– தாயகம் (கனடா), சுவடுகள் (நோர்வே) ஆகிய சஞ்சிகைகளில் வெளியான சிறுகதைகள் இவை. எனது ‘அமெரிக்கா’ தொகுப்பிலும் அடங்கியுள்ளன. இவற்றில் சுவடுகள் (நோர்வே) சஞ்சிகையில் வெளியான ‘பொந்துப்பறவைகள்’ சிறுகதை. சிங்கப்பூர் கல்வி அமைச்சு பாடசாலை மாணவர்களுக்கான தமிழ்ப்பாடக் கல்வித்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. – வ.ந.கி –
எனது கதைகள் வ.ந.கிரிதரன் — அமெரிக்கா தொகுப்புக்கான என்னுரை. –
எமது புலம் பெயர்ந்த சூழலில் ஏற்படும் நிலைமைகளையும், அதேசமயம் எமது நாட்டுப் பிரச்சனைகளை மையமாக வைத்தும் என் படைப்புக்கள் எழுந்துள்ளன. இன்றைய புலம்பெயர்ந்த எமது தமிழ்த் தலைமுறையைப் பொறுத்தவரையில், புலம் பெயர்ந்த நாட்டுச் சூழலிற்கும், புலத்தின் நினைவுகளிற்குமிடையில் அகப்பட்டு ஒரு வித திரிசங்கு வாழ்க்கை நடத்தும் தலைமுறை. இத்தலைமுறையினரில் நானும் ஒருவன் என்ற வகையில் எனது படைப்புகளில் புலத்தின் பிரச்சனைகளையும், புலம் பெயர்ந்த நாட்டுச் சூழலின் நிலைமை களையும் சித்தரிப்பதை என்னால் தவிர்க்க முடியாது. நிறப்பிரச்சனை யென்பது புலம் பெயர்ந்து வாழும் குழலின் முக்கியமான பிரச்சனை. புலம் பெயர்ந்த ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சனை. நாளைய எம் தலைமுறையும் இதற்கு விதிவிலக்கல்ல. எமது படைப்புக்கள் இப்பிரச்சினையை வெளிப்படுத்தும் அதேசமயம் புதிய சூழலின் ஏனைய பிரச்சனைகளையும், ஆராய வேண்டும். பூர்வீக இந்தியர்களின் பிரச்சினை, இந்நாட்டுப் பொருளாதாரச் சூழலால் உருவாகும் நிர்ப்பந்தங்கள், வாழ்வில், அவற்றாலேற்படும் தாக்கங்கள், பெண்களின் நிலைமை, புதிய சூழல் நம்மவர் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கங்கள், அனுபவங்கள்இவற்றையெல்லாம் நாம் எம் படைப்புகளில் வெளிப்படுத்த வேண்டும். அதேசமயம் நாட்டுப்பிரச்சனை காரணமாக ஓடிவந்தவர்கள் நாங்கள். அப்பிரச்சனையை மீண்டும் மீண்டும் கூறுவதென்பது தவறானதல்ல, தவிர்க்க முடியாததும் கூட.
அண்மைக் காலமாக எம்மவர்களில் சிலர் ‘புலம் பெயர்த்த எழுத்தாளரின் படைப்புக்கள் தொடர்ந்தும் பிறந்த நாட்டுப் பிரச்சனைகளை, விரக்தியையே புலப்படுத்தி வருகின்றன. இவர்கள் புகுந்த நாட்டுச் குழலை மையமாக வைத்துப் படைப்புக்களை உருவாக்க வேண்டும்’ என்ற கருத்துப்பட கூறி, எழுதிவருகின்றார்கள். இவர்களது கருத்துப்படி புகுந்தநாட்டுச்சூழலை வைத்து எழுதுவதுதான் இலக்கியத்தரமானதாக அமையுமென்ற நோக்கமும் இழையோடுகின்றது. இவர்களெல்லாம் ஒன்றை உணரவேண்டும். தரமான படைப் பென்பது எதனைப் பற்றியதாகவும் இருக்கலாம்.இரண்டாம்உலக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட யூத எழுத்தாளர்களின் படைப்புகளில் சிறந்த படைப்புக்கள் அவர்களது சொந்த நாட்டுப் பிரச்சனையை மையமாக, வைத்து எழுந்தவையே. உதாரணமாக போலந்து யூத இனத்தைச் சேர்ந்து ஜேர்ஸி கொஸின்ஸ்கியின் Painted Birds என்ற மிகப் பிரபலமான நாவலைக் குறிப்பிடலாம். 1991 இல் தற்கொலை செய்து கொண்ட கொஸின்ஸ்கியின் படைப்புக்கள் பிரச்சனைக்குரியவை. நிறமூட்டப் பட்ட பறவைகள்’ (Painted Birds) நாவலில், யூதச் சிறுவனாக யுத்தச் சூழலில், நான்காண்டுகளாக கிழக்கு ஐரோப்பியநாடுகளில் அலைந்து திரிந்த தனது சொந்த அனுபவங்களையே கொளின்ஸ்கி விபரிக்கின்றான். இன்று இந்தப்படைப்பு: ஆங்கில இலக்கியத்தின் முக்கிய படைப்புக்களில் ஒன்றாக விளங்குகின்றது. இதனை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும். கொஸின்ஸ்கியால் அவர்மேல் அவரது சொந்த நாட்டு அரசியல்நிலைமை ஏற்படுத்திய பாதிப்பை மறக்கமுடியவில்லை, அதனைப்படைக்காமல் இருக்கவும் முடியவில்லை.