ஆய்வு: திருவள்ளுவரின் கடலியல் நுண்ணுர்வு

- முனைவர். ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்-608002, தமிழ்நாடு இந்தியா. -ஆய்வு நோக்கம் (Objectives)
சங்கப் புலவர்கள், அக்காலத்தில் மக்கள் வாழ்வியலில் நன்கறிந்திருந்த பொருட்களைக் கொண்டு, அரியாதவற்றை அறிவித்தற்கு, அறிந்தபொருள்களை ஆண்டுள்ளனர். சங்கத் தமிழர்கள் கடலியல் அறிவினை மிகச் சிறப்பாகப் பெற்றிருந்தனர். இதனால் கடலும், கடல்சார்ந்த வாழ்வியலும் அவர்களிடையே இரண்டறக் கலந்திருந்தது. அவ்வகையில் திருவள்ளுவரின் கடலியல் அறிவுநுட்பம் குறித்தும், அதனைப் பாடலின் கருத்தினை விளக்குவதற்குப் பொருத்தமுறப் பயன்படுத்தியுள்ள பாங்கினைக் குறித்தும் விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

கருதுகோள் (Hypothesis)
திருவள்ளுவர் நிலம், மண், நீர், மலை, கடல் முதலானவற்றின் இயற்கையியல் அறிவு கைவரப்பெற்றவர். அவரது இயற்கையியல் அறிவின்நுட்பம் திருக்குறளின் காட்சிப்பொருள் விளக்கத்திற்கு மட்டுமல்லாது, அறக்கருத்துரைக்கும் துணைபுரிந்துள்ளது பெருந்துணை புரிந்துள்ளது என்பதே இக்கட்டுரையின் கருதுகோள் ஆகும்.

கருவிச்சொற்கள் (keywords)
கடல், பிறவிப்பெருங்கடல், நெடுங்கடல், காமக்கடல். நாமநீர்…

முன்னுரை
சங்க இலக்கியங்கள் இன்றும் நிலைத்து நிற்பதற்குக் காரணம் அவை இயற்கை சார்ந்த வாழ்வியல் மரபுகளைக் கொண்டுள்ளமையே. சங்க கால வாழ்வியலில் இயற்கை மனித வாழ்க்கையின் எல்லாத் தளங்களிலும் நீக்கமற நிறைந்திருந்தது. இயற்கையைத் தவிர்த்த வாழ்க்கையை அவர்களால் எஞ்ஞான்றும் மேற்கொள்ள இயலவில்லை. இதன்பொருட்டே புலவர்கள் இயற்கைக்கு மிக முக்கியமான இடத்தைத் தந்து பாடல்களைப் படைத்தளித்தனர். இயற்கையியல் அறிவும், இயற்கையில் தோய்ந்த உள்ளமும் சங்கப் புலவர்கள் பெற்றிருக்க வேண்டிய அறிவுப்புலமாக இருந்துள்ளது. இவ்வாறு இயற்கையை மிகநுணுக்கமாகப் பதிவு செய்த புலவர்களை இன்றும் போற்றி நிற்கும் மரபினைக் காணலாம். சங்கச் சமூகத்தில் நிலவிய இயற்கையியல் அறிவும், இயற்கையியலின்வழி வெளிப்படுத்தப்பட்ட பாடுபொருள் தளமும் அற இலக்கியங்களின் படைப்பாக்கத்திற்கு அடிப்படை அலகாக அமையவில்லை. தூய்மையான அறிவுரைத் தரும் போக்கில் அமைந்த அறநூல்களில் இயற்கையியல் அறிவு புலவர்களுக்கு இரண்டாம் நிலையினதாகவே இருந்துள்ளது. இதனை மடைமாற்றம் செய்யும் நோக்கில் அறிவுரை புகட்டுவதற்கும் இயற்கையை ஒரு கூறாகப் படைத்துக் காட்டியவர் திருவள்ளுவர் என்பது அவரது நூலின்வழி புலனாகக் காணலாம். அறநூல்களில் தலையானதாகத் திகழும் திருக்குறளில் இயற்கைப் பொருட்களில் ஒன்றான கடல் பற்றியும் அதனைப் பொருள்விளக்கத்திற்குக் கையாண்ட திருவள்ளுவரின் அறிவுநுட்பம் குறித்தும் இக்கட்டுரையில் விளக்கப்படுகின்றது.

சங்க வாழ்வில் கடலியல் அறிவு
சங்கத் தமிழர்கள் நீரியல் அறிவுச் சிந்தனையை மிகச்சிறப்பாகப் பெற்றிருந்துள்ளனர். மனித வாழ்வியலுக்கு மிக முக்கியத் தேவையான ஒன்றாக நீர் அமைந்திருப்பதனை அறிந்த்தன்வழி, அதனைத் திறம்பட மேலாண்மை செய்வதற்கும், தேவைப்படும் காலங்களில் அந்நீரைத் தேக்கி வைத்துப் பயன்படுத்துவதற்குமான அறிவினைக் கைவரப் பெற்றிருந்தனர். இதேபோன்று சங்க மக்கள் வாழ்வில் கடலியல் வாழ்வு மிக முக்கியமான இடத்தினைப் பெற்றிருந்துள்ளது. நாம் வாழும் உலகம் கடலால் சூழப்பட்டது. கடலும் கடல் சார்ந்த வாழ்வும் நெய்தல் நிலமாகக் கருதப்பட்டு, கடலியல் செல்வங்களைக் கொண்டு வாழும் வாழ்க்கை முறை சங்கத் தமிழர்களிடத்தில் பெருவழக்காக இருந்துள்ளது. இதன்பொருட்டே பூமிப்பரப்பில் பெருமளவினதாக அமைந்திருக்கும் கடலைப் பற்றி சங்கப் புலவர்கள் மிகச்சிறப்பாக அறிந்து வைத்திருந்ததோடு, அதன் தன்மைகளையும், சிறப்புகளையும், பெருமைகளையும் உணர்ந்திருந்து, பாடற்புனைவில் கடலுக்கும், கடல்சார் வாழ்வியலுக்கும் மிகச்சிறப்பான இடத்தினைத் தந்துள்ளனர்.

Continue Reading →

சிவபுரம் இராஜராஜேஸ்வரம்

 தென்கிழக்கு நோக்கில் கோவில். சோழ அரச குடும்பத்தார் தனிப்பட கவனம் செலுத்தி வந்த கோவில் கூவம் ஆற்று ஓட்டத்தை அண்மித்து அமைந்த ஊரடகம் சிவபுரம் மகாதேவர் கோவில் ஆகும். இக்கோவில் இராசராசப் பெருவேந்தனால் அவன் பெயர் இட்டு கட்டப்பட்டதால் இராஜராஜேஸ்வரம் என கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டு உள்ளது. இந்த சிவபுரம் இராஜராஜேஸ்வரம் கடம்பத்தூர் – பேரம்பாக்கம் – தக்கோலம் செல்லும் வழியில் பேரம்பாக்கத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் இடம் கொண்டுள்ளது. நெடுஞ்சாலையில் இருந்து நடக்கும் தொலைவில் தான் இக்கோவில் உள்ளது. கூவம் ஆறு பிரிகின்ற கேசாவரம் அணை இங்கிருந்து வடகிழக்கே 4 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த தலத்திற்கு அண்மையில் தான் நரசிங்கபுரம், திருஇலம்பையங் கோட்டுர், திருவிற்கோலம் ஆகிய தேவாரப் பாடல் பெற்ற தலங்களும் உள்ளன. இந்த சிவபுரம் இராஜராஜேஸ்வரமுடைய மகாதேவர் கோவிலுக்கு தெற்கே 4 கி.மீ. தொலைவில் உள்ள திருவிற்கோலமான கூவம் ஏரியில் இருந்து கால்வாய் அமைத்து தண்ணீர் கொண்டு வந்த செய்தி இக்கோவில் கல்வெட்டில் பதிவாகி உள்ளது. இக்கோவிலின் புறச்சுவர் முழுவதும் மேல் சுவர்முதல் அடிச்சுவர் வரை கல்வெட்டுகளாகவே நிரம்பி உள்ளன. கல்வெட்டு, தொல்லியல் ஆர்வம் உள்ளவருக்கு இக்கோவில் நல்லதொரு பயிற்சிக் களம் எனலாம்.

இக்கோவில் தமிழ்நாடு மாநில தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதற்கான அறிவிக்கைப் பலகையும் இங்கே காணமுடிகிறது. இக்கோவிலைச் சுற்றி மண்மேடு எழுப்பி அதில் தோட்டம் அமைத்து பேணி வந்ததற்கான குறியீடுகள் தென்படுகின்றன. ஆனால் இப்போது தோட்டம் மட்டும் பேணப்படுவிதில்லை என்பது ஆங்காங்கு ஒழுங்கற்று வளர்ந்துள்ள செடிகளால் அடையாளப்படுகின்றது.

Continue Reading →