[ ஓவிய்ர் வான் கோவின் பிறந்த தினம் மார்ச் 30. அதனையொட்டி கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து பெறப்பட்ட இக்கட்டுரை மீள்பிரசுரமாகின்றது. உண்மைக்கலைஞன். வாழ்வின் சவால்கள் எவையும் அவனது கலையார்வத்தைத்தடுக்கவில்லை. இங்கு க்லைஞர்கள் எதைச்செய்தாலும் முதல் கேள்வி அதைச்செய்வதால் ஏதாவது வருமானம் வருகிறதா? என்பதுதான். வான் கோ பொருளியல், உளவியற் சூழல்களை மீறிப்படைப்புகளைத்தந்தவன். பிரமிக்க வைக்கிறது. – பதிவுகள் ]
வின்சென்ட் வில்லியம் வான் கோ அல்லது வின்செண்ட் வான்கா (Vincent Van Gogh, மார்ச் 30, 1853 – சூலை 29|, 1890) ஒரு டச்சு பின்-உணர்வுப்பதிவுவாத ஓவியர். இவரது ஓவியங்கள் சில உலகின் மிகவும் அறியப்பட்டவையும் புகழ் பெற்றவையும் அதிகம் விலையுள்ளவையுமான ஓவியங்களுள் அடங்கும். இவர் முதலில் கலைப் பொருட்களை விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தில் பணி புரிந்தார். பின்னர் சில காலம் ஆசிரியராகப் பணியாற்றிய பின், மிக ஏழ்மையான மக்களைக் கொண்ட சுரங்கப் பகுதியொன்றில் சமயத் தொண்டு செய்தார். அங்குள்ள மக்களை இவர் வரையத் துவங்கினார். இங்கே தான் தனது முதல் முக்கியமான ஓவியமான உருளைக்கிழங்கு உண்போர் எனும் ஓவியத்தை வரைந்தார். மற்ற ஓவியர்களைப் போல் அன்றி தனது முப்பதாம் வயதுக்குப் பின்னரே இவர் ஓவியம் வரையத் துவங்கினார். இவரது பெரும்பாலான ஓவியங்கள் இவரது வாணாளின் கடைசி இரு ஆண்டுகளில் வரையப்பட்டவையே. இவர் உயிருடன் இருந்த காலத்தில் இவரின் கலையை யாரும் மதிக்கவில்லை. தான் வாழ்ந்த காலத்தில் இவரால் தனது ஓவியங்களுள் ஒன்றை மட்டுமெ விற்க முடிந்தது. இன்றோ நவீன ஓவியத்தின் செல்வாக்கு வாய்ந்தவராக இவர் கருதப்படுகிறார். வான்கா 30 வயது வரை எந்த ஓவியமும் வரைந்ததில்லை.
இளமை
வின்செண்ட் வில்லியம் வான்கோ நெதர்லாந்தில் உள்ள குரூட் சுண்டெர்ட் எனுமிடத்தில் 1853-ஆம் ஆண்டு மார்ச் 30-ஆம் நாள் ஓர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார். வான்கோ பிறப்பதற்கு முன்பே சரியாக ஓராண்டுக்கு முன்னர் அதே தேதியில் பிறந்த அவரது அண்ணன் சில வாரங்களில் இறந்து போனார் எனவே அவரது குடும்பம் சோகத்தில் மூழ்கியிருந்தது. அந்த மரணத்திற்கு பின் பிறந்ததால் அண்ணனுக்கு வைத்த பெயரையே அவருக்கும் வைத்தனர்.[note 1] இது தெரிந்தபோது வான்கோவுக்கு ஒருவிதத் தாழ்வு மனப்பான்மை ஏற்படத் தொடங்கியது. அண்ணன் பெயரை தாங்கியிருக்கிறோம் என்ற எண்ணம் அதற்கு காரணமாயிருந்திருக்கலாம். வான் கோவின் தந்தை தியோடரஸ் வான்கோ ஒரு மதபோதகராக இருந்தார் ஓவியமும் மதமும் இவரது குடும்பத்தில் இரு முக்கியப்பணியாக இருந்தது. வான்கோவின் சகோதரர் தியோ வான்கோ ஒரு புகழ்பெற்ற ஓவியராவார். இவர் 1857, மே 1 ஆம் நாள் பிறந்தார். இவரது மற்றொரு சகோததரர் கோர். வான்கோவுக்கு சகோதரர்களத் தவிர எலிசபெத், அன்னா, வில்லிமினா என்ற மூன்று சகோதரிகளும் இருந்தனர். அதனால் குடும்பத்திற்கு போதிய வருமானம் இல்லை. தாழ்வு மனப்பான்மையும், குடும்ப வறுமையும் வான் கோவை முன்கோபியாகவும், முரடனாகவும் மாற்றியது. தேவலாயத்தில் உபதேசம் செய்யும் தந்தையால்கூட வான் கோவை அடக்க முடியாமல் போனது.