இப்புற உலகினைப் பற்றி மனிதன் நொடியொரு பொழுதும் ஆராய்ந்து வருகின்றான். இன்றைய சூழலில் ஒரு புதிய உலகையே படைக்கும் வல்லமையை மனித அறிவு பெற்றிருக்கின்றது. இவற்றிற்கு அடிப்படைக் காரணம் பண்டைய மக்களின் அறிவும், நுட்பமான பார்வையுமே ஆகும்.
உலக நாகரிகங்களெனக் கூறப்படும் கிரேக்கம், எகிப்து, ரோம், சிந்து சமவெளி, மெசபடோமியா போன்ற 24- ற்கும் மேற்பட்ட பகுதிகளில் வாழ்ந்த மக்கள் சிறந்த, நாகரிக வாழ்வை வாழ்ந்தனர் என வரலாறு மெய்ப்பிக்கின்றது. கி.பி.க்கு முற்பட்ட காலத்தில் உய்த்துணர்வு முறையில் தொடங்கிய ஆய்வு பின்னர் சோதனை மூலம் கண்டறிதல் (Practical Method) முயன்றனர். அதற்கு ஆர்க்கிமிடிஸ் தத்துவமே முதன்மைச் சான்றாகும். எனினும், உய்த்துணர் முறையில் பல ஆயிரக்கணக்கான விடையை பழங்கால மக்கள் பெற்றிருந்தனர் என்பதற்கு தொல்பொருள், இலக்கிய இலக்கணச் சான்றுகளும், இன்ன பிற சான்றுகளும் முதன்மை ஆதாரமாகின்றன.
சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், பிளாட்டோ தமிழகத்தில் தொல்காப்பியர், திருவள்ளுவர், சங்க இலக்கிய புலவர்கள் சிலர், சீனாவில் கன்பூசியஸ் போன்றோர் உலக கருத்துக்களை புதிய நோக்கில் ஆராய்ந்து இயற்கையின் புறவெளியைப் பற்றியும் மக்கள் வாழ்வதற்குரிய வழிமுறைகளைப் பற்றியும் எடுத்துரைத்துள்ளனர்.
இந்த உலகம் எப்படிப்பட்டது? அதன் தோற்றம் என்ன? அது எதனால் உருவானது? இயற்கைப் புறவெளியில் உள்ள அண்டவெளி பிரபஞ்சத்தின் (Universe) இயக்கப் போக்குகள் என்ன? ஐம்பூதங்கள் எப்படி தோன்றின? பகலிலும், இரவிலும் பருப்பொருள்கள் தோன்றுவதும், மறைவதுமாய் இருப்பதற்குரிய காரணம் என்ன? மனிதன் பிற உயிரினங்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றான்? என்பது போன்ற பல ஆயிரக்கணக்கான வினாக்களைத் தொடுத்து அதற்கு பல்வேறு விளக்கங்களையும் தந்துள்ளனர்.