முன்னுரை
“அரிதரிது மானிடர் ஆதல் அரிது” என்பது ஔவையாரின் வாக்கு. அதன் படி பெறுதற்கரிய பிறப்பு எடுத்த மானிடர்கள் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு நோக்கம் உண்டு. அந்நோக்கத்தை அடைய ஒவ்வொருநிலையிலும் தேடல் என்பது மிக இன்றியமையாதது. ஆம், இப்படித்தான் எழுத்தாளர் பெருந்தகை முனைவர் ரெ. கார்த்திகேசு அவர்களின் “தேடியிருக்கும் தருணங்கள்” நாவலின் முக்கியமான கதை மாந்தரான சூரியமூர்த்தியின் வாழ்க்கையில் ஒவ்வொரு இலக்கினையும் அடைய அவன் மேற்கொண்ட தேடுதல்களையே இக்கட்டுரை வெளிப்படுத்துகின்றது.
நாவலாசிரியர்
மலேசியாவில் மூத்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவரான இவர், மலேசியாவின் வட மாநிலமான கெடாவில் பீடோங் என்னும் சிற்றூரில் 1940-இல் பிறந்தார். அங்கே சைனீஸ் தோட்ட தமிழ்ப் பள்ளி, ஆர்வார்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மற்றும் சுங்கைப் பட்டாணி சரஸ்வதி பள்ளியிலும் தொடக்கக்கல்வியைக் கற்றார். தொடக்க மற்றும் உயர்நிலைக் கல்வியை பள்ளியில் முடித்தவர், பின்னர் மலாயப் பல்கலைக் கழகத்தில் 1968 ஆம் ஆண்டு B.A ஆனர்ஸ் பட்டமும், நியூயார்க் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் 1977 ஆம் ஆண்டு M.Sc., in journalism மற்றும் 1986 இல் மலாயப் பல்கலைக் கழகத்தில் இந்திய ஆய்வியல் துறையில் ஆனர்ஸ் பட்டமும் பெற்றார். ஆனர்ஸ் பட்டம் பெற்ற இவர் நல்ல திறனாய்வாளர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். மேலும் 1991 ஆம் ஆண்டு Ph.D in Communication டாக்டர் பட்டமும் பெற்றார். மலேசிய வானொலியில் முதல் தமிழ் அறிவிப்பாளராக 1961 முதல் 1976 வரை பணிபுரிந்தார். மலேசிய அறிவியல் பல்கலைக் கழகத்தில் வானொலி, தொலைக்காட்சித் துறையின் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.
1952-இல் தமிழ் முரசு “மாணவர் மணிமன்ற மலரில்” எழுதத் தொடங்கி புதிய தொடக்கம், இன்னொரு தடவை, ஊசி இலை மரம், மனசுக்குள் போன்ற சிறுகதைத் தொகுப்புகளையும், தேடியிருக்கும் தருணங்கள், அந்திமகாலம் , வானத்து வேலிகள், காதலினால் அல்ல, சூதாட்டம் ஆடும் காலம் போன்ற நாவல்களையும், விமர்சனக் கட்டுரை நூல்கள், மலாயில் ஆராய்ச்சி நூல் மட்டுமின்றி மலாய் மொழியில் ஆறு சிறுவர் நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது படைப்புகளுக்கு “தனி நாயக அடிகள் விருது” “டான் ஸ்ரீ மாணிக்கவாசகர் பரிசு” “தெய்வசிகாமணி பரிசு” என விருதுகளும், தங்கப் பதக்கங்களும் பெற்றுள்ளார்.