புலம்பெயர்ந்த தமிழர்கள் நடத்தும் வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கேட்கும்போதெல்லாம், பார்க்கும்போதெல்லாம் ஒரு காலத்தில் இலங்கை வானொலியில் எம்மை மறந்திருந்த காலம் நினைவுக்கு வருவதுண்டு. எவ்வளவு ஆர்வமாக அன்று வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டு இரசித்தோம். எம்மை மறந்து இன்பத்தில் திளைத்தோம். இன்றம் கூட சற்சொருபவதி நாதன், இராஜேஸ்வரி சண்முகம், கமலினி செல்வராசன், சில்லையூர் செல்வராசன், அப்துல் ஹமீட், ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் வி.என்.மதியழகன், கே.எஸ்.ராஜா, விவியம் நமசிவாயம், கே.எஸ்.பாலச்சந்திரன், சுப்புலட்சுமி காசிநாதர், கமலா தம்பிராஜா என்று பலரின் பெயர்கள் பசுமையாக நினைவிலுள்ளன. அதற்குக் காரணம் அவர்கள் திறமையான கலைஞர்கள். ஒரு நிறுவனத்தில் முறையான நிர்வாகத்தில் கீழ், திறமையாகத் தம் ஆற்றலை வெளிப்படுத்த வேண்டிய சூழலில் பணி புரிந்துகொண்டிருந்தார்கள். தவறுகள் விட்டால் அவை அவர்களது பணியினைப் பாதிக்கும். இதனால் அவர்கள் கேட்பவர்களை மனத்திலிருத்தி நிகழ்ச்சிகளைத் தயாரித்தார்கள். செய்திகளை வாசித்தார்கள். தம் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் நிகச்சிகளை நடாத்தினார்கள். ஆனால் புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் நாடுகளில் பல வானொலிகள், தொலைகாட்சிகளுள்ளன. ஆனால் இவற்றில் ஒலி(ளி) பரப்பாகும் நிகழ்ச்சிகளை நடத்தியவர்களின், பங்குபற்றியவர்களின் பெயர்களை நாம் அன்று எம்மை மகிழ்வித்தவர்களைப்போல் நினைவில் வைத்திருக்கின்றோமா?. வைத்திருப்போமா?
இதற்கு முக்கிய காரணங்களில் சில: இங்குள்ள வானொலிகளும், தொலைக்காட்சிகளும் தனிப்பட்டவர்களின் வியாபாரங்களாக இருக்கின்றன; முறையான பயிற்சியற்ற பலர் செய்திகளை வாசிக்கின்றார்கள்; நிகழ்ச்சிகளை நடாத்துகின்றார்கள்; உச்சரிப்பில் தவறிழைக்கின்றார்கள்; போதிய தமிழறிவு, ஆய்வறிவு அற்றவர்களாக இருக்கின்றார்கள். இது போன்ற காரணங்களினால் இவர்களால் என்றும் அழியாத கோலங்களாக நிலைத்து நிற்கும் நிகழ்ச்சிகளை வழங்க முடிவதில்லை.
இங்கு வானொலிக்கலைஞர்களாக, தொலைக்காட்சிக் கலைஞர்களில் எவ்வளவுபேர் முறையாக அத்துறைகளில் கல்வி கற்று, பயிற்சியெடுத்து பணியாற்ற வருகின்றார்கள்? இவர்களைப்போன்றவர்கள் இத்துறைகள் பற்றி , இத்துறைகளில் சிறந்து விளங்கியவர்களால் எழுதப்படும் நூல்களையாவது, விவரணக் காணொளிகளையாவது வாசித்து, பார்த்து விட்டுப் பணி புரிய வரவேண்டும். அதனால் அவர்கள் தயாரிக்கும், ஒலி(ளி) பரப்பும் நிகழ்ச்சிகளும் சிறக்க வாய்ப்புண்டு. இவ்விதமாக இத்துறைகளில் பயனளிக்கும் வகையில் எழுதப்பட்ட நூலொன்று அண்மையில் வெளியாகியுள்ளது. இதனை எழுதியவர் இத்துறையில் நீண்ட காலம் பணியாற்றிய ஒருவர். இந்நூல் இந்நூல் குறிப்பாகச் செய்தித்துறையினை மையமாக எழுதப்பட்டிருந்தாலும், இவ்விதமான துறைகளில் பணிபுரியும் வகையிலான நூலாகும், வாசிப்பவர்களுக்கும் இத்துறை பற்றிய அறிவினை அதிகரிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ள நூலாகும், இதனை எழுதியவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் , ரூபவாஹினி தொலைக்காட்சி ஆகியவற்றில் பணி புரிந்த வி.என். மதியழகன். இந்நூலின் பெயர் ‘சொல்லும் செய்திகள்’. இதனை அழகாகத் தயாரித்து வெளியிட்டுள்ளது ‘காந்தளகம்’ பதிப்பகம்.
இந்நூல் மிகவும் சுவையாக, எளிமையாக, வாசிப்பவர்களுக்கு இத்துறை பற்றிய புரிதலைத் தரும் வகையில் எழுதப்பட்டுள்ளது. செய்தித்தயாரிப்பில் இவ்வளவு விடயங்கள் இருக்கின்றனவா என்று வாசிப்போரைப்பிரமிக்க வைத்து விடுகின்றது.
இந்நூல் பதினைந்து அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் செய்தித்துறையின் வெற்றிக்கு, சிறப்புக்கு முக்கியமானவையாகக் கூறப்பட்ட விடயங்களில் முக்கியமானவையாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்: