எண்ணப் பறவை சிறகடித்து …..

உலகம்

இனியும் ஆயிரம் நித்தியானந்தாக்கள் பிறக்கத்தான் போகின்றார்கள்
அவர்களின் பின்னால் ஆயிரமாயிரமாய் மக்கள் திரளத்தான் போகின்றார்கள்
ஓரிரு கிருஸ்ணமூர்த்திகளும் இனிமேலும் பிறக்கத்தான் போகின்றார்கள்
அவர்கள் யாரென்று அறியப்படாமலே மறையத்தான் போகின்றார்கள்

எண்ணம் (மனம்)

அது கோட்டைப் புகையிரத நிலையம்
“உயிரைக் கொடுத்து” corner seat பிடிக்கும் விடையத்தில்
அன்றும் எனக்கு வெற்றிதான்
பயணம் முடியும்வரை அதில் இருந்த நேரமோ மிக குறைவு
Corner seat பிடித்து விட்டேன்….. அது போதும் எனக்கு

எனது எதிர்கால லட்சியமே அதுதான்
பெற்றோரின் ஊக்கமும் எனது கடுமையான முயற்சியும் ஒற்றுசேர
இன்று நான் ஒரு Civil Engineer
எனினும் ஒரு நாள் கூட அனுபவித்து வேலை செய்தது கிடையாது
அதேவேளை Civil Engineer என்ற பெருமையை விட்டதும் கிடையாது

எனது உழைபுக்கு இது சற்று அதிகமாககூட இருக்கலாம்
எனினும் நான் இன்று ஓடுவது Benz car….600 series
அதன் முழுமையான சொகுசை அனுபவிக்கின்றேனோ இல்லையோ
Benz சில் ஓடுகின்றேன் என்ற எண்ண சொகுசைஅனுபவிக்கின்றேன்

காலத்தின் தேவையோ…  இல்லை கட்டாயமோ…
நான் இன்று கனடாவில்…..
இதன் மூலம் நான் அடைந்த உண்மையான லாபத்தைவிட
நான் கனடியன் என்ற எனது எண்ணம் அடைந்த லாபம் அதிகம்

ஈழத்துத் தலைமகன்

காசு எண்பதென்றும்
வெள்ளவத்தையில் மாடி வீடென்றும்
டொயோட்டா காரென்றும்
விலை கொடுத்து வாங்கப்பட்டு
வீட்டிலேயே அடிமையாக இருக்கும்
ஈழத்துத் தலைமனுக்கு எங்ஙனம் முடியும்
தேசத்தின் விடுதலை பற்றிச் சிந்திக்க?
 

தப்புமா தமிழ்???

அது உண்மையாகவும் இருக்குமா?
அப்படி நடந்தாலும் நடந்து விடுமா?
இருக்காது! … அப்படி ஒருபோதும் இருக்காது!!
இல்லை… அது உண்மையாக இருந்துவிட்டால்?
நினைக்கும்போதே நெஞ்சுக்குள் ஏதோ செய்கிறது.

ஐம்பது நூறு வருடங்களில் அழியப்போகும் மொழிகளில்
எங்களின் உயிரான தமிழும் ஒன்றாம்
UN இன் சமீபத்திய அறிக்கையில் இருக்குதாம் அப்படி
கடவுளே.. ஒன்றில் அந்த அறிக்கை பொய்யாக இருக்க வேண்டும்
அல்லது அதில் இருப்பது பொய்யாக வேண்டும்
ஐந்தோடு ஆறாவதாக அழிந்து போவதற்கு
தமிழ் என்ன ஆண்டி மொழியா?
ஆங்கிலம் எழுத்துரு எடுக்கும் முன்னரே
இலக்கணம் வகுத்த அரச மொழியல்லவா?

அகில உலகமே போற்றும் திருக்குறள் என்ன
கவிநயமிக்க கம்பராமாயணம் என்ன
பக்திரசம் கொட்டும் திருமுறை, திவ்வியபிரபந்தம் என்ன
சங்ககால இலக்கியம், பாரதியின் படைப்புகளையும் கொண்ட சமீபத்திய இலக்கியம் என
எங்களின் தாய் மொழியின் சிறப்பு என்ன ஒன்றா… இரண்டா…

எனவே நாம் கொஞ்சி விளையாடிய எம் மொழி
இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் வாழவேண்டி
இந்து ஆலயங்களெங்கும் பிராத்தனைகள் செய்வோம்
அங்கு ’தேவ பாஷையாம்’ சமஸ்கிருதத்தில் பூஜைகள் நடாத்துவதன்மூலம்
இறைவனின் அனுக்கிரகத்தை உறுதி செய்வோம்

தாயினும் இனிய எமது தமிழ் மொழி தரணியில் தரம் தாழாமல் வாழ
கருத்தரங்குகள் ஆராய்ச்சி மன்றங்கள் என உலகெங்கும் ஏற்பாடு செய்வோம்
அவற்றை தனி ஆங்கிலத்திலேயே நடாத்துவதன் மூலம்
அவைகளின் தரம் தாழாது பார்த்துக்கொள்வோம்

எம்மொழி மீது எமது மக்களின் ஈடுபாட்டைக்கூட்ட
இருக்குமிடமெங்கும் இசைவிழாக்களுக்கு ஒழுங்கு செய்வோம்
அங்கெல்லாம் ’சுந்தரத்’ தெலுங்கினிலே பாட்டுக்கள் பாடி
அவ்விழாக்களின் சிறப்பை மேலும் மேம்படுத்துவோம்

முறிங்கா

அது ஒரு சின்ன நகரம். ‘கசானி’ இதன் பெயர். மொத்த சனத்தொகை 5000 தான் இருக்கும். மிகவும் ஒதுக்குப்புறம்பான இடமும் கூட. தலைநகரம் கபறோனியில் இருந்து 1000 கிமீ தூரம். ஆனால் பொட்சுவானாவை பொறுத்தவரை அது ஒரு முக்கியமான இடம். உலகப்புகள் பெற்ற ‘Chobe national park’ அங்குதான் உள்ளது. விக்றோறியா நீர்வீழ்ச்சியும் அங்கு இருந்து 70 கிமீ தூரத்தில் சிம்பாவே – சம்பியா எல்லையில் உள்ளது. எனவே உல்லாசப்பயணிகளைப் பொறுத்தவரை அகில உலகத்தின் கவனத்தையே பெற்ற ஒரு இடம். இந்த இடத்திற்கு இன்னும் ஒரு முகியமும் உள்ளது. உலகில் 4 நாடுகள் ஒரு இடத்தில் சந்திப்பது இங்கு மட்டுந்தான்(நான்காவது நாடு நமீபியா). (பில் கிலிண்டன் ஜனாதிபதியாக இருக்கும் போது 1998இல் இரண்டு நாட்கள் அரச உல்லாசப்பயணியாக அங்கு  வந்ததும், நான் அருகில் இருந்து அவரை பார்த்ததும் இன்னொரு விடயம்).

இங்கு நான் 1996-1998 இல் ஒரு Highway Project இல் Resident Engineerஆக வேலை செய்தேன். (அது Chobe national park க்கூடாக செல்கின்றது. அப்போது அங்கு நடந்த விடயங்களை எழுதுவதாகில் ஒரு சிறிய கட்டுரையே எழுதலாம்). வேலை நேரம் போக ஓய்வு நேரம் அதிகம். ஒரு இலங்கையர், மூன்று நான்கு இந்தியர்களைவிட எமக்கு தெரிந்தவர்கள் மிக குறைவு. பொழுது போக்குவதற்க்கு (சிங்கம், யானைகளை எத்தனை நாட்கள்தான் போய்ப் பார்ப்பது-யானைகளைப் போய்ப் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. தரிசனம் தர எமது வீட்டிற்கே அவை வந்து விடும்). சனி ஞாயிறு தினங்களில் நாமும் மற்றய இலங்கையரும் அருகில் எங்கெங்கு போகமுடியுமோ அங்கெல்லாம் போய் நேரத்தைப் போக்கடிப்போம்.

அப்போதுதான் எமது வீட்டில் இருந்து 70 கிமீ தூரத்தில் காட்டுக்கு நடுவே ஒரு அழகிய Expensive hotel (அதன் ஒரு நாள் வாடகை US $ 200.00.  இது பொட்சுவானாவின் தரத்திற்கு மிக அதிகம்) இருப்பதாக கேள்விப்பட்டோம். ஆனால் அங்கு மின்சார, தொலைபேசி வசதிகள் இல்லை (மின்சாரம் உள்ளது எனினும் அறைகளுக்கு விளக்கு வெளிச்சம் மட்டும்தான்). அதிகமாக அமெரிக்கா, ஜரோப்பாவில் இருந்து புதுமணத் தம்பதிகள் தேன்நிலவுக்காக அங்கு வருவார்கள். வளமைபோல உத்தியோகபூர்வ வாகனமாகிய ’பிக்கப்’ ஐ எடுத்துக்கொண்டு அங்கு போக தீர்மானித்தோம். தார் றோட், கிறவல் பாதை, மண் பாதை என மிகக் கஷ்டப்பட்டு போன எமக்கு மிகப்பெரிய ஆச்சரியம் அங்கு காத்திருந்தது. அழகிய அந்த hotelக்கு முன்பாக வரிசை வரிசையாக முருங்கை மரங்கள் பூத்துக் காய்த்துக் குலுங்கி நின்றன. பொட்சுவானாவில் அங்கொன்று இங்கொன்றாக சில முருங்கை மரங்கள் இருப்பினும் இந்த இடத்தில் நாம் அதை எதிர்பார்கவில்லை. இதைவிட பெரியதொரு அதிசயம் உள்ளே காத்திருக்கின்றது என்பதை அறியாமல் உள்ளே சென்ற நாம் அங்கிருந்த உரிமையாளரின் மனைவியிடம் (சிம்பாவே வெள்ளையர்) அந்த மரத்தின் பெயர் என்ன என வினவினோம். ‘முறிங்கா’ என பதிலளித்த அவர் எப்படித்தெரியும் என்ற எமது அடுத்த கேழ்விக்கு மேசைக்குக் கீழே இருந்த  encyclopediaவை எடுத்து முருங்கை மரத்தைப் பற்றி எமக்குத் தெரியாத பல விடயங்களை சொல்லத் தொடங்கிவிட்டார்.

(அன்றில் இருந்து எமது வீட்டில் முருங்கக்காய் கறிக்குக் குறைவேயில்லை என்பது வேறுவிடயம்)

Kuruparan Kanagasabai  kuruparank@hotmail.com