இலங்கையில் பாரதி நூற்றாண்டு கொண்டாட்டங்களை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய வேளையில், 1983 தொடக்கத்தில் தமிழக எழுத்தாளர்கள் பேராசிரியர் எஸ். இராமகிருஷ்ணன், ராஜம் கிருஷ்ணன், தொ.மு. சி. ரகுநாதன் ஆகியோரையும் அழைத்திருந்தது. இவர்களில் ரகுநாதன் பாரதி இயல் ஆய்வாளர். புதுமைப்பித்தனின் நெருங்கிய நண்பர். அத்துடன் அவர் எனது அப்பாவின் வழியில் உறவினர். எனக்கு பாட்டா முறை. இலங்கை நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு அவர் தமிழகத்திற்கு திரும்புவதற்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்தபோது ” இங்கிருந்து எடுத்துச்செல்வதற்கு உங்களுக்கு என்ன வேண்டும்?” எனக்கேட்டேன். உடனே அவர் ஏ.ஈ. மனோகரனின் ” சுராங்கனி…. சுராங்கனி… சுராங்கனிட்ட மாலு கெனாவா..?” என்ற பாடல் கஸட் வாங்கித்தரமுடியுமா?” என்று கேட்டார். நான் மூர்ச்சையாகி விழாமல், அவரையே கண்இமைக்காமல் சில கணங்கள் பார்த்தேன். இலங்கையிலிருந்து அவர் எடுத்துச்செல்லவிரும்பிய ஈழத்தின் பொப்பிசைச்சக்கரவர்த்தியின் அந்தப்பாடல் இன்றும் பல மொழிகளில் பலரால் பாடப்படுகிறது. மனோகரன் இந்தப்பாடலை ஹிந்தி உட்பட எட்டு மொழிகளில் பாடியிருக்கிறார். இசைஞானி இளையராஜாவும் சுராங்கனி மெட்டில் மலேசியா வாசுதேவன் பாடிய பாடலுக்கு இசையமைத்துள்ளார். ஹிந்தி திரையுலகில் பிரபல்யமான பாடகி ஆஷாபோன்ஸ்லே, ” “சுராங்கனி கமால் கரோகி” என்ற பாடலை பரமாத்மா என்ற படத்தில் பாடியிருப்பதாக அறியப்படுகிறது. அண்மையில் வேற்று நாட்டு மங்கையொருவராலும் இந்தப்பாடல் கிராமிய காட்சிகளுடன் ஒளிப்பதிவுசெய்யப்பட்டு ஒலித்துக்கொண்டிருப்பதை பார்த்திருக்கின்றேன்.
அவ்வாறு படித்தவர் முதல் பாமரர்கள் வரையில் பெரிதும் கவரப்பட்ட பொப்பிசைப்பிதா என அழைக்கப்பட்ட ஏ.ஈ. மனோகரன் சென்னையில் மறைந்துவிட்டார். இவரது மறைவின் பின்னர் இவர் தொடர்பாக சென்னையில் வெளியான அஞ்சலிக் கட்டுரைகளில், இவரால்தான் “சின்னமாமியே உன் சின்னமகளேங்கே..” என்ற பாடலும் பாடப்பட்டதாகவும், அந்தப்பாடலும் இவரால்தான் பிரபல்யம் அடைந்ததென்றும் தவறான தகவல்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. “சின்னமாமியே… உன் சின்ன மகளேங்கே….” பாடலைப்பாடி பிரபல்யப்படுத்தியவர் அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் புகழ்பெற்ற கலைஞர் நித்தி கனகரத்தினம் என்பதே சரியான தகவல். நித்திகனகரத்தினமும் ஏ. ஈ. மனோகரனும் நல்ல நண்பர்கள். நித்திகனகரத்தினத்தின் குறிப்பிட்ட பாடல் வரிகளை சற்று மாற்றிப்பாடியவர்தான் ஏ. ஈ.மனோகரன். அந்த வரிகள் ” பட்டுமாமியே….” எனத்தொடங்கும் இந்தப்பாடலை எல்.ஆர்.ஈஸ்வரியுடன் இணைந்து பாடினார்.