“கோவிட்-19 வந்தது
2019 இறுதியில்…
கொரானா நச்சுக் கிருமி
மனித உடலுக்குள்
புகுந்தது 2020இல்!…
மனிதனால் மனிதனுக்குப்
பரவியது…
கொரானோ!
கிருமி ஆக்கிரமித்தது
இவ்வுலகை…
எதிர்ப்புச் சக்தியற்றவர்கள்
மாண்டனர்…
எதிர்த்து நின்றவர்கள்
மீண்டனர்…
ஓய்வுக் கொடுத்தது
இயங்திர வாழ்க்கைக்கு…
வாழ்க்கைச் சூனியம்
உணர்த்தியது மனிதனுக்கு …
கற்றுக் கொடுத்தது மனிதத்தை
கொரானோ…”
இன்று கொரோனா நச்சுக் கிருமி உலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. இக்கண்ணுக்குத்தெரியாத கிருமித்தொற்றால் நாம் பல விளைவுகளைச் சந்தித்து வருகிறோம். இந்த நச்சுக் கிருமி உருவாகி மக்களை வாட்டி வதைப்பற்கும், இக்கிருமி உலகெலாம் பரவி வருவதற்கும் மனிதன்தான் முழுதற்காரணமாவான். ‘கெட்டதிலும் நல்லது உண்டு’ என்பதை இக்கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமி சொல்லுகிறது. இது குறித்து என் கருத்தை இங்குப் பதிவு செய்கிறேன்
இந்த நூற்றாண்டில் வாழுகின்ற உலகமுழுவதும் உள்ள மக்களுக்கு (லாக் டவுண் மற்றும் சோசியல் டிஸ்டன்சு) ஊரடங்கு சட்டம் மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் தொடர்பாக அரசாங்கத்தால் பலநாட்களாக வீடுகளில் நாம் முடக்கப்பட்டிருப்பது இதுவே முதன் முறையாகும்,
இன்றைய உலகமயச்சூழலில் நெருக்கடிகள் மிகுந்திருந்தாலும் நேரமின்றி ஓய்வின்றி உழைத்து வசதிகளைப் பெருக்கினோம். நாம்மட்டும் வசதியாக வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்தோம். நமது மொழியின் மீது பற்று இல்லை. நம் பாரம்பரியஉணவின் மீது நம்பிக்கை இல்லை. நம் மண்ணின் மீது அக்கறை இல்லை. நம் உறவினர்களை மறந்தோம் அந்நிய பொருட்களுக்கும் பிறஉணவுகளுக்கும் பிறநாட்டின் மீதும் வேற்றுமொழிக்கும் நாம் அடிமையானோம். ஒயாத உழைப்பு, பல்வேறு ஆடம்பர வசதிகள் தேவைக்கு அதிகமான வாகனங்கள், உணவிலும் பெருத்த மாற்றங்கள் என ஏற்படுத்திக்கொண்டோம்.
நம் சூழலுக்கு, நம் நாட்டிற்கே உரிய உணவுமுறைகள் அனைத்தும் மறக்கடிக்கப்பட்டன ஒதுக்கப்பட்டன. பீசா, பட்கர், பேல்பூரி, பாக்கெட்டில் அடைக்கபட்ட சாசு, குளிர்பானங்கள் போன்ற துரித உணவுகள் இவை அனைத்தும் ஆடம்பரத்திற்கும் அலங்காரத்திற்கு மட்டுமே. இதனை உண்பதால் உடலுக்கு நன்மை தருமா? நாம் எண்ணவேண்டும் மேற்சொன்ன அனைத்தும் இன்றி நம்மால் வாழமுடியும்.
இவற்றுக்கெல்லாம் இன்று கொரானோ கிருமி நமக்குப் பாடம் கற்றுக் கொடுத்திருக்கிறது என்றே சிந்திக்கத் தோன்றுகிறது. நம்வீடு நம் மக்கள் நம் உறவினர் யாருக்கும் இந்நோய்த்தெற்று ஏற்படக்கூடாது என்பதைப் புரியவைத்திருக்கிறது.
வணிகத்திலும் பொருளாதாரத்திலும் உயர்ந்த வல்லரசு நாடுகளான சீனா, அமெரிக்கா, பிரான்சு, பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகள் தங்கள் பொருளியல் ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள உலகவர்த்தக அமைப்பின் மூலம் ஒரு வழியைக் கண்டறிந்தனர் இதுவே உலகமயம் (Globalization) தாராளமயம். கட்டுப்பாடற்ற மிக எளிய முறையில் ஒருங்கினைந்து வணிகம் மற்றும் முதலீடுகள் செய்து சுதந்திரமாக உலகின் அனைத்துப் பகுதிகளிலும் தொழிற் உற்பத்தியைப் பெருக்கின. இத்தகைய நாடுகள் தொழிற் புரட்சியின் காரணமாக மிக விரிவாக வளர்ந்தன விஞ்ஞானக் கருவிகள், தொழில் நுட்பங்கள். இயந்திரங்கள், வாகனங்கள் எனப் பல்வேறு வியப்பூட்டும் வகையில் உற்பத்தியைப் பெருக்கின. பலநாடுகளின் முக்கிய நகரங்களின் இடங்களில் தங்களின் பொருட்களைச் சந்தைப்படுத்தின. இவ்வாறு வணிகத்தின் வழியே உலகையே ஒன்றிணைத்தது.
உலகமயத்தின் இன்னொரு கிருமிபுரட்சி உலகை வலம் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையை நாம் அனைவரும் அனுபவித்து வருகிறோம். பலநிலைகளில் தங்களை மென்மேலும் உயர வளர்த்துக் கொண்ட நாடுகள் அனைத்தும் கண்ணுக்குத் தெரியாத கொரானோ கிருமியை அழிக்கமுடியாமலும் எதிர்ப்பு மருந்து கண்டறியப்படாமலும் திண்டாடுகின்றன.
இதற்கு முதல் காரணமாக இருப்பது, இயற்கையை நாம் நாசமாக்கியதே! இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புக்குள்ளாவதைக் குறித்த அக்கறையை எந்த நாடுகளும் முன்னெடுத்த மாதிரி தெரியவில்லை.
அதிக அளவில் வாகனஉற்பத்தியைப் போட்டிப்போட்டு கொண்டு பலநாடுகள் பெருக்கின. நாள்தோறும் புதிது புதிதாக வாகனங்கள், விமானங்கள், தொழிற்சாலைகள், இயந்திரங்கள் இதனால் வளர்ச்சியடைந்த பலநகரங்களில் சுற்றுச்சூழல் மாசடைந்தன. மக்கள் நோய் எதிர்ப்புச் சக்தியற்றவர்களாயினர். நுரையீரல் மற்றும் சுவாசக் கோளாறு பிரச்சினைகளுக்குப் பலர் ஆளாகினர். பல்வேறு நோய்கள், ஏராளமான மருத்துவமனைகள் எனப் பெருகின.
விளைச்சலும் விளைநிலங்களும் ஒழிந்து, உலகம் இயந்திரமயமாகிய சூழலில் கொரானோ புகுந்து பல்வேறு நிறுவனங்களுக்கும் ஓய்வு கொடுத்தது. உலகை இணைத்தது. ஆடை, அலங்காரம், சினிமா, ஜிம், வழிபாட்டுத்தலங்கள் என எங்கும் மக்கள் செல்லாமல் முடங்கினர் வாகனங்கள், விமானங்கள், பேருந்துகள் என எதுவும் இயங்கவில்லை. எந்தவித மதவழிபாடுகளும் கிடையாது. கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. திருமணம் மற்றும் எல்லாவிதமன விழாக்களும் நிறுத்திவைக்கப்பட்டன. கூட்டங்கள் கூட்டுவது முற்றிலுமாக தவிர்க்கப்ப்பட்டன. எந்த இயக்கம் இல்லை என்றாலும் மக்களால் நன்றாக வாழ முடியும். ஆனால் உணவின்றி வாழ முடியுமா? இன்றுதான் நம்முன்னோர்கள் கூறியதும் உழவின் பயனும் நம் விவசாயப் பெருங்குடிமக்களின் தேவையும் நமக்குப் புரிகிறது.
இதனை, வள்ளுவர் அன்றே கூறினார். உழவுத்தொழிலின் உற்பத்தி நின்றால் இவ்வுலகம் அனைத்தும் அழந்துவிடும். மனித உயிர்களால் அரைசாண் வயிற்றுக்கு உணவின்றி சில நாட்கள் மட்டுமே வாழ முடியும். நாட்கள் செல்லச் செல்ல அவனால் உணவுப்பசியை தள்ளிப்போட இயலாது. ‘சுழன்றும் ஏர்பின்னது உலகம் அதனால் உழவே தலை’ இன்று உலகம் பல்வேறு தொழில்களில் முன்னேற்றம் கண்டிருந்தாலும் என்ன பயன்!! ஏரால் உழுது பயன் விளைவிக்கும் உழவுத்தொழிலால் உழவர்களால் மட்டுமே இவ்வுலகம் சுழல்கிறது என்பதை வள்ளுவர் கூறிச்சென்றாரே! மேலும் எந்தத் தொழில் இல்லாவிட்டாலும் இவ்வுலகம் இயங்கும். ஆனால் ‘உழவினார் கைமடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டேம் என்பார்க்கும் நிலை’என்றார். அதாவது, உழவுத்தொழில்களைச் செய்பவர்கள் தம்மால் இத்தொழிலைச் செய்ய முடியவில்லை என்று விடுவார்களேயானால், இவ்வுலகில் ஆசைகள் அனைத்தையும் துறந்து வாழும் துறவியர் கூட தம் அறத்தால் வாழமுடியாது என்கிறது வள்ளுவம்.
இன்றைய சூழலில் உலகையே அச்சுறுத்திவரும் கொரானோ என்ற நச்சுக்கிருமி வளர்ந்த நாடு வளரும் நாடு என்று எதையும் விட்டு வைக்கவில்லை. உலகில் பொருட்கள் உற்பத்தியில் முதலிடம் வகித்த சீனாவில்தான் நுண் கிருமி உருவாகி கொள்ளைநோயாகி தனது ஆக்டோபசு கரங்களை விரித்து உலகை இறுக்கிப்பிடித்து வருகிறது.
2019 டிசம்பர் மாதம் சீனாவின் வூகான் மாகாணத்தில் தோன்றியது கோவிட-19 என்ற கொரானே நச்சுக் கிருமி. இக்கிருமி மனித உடலுக்குள் புகுந்து தொண்டை கரகரப்பில் தொடங்கி சளி, காய்ச்சல் என ஏற்பட்டு நாளடைவில் சளி நுரையீரலில் அடைப்பை உண்டாக்கி மூச்சுத்திணறலால் பலர் உயிர் நீத்தனர். தொடக்க நிலையில் அக்கிருமி பரவலைக் கண்டறியாததால் பலருக்கும் பரவத்தொடங்கியது. இக்கிருமிக்கு எதிர்ப்பு மருந்து இன்னும் கண்டறியப்படவில்லை. இக்கிருமி பாதிக்கப்பட்டவர்கள் இருமல் மற்றும் தும்மல் ஏற்படும்பொழுது அருகில் இருப்பவர்களுக்கும் தொற்றியது நாளடைவில் சீனாவில் இந்நோய்தொற்று ஏற்பட்டவர்கள் மிகுந்தனர். சீனாவின் அனைத்துப் பகுதிகளின் மக்களுக்கும் பரவியது. இந்நோயை எதிர்க்கும் சக்தி உடலில் இல்லாதவர்கள் பலர் மாண்டனர். இந்நோய் தொற்று தாக்கியவர்களால் இக்கிருமி வெகு வேகமாக பரவத் தொடங்கியது. இன்று கொரானோ கொள்ளைநோயாக மாறி உலகையே ஆக்கிரமித்து வருகிறது.
மனிதனால் மனிதனுக்குப் பரவும் இக்கிருமி பதினைந்து நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு பல்வேறு சோதனைகளுக்குப் பிறகுதான் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிருமி இருப்பதை உறுதி செய்கின்றனர். எனவே தனிமைப்படுத்தப்பட்ட நபர் எங்கெல்லாம் சென்றார், யார் யாரைச் சந்தித்தார் என்ற தகவலைச் சேகரித்து அவருடன் இருந்த நபர்களையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தபடுகின்றனர். இக்கிருமி தாக்கப்பட்டவர்களைக் கவனிக்கும் செவிலியர்கள் பரிசோதிக்கும் மருத்துவர்கள் தங்களை முழுமையாக கிருமி தாக்காதவண்ணம் உடையணிந்து சோப்பு போட்டு தங்கள் உடல் முழுவதையும் சுத்தப்படுத்துவதால் மட்டுமே அவர்களுக்கு இந்நோய் தொற்றுவதில்லை என்றும் கூறப்பட்டது. என்றாலும் ஒருசில மருத்துவர்களையும் செவிலியர்களையும் இந்நோய் தொற்று விட்டுவைக்கவில்லை.
இந்தோனேஷியாவில் இளம் மருத்துவர் ஒருவர் இந்நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு தனது குழந்தைகளையும் மனைவியையும் தொலைவில் நின்று சந்தித்துச் சென்று மறுநாள் உயிர்பிரிந்த செய்தியைப் புலனம் வழியே அறிந்ததைக்கண்டு நெஞ்சு கணத்தது, கண்கள் குழமாயின.
மார்ச் 2020இல் இந்தியாவில் பரவத் தொடங்கியது. வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்குள் வந்தவர்களுக்கு இக்கிருமி இருந்ததற்கான அறிகுறி தென்பட்டது. அவரும் அவரது குடும்பத்தினரும் தனிமைப்படுத்;தப்பட்டனர். மகாரா~;டிரா, கேரளா, குசராத் என இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஒருசிலருக்கு இக்கிருமி தொற்று கண்டறியப்பட்டது.
இந்திய அரசு இக்கொரானோ கிருமித்தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக மார்ச் 16ஆம் நாள் அனைத்துக் கல்வி நிறுவனங்களையும் மூட ஆணை பிறப்பித்தது. மாணவர்கள் மட்டும் கல்வி நிறுவனங்களுக்கு வரவேண்டாம் மற்றும் ஆசிரியர்களும் பணியாளர்களும் கண்டிப்பாக வரவேண்டும் என்று அரசு அறிவித்தது.
இந்தியாவில் மார்ச் 22ஆம் நாள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் அறிவித்தார். 23ஆம் நாள் மாலை 6மணிமுதல் மார்ச் 31 வரை 144 தடைச் சட்டம் விதித்து வீட்டை விட்டு யாரும் வெளியே வரவேண்டாம் என்றார் தமிழக முதல்வர். இந்தியப் பிரதமரோ மார்ச்24இலிருந்து ஏப்ரல் 14 வரை 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். தொடக்கத்தில் 50, 60 நபர்களுக்கு மட்டுமே உறுதிசெய்யப்பட்டது. 10 நாட்களில் ஆயிரத்தைத் தாண்டியது. பலி எண்ணிக்கை 36க்கு மேல் சென்றது.
முந்நூறுக்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் பத்து இலட்சத்திற்கு மேல் இந்நோயால் பாதிக்கப்பட்டனர். இரண்டு இலட்சத்திற்கு மேல் இந்நோய்தாக்கத்திலிருந்து மீண்டனர். ஐந்தரை இலட்சம்பேர் மாண்டுள்ளனர். அமெரிக்காவில் இந்நோய்தொற்று மிக உச்சத்தை அடைந்தது. மேலும் பல ஐரோப்பிய நகரங்கள் இந்நோய்தொற்றிற்கு ஆளானவர்களை மீட்க முடியாமல் திணறுகின்றன. எனவே பல மக்கள் இறக்க நேரிடுகிறது. இந்தியாவில் இந்நோய் அறிகுறி தென்பட்டு ஊரடங்கு பிறப்பித்த பிறகு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மிக அதிகமாகிவருகிறது, இந்நோய் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலும், ஏழை பணக்காரர் எந்த பேதமுமின்றி தாக்குகிறது. மனிதர்களுக்கு மிகப் பெரிய பாடத்தைக் கற்றுக்கொடுத்தது என்பதையும் நாம் எண்ணமுடிகிறது.
ஆனால் கொரானோ பற்றிய பயம் மக்களிடம் எந்தவகையிலும் இல்லாததால் ஊரடங்கு உத்தரவு மற்றும் சமூக விலகலை பெரும்பாலானவர்கள் பின்பற்றுவதில்லை. ஒருசில கடைகள் மட்டுமே இயங்கியதால் சாலைகளில், சந்தைகளில், பல்பொருள் அங்காடிகளில் என எங்கும் மக்கள்நெருக்கம். இதனால் கடைகள், மருந்தகங்கள், பெட்ரோல் பங்குகள் காலை ஆறுமணி முதல் மதியம் இரண்டு மணிவரை திறக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். மதியத்திற்குப் பிறகு எந்தக் கடைகளும் இயங்கக்கூடாது அனைவரும் வீட்டைவிட்டு வெளியேறக்கூடாது என்பதையும் தெரிவித்தார்.
பதினான்கு நாட்களில் இரண்டாயிரத்தை நெருங்கியது. மக்கள் எந்தவகையிலும் கட்டுக்குள் இல்லாததால் இனி சாலைகளில் யாரும் தேவையின்றி அலைந்தால் கடுமையான நடவடிக்கை மற்றும் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று முடிவெடுத்தனர். விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் எச்சரித்துள்ளார்.
அரசு கூறுகிறபடி இன்னும் சில நாட்கள் மக்கள் வீட்டில் தனித்திருந்து தங்களைப் பாதுகாத்;துக் கொண்டால் இந்நோயின் தீவிரத்திலிருந்து நம்சமூகத்தையும் நம்மையும் காத்துக் கொள்ளலாம்.
இந்த ஊரடங்கு உத்தரவு காலத்தில் சமூகத்திற்கு மிகவும் இன்றியமையாத பணிகளில் ஈடுபட்டவர்கள் அதிகம். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் தன்னலமற்ற தொண்டு – கடவுள் என்ற ஒருவரை நாம் யாரும் கண்டதில்லை. இவர்களே இக்காலத்தில் நடமாடும் உண்மை தெய்வங்களாக மக்களுக்கு தென்பட்டனர். இவர்களின் மகத்தான பணி போற்றுதலுக்குரியது. மேலும் காவல்துறையினரின் பணி சொல்வதற்கில்லை. கடும் வெயிலிலும், இரவும் பகலும் சுற்றித்திரிந்து வெளியில் நடமாடும் மனிதர்களுக்கு அறிவுரைகளைக் கொடுத்தும் நூதனமுறையில் அவர்களைத் தண்டித்தும் திருத்தியும் அனுப்பிவைத்தனர். இவர்களின் ஓயாத பணி பாராட்டத்தக்கது.
துப்புரவுப்பணியாளர்கள் இவர்கள் தெய்வம் – கடவுள் என்று சொல்லப்படுகிற அனைத்திற்கும் மேல். நம்மைக் காப்பாற்ற அவர்கள் தங்களை நாள்தோறும் பணயம் வைக்கின்றனர். சாலைகளில், தெருக்களில் கிருமி நாசினிகளைத் தெளித்தும் குப்பைகளை அகற்றியும் சாக்கடைகளில் அடைப்பு ஏற்படாமல் அவற்றைச் சரிசெய்தும் வருகின்றனர். அவர்கள் தொய்வின்றி மக்களைக் காக்க தூய்மைப்பணியில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர். இத்தகைய தொண்டுஉள்ளத்தார் இல்லையென்றால் மனித உயிர்கள் இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. இவர்கள் நாள்தோறும் வணங்கப்பட வேண்டியவர்கள் நம் வணக்கத்திற்குரியவர்கள். சில தன்னார்வலர்கள் உணவின்றி சாலைகளில் தங்கி இருப்வர்களுக்கு உணவுகள் வழங்கி வருகின்றனர். சிலரோ நம் சித்தமருத்துவத்தில் கூறியபடி கபசுரநீர் கசாயம் செய்து சாலைகளில் தொண்டு செய்பவர்களுக்கு கொடுத்துவருகின்றனர். முகக்கவசம் தாயாரித்து காவலர் மற்றும் மருத்துவமனைகளுக்கு சென்று வழங்கியவர்களும் உண்டு.
உலகின் மிகச் சிறிய நாடான கியூபா மீது முன்பு அமெரிக்கா பொருளாதாரத் தடையை விதித்திருந்தது. இன்று உலக மக்களுக்கு சேவை செய்ய, தங்கள் நாட்டு மருத்துவர்களை உலகின் பல பகுதிகளுக்கு அனுப்பிவருகின்றனர் இவர்களது இச்செயல் பல்வேறு நாடுகளுக்கு முன்னுதாரணமாகப் பார்க்கப்படுகிறது.
இத்தகைய மனிதநேயம் உள்ளவர்கள் மத்தியில் மனிதம் அற்றவர்களையும் கொரானோ கிருமி நமக்குக் காட்டுகிறது. இக் கிருமி பரவும் காலத்தில் மிக முக்கியமாக மக்கள் பயன்பாட்டிற்கு உதவும் பொருள்களான கை கழுவும் ‘சானிடைசர்’ மற்றும் முகக்கவசம் இவற்றின் தேவையை அறிந்து அதன்விலையைப் பல மடங்கு உயர்த்தி விற்பனை செய்தவர்கள் ஒருபுறம். மேலும் வீட்டிற்குப் பயன்படும் உணவுப் பொருட்களைப் பதுக்கி வைத்தும் அதற்கான விலையை உயர்த்தி விற்பனை செய்பவர்களையும் நாம் அறிந்தோம்;;.
பலநாடுகள் தங்கள் தொழிற்சாலைகளை மூடிவிட்டன. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானப்போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. பலநாடுகள் தங்கள் எல்லைகளை மூடிவிட்டன. உள்நாட்டிலும் எல்லா வழித்தடங்களும் அடைக்கப்பட்டுவிட்டன. இவ்வாறெல்லாம் தங்களைத் தங்கள் தனிமைப்படுத்துவதால் கொள்ளைநோய் பரவாமல் காப்பாற்றிக் கொள்ளமுடியும் என்று முடிவு எடுக்கப்பட்டது, இதனால் பெரிய நன்மை என்னவென்றால் எரிபொருள் தேவை குறைந்துள்ளது. சுற்றுச்சூழல் வெளிமண்டலம் மாசு நீங்கி காணப்படுகிறது.
நமது முன்னேற்றத்திற்காக இயற்கையை நாசம் செய்து வந்தோம். இதன் விளைவை நாம் இன்று அனுபவிக்கிறோம். இயற்கையோடு இயைந்த வாழ்வை மேற்கொண்டால் நம்மை எந்த நோய்க்கிருமிகளும் அண்டாது.
இன்றைய சூழலில் வேகவேகமாக பரவிவரும் இக்கொள்ளை நோயிடமிருந்து நம்மையும் நம்சமூகத்ததையும் காப்பாற்றிக்கொள்ள அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகளில் மக்கள் முழு ஒத்துழைப்புடன் செயல்பட்டால் இந்நோய்தொற்றிலிருந்து நம்மை மீட்டுக்கொள்ளலாம். இன்றைய சூழலில் வேகவேகமாக பரவிவரும் இக்கொள்ளை நோயிடமிருந்து நம்மையும் நம்சமூகத்ததையும் காப்பாற்றிக்கொள்ள அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகளில் மக்கள் முழு ஒத்துழைப்புடன் செயல்பட்டால் இந்நோய்தொற்றிலிருந்து நம்மை மீட்டுக்கொள்ளலாம்.
இன்னும் இத்தொற்று நீங்கவில்லை பரவிக்கொண்டுதான் வருகிறது. இப்பொழுது விலங்குகளுக்கும் பரவி வருவதாக செய்திகள் வருகின்றன வருத்தத்தையே ஏற்படுத்துகிறது.
இக்கொடுமையான நோய்த்தொற்று மருந்து கண்டறிவதில் மிகவும் பின்தங்கியுள்ளோம். இந்நோய்த்தொற்று தொடங்கி ஐந்து மாதங்களைக் கடந்து விட்டது. இந்தச்சிக்கல் என்று தீரும் என்று தெரியவில்லை. விண்வெளி சென்று வந்தோம். கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணையைச் செய்து சோதனையும் செய்து விட்டோம். பல்வேறு சாதனைகளை செய்த நம்மால் கொரானோ கிருமிக்கு மருந்து கண்டுபிடிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை விரைவில் சாத்தியப்படும் என்றே நம்புவோம்.
jothimeenaav@gmail.com