“பல மொழிகளிலும் ஒருவரது படைப்பு மொழிபெயர்க்கப்பட்டு நூலுருவில் வெளியாவதும் ஒரு வகையில் படைப்பாளிக்கு கிட்டும் அங்கீகாரம்.” எனச்சொன்னார் நாமக்கல் கு. சின்னப்பபாரதி. என்னருகில் அமர்ந்திருந்த யுகமாயினி சித்தன் உடனே அதனை மறுத்துரைத்தார். “மொழிபெயர்ப்பில் ஒரு நாவல் வெளியானால் அதனை இலக்கிய அங்கீகாரம் என எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? ஒரு நாவல் சர்வதேச தரத்தில் எழுதப்பட்டால் மாத்திரமே அதற்கு அங்கீகாரம் தரமுடியும். ஒரு நாவல் இந்திய மொழிகளிலும் அய்ரோப்பிய மொழிகளிலும் வெளியாகிவிட்டால் , அந்தப்படைப்பு உன்னதமானது, தரமானது, உலக அங்கீகாரம் பெற்றது என்ற முடிவுக்கு வந்துவிடலாமா?” எனக்கேட்டார் சித்தன். சின்னப்ப பாரதி நிமிர்ந்து அமர்ந்தார்.
“ஒரு நாவல், அந்தநாவலின் படைப்பாளியின் தாய்மொழியில் எழுதப்பட்டு அதனை பிறமொழி வாசகருக்கு அறிமுகப்படுத்துவதற்காக ஒரு மொழிபெயர்ப்பாளர் பிறமொழியில் தரமுனைவதுகூட அங்கீகாரம்தான். மொழிபெயர்ப்பாளர் அந்தப்படைப்பை மொழிபெயர்க்கவிரும்பியதனால்தானே பிறமொழி வாசகனுக்கு அந்தப்படைப்பு கிடைக்கிறது. அத்துடன் மொழிபெயர்ப்புக்கு தகுதியான படைப்பு என்ற சிந்தனை மொழிபெயர்ப்பாளரிடம் இருப்பதனால் அவர் குறிப்பிட்ட படைப்பை மொழிபெயர்க்கின்றார். ஒருவகையில் இது ஒரு அங்கீகாரம்தான்.” என்றார் சின்னப்பபாரதி. “ அய்யா, எத்தனை படைப்புகளும் மொழிபெயர்க்கப்படலாம், ஆனால், அவை சர்வதேச தரத்திற்கு உயர்ந்திருக்கிறதா? என்பதுதான் எனது கேள்வி.” எனக்கேட்ட சித்தன், சற்று அட்டகாசமாகவும் சிரித்தார். அந்தச்சிரிப்பை இனி நாம் கேட்கமுடியாமல் நிரந்தரமாக மௌனித்துவிட்டார் எங்கள் சித்தன். மேற்குறிப்பிட்ட உரையாடல் சில வருடங்களுக்கு முன்னர் தமிழகம் நாமக்கல்லில் இலக்கிய நண்பர் எழுத்தாளர் கு. சின்னப்ப பாரதி அவர்களின் இல்லத்தில் ஒரு மதியவேளையில் நடந்தது. சித்தனை அன்றுதான் முதல் முதலில் சந்தித்தேன். எனது நாமக்கல் வருகை அறிந்து, கோயம்புத்தூரிலிருந்து தேடிக்கொண்டு வந்துவிட்டார். சித்தன் ஆங்கில இலக்கிய பரிச்சயம் மிக்கவர். பலர் தமிழில் மொழிபெயர்த்த பல மேலைத்தேய மற்றும் ஆபிரிக்க இலக்கியங்களை ஏற்கனவே ஆங்கில மூலம் படித்திருப்பவர். மொழிபெயர்ப்புகளிலும் ஈடுபடுபட்டவர். (சித்தனின் மொழிபெயர்ப்புக்கூட புகலிட நாட்டில் வதியும் ஒருவரது பெயரில் வெளியாகியிருப்பது எனது காதில் விழுந்த வியப்பான தகவல்) அவர் சில நல்லமொழிபெயர்ப்புகளை குறிப்பிட்டார். எனினும் தமிழில் குறிப்பிட்டுச்சொல்லும்படியான சர்வதேச தரத்தில் அமைந்த நாவல்கள் எதுவும் இன்னமும் வரவில்லை என அன்று தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் சின்னப்பபாரதிக்கு சித்தனின் கருத்துக்கள் எரிச்சல் ஊட்டியதையும் அவதானித்தேன். அவர் திடீரென எழுந்து, “ மதியமாகிவிட்டது. சாப்பிட்டுவிட்டு பேசுவோமா?” என்றார். மதிய உணவருந்தும்போதும் சித்தன் விட்ட இடத்திலிருந்து தனது வாதத்தை வலியுறுத்தினார். “ முதலில் சாப்பிடுங்கய்யா. அதன் பிறகு பேசுவோம்” என்று சின்னப்ப பாரதி சொன்னபிறகே சித்தன் அமைதியடைந்தார்.