‘தாயகம்’ (கனடா) சஞ்சிகையில் வெளியான என் ஆரம்ப காலத்து நாவல்கள்: ‘கணங்களும், குணங்களும்’, ‘வன்னி மண்’, ‘அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்’. ‘மான்ரியா’லிலிருந்து வெளியான ‘புரட்சிப்பாதை’ கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் ‘மண்ணின் குரல்’. இந்நான்கு நாவல்களும் ‘மண்ணின் குரல்’ என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் ‘குமரன் பப்ளிஷர்ஸ்’ வெளியீடாக வெளிவந்தது. ஒரு பதிவுக்காக அந்நாவல்கள் ‘பதிவுகள்’ இணைய இதழில் தொடராகப் பிரசுரமாகும்.
என் பால்ய காலம் வன்னி மண்ணில் கழிந்தது. என் மனதைக்கொள்ளை கொண்ட மண். நான் முதன் முதலில் எழுதத்தொடங்கியபோது அதன் காரணமாகவே என் பெயரின் முன்னால் வ என்னும் எழுத்தைச் சேர்த்து வ.ந.கிரிதரன் என்ற பெயரில் எழுத ஆரம்பித்தேன். ‘வன்னி மண்’ நாவல் என் சொந்த அனுபவத்தையும், கற்பனையையும் கலந்து பின்னப்பட்டதொரு நாவல். கற்பனைப்பெயர்களை நீக்கி விட்டால் ஒரு வகையில் என் பால்ய காலத்துச் சுயசரிதை என்றும் கூடக்கூறலாம். அவ்வளவுக்கு இந்நாவல் என் சொந்த அனுபவங்களின் விளைவு என்பேன்.ஒரு சில திருத்தங்களுடன் மீள்பிரசுரமாகின்றது.
அத்தியாயம் பதினான்கு: காட்டில் கரடி!
காடு ஆரம்பமாகும் இடம் வந்தது. ஒற்றையடிப் பாதை தெரிந்தது. குமரன் பகடியாகக் கூறினான்.
“டே ராகவா. நல்லா ஒருக்கா ஆசை தீரத் திரும்பிப் பார்த்துக்கோ. காட்டுக்குள்ளை போனால். வரும் வரைக்கும் ஊரையோ மனிசங்களையோ பார்க்க முடியாது”
ஒருமுறை திரும்பிப் பார்த்துக் கொண்டேன். அப்பொழுதுதான் முதன் முறையாக ஒருவித திகில் படர்ந்த உணர்வு நெஞ்சை வெட்டியோடியது. பயணத்தின் யதார்த்தம் புரிந்தது. காடு, பயங்கரமான மிருகங்கள் வசிக்கும் காடு! எந்தவிதப் பாதுகாப்புமில்லாமல் செல்கின்றோம். திரும்பி வருவோமா. ஒரு கணம் தான்! மறுகணமே நெஞ்சில் ஆர்வம் குடிகொண்டு விட்டது. புதியனவற்றைப் பார்க்கப் போகின்றோமே என்று சந்தோஷம் பரவியது. ஒருவித எதிர்ப்பார்ப்புடன், ஒருவித களிப்புடன் விரிந்திருந்த காட்டை ஊடறுத்த ஒற்றையடிப் பாதையினுள் காலடியெடுத்து வைத்தோம். மனித சஞ்சாரமேயற்ற புதியதோருலகினுள் மெல்ல நுழைந்து கொண்டோம். திரும்பின பக்கமெல்லாம் மரங்கள். பெரிய சிறிய, ஓங்கிய, வீங்கிய, மரங்கள், ‘மிக்க நலமுடைய மரங்கள், பல விந்தைச் சுவையுடைய கனிகள். நெஞ்சிற் கனல் மணக்கும் பூக்கள். மதி வஞ்சித்திடு மகழிச்சுனைகள். முட்கள் மண்டித் துயர் கொடுக்கும் புதர்கள்” மலிந்த திக்குத் தெரியாத காடு. காலையிளஞ் சூரிய ஒளியினை பெருவிருட்சங்கள் மறைத்து விட்டன. இலேசாகத் தென்றல் வீசிக் கொண்டிருந்தது. பல்வேறு விதமான பறவைகளின் கீச்சொலிகள். இடையிடையே காற்றிலசையும் இலைகளின் ஓசைகள். தொலைவிலெங்கோ தாவிய மந்திகளின் ஒலிகள். இவை தவிர ஒருவிதமான மோன அமைதியெங்கும் பரவிக்கிடந்தது.