முன்னுரை
நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்ற எட்டையும் முதன்மையான எண்வகை மெய்ப்பாடுகள் என்கிறார் தொல்காப்பியர்.(தொ.மெய்.3) அவற்றுள் இளிவரலெனும் மெய்ப்பாட்டிற்கான தோற்றுவாய்களாக மூப்பு, பிணி, வருத்தம், மென்மை என்பவற்றை விரித்துரைத்துள்ளார். இக்கட்டுரை தொல்காப்பியர் விரித்துரைக்கும் இளிவரலுக்குரிய மெய்ப்பாடுகளுக்கு உரையெழுதிய உரையாசிரியர்களின் உரையில் அகநானூற்றுப் பாடல்கள் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளன என்பதனை ஆராய்கின்றது.
இளிவரல் தோன்றும் களன்கள்
இளிவரலெனும் மெய்ப்பாடு தோன்றும் களனை தொல்காப்பியர்,
மூப்பே பிணியே வருத்த மென்மையோடு
யாப்புற வந்த இளிவரல் நான்கே.(தொ.மெய்.நூ.6)
எனும் நூற்பாவினில் கூறியுள்ளார்.
உரையாசிரியர்களின் பார்வையில் இளிவரல்
மூப்பு முதலாகச் சொல்லப்பட்ட நான்கும் இளிவரலுக்குரிய பொருளாகும். இவை தன்னிடமும் பிறரிடமும் தோன்றும்(இளம்.) மூப்பும் பிணியும் வருத்தமும் மென்மையுமென நான்கு பொருள் பற்றிப் பிறக்கும் இளிவரல்.(பேரா.) இளிவரல் எனும் மெய்ப்பாடு வகை நான்கும் அவற்றின் பொதுவியல்பும் குறிக்கிறது.(பாரதி.) என உரையாசிரியர்கள் இளிவரலினைக் குறித்துக் கூறியுள்ளனர்.
மூப்பு
பிறர்மாட்டு தோன்றும் மூப்புப் பற்றி விளக்க நாலடி.14 ஆம் பாடலை இளம்பூரணர் மேற்கோளாக எடுத்தாண்டுள்ளார். தன்கட் டோன்றிய மூப்புப் பற்றி விளக்க பேராசிரியர். புறம்.243 ஆம் பாடலையும்,
”மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றியெம்
முதுமை யெள்ளலஃ தமைகுந் தில்ல”(அகம்.6)
எனும் பாடலையும் மேற்கோளாக எடுத்தாண்டுள்ளார். மேற்கண்ட அகநானூற்றுப் பாடலடிகளில் இன்று இங்கு வந்து எனது மார்பில் தோன்றிய தேமலையும், கற்பினையும் உடைய புதல்வனது தாய் என்று வஞ்சனையுடன் வணங்கிப் பொய்ம்மொழி கூறி என்னுடைய முதுமையை இகழாது இருக்க என தலைவனிடம் தலைவி வேண்டுகின்றாள் எனும் செய்தி இடம்பெற்றுள்ளமையின் இஃது தன்னிடம் தோன்றிய முதுமைப் பொருளாயிற்று. மூப்பு என்பது முதுமை(பாரதி) என பாரதி கூறியுள்ளார்.