ஊர்துஞ்சும் நள்ளிரவு.
விரிவெளி பார்த்திருந்தேன்.
இரவுவான்!
புட்களற்ற மாநகரின் நள்ளிரவு
நத்துகள் ஒலியேதுமில்லை.
ஆந்தைகளின் அலறல்கள் எங்கே?
வெளவால்கள்தம் சலசலப்புமில்லை.
வாகன இரைச்சல் மட்டும்
சிறிது தொலைவில்
சிறிய அளவில்.
உப்பரிகையின் மூலையில்
தூங்கும் மாடப்புறாக்களின்
அசைவுகள்
அவ்வப்போது கேட்கும் சூழல்.
விரிவெளியில் சுடரும் ஒளிச்சிதறல்கள்
பல்வகை எண்ணங்கள் நெஞ்சில்.
எங்கோ ஒரு கோடியில் இங்கு
நான்.
அங்கு
நீ!
எங்கே?
சாத்தியமுண்டா?
பேரின்பத்தார் என்ற பேரின்பநாயகத்திற்கு தற்போது அந்த பொதுத்தொண்டின் மீது வெறுப்பு வந்துவிட்டது. அவர் சில பொதுப்பணிகளில் ஈடுபடும் தன்னார்வத் தொண்டர். ஆனால், குறிப்பிட்ட அந்தத் தொண்டின் மீதுதான் அவருக்கு மனக்குறை வந்துவிட்டது. அக்குறை வயிற்றில் அல்சர் வருமளவுக்கு மன அழுத்தம் கொடுத்துவிட்டது.
இரவில் தூக்கமும் அல்சரினால் அடிக்கடி கலைந்துவிடும். தமிழ், ஆங்கிலம், சிங்களம் என்று மும்மொழியிலும் எழுதவும் பேசவும் மொழிபெயர்க்கவும் நல்ல ஆற்றல் உள்ளவர்.
ஊரில் வசதிபடைத்தவர்கள் இறந்துவிட்டால், பத்திரிகை, வானொலிக்கு மரண அறிவித்தல் எழுதிக்கொடுப்பது முதல், அந்தியேட்டி வரும் வேளையில் கல்வெட்டு எழுதிக்கொடுப்பதும் அவரது வேதனம் ஏதும் இல்லாத தொண்டு.
எண்பதுக்குப்பின்னர் அவரது ஊரைச்சேர்ந்தவர்கள், கனடா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து சென்று வதிவிடம் பெற்று – எவரேனும் அங்கே இறந்துவிட்டால், பேரின்பத்தாரைத்தான் தொடர்புகொள்வார்கள்.
தேமதுரத் தமிழோசை அங்கெல்லாம் பரவினாலும், இந்த கல்வெட்டு கலாசாரத்தையும் தம்மோடு எடுத்துச்சென்ற ஈழத்து தமிழர்களுக்கு எவ்வாறு கல்வெட்டு எழுதுவது என்பதை அங்கே யாரும் பயிற்றுவிக்கவில்லையோ..? என்று தனது மனைவியிடம் அடிக்கடி சொல்லி வருந்துபவர்.
கடல் கடந்து சென்ற பலரது மரணச்சடங்குகளை ஊரிலிருந்து ஸ்கைப்பிலும், தபாலில் வந்த இறுவட்டிலிருந்தும் பார்த்திருப்பவர்.