” தமிழ்மக்களுக்குப் பல குறைகள் உண்டு என்பதனை பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த சகல அரசியல் தலைவர்களும் ( கட்சிகளும் இயக்கங்களும்) ஏற்றுக்கொண்டு நீண்டகாலமாகிட்டது. அதனால் பல ஒப்பந்தங்கள் தயாரிக்கப்பட்டன. மாநாடுகள் கூட்டப்பட்டன என்பது கண்கூடு. ஆனால், ஒரு பெரும்பான்மை மொழி மற்றுமொரு சிறுபான்மை மொழியினை ஆக்கிரமித்து, அமிழ்த்தி சாகடித்துவிட்டு, தான் மட்டும் மேலெழும்பி உலகைப்பார்ப்பதானது நியாயமற்ற செயல் என்பது இங்கு கவனிக்கப்படுவதில்லை. படிப்படியாக வாழை மரத்தில் ஊசி ஏற்றுமாப்போல் அக்கைங்கரியம் நடைபெற்று வந்துள்ளது. அரச திணைக்களங்கள் கூட்டுத்தாபனங்கள் அவற்றின் வெளியீட்டு பிரசுரங்கள் அரசுக்கு நிதி தேடித்தரும் அதிர்ஷ்ட லாபச்சீட்டுக்கள் என்பவற்றில் எல்லாம் அக்கைங்கரியம் சாதுரியமாகவே மேற்கொள்ளப்படுவது குறித்து பொதுவாக எவரும் சிரத்தைகொள்ளாமல் இருப்பதுதான் கவலைக்குரியது”
இந்த வரிகள் அடங்கிய ஒரு நீண்ட கட்டுரையை சுமார் 32 வருடங்களுக்கு முன்னரே (27-04-1985) வீரகேசரியில் ரிஷ்யசிருங்கர் என்ற புனைபெயரில் எழுதியிருக்கின்றேன். எனக்கு இந்தப்புனைபெயரைச்சூட்டியவர் அச்சமயம் வீரகேசரி பிரதம ஆசிரியராகவிருந்த ஆ. சிவநேசச்செல்வன். மூன்று தசாப்தங்கள் கடந்துவிட்டன!!?? இலங்கையில் தமிழ்மொழி அமுலாக்கலுக்கென அமைச்சும் இயங்குகின்றது. 1977 இற்குப்பின்னர் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்லையா இராசதுரை, தாம் அங்கம் வகித்த தமிழரசுக்கட்சிக்கு “கையசைத்துவிட்டு” , அன்றைய ஜே. ஆரின். ஐ.தே.க. அரசுடன் “கைகுலுக்க” வந்தபோது அவருக்காக உருவாக்கப்பட்டது தமிழ் மொழி அமுலாக்கல், இந்துகலாசார பிரதேச அபிவிருத்தி அமைச்சு. அதன்பின்னர் இந்த அமைச்சு, பதவிக்கு வரும் ஒவ்வொரு அரசுகளினாலும் யாராவது ஒரு தமிழருக்கு – (அவ்வேளையில் ) அரசு ஆதரவாளருக்கு தரப்படும். இது தொடர்கதை. ஆனால், தமிழ் மொழி அமுலாக்கலிலும் இதுதான் தொடர்கதை!?
எனது கட்டுரையில் வீதிகள், ஒழுங்கைகள், தெருக்கள் யாவும் ” மாவத்தைகளா”கிவிட்டதையும், கிராம எழுச்சி, கிராமோதயவாகிவிட்டிருப்பதையும், கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் சதொசவாகிவிட்டதையும், கிராம எழுச்சிச்சபை, “கிராமோதய மண்டலய” என மாறியிருப்பதையும் இவ்வாறு மொழிக்கபளீகரம் செய்யப்பட்ட இதர தமிழ் வார்த்தைகளையும் சுட்டிக்காட்டி எழுதியிருந்தேன். இன்றும் இலங்கையில் நிலைமை அப்படியேதான் இருக்கிறது!!! அரசின் அதிர்ஷ்ட லாபச்சீட்டுக்களின் பெயர்களைப்பாருங்கள்: ஜாதிக சம்பத, சம்பத்ரேகா, செவன, கொவிசெத, அத கோடிபதி, நியத்த ஜய, கோடிபதி சனிதா, சுபிரி தெலக்ஷபதி. இலங்கையில் மூவின மக்களும் ( இதில் இரண்டு தமிழ்ப்பேசும் சிறுபான்மை இனத்தவர்கள்) இந்த அதிர்ஷ்டத்திற்காக பணம் கொடுத்துவருகிறார்கள். இலங்கை நாளிதழ்களிலும் தினமும் வரும் அதிர்ஷ்ட லாப விளம்பரங்களில் தமிழைத்தேடவேண்டும். சில மாதங்களுக்கு முன்னர் 5 ஆம் தர புலமைப்பரிசில் பெறும் மாணவர்களுக்கு இலங்கை வங்கியின் கௌரவிப்பு விளம்பரத்திற்கும் “ரண் கெகுளு” என பெயர் சூட்டப்பட்டிருந்ததை அவதானிக்கமுடிந்தது. இந்தப்பின்னணிகளுடன் மட்டக்களப்பில் வதியும் எழுத்தாளரும் சமூக ஆய்வாளரும் மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வி கதிர்காமன் தங்கேஸ்வரி அவர்கள் நாம் 2011 ஆம் ஆண்டு கொழும்பில் நடத்திய மாநாட்டில் வெளியிட்ட கட்டுரைக்கோவையில் எழுதியிருக்கும், ” கிழக்கிலங்கையில் தொலையும் தொன்மைகளும் தொன்மைக்கிராமங்களும்” என்ற ஆய்வை பார்க்கலாம். அதிலிருந்து ஒரு பந்தி:
Continue Reading →