இருபதாம் நூற்றாண்டின் மத்திய இரு தசாப்பத்தங்களின் காலம். ஈழத்தின் கைதடி-நுணாவில் கிராமத்தில் யாழ்-கண்டி நெடுஞ்சாலையின் எட்டாங் கட்டையடியில் ஒரு வீதியோரக் கல்வீடு. ஊரார் அதை வெற்றிப் பரியாரியார் வீடென அழைப்பர்.
அவர் ஒரு பிரபலமான சித்த ஆயுள்வேத வைத்தியர். பெயர், இராமநாதர் அப்பா வெற்றிவேலு. மனைவி, கந்தர் வேலாயுதர் நாகமுத்து. மக்கள் இருவர். மகன் கந்தசாமி. மகள் இரத்தினம். இவர்களுடன் தன்மனைவியை 1938-இல் இழந்த கோபாலரும்; மகன்மார் தில்லை, துரை, சின்னத்துரை என வீட்டில் அழைக்கும் பையன்களும் வாழ்ந்தனர். கோபாலர், நாகமுத்துவின் அண்ணர். அவரின் மனைவி (இறந்த பொன்னம்மா) வெற்றியரின் தங்கை. இரு மாற்றுச்-சடங்குகளின் மூலம் எண்மரும் பிறப்பிலேயே இனத்தவர்கள். ஒன்றாகப் பல ஆண்டு வாழ்ந்து வந்தனர்.
வெற்றியர் தன்னுடைய றலி சைக்கிள் வண்டியில் உழக்கிச் சென்று சாவகச்சேரி நகரத்தின் பழைய சந்தையில் ஒரு அறை வாடகைக்கு எடுத்து வாரத்தில் ழூன்று நாட்கள் முற்பகலில் தன் வைத்தியத் தொழிலை நடத்தி வந்தார். சந்தையில் தன் மதிய உணவை அருந்தி விட்டுப் பிற்பகலில் இடைஇடைக் கிராமங்களில் வதியும் வீட்டு-நோயாளிகளைப் பார்த்துத் தன்னுடன் என்றும் எடுத்துச் செல்லும் மருந்துப் பெட்டியிலிருந்து மருந்தும் கொடுத்து ஆலோசனையும் வழங்கி விட்டுப் பின்னேரம் ஆறுமணிக்கு எல்லாம் வீடு திரும்பி விடுவார். கடுமையான நோயாளிகள், இருவர் இருவராக அவர் வீட்டில் தங்கி வாரக் கணக்கில் வைத்தியம் பெறுவதும் உண்டு. தன் நடை-மருந்துகளுக்கு மட்டும் நியாயமாகப் பணம் முன்னரே கேட்டுப் பெறுவார். தன் பெட்டிப்-பேதி மருந்துகள், பயணம், ஆலோசனை முதலிய சேவைகளுக்கு நோயாளர் தாமாக விரும்பிக் கொடுப்பதையே பெற்றுக் கொள்வார். அத்துடன் வீட்டில் ஒரு பசு, இரு எருதுகள், ஒரு மாட்டு-வண்டிலுடன், குடும்பத்து வயல், தோட்டங்கள், ஒரு மரக்-கடை, சிலநேரம் புகையிலை வியாபாரம் எல்லாம் செய்வார். அவ்வூர் கிராமசபையின் தெரிவு செய்யப்பட்ட அங்கத்தினர். மேலும் தன் செலவிலேயே கைதடிநுணாவில்-மட்டுவில்தெற்கு கிராமங்களுக்கு ஒரு ஆரம்ப பள்ளியை நிறுவி, நடாத்தியும் வந்தார். இந்த எல்லா வேலைகளுக்கும் வீட்டில் உள்ள எல்லோரும் நாளாந்தம் இரவுபகலாக உதவிசெய்து வந்தனர். கோபாலர் மட்டும், அவ்விரு கிராமங்களுக்கென ஒரு கூட்டுறவுச் சங்கத்தை நிறுவி நடாத்தி வந்து, காலை சென்று இரவு திரும்பி, தங்கை கொடுக்கும் உணவை அருந்திப் படுத்துவந்து, தன் மனைவி பிரிந்த ஆறாம் ஆண்டில் கசநோயால் இறந்துவிட்டார்.