தமிழர் தம் இலக்கிய மாளிகையை அலங்கரிக்கும் இலக்கிய வகைகள் எண்ணற்றவை. அவற்றுள் சிற்றிலக்கிய வகைகள் குறிப்பிடத்தக்கவை. தமிழ்நாட்டின் ஒப்பற்ற போர் வேந்தர்களாம் சேர, சோழ, பாண்டியர்களின் தன்னிகரில்லாப் புகழினைப் பறை சாற்றும் விதமாய் அமைந்திருப்பது முத்தொள்ளாயிரம்;. இதில் வேந்தர்களின் பெருமைகளை ஆசிரியர் அக, புறப் பாடல்களால் வெளிப்படுத்தியுள்ளார்
முத்தொள்ளாயிர இலக்கியம் கருத்தாற்றலாலும், கற்பனையாற்றலாலும், சொல்லாற்றலாலும் சிறப்புற்று விளங்குவது. மொழியின் அழகினை விளக்கும் அணியிலக்கணங்கள் இதில் பல பயின்று வந்துள்ளன. அவற்றுள் புலவரின் குரலாக ஒலிக்கும் தற்குறிப்பேற்ற அணி சிறப்பானதாகும்.
தற்குறிப்பேற்றம்
உலகில் இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது, கவிஞர் தன் குறிப்பினை ஏற்றிப் பாடுவது தற்குறிப்பேற்ற அணியாகும். இதன் இலக்கணம் குறித்து தண்டியலங்காரம் பின்வருமாறு கூறுகின்றது.
“பெயர் பொருள் அல்பொருள் எனஇரு பொருளினும்
இயல்பின் விளை திறனன்றி அயலொன்று
தான் குறித்தேற்றுதல் தற்குறிப் பேற்றம்”(தண்டி-56 )
இத்தகைய தற்குறிப்பேற்ற அணியானது இலக்கியங்களில் புலவர் கூற்றாக இலக்கியத்தில் வரும் மாந்தர், பொருள் போன்றவற்றின் சிறப்பினை எடுத்துரைக்கும் முகமாய் காணப்படும்.
முத்தொள்ளாயிரத்தில் தற்குறிப்பேற்றம்
முத்தொள்ளாயிர இலக்கியம் கற்பனையாற்றல் வளத்தால் சிறப்புற்று, ஒப்பற்று விளங்கும் ஓர் இலக்கியமாகும். அன்றாட வாழ்வில் நாம் காண்பவை ஆயிரம் ஆயிரம் நிகழ்ச்சிகள். ஆனால் அவற்றிற்கு கற்பனை என்னும் உயிர் கொடுத்துக் கவிதையாக்கும் போது அது இறவாப் புகழுடைய இலக்கியமாகின்றது. நாம் இவ்வவுலகில் இயல்பாகக் காணும் இயற்கைக் காட்சிகள் முத்தொள்ளாயிரப் புலவரின் கற்பனையில் இருந்து முற்றிலும் மாறானவை, புதுமையானவை. ௨லகில் நடக்கும் இயல்பான காட்சிகள் புலவருக்கு மன்னனின் சிறப்பினை எடுத்துக் காட்டுகின்றன. அவ்வகையில் முத்தொள்ளாயிரப் பாடல்களில் பயின்று வரும் தற்குறிப்பேற்ற அணி குறித்து ஆய்வதே இவ்வாய்வின் நோக்கமாகும்.
வானவில்லின் திருக்கோலம்
அண்ணாந்து பார்க்கின்றான் புலவன். வானில் வர்ணங்களின் ஜாலமாம் வானவில் தோன்றி காணப்படுகின்றது. அதனைக் கண்ட புலவன், சேரனுக்கு அஞ்சித் தான் விண்ணோரும் சேரனின் கொடியாம் விற்கொடியினைக் கவினுற வரைந்து வைத்துள்ளனர் என்று எண்ணுவதாய்,