பிரபல சிங்களத்திரைப்பட இயக்குநரும் கல்வியாளருமான கலாநிதி தர்மசேன பத்திராஜா இன்று கண்டியிலுள்ள தனியார் மருத்துவ மனையொன்றில் காலமானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கைத்திரைப்பட உலகில் தான் இயக்கிய திரைப்படங்கள் மூலம் தடம் பதித்தவர் இவர். தமிழில் வெளியான எழுத்தாளர் காவலூர் ராஜதுரையின் ‘பொன்மணி’ புனைகதையினை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுக் கலையுலகில் கவனத்திற்குள்ளாகிய ‘பொன்மணி’ என்னும் தமிழ்த்திரைப்படத்தினை இயக்கியவரும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தின் மூலம் சிங்களத்திரையுலகில் மட்டுமின்றி இலங்கைத்தமிழ்த்திரையுலகிலும் தவிர்க்கப்பட முடியாத இயக்குநர்களில்ருவராகத் தடம் பதித்தவர் இவர்.
இவர் இயக்கிய திரைப்படங்கள், ஆவணப்படங்கள் ஆகியவை சர்வதேசத்திரைப்பட விழாக்களில் (மாஸ்கோ, இலண்டன், இத்தாலி, இந்தியா , சிங்கப்பூர் போன்ற நாடுகளில் நடைபெற்றவையுட்பட) திரையிடப்பட்டுள்ளன. இவர் பல சர்வதேசத்திரைப்பட விழாக்களில் நடுவராகவும் விளங்கியிருக்கின்றார். இவரது படைப்புகளைப்பற்றிய ஆவணத்திரைப்படங்கள் சர்வதேசத்திரைப்பட விழாக்களில் காட்டப்பட்டுள்ளன. இவரது திரைப்படங்கள் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளன. இலங்கைச்சினிமாவுக்கு இவராற்றிய பங்களிப்புக்காகக் ‘கோல்டன் லயன்’ விருதினையும் பெற்றவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.