கல்லிலிருந்து கணினி வரைக்கும் பாய்ந்திருக்கும் மொழிகளில் தமிழ் தொன்மையானது. இந்தத்தொன்மையிலிருந்து உருவான பழந்தமிழ் இலக்கியம், நவீன தமிழ் இலக்கியம், என்பவற்றின் ஊடாக தமிழ் ஊடகத்துறையின் வளர்ச்சியில் தமிழர்களின் வேட்கையையும் புரிந்துகொள்ள முடிகிறது.
ஆசியாக்கண்டத்திலேயே முதல் முதலில் தோன்றிய இருபாலாரும் கல்வி என்னும் செல்வத்தை பெற்றுக்கொள்வதற்காகவும் தமிழ் சமுதாயம் அறிவார்ந்த தளத்தில் நடப்பதற்கு வெளிச்சம் வழங்கிய கலங்கரை விளக்கமாகவும் திகழ்ந்த இலங்கையின் வடபுலத்தின் தெல்லிப்பழையில் தோன்றிய யூனியன் கல்லூரியின் வரலாற்று ஆவணம் தங்கத்தாரகை எம்மவரின் வாழ்க்கைப்பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாகவே அமைந்துள்ளது. மைல் கல் எனக்குறிப்பிடுவதற்கும் ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. இதனையும் நாம் கடந்துசெல்லவேண்டும். மற்றும் சில மைல்கற்களை கடக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது. “எல்லாம் கடந்துபோகும்” என்பது வாழ்வின் தத்துவம். கடந்த அரைநூற்றாண்டு காலமாக படைப்பிலக்கியம், ஊடகம், சமூகப்பணி முதலான மூன்று தளங்களில் இயங்கிவருவதனால் இந்த மூன்று தளத்திலும் நின்றுதான் இந்த ஆவணத்தை அவதானிக்கின்றேன். இரண்டு நூற்றாண்டுகளையும் கடந்து இயங்கிக்கொண்டிருக்கும் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியை இதுவரையில் நான் பார்க்கவில்லை. அதற்கான சந்தர்ப்பமும் இதுவரையில் எனக்கு கிட்டவில்லை. அதே பிரதேசத்திலிருக்கும் மகாஜனாக்கல்லூரிக்கும் ஒரே ஒரு தடவைதான் சென்றுள்ளேன். அங்கு பணியாற்றிய எழுத்தாளர் கோகிலா மகேந்திரனின் முரண்பாடுகளின் அறுவடை நூலின் வெளியீட்டுவிழா 1984 இல் அங்கு அதிபர் த. சண்முகசுந்தரம் தலைமையில் நடந்தபோது உரையாற்றச்சென்றேன். இந்தக்கல்லூரிக்களுக்கும் எனக்கும் இருந்த மற்றும் ஒரு தொடர்பு நாம் அவுஸ்திரேலியாவிலிருந்து மூன்று தசாப்த காலத்துக்கும் மேலாக இயக்கும் இலங்கை மாணவர் கல்விநிதியத்தின் ஊடாக இக்கல்லூரிகளில் பயின்ற சில மாணவர்களுக்கும் உதவியிருக்கின்றோம்.
இந்த இரண்டு கல்லூரிகளுடனும் எனக்குள்ள மற்றும் ஒரு முக்கியமான உறவு: இங்கு பயின்றவர்கள், இங்கு அதிபர்களாக, ஆசிரியர்களாக இருந்த பலர் எனது நீண்ட கால இலக்கிய நண்பர்கள். இன்றும் தொடர்பிலிருப்பவர்கள். இரண்டு கல்லூரிகளினதும் வரலாற்றில் நிகழ்ந்திருக்கும் சுவாரஸ்யமான நிழல் யுத்தங்களையும் கேள்வி ஞானத்தில் அறிந்துவைத்திருக்கின்றேன். இந்தப்பின்னணிகளுடன்தான் எனக்கு கிடைத்திருக்கும் தங்கத்தாரகை பற்றிய எனது ரஸனைக்குறிப்புகளை பதிவுசெய்கின்றேன். எமது தமிழ் மக்கள் சந்தித்த ஐந்து காலகட்டங்களையும் இந்த ஆவணம் பேசுகிறது. சுதந்திரத்திற்கு முன்னரும் அதற்கு பின்னர் வந்த காலமும், போர்க்காலமும், அதற்குப்பிற்பட்ட சமகாலமும், மக்கள் அந்நியம் புலம் பெயர்ந்த காலமும் அதன் பின்னர் தொடரும் காலமும் சித்திரிக்கப்படுகிறது. 425 பங்கங்களில் இக்காலங்கள் அனைத்தும் உள்ளடக்கப்பட்டுள்ளன. வரலாற்று ரீதியில் அவற்றை ஆவணப்படுத்தியுமிருக்கிறது. இதனைத்தொகுத்திருக்கும் பாரிய பணியை மேற்கொண்டிருப்பவர் யூனியன் கல்லூரியின் முன்னாள் அதிபர், எழுத்தாளர், ஆய்வாளர், அரசியல் பிரக்ஞையுள்ளவர். 90 வயதிலும் அயராது இயங்கிக்கொண்டிருப்பவர். இதுவரையில் நான் நேரில் பார்த்திருக்காத பேசியுமிருக்காத மின்னஞ்சலில் மாத்திரம் தொடர்பில் இருக்கும் நண்பர், மதிப்பிற்குரிய கதிர். பாலசுந்தரம் அவர்கள். அவரது படைப்பிலக்கியங்களின் வரிசையில் எழுதியிருக்கும் நாவல்கள், தமிழ் அரசியல் தலைவர்களின் வரிசையில் எழுதியிருக்கும் நூல்களையும் ஏற்கனவே படித்திருக்கின்றேன். சிலவற்றைப்பற்றி எனது அவதானக்குறிப்புகளும் எழுதியிருக்கின்றேன்.