1. வெந்து தணியும் காடு….
துண்டுப்பெண்ணொருத்தியிடம் இவளது அந்தரங்கத்தை
யவர்கள் விண்டுவைத்துக்கொண்டிருக்கும் நேரம்
ஒருவேளை கள்ளச்சிரிப்புடன் கண்ணடித்துக்கொண்டிருக்கக்கூடும்;
வியூகம் அமைத்து வென்று சூடிய வாகைகளைக்
கணக்கெடுத்துக்கொண்டிருக்கக்கூடும்….
என்றேனும் அறிவார்களோ _
கூண்டுக்குள் வசிக்கப் பழகிவிடும் கிளி யல்ல இவள்;
அரசனருகில் அப்பாவியாய் ஆரோகணித்திருக்கும் அன்னமும் அல்ல.
கழுகின் கூர்விரிவைக் கைக்குள் பிரபஞ்சமாக்கி
விட்டு விடுதலையாகிநிற்கும் சிட்டுக்குருவி!
இருந்தும் சக்ரவர்த்தியின் திருத்தோள்களைக் கூடாகத் தரித்திருந்ததெல்லாம்
அவர் அருமை பெருமை அறிந்ததாலேயே.
அரசவையோ, பரிவாரமோ பரிசில்களோ ஒரு பொருட்டில்லை யென்றுமே.
ஆன்மாவின் அடியாழத்தைத் தீண்டுமவர் ஆலோலங் கேட்கவே
தத்தித்தத்தி நடைபழகிவந்த திக் குருவி யவர் காலடியில்.