிப்பு என்பது உணவுத் தேவையினை அடிப்படையாக கொண்டது என்றாலும் மானுட சமூகத்தின் தொடக்க கால உணவு சேகரிப்பு முறையினை அறிந்துகொள்ளவும், தம் வாழ்வின் ஆதாரமாக விளங்கிவரக்கூடிய வனத்தையும், அதற்கு சிறு அழிவும் நேராவண்ணம் இயற்கையோடு இயைந்து வாழும் உயர்ந்த பண்பாட்டினையும் பழங்குடிகளின் சேகரிப்புமுறை வெளிப்படுத்திவருவது தனிச்சிறப்பாகும்.
பார்வை நூல்கள்
1. தென்னிந்திய குலங்களும் குடிகளும், எட்கர் தர்ஸ்டன்
2 . தமிழக பழங்குடிகள், சீ.பக்தவத்சலபாரதி
3. பண்பாட்டு மானிடவியல், சீ.பக்தவத்சலபாரதி
4. கூடலூர் வட்டாரப் பழங்குடி மக்களின் வழக்குத்தமிழ் (முனைவர் பட்ட ஆய்வேடு) செ.துரைமுருகன்
5. Blue mountains, Paul Hockings.
*கட்டுரையாளர்:– முனைவர் செ.துரைமுருகன், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலையறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர், தமிழ்நாடு –
ealiesdurai@gmail.com