“ஆலையிலே சோலையிலே ஆலம் பாடிய சந்தையிலே கிட்டிப்புள்ளும் பம்பரமும் கிறுக்கியடிக்கப் பாலாறு “என்பது கிராமத்து நாட்டார் பாடல் . கிராமிய விளையாட்டுக்கள் மிகவும் மகிழ்வூட்டுவன. உடல் நலத்தைப் பேண மிகவும் உகந்தன. கிளித்தட்டு கிராமிய விளையாட்டுக்களில் மிகவும் புகழ்வாய்ந்தது. தமிழ் மக்களிடையே எல்லாக் கிராமங்களிலும் கிளத்தட்டு விளையாடப் பட்டுவந்துள்ளது. கிட்டி புள்ளு, வாரோட்டும், எல்லைக் கோடு, மல்யுத்தம், குடோரி, நாயும் புலியும், ஆடும் புலியும் போன்ற விளையாட்டுக்கள் சிறார்களால் விளையாடப்பட்டு வந்துள்ளன. கிறிக்கற், எல்லே, ஆதாரப்பந்து, வலைப்பந்து, கூடைப்பந்து, உதைபந்து போன்றன அறிமுகப் படுத்த்பபட்ட பின்னர் கிராமிய விளையாட்டுக்கள் அருகிப்போகத் தொடங்கியுள்ளன. முன்னர் கிராமங்களில் விடுமுறையைக் கழிக்கச் செல்லும் நகர் புறத்துப் பிள்ளைகள் இத்தகைய பண்டைய விளையாட்டுக்களை ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்வர் இப்போது இப்படிப் பார்ப்பதற்குக் கூட பாரம்பரிய விளையாட்டுக்கள் கிடைப்பது அரிதாகிப் போய்விட்டன. இவ்வாறான பாரம்பரிய வியையாட்டுக்களில், கிளித்தட்டு அல்லது தாச்சி மிகவும் பிரபலமான, சுவாரஸ்யமான ஒரு விளையாட்டு. அருகிவரும் இந்த விளையாட்டைப் பற்றி அறிந்து கொண்டு நாமும் விளையாடி மகிழ்வதற்குஇந்த விளையாட்டுப்பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம.
எங்கள் மண்ணுக்கே சிறப்பான விளையாட்டுக்களில் ஒன்றான “கிளித்தட்டை” சிறுவர் முதல் பெரியோர் வரை வயது, பால் வேறுபாடின்றி எல்லோருமே விளையாடி மகிழலாம் .சில கிராமங்களில் இதனை “யாட்டு ”அல்லது ‘தாச்சி ‘ என்றும் அழைப்பார்கள். தாச்சி என்பது நடுவரைக்குறிக்கும் சொல்லாகும். கிளித்தட்டுக்கு நடுவர் மிக முக்கியமானவர். இரண்டு குழுக்களுக்கிடையே இந்த விளையாட்டு இடம்பெறும்.
பண்டைய காலத்தில் கிராமத்துப் ;சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கிளித்தட்டை விரும்;பிப் பார்ப்பார்கள். இது ஆண்களுக்கு உரிய ஒரு விளையாட்டாகக் கொள்ளப்பட்டு வந்தது. இன்று இந்த விளையாட்டு பலருக்கும் தெரியாத ஒன்றாகக் காணப்படுகின்றது. தென்பது ஆச்சரியம்தான். கிளித் தட்டு விவசாயிகளின் கலாசாரத்தை பிரதிபலிக்கின்ற ஒன்றாகும் .நெல் விதைத்த காலங்களில் வயலில் நெல் மணிகளைப் பொறுக்க வரும் கிளிகளை, கமக்காரன் வரம்புகளில் ஓடிக்கலைத்து வயலைக் காப்பதையே இந்த விளையாட்டுக் காட்டி நிற்கிறது. காப்பவர்- கமக்காரனாகவும்,புகுவோர்-கிளிகளாகவும் தட்டுக்கள் (பெட்டிகள்)- வயல் நிலங்களாகவும் கோடுகள்- வரம்புகளாகவும் பாவனை செய்யப்படுகின்றது.