மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை பட்டப்படிப்பினைப் படித்துக்கொண்டிருந்த காலத்தில் எங்களுக்குப் ‘பாரம்பரியக் கட்டடக்கலை’ (Traditional Architecture) என்னும் பாடத்தினை எடுத்தவர் பேராசிரியர் நிமால் டி சில்வா. இவர் கட்டடக்கலைஞரும் கூட. தனியாகக் கட்டடக்கலை நிறுவனமொன்றினையும் நடத்தி வந்தவர். இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் கடைப்பிடிக்கப்பட்ட பாரம்பரியக் கட்டடக்கலை பற்றிய விடயங்களில் இப்பாடத்தின் மூலம் எம் கவனம் திரும்பியது. இப்பாடம் உண்மையில் கட்டடக்கலையின் வரலாறு என்னும் பாடத்தின் துணைப்பாடமாகக் கற்பிக்கப்பட்டு வந்தது. தமிழ்ப்பகுதிகளில் கடைப்பிடிக்கப்பட்ட நாற்சார வீடுகள் பற்றி, தென்னிலங்கையில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த மண்ணால் நிரப்பப்பட்ட மரச்சட்டங்கள் கொண்டு கட்டப்பட்ட வீடுகள் (wattle and daub) பற்றியெல்லாம் அறியத்துணையாகவிருந்த பாடமிது. எனக்குப் பாரம்பரியக் கட்டடக்கலை மீது ஆர்வத்தினை ஏற்படுத்தியதில் பேராசிரியர் நிமால் டி சில்வாவுக்கு முக்கிய பங்குண்டு.
எப்பொழுதும் சிரித்த முகத்துடன் காணப்படும் நிமால் டி சில்வாவின் ‘பாரம்பர்யக்கட்டடக்கலை’ பாடத்தின் மூலம்தான் நான் முதன் முதலில் பண்டைய அநுராதபுர நகர அமைப்பு பற்றியும் முதன் முதலாக அறிந்துகொண்டேன். தொல்லியற் துறையில் நன்கு அறியப்பட்ட ரோலன் சில்வா அவர்களின் (இவர் ஒரு கட்டடக்கலைஞரும் கூட) ‘பண்டைய அநுராதபுர நகர அமைப்பு’ பற்றிய கட்டுரையொன்றினை பேராசிரியர் நிமால் டி சில்வா அவர்கள் எமக்கு அறிமுகம் செய்தார். எவ்விதம் பண்டைய அநுராதபுர நகரமானது சந்தையினை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டதென்பது பற்றியும், நகரைச் சுற்றி இரு வேறு வட்ட ஒழுக்கில் எவ்விதம் தாதுகோபங்கள் கட்டப்பட்டன என்பது பற்றியும் விபரிக்கும் ஆய்வுக் கட்டுரை அது. பேராசிரியர் ரோலன் சில்வா அவர்கள் பின்னர் இலங்கைத் தொல்பொருள் நிலையத்திணைக்களத்தின் தலைவராகவும், மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் விளங்கியவர்.
எனக்கு நல்லூர் இராஜதானி நகர அமைப்பு பற்றி அறியும், ஆராயும் ஆர்வத்தை ஏற்படுத்திய காரணங்களிலொன்று பேராசிரியர் நிமால் டி சில்வா அவர்கள் அறிமுகப்படுத்திய அக்கட்டுரை. அவர் அன்று அறிமுகப்படுத்திய ரோலன் சில்வாவின் ‘அநுராதபுர நகர அமைப்பு’ பற்றிய கட்டுரையின் விளைவாக எனது ஆய்வு நூலான ‘நல்லூர் இராஜதானி நகர அமைப்பு’ தமிழகத்தில் ஸ்நேகா/மங்கை பதிப்பகம் (கனடா) வெளியீடாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஒரு விடயத்துக்காகவே எப்பொழுதுமென் நினைவில் நிற்கும் ஆளுமைகளிலொருவராக பேராசிரியர் நிமால் டி சில்வா அவர்கள் விளங்குவார்.