கோவா சர்வதேச திரைப்பட விழா சர்ச்சைகளுடன் ஆரம்பித்தது. விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்ட ‘எஸ்.துர்கா’ ( மலையாளம் ) ‘நியூட்’( மராத்தி ) ஆகிய இரு திரைப்படங்களையும் நீக்கியது பிஜேபி அமைச்சரகம். ’ ..தேர்வுக்குழு, நீதிபதிகள் மூவர் தங்கள் பெறுப்பிலிருந்து எதிர்ப்பு தெரிவித்து விலகிக் கொண்டார்கள். ரோட்டர்டாம் திரைப்பட விழாவில்’ மிக உயரிய விருதைப்பெற்ற மலையாளப் ’செக்சி துர்கா’ என்ற மலையாளப் திரைப்படத்தை ‘எஸ்.துர்கா’ என்று பெயரிடுமாறு சென்சார் நிர்ப்பந்தித்தது . பின்னர் தடை. .இயக்குனர் நீதிமன்றத்திற்குச் சென்று திரையிட அனுமதியை உடனே பெற்றாலும் கடைசிவரை திரையிடவில்லை. எஸ். துர்க்கா-கடவுள் பெயர், நியூட் போன்ற பெயர்களே பிஜேபியை உறுத்தி அலைக்கழித்தது..துர்க்கா படத்தை எடுத்த சனல்குமார் சசிதரனின் படம் 50க்கும் மேற்பட்ட திரைப்பட விழாக்களில் இடம்பெற்றிருக்கிறது. பத்துக்கும் மேற்பட்டப்பரிசுகளைப் பெற்றிருக்கிறது. இப்படம் திரையிடாதது சென்சார் போர்டு, அரசின் தலையீடுகள் பற்றிய சர்ச்சையைக்கிளப்பியது.
விழாவின் துவக்கவிழா படமாக அமைந்த மஜித்மஜீதின் ஈரான் இயக்குனரின் Beyond clouds -படம் முழுக்க பம்பாயில் எடுக்கப்பட்டது. கணவனிடமிருந்து பிரிந்து வாழும் சலவைத் தொழில் செய்யும் ஒரு பெண் தன்னிடம் பாலியல் வல்லுறவு கொள்ள முயன்ற ஒரு தமிழனைக் கொல்வதும், அந்தத் தமிழ்க்குடும்பத்தின் அல்லாடலும் இதில். யாருமற்ற , ஆதரவற்ற முதிய வயது பெண், இளம் பெண் , ஒரு சிறுமி உட்பட மூவரைக் கொண்டது அந்தத் தமிழ்க்குடும்பம்.கொலைசெய்த இளம் பெண்ணின் தம்பியை ஒண்டி அந்தத் தமிழ்க்குடும்பம் ஒதுங்கியதும் படத்தில் இருந்த குறைபாடுகளும் அப்படத்தை இன்னும் சர்ச்சைக்குறியதாக்கியது.மலையா ளிகள் தொடர்ந்து தமிழர்களை கேவலப்படுத்தும் பாத்திரங்களை படங்களில் அமைப்பது போல் ஈரான் இயக்குனரின் அணுகுமுறையும் இப்படத்தில் பார்க்கப்பட்டது.
இடம்பெற்ற தமிழ்ப்படம் “ மனுஷங்கடா “ இதன் இயக்குனர் அம்சன்குமார் பல ஆவணப்படங்களையும் கி.ராஜநாராயணின் கதை ஒன்றை மையமாக்க் கொண்டு ஒருத்தி என்ற திரைப்பட்த்தையும் எடுத்தவர். பொதுப்பாதையில் தலித் பிணத்தை எடுத்துச் செல்ல பிரச்சினையின் போது நீதிமன்றம் உத்தரவு தந்தாலும் அதை அமலாக்க கவல்துறை அக்கறை எடுக்காமல் காவல்துறையினரே பிணத்தை எடுத்துச் சென்று உண்மை புதைத்த நிகழ்வை படமாக்கியிருக்கிறார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி , மருத்துவம் போன்றவற்றில் உரிமைகள் மறுக்கப்படும் நிலையில் பிணத்தைப் புதைக்க கூட உரிமை இல்லாததை மனித உரிமைப்பிரச்சினையாக்கியிருக்கி றார் இயக்குனர். இதில் கதாநாயகனாக கோலப்பன் என்ற கதாபாத்திரத்தில் அம்சன்குமாரின் மகன் ஆனந்த் நடித்திருக்கிறார்.. சமத்துவம் இறப்பிலும் தரப்படுவதில்லை. தப்பாட்டத்திற்கும் கூட ஊர் விலக்கம் செய்யும் கொடுமை. உள்ளூர் நிலைமை தெரியாமல் நீதிமன்றம் ஆணை போட்டிருப்பதாக உள்ளூர் நிர்வாகம், காவல்துறை சொல்லிக்கொள்கிறது. நீதிமன்றத்திற்குச் சென்று நீதி கேட்கையில் மூன்று நாட்கள் பிணம் வீட்டில் கிடக்கிறது. பிணத்தை காவல்துறை எடுக்க முயற்சித்தபோது வீட்டினுள் பிணத்தை வைத்து கொண்டு காப்பதும், காவல்துறையினரின் அத்துமீறலைக்கண்டித்து வீட்டினுள் இருப்பவர்கள் மண்ணெணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயல்வதும் கொடுமையாகவே உள்ளது. உள்ளூர் நிர்வாகம் இறுதியில் ஒத்துக்கொண்டு பொய் சொல்லி பிணத்தை வெளியே எடுத்து வரச்செய்து புதைத்து விடுகிறது. வீட்டில் இருப்போரையும் கைது செய்து விடுகிறது.. அடுத்த நாள் பால் ஊற்றும் சடங்கிற்கு முள்பாதையில் அலைந்து திரிந்து செல்லும் கதாநாயகன் பிணம் எங்கே புதைக்கப்பட்டது என்று தெரியாமல் அல்லாடும் வேதனையுடன் படம் முடிகிறது. ,அமரர் இன்குலாப்பின் மனுஷ்ங்கடா பாடல் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.. சமரசம் உலாவும் இடமே என்ற பாடலும், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடலும் இடையில் சேர்க்கப்பட்டு பிணமான பின்னும் ஒதுக்கப்படும் தாழ்த்தப்பட்டவர்களின் அவலத்தை இப்ப்டம் முன்வைத்திருக்கிறது.