புலம்பெயர்ந்த மண்ணில் பீல் பிரதேச தமிழர்களின் பெருமுயற்சியால் சொப்கா என்ற பெயரில் பீல்பிரதேச தமிழர்களின் அமைப்பு ஒன்று கடந்த ஆறு வருடங்களாக மிகவும் சிறப்பாக இயங்கிவருகின்றது. இந்த அமைப்பினால் கடந்த ஞாயிற்றுக் கிழமை (28-06-2015) கனடாத்தினம் கொண்டாடப்பட்டது.
கனடா தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம், தமிழ் வாழ்த்து, மன்றக் கீதம் ஆகியன இசைக்கப்பட்டன. பிரதம விருந்தினர் வைத்திய கலாநிதி செந்தில்மோகன் அவர்களால் கனடா பிறந்ததின கேக் வெட்டப்பட்டது. மன்றத்தின் தற்போதைய தலைவரும் சட்டத்தரணியுமான வாணி செந்தூரன் அவர்களால் தலைவர் உரை நிகழ்த்தப்பட்டது. பிரதம விருந்தினராக மகாஜனக் கல்லூரி பழைய மாணவரும் வைத்திய கலாநிதியுமான செந்தில்மோகன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். அரங்கம் நிறைந்த கனடாவிழாவில் மன்ற அங்கத்தவர்களால் மேடையேற்றப்பட்ட பல கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. கனடா தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி அடைந்தவர்களுக்குப் பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டது. இந்த மேடையில் சொப்கா தன்னார்வத் தொண்டர்களும் பாராட்டப்பட்டனர்.
பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வின்போது உபதலைவரும் எழுத்தாளருமான குரு அரவிந்தன் தொகுத்து வெளியிட்ட சொப்கா மஞ்சரி 2015 வெளியிடப்பட்டது. குரு அரவிந்தன் அவர்களைப் பிரதம ஆசிரியராகக் கொண்டு சொப்கா மன்றத்தால் வெளியிடப்பட்ட நாலாவது மலர் இதுவாகும். இந்த மலரில் வழமைபோல சுமார் முப்பதுக்கு மேற்பட்ட தமிழ் இளம் தலைமுறையினர் எழுதிய தமிழ் ஆங்கில ஆக்கங்கள் இடம் பெற்றிருந்தன. கடந்த காலங்களில் சொப்கா அங்கத்தவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய தொண்டுகள் பற்றிய புகைப்படங்களும், ஆவணங்களும் இந்த மலரில் இடம் பெற்றிருந்தது சிறப்பான அம்சமாகும்.
சிறார்கள் இளைஞர்களுக்கான பயிற்சிப் பட்டறைகள், ரிறிலிம் வைத்தியசாலைக்கு நிதி சேகரிப்பதற்கான நடைபவனி, இசை, நடன பயிற்சி வருப்புகள், உணவு வங்கிக்கான உணவு தானம், இரத்தவங்கிக்கான இரத்ததானம், வருமானவரிச் சேவை, பூங்காவைத் துப்பரவு செய்தல் போன்ற சேவைகள் பற்றிய விளக்கங்கள் தரப்பட்டன. நிர்வாக சபை அங்கத்தவர் தனுஷா இராஜதுரை நடக்கவிருக்கும் நடைபவனி பற்றி விளக்கம் தந்தார். முன்னாள் தலைவர் ஏ.ஜேசுதாசன் அவர்கள் கடந்த ஆறு வருடங்களாக மன்றத்திற்கு ஆற்றிய தன்னலமற்ற சேவைக்காக அங்கத்தவர்களால் விருது கொடுக்கப்பட்டுப் பாராட்டப்பட்டார்.
கனடா தினம் பற்றிய சிறார்களின் உரை, நடனம், பாடல்கள், சொப்கா இளைஞர்களின் இசை நிகழ்ச்சி போன்றவை கனடா தின விழாவின் போது இடம் பெற்றன. புலம் பெயர்ந்த இந்த மண்ணில் சொப்கா மஞ்சரி 2015 போன்ற மலர் சிறப்பாக வெளிவருவதற்கும், கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடப்பதற்கும் உதவிய அனைவரும் பாராட்டுக்கு உரியவர்கள். செயலாளர் யாழினி விஜயகுமார் அவர்களின் நன்றி உரையுடன் விழா இனிதே நிறைவடைந்தது.