தமிழ் கலை இலக்கிய அறிவுச்சூழலின் நிகழ்வுகளை பதிவுசெய்துவரும் அரங்கச்செயற்பாட்டாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மெல்பனில் எதிர்வரும் 25 ஆம் திகதி உரையாற்றுகிறார்.

தமிழச்சி தங்கபாண்டியன்சுமதி என்னும் இயற்பெயரைக்கொண்டிருக்கும் தமிழச்சி தங்கபாண்டியன், தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் மல்லாங்கிணறு கிராமத்தில் பிறந்தவர். விருதுநகரில் ஆரம்பக்கல்வியையும் மதுரையில் கல்லூரிப்படிப்பையும் நிறைவுசெய்துகொண்ட சுமதி,  இளம் வயதிலிருந்தே கலை , இலக்கிய ஆர்வலராகவும் சமூகச்செயற்பாட்டாளராகவும்  வளர்ந்தவர்.  கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, நாடகம், நடனம், ஆய்வு முதலான துறைகளில் ஈடுபாடுகொண்டிருந்தவர். தனக்கு தமிழச்சி என்ற புனைபெயரையும் சூட்டிக்கொண்டவர். சிறுகதைகளும் எழுதத் தொடங்கியிருக்கும் இவரது பாடல்கள்  திரைப்படங்களிலும் ஒலிக்கின்றன. சுமதி,  தமிழச்சி என்ற பெயருடன் எழுதத் தொடங்கியதும் இந்தப்பெயரையே  ஊடகங்களும்  அடையாளப்படுத்துகின்றன.  சென்னையில் ராணி மேரி கல்லூரிக்கு ஆங்கில இலக்கிய விரிவுரையாளராக பணி நிமித்தம் இடம்பெயர்ந்தவர்.  தான் பிறந்த  கிராமத்து மண்ணையும் மக்களையும் ஆழமாக  நேசித்துவருபவர்.  கட்டிடக்காட்டுக்குள் வாழத்தலைப்பட்டாலும், தான் வாழ்ந்த  கரிசல் காட்டின் மணத்தை தனது கவிதைகளில் தொடர்ந்து பரப்பிவருபவர். தமிழக இலக்கிய உலகில் நிரம்பவும் பேசப்படும் தமிழச்சி,  ஈழத்தமிழ் மக்கள் குறித்தும் கரிசனை கொண்டிருப்பவர். இவரது சில படைப்புகளில் ஈழத்தின் மீதான நேசமும் பதிவாகியிருக்கும்.

சென்னை ராணிமேரி கல்லூரியின் ஆங்கில இலக்கிய விரிவுரையாளராக பணியாற்றிய வேளையில்  2005 இல் அவுஸ்திரேலியாவுக்கு தனது முனைவர் பட்ட ஆய்விற்காக முதல் முதலில் வந்திருக்கும் தமிழச்சி,  குறிப்பிட்ட ஆய்வினை பூர்த்திசெய்து, அதனை தமிழுக்கும் வரவாக்கி நூலுருவில் அறிமுகப்படுத்துவதற்கு மீண்டும் அவுஸ்திரேலியாவுக்கு வருகை தந்துள்ளார். குறிப்பிட்ட ஆய்வு நூலில்,  அவுஸ்திரேலியாவிலும் வெளிநாடுகளிலும் நன்கு அறியப்பட்ட  கலைஞர் ஏர்னஸ்ட் தளையசிங்கம் மெர்க்கண்டையரை முன்வைத்து எழுதியுள்ளார். நிழல்வெளி என்னும் பெயரில் எழுதப்பட்டுள்ள இந்நூலில் இலங்கை அரசியல் குறித்தும் பேசப்படுகிறது. முக்கியமாக ஏர்னஸ்ட் தளையசிங்கம் மெர்க்கண்டையரின் பிரபல நாடகமான Rasanayagams Last Riot (1983)  பற்றியும் அவரது இதர நாடகங்கள் பற்றியும் இந்த நூல் பேசுகிறது. 2009 முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில் மாண்ட  இன்னுயிர்களுக்கு இந்த நூலை சமர்ப்பித்துள்ளார்.
\
தமிழச்சியின் தந்தையார் தங்கபாண்டியன்,  அறிஞர் அண்ணாதுரை 1967 இல் தமிழகத்தின் முதல்வரான சமயத்தில்  அவரது அமைச்சரவையில் கல்வி அமைச்சராக பதவி வகித்தவர். அருப்புக்கோட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர். தி. மு.க.விலிருந்த எம்.ஜி.ஆர்., பறங்கிமலையிலும் ஆண்டிப்பட்டியிலும் தேர்தலில் நின்று வென்றவர்.  அனைத்திந்திய அண்ணா தி.மு. க. தொடங்கிய பின்னர் எம்.ஜிஆர். , அருப்புக்கோட்டையில் களத்தில் இறங்கி தங்கபாண்டியனை தோற்கடிக்கிறார். தொடர்ந்தும் தி.மு.க.விலிருந்த தங்கபாண்டியன்,  ராஜபாளயத்தில் நடந்த ஒரு கலவரத்தை நேரில் பார்த்து அங்கு அமைதியை ஏற்படுத்த சென்ற வேளையில் மாரடைப்பு வந்து காலமானார்.

Continue Reading →