அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றையோ அல்லது அவற்றில் ஒன்றையோ ஐந்து அல்லது அதனினும் குறைந்த அடிகளில் வெண்பா யாப்பில் கூறுவன கீழ்க்கணக்கு நூல்களாகும். இவ்விலக்கணம் நீதி நூல்களுக்குப் பொருந்துவதாகும். இதன் காரணமாகவே வெண்பா யாப்பு நீதி நூல்களுக்கு உரியதானது. குறிப்பாக ஓரடி, ஈரடி, நான்கடி என்று சுருங்கிய அளவில் நீதிக் கருத்துக்களை எடுத்துரைக்கும் போக்கு நீதி நூல்களில் காணப்படுகிறது. நீதி கூறுகையில் அது சுருங்கிய அளவில் இருக்க வேண்டும் என்று தமிழ்ப் படைப்பாளர்கள் எண்ணியுள்ளனர். மேலும் வாழ்க்கைக்குச் சட்டமாக அமையும் நீதி நூல்கள் விரிவான அடிவரையறை பெற்றனவாக இருந்தால் அதனுள் பல குழப்பங்கள் நேரும் என்பது கருதியும் இந்தச் சுருக்கமான அடி வரையறை நீதி நூல்கள் எழுதுபவர்களால் பின்பற்றப் பெற்றுள்ளது. தமிழ்ப் பரப்பில் தொடர்ந்து வந்த நீதி நூல்களிலும் இந்தச் சுருக்கமான அடிவரையறை என்ற கட்டமைப்பு பின்பற்றப் பெற்றுள்ளது. இதனை அறிந்துணர நீதி நூல்களின் அடி அளவு குறித்த செய்திகளைத் தொகுத்துக் காண வேண்டியுள்ளது.
ஏலாதி என்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. கீழ்க்கணக்கு நூல்கள் சங்க மருவியக் காலத்தில் தோன்றியவை. ஏலம், இலவங்கம், சிறு நாவற்பூ, சுக்கு, மிளகு மற்றும் திப்பிலி என்ற ஆறு பொருட்கள் சேர்த்து செய்யப்படும் சூர்ணத்திற்கு ஏலாதி என்று பெயர். அதுபோல ஒவ்வொரு பாடலிலும் ஆறு அறக்கருத்துக்களைக் கொண்டிலங்குவதால் ஏலாதி என்று இந்நூல் பெயர் பெற்றது.
ஏலாதி ஆசிரியர்
ஏலாதி ஆசிரியரின் பெயர் கணிமேதாவியார். இது இவரது இயற்பெயர்ப் போல் தெரியவில்லை. கணி என்பதற்கு கணிதம் (கணக்கு) என்றும் சோதிடம் என்றும் பொருள் படும். இத்துறைகளில் சிறந்து விளங்கியவர் ஆதலால் ஆர் விகுதி சேர்த்து, மரியாதை நிமித்தம் “கணிமேதாவியார்” என்று அழைக்கப்பட்டிருக்கலாம். இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்பதை இவர் நூலில் வலியுறுத்தும் கருத்துக்களைக் கொண்டு எளிதில் அறியமுடிகிறது.
பதிப்பு வரலாறு
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பெரும்பாலும் சமண சமயத்தவர்கள் செய்தது. சுமார் 19ஆம் நூற்றாண்டில்தான் கீழ்க்கணக்கு நூல்கள் பதிக்கப்பட்டன. பெரும்பாலான கீழ்க்கணக்கு நூல்களுக்கு பழைய உரைகள் கிடைக்கப் பெறவில்லை. கிடைக்கப் பெறாத உரைகளுக்கு, பின்னாளில், பதிப்பித்தவர்கள் மற்ற புலவர்களை வைத்து உரையெழுதி வெளியிட்டார்கள். அவர்களுக்கு, சமண நூற்களில் பயிற்சியின்மையால், சில சொற்றொடர்களுக்கு தங்களுக்குத் தெரிந்த பொருள்களைக் கொண்டு உரையெழுதினார்கள். அவற்றுள் அறுநால்வர் என்பது ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
நூல் கருத்து
சிறப்புப் பாயிரம் இல்லறத்தையும், துறவறத்தையும் போற்றி, கணிமேதாவியார் நூல் செய்திருப்பதாகக் கூறுகிறது. சமணம் இல்லறத்தை வெறுத்தது என்று தூற்றுவோர்கள் கவனிக்கவும். இல்லறம், துறவறம் என்று அறத்தைப் பகுப்பதுச் சமண சமயக் கொள்கை. இந்நூலில் நாற்பொருளுள் முதலான அறத்தைக் கலந்துக் கொடுத்திருக்கும் பாங்கு எண்ணத்தகும்.
Continue Reading →