இலங்கை வானொலி தொடங்கப்பட்டு 92 வருடங்களாகின்றன. தொலைக்காட்சியின் வருகைக்குப்பின்னர் உலகெங்கும் வானொலி கேட்பவர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தது. அதன்பின்னர் கணினியின் தோற்றத்தையடுத்து இணையத்தளத்தின் அறிமுகம் வந்ததும், மேலும் வானொலி நேயர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டது. ஆயினும், இன்றும் வானொலி நேயர்களின் ரசனைக்கும் பயன்பாட்டிற்கும் வானொலிகள் இயங்கியவண்ணமிருக்கின்றன. வாகனத்தை செலுத்திக்கொண்டே வானொலியை இயக்கவிட்டு கேட்டுக்கொண்டு பயணிப்பவர்கள், கைத்தொலைபேசியில் கேட்பவர்கள், இணையத்தின் வழியே கேட்பவர்களின் எண்ணிக்கை குறையவேயில்லை. இந்தப்பின்னணிகளுடன்தான் கொழும்பு ரேடியோ என்ற பெயரில் 1925 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இலங்கை வானொலிதான் உலகிலேயே இரண்டாவது வானொலி நிலையம் என்ற பெருமையும் பெற்றிருக்கிறது.
நான் இலக்கியப்பிரவேசம் செய்த காலப்பகுதியில் தொலைக்காட்சி இருக்கவில்லை. இலங்கை வானொலியின் தேசிய சேவையும், வர்த்தகசேவையும் இலங்கையில் மூவின மக்களையும் பெரிதும் கவர்ந்திருந்த ஊடகமாகத்திகழ்ந்தது. இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டினரும் விரும்பிக்கேட்ட நிகழ்ச்சிகள் இலங்கை வானொலியில்தான் ஒலிபரப்பாகின. நடிகர் கே. ஏ. தங்கவேலுவும் ஒரு திரைப்படத்தில் இலங்கைவானொலி அறிவிப்பாளர் மயில்வாகனம் பற்றிப்பேசுவார். அந்தளவுக்கு தமிழகத்து நேயர்களையும் கவர்ந்திருந்த இலங்கை வானொலியில் எனது குரலும் ஒலிக்காதா…? என்று ஏங்கியிருந்த காலம் ஒன்றிருந்தது.
எமது ஊருக்கு, கலைஞர் ‘சானா’ சண்முகநாதன் தமது குழுவினருடன் வந்து, குதூகலம், மத்தாப்பு முதலான நிகழ்ச்சிகளை தயாரித்து ஒலிபரப்பும்போது நான் மாணவன். அந்த நிகழ்ச்சி எங்கள் பாடசாலையில் 1962 ஆம் ஆண்டில் நடந்தது. பின்னாளில் எங்கள் பாடசாலை அதிபர், வித்துவான் இ.சி சோதிநாதன், ஆசிரியை திலகா தில்லைநாதன் ஆகியோர் வானொலி நாடகங்களில் பங்குபற்றும் கலைஞர்களாக இருந்தும், ஒலிபரப்பாகும் சிறுவர் நிகழ்ச்சியில்கூட பங்குபற்றுவதற்கு எனக்கு வாய்ப்புக் கிட்டவில்லை. எனினும் எனக்கும் இலக்கிய முகம் வந்தபின்னர், வி.என். மதியழகன், கே.எஸ். சிவகுமாரன் ஆகியோரின் தொடர்பினால் கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் அமைந்திருந்த இலங்கை வானொலி நிலையத்தின் படிக்கட்டுகளில் எனது கால் பதிந்தது.