”ஏறிக்கொள்ளுங்கள்” என்றவனுக்கு நன்றி கூறியவாறே மூட்டை முடிச்சோடு முண்டியடிக்க முயன்றும் முயலாமலுமாய் உள்ளே ஏறி பதினான்காம் எண் இருக்கைப் பக்கம் போனபோது அங்கே ஏற்கெனவே ஒருவர் தொந்தியும் தொப்பையுமாகப் பொருந்தியமர்ந்திருந்தார்.
“ஸார், இது என்னுடைய இடம்.”
“மன்னிக்கவும், இது என்னுடையது.”
அவரவருடைய இடத்தைக் கண்டுபிடிப்பதுதான் உலகிலேயே அதிசிரமமான காரியமாக இருக்கும் என்று தோன்றியது. ’அவரவர் இடம்’ என்பதிலும் அவரவருக்கு விதிக்கப்பட்ட இடங்கள், வாய்த்த இடங்கள், அவரவர் விரும்பிய இடங்கள் என்று எத்தனை பிரிவுகள்…. விதிக்கப்பட்டதற்கும் வாய்த்ததற்கும் என்ன வேறுபாடு என்ற கேள்விக்கு ‘நிச்சயம் ஏதோ வேறுபாடு இருக்கிறது’ என்பதாக மனம் இடக்காகக் கூறியது. அப்படி வேறுபாடு இருக்கும் பட்சத்தில் விதிக்கப்பட்டதும் சரி, வாய்த்ததும் சரி, விரும்பிய – விரும்பாத என்பதாக வேறு சிலவாகவும் கிளை பிரியும்…..
“என்ன ஸார், அங்ஙனேயே நிக்கிறீங்க? இந்த வண்டி தானே நீங்க?”
“ஆமாம், ஆனா இவர் என் இடத்தைத் தன்னுடையதுன்னு சொல்றார்.”
”அதெப்படி? என் இடத்தை நீங்கள் தான் உங்களுடையதென்று சொல்கிறீர்கள்.” உட்கார்ந்திருந்தவர் விறைப்பாகக் கூறினார்.
“அட, யார் இடம் யாருக்கு சாசுவதம் சார்…. அதுவும், ஒரு ஆறு மணி நேரத்துக்குப் போய் எதுக்கு இத்தனை எடக்குமுடக்குப் பேச்சு?” சலிப்பாகத் தத்துவத்தைச் சிதறவிட்டபடியே நடத்துனர் வந்துபார்த்து என் பயணச்சீட்டை ‘டபுள் செக்’ செய்வதற்காய் ஓட்டுநர் இருக்கைப்பக்கம் அமர்ந்திருந்தவரிடம் கொண்டு சென்றார்.