இந்தியச் சமூகத்தில் பெண் கடமைகளின் உருவம். சுயநலமில்லாமல் அன்போடு அனைவரையும் பாதுகாப்பது அவள் இயல்பு. அதுவே அவளது கடமையும் கூட. பெண் என்பவள் தனக்காக வாழ்பவள் அல்ல. திடீர் உறவினர் வருகையால் உணவு பற்றவில்லையா? பெண் தனக்கான உணவைத் தியாகம் செய்வாள். அவளுக்கு உடல் நலம் இல்லாவிட்டாலும் மற்றவர்களைக் கவனித்து சேவை புரியும் ‘தியாகி’ அவள். அவ்வாறு நீளும் சேவையின் பொருட்டு, தான் காலம் தவறி உண்ணும் இயல்பும் உடலையோ மனத்தையோ பராமரிக்க முடியாமல் வேலைகளின் அழுத்தத்தில் தன்னை மறந்தே போவதும் பெண்ணின் குணம். சிறந்த பெண்மணி மேற்கண்ட இயல்புகள் கொண்டிருப்பாள். அதாவது மேற்கண்ட இயல்புகளைக் கொண்டிருந்தால்தான் ‘சிறந்த பெண்மணி’ என்ற பட்டம் கிடைக்கும். தன்னைப் பற்றியும் தனது உடல் மற்றும் மன ஆரோக்கியம் பற்றியும் சிந்திக்கும் பெண்ணை நம் சமூகம் அவ்வளவு மரியாதையுடன் பார்ப்பதே இல்லை. அவள் பொறுப்பற்ற, சுயநலமான, அன்பின் உருவம் அல்லாத, சமயங்களில் குடும்பத்திற்குத் தகுந்தவள் கிடையாது என்று கூட முத்திரை குத்தப்படுகிறாள். உண்மையில் பெண்ணின் உடல்நலம் அதிமுக்கியமானது. அவள் நலமாக இருக்கும் வரைதான் மற்றவர்களைப் பேணிப்பாதுகாக்க முடியும்.
ஒவ்வொரு பெண்ணையும் அவளுடைய பெரிய சொத்து எது என்று பட்டியல் இடச் சொன்னால் அவளது குடும்பம், குழந்தைகள், உறவுகள், விலை கொடுத்து வாங்கக் கூடிய உயிரற்ற பொருட்கள் என்று நீளுகின்ற பட்டியலில் அவள் உடல் என்ற ஒன்று இருக்கக் கூடுமா என்பது சந்தேகமே. ஆனால் பெண்ணுக்கு அவளது உடல்நலம் தான் ஆகப் பெரிய உடைமை. பெண்களுக்கு இந்த அறிவையும் உணர்வையும் தருவதில், புரிய வைப்பதில் நம் மொத்த சமூகமும் தவறிவிட்டது என்பதுதான் உண்மை. அதற்குப் பல விதமான சமூக, பொருளாதாரக் காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அதை விடக் கொடுமை, தன் உடல் பற்றி எந்த வித அக்கறையும் காட்டாமல், தன்னைச் சார்ந்தவர்களை மட்டும் கவனித்துக் கொள்வதே சிறந்த பெண்ணின் இயல்பு என்றும் பாடம் சொல்லி மனத்தில் பதித்தும் இருக்கிறது.
சரிவிகித உணவும் உடற்பயிற்சியும் மேல்தட்டு மக்களுக்கே உரியவை என்ற தவறான புரிதலும் நிச்சயம் மாற்றப்பட வேண்டும்.