நீண்ட தூரம் கடலில் நீந்திய பின் ஓய்வுக்காக அமர்வது போல், பூவிழி கடும் போராட்டத்துக்குப் பின் வெற்றிகரமாகத் தன் படிப்பை முடித்தவள், ‘அப்பாடா…. எல்லா சிரமங்களும் இன்றோடு முடிந்துவிட்டன!’ என்று தனக்குள் கூறியவாறு பெருமூச்சு ஒன்றை வேகமாக விடுகிறாள்! பரந்து விரிந்த இவ்வுலகில்,தான் மட்டுமே எதையோ ஒன்றைப் பெரியதாகச் சாதித்து விட்டதாக எண்ணி அவள் பெருமிதம் கொள்கிறாள். அவளது சாதனைக்குப் பின்னால் பலரது உழைப்பும் உதவியும் பெருமளவில் அடங்கியுள்ளன என்ற பேருண்மையை அசை போட்டுப் பார்க்க ஒரு கணம் மறந்து விடுகிறாள்! கிள்ளான், பட்டணத்திலிருந்து நாட்டின் தலைநகர் கோலாலம்பூருக்குச் செல்லும் நெடுஞ்சாலை ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் மிட்லண்ஸ் தோட்டத்தில்தான் பூவிழியின் குடும்பம் வாழ்ந்து வந்தது.அத்தோட்டக் குழும மருத்துவமனையில்தான் பூவிழியைப் பெற்றெடுத்தார் தாயார் பொன்னம்மாள். தோட்டத் தமிழ்ப்பள்ளியில் ஆறாமாண்டு வரை பூவிழி கல்வி கற்ற பின் கிள்ளான் பட்டணத்தில் இடை நிலைப்பள்ளியில் கல்வியைத் தொடர்ந்தாள்.
அவளது தந்தை மாரி. ‘டக்கு மாரி’ என்றே தோட்ட மக்கள் அவரை அழைப்பார்கள். ‘இழுவை ஊர்தி’ ஓட்டுநராகப் பல ஆண்டுகள் பணி செய்து வருபவர்.முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அந்த வேலையைச் செய்து வருகிறார்.ஆங்கிலேய நிர்வாகி மில்லன் துரை முதல் தமிழரான துரைசாமி வரையில் மிகவும் கவனமுடன் வேலையைப் பார்த்துக் கொண்டு அதனைச் சாதுர்யமாகத் தக்கவைத்துக் கொண்டவர்.
கடும் உழைப்பாளி,அதே வேளை பொதுவாழ்விலும் முத்திரைப் பதித்தவர்.அரசியல் கட்சி ஒன்றின் கிளைக்குத் தலைவர் பொறுப்பேற்று தோட்டமக்களுக்குப் பல சேவைகளைச் செய்தவர். மஇகா தேசியத் தலைவராக இருந்த வேளை கூட்டுறவுச் சங்கத்திற்காகப் பங்கு சேர்க்கத் தோட்டத்திற்குத் துன் வீ.தி.சம்பந்தன் வருகை தந்த போது கணிசமான எண்ணிக்கையில் தோட்ட மக்கள் பங்கு வாங்குவதில் மாரி ஆற்றிய பணியைத் துன் அவர்கள் பெரிதும் பாராட்டினார்.
துன் அவர்களுக்குப் பின் தேசிய தலைவராக வந்த டான்ஸ்ரீ மாணிக்கவாசகம்,டத்தோஸ்ரீ.சாமிவேல் வரை எல்லாரிடமும் மாரி நல்ல தொடர்பு வைத்திருந்தார்.அவரது சேவையைப் பாராட்டிப் பேராசர் அவருக்குப் பிபிஎன் விருது வழங்கிச் சிறப்பித்தார்.எழுபதாம் ஆண்டுகளில் ஒரு தோட்டப்பாட்டாளிக்குத் தேசிய அளவில் சேவைக்காக விருது வழங்கப் படுவது அபூர்வமானது. முதல் முறையாக விருது பெற்ற மாரிக்கு தோட்ட மக்கள் அனைவரும் ஒன்றுகூடிப் பாராட்டு விழா நடத்திப் பெருமைப் படுத்தினர்!
தோட்டப்பாட்டாளிக் குழந்தைகள் அனைவரும் பல்கலைக் கழகம் வரைச் சென்று படித்துப் பட்டம் பெற வேண்டும் எனும் தனியாத ஆர்வம் கொண்டவர்.தன் மகள் பூவிழி பட்டம் பெறும் வகையில் பணத்தையும் ஒரு பொருட்டாக எண்ணாமல் பிரத்தியேக வகுப்புகளுக்குத் தவறாமல் அனுப்பிப் பயிலச் செய்தார்.
தன் பிள்ளைகளும் ஏழை சமுதாயத்திற்கு சேவைகள் ஆற்ற வேண்டும் என்று தன் ஐந்து பிளைகளிடம் அடிக்கடி கூறுவார்.படித்த பிள்ளைகள் பொது சேவைக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டதால் தன் பிள்ளைகள் கல்வியில் வெற்றியடைய வேண்டும் என்று நினைப்பவர்.தன் மூத்த மகள் பூவிழி கல்வியில் முதன்மையாக இருப்பது கண்டு தன் எண்ணம் நிச்சயம் ஈடேறும் என்று திடமாக நம்பினார்.
“பூவிழி….உங்க அப்பா,அம்மா நினைத்தது மாதிரி பட்டதாரியாக ஆகிட்ட வாழ்த்துகள்.பொருளாதாரத்தில் முதல் நிலைப்பட்டதாரியாக ஆகிவிட்டாய்.நீ பிறந்து வளர்ந்த தோட்டத்திற்குச் சென்று,ஏழை தோட்டப் பிள்ளைகளுக்கு முடிந்த உதவிகளைச் செய்து அவர்களும் உன்னைப் போல் பட்டதாரிகளாக உருவாக உதவப் போகிறாய் என்று சொல்லு?” கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரே அறையில் தங்கிய தோழி மட்டுமின்றி தன் சுகதுக்கங்களில் இது நாள் வரையில் பங்கு பெற்றுவந்த உயிர் தோழி உமையாள்தான் மிகுந்த ஆவலாய்க் கேட்கிறாள். வாய் ஓயாமல் எதையாவது பேசும் வழக்கமுடைய பூவிழி ஒன்றும் பேசாமல், கேட்டக் கேள்விக்கும் பதில் ஏதும் கூறாமல் இருப்பதைக் கண்டு,வியப்புடன் பூவிழியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறாள் உமையாள்! சில வினாடிகளுக்குப் பின் மீண்டும் \உமையாளே பேசுகிறாள்.
“பூவிழி….! நான் கேட்டக் கேள்விக்கு உடனே பதில் சொல்லாமல் இதுநாள் வரையில் நீ அமைதியாக இருந்து நான் பார்த்ததே இல்லையே! திடீரென்று உனக்கு என்ன ஆயிடுச்சு?” பூவிழியின் தோளைத் தட்டுகிறாள் உமையாள்.
முகத்தில் அமைதி தவழ்ந்திட பூவிழி தன் அன்புத் தோழியை ஒரு கணம் கூர்மையுடன் பார்க்கிறாள். “உமையாள்,நீ நினைக்கிறமாதிரி எனக்கு ஒன்னும் ஆயிடல,நான் நல்லாதான் இருக்கிறேன்!”
“ஏதும் ஆகலனு உன் வாய்தான் சொல்லுது,ஆனா உன் மனசு ஏதோ ஒன்றைச்சொல்ல நினைக்குது அதான் உன் முகம் இப்படி திடீர்னு வாடிப்போச்சு?” உமையாள் பூவிழியை விடுவதாக இல்லை.விடாப்பிடியாகக் கேள்வியைக் கேட்கிறாள்.
தோழியிடம் எதையும் மறைக்க முடியாது என்ற நிலை உருவாகிய போது பூவிழி மௌனத்தைக் கலைக்கிறாள். “படிப்பு முடிஞ்சக் கையோடு வேலையும் கிடைச்சிடுச்சு.ஒரு நிறுவனத்தின் உயர் அதிகாரியாகப் பதவி. நினைத்துக் கூடப்பார்க்காத அளவில் பெரிய அளவில் வருமானம்.இந்த வாய்ப்பு என்னைப் போன்ற மிகச் சாதாரணமானவர்களுக்கு எப்போதும் கிடைக்கப் போறதில்லை…! தாமதிக்காமல் வேலையில் சேர்ந்திடலாமுனு முடிவெடுத்துட்டேன்!” அழுத்தமுடன் பூவிழி தன் எண்ணத்தை வெளிப்படுத்துகிறாள்.
தன் தோழியின் அழுத்தமான பதிலைக் கேட்டு உமையாள் ஒரு வினாடி அதிர்ந்து போகிறாள்! நிலைமையைச் சுதாரித்துக் கொண்டுதோழியின் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க எண்ணுகிறாள்.தோழியின் எதிர்பாராத பதிலில் ஏமாற்றமுற்றவள் மீண்டும் பேச முற்படுகிறாள். “உண்மைதான் பூவிழி நீ சொல்லும் காரணத்தை மறுக்கல.உன்னைப் பெரியதாக எண்ணிக் கொண்டிருக்கும் உங்கப்பாவைக் கொஞ்சம் நினைத்துப் பார்த்தாயா?உங்கப்பாவின் எண்ணத்தை நீ நிறைவேற்ற வேண்டாமா? உன்னைப் போன்று கல்வியில் உயர்ந்தவர்கள் தோட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் கல்வியில் பின் தங்கியுள்ள ஏழைப்பிள்ளைகளுக்கு உதவுறதுதானே முறை? வந்த வழியை மறப்பது சரியா?” சற்று ஆத்திரமாக வினவுகிறாள்!
தோழியின் ஆத்திரம் நியாயமானது என்பதை உணர்ந்து கொண்ட பூவிழி தோழியின் மனம் காயப்படக்கூடாதே என்பதற்காக நிதானமுடன் பேசுகிறாள். “உமையாள் நான் சொல்வதைச் சற்று கோபப்படாமல் கேள்! உன் மன ஆதங்கத்தை நான் உணராமல் இல்லை என்றவள், என் ஒருத்தியால் மட்டும் இந்தச் சமுதாயத்தைக் கைதூக்கிவிட முடியும் என்று நான் நம்பல!” என்று நம்பிக்கை இழந்து பேசுகிறாள்!
அதர்ச்சியுற்ற உமையாள், “பூவிழி….! நீயா இப்படிப் பேசுற? வழி தெரியாமல் தவிக்கும் நம் சமுதாயத்திற்குப் படித்து மேல் நிலைக்கு உயர்ந்துவிட்ட நாமே கைகொடுத்துத் தூக்கிவிடாமல்,வழி தெரியாமல் தவித்து நிற்கும் நம் குழந்தைகள் எப்படியோ போகிறார்கள் என்று பொறுப்பில்லாமல் இருந்தால், பிறகு யார்தான் அவர்களுக்கு உதவி செய்யிறது? நம்ம சமுதாயம் எப்போதுதான் மற்ற சமுதாயத்திற்கு ஈடாக முன்னேறுவது?”தன்னை மறந்து உணர்ச்சிப் பொங்கப் பேசுகிறள் உமையாள்! அங்கு மவுனம் நிலவுகிறது.தோழிகள் இருவரும் சில நிமிடங்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஒருவர் முகத்தை ஒருவர் எந்தவொரு சளனமும் இல்லாமல் வெறுமையுடன் பார்த்துக் கொள்கின்றனர்.
பூவிழியும் அவள் தோழி உமையாளும் ஒரே துறையில்தான் கல்வியை மேற்கொண்டனர்.உமையாள் ஜோகூர்,ஸ்கூடாய்,ரினித்தோட்டத் தமிழ்ப்பள்ளியில் ஆரம்பக் கல்வியைத் தொடங்கியவள். இருவரும்தோட்டப்புறத்திலிருந்து வந்தவர்கள் என்பதால், ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டு படிப்பை வெற்றிகரமாக முடித்துக்கொண்டனர்.அவர்களுக்கிடையே கடந்த மூன்றாண்டுகளில் எந்தவொரு கருத்து வேறுபாடும் எழுந்ததில்லை.அவர்களிடையே நிலவிய மென்மையான அணுகுமுறைபோக்கே அவர்களிடையே நெருக்கத்தை ஏற்படுத்தியது.
பூவிழி எப்போதும் உமையாளின் கருத்துடன் ஒத்துப்போய்விடுவாள்! சில மாதங்களே தன்னைவிட மூத்தவள் என்பதற்காக மட்டுமல்ல,தேவை இல்லாமல் வரட்டுக் கௌரவத்திற்காக எதையும் வரிந்து கட்டிக் கொண்டுப் பேச விரும்பாததே காரணமாகும். எனினும் அவள் கருத்தில் எப்போதும் உறுதியுடையவள்.மாற்றுக் கருத்தையும் மென்மையாக வெளியிடும் அவளது பாங்கு மிகவும் அலாதியானது.
அன்று இரவு முழுவதும் பூவிழியால் தூங்க முடியவில்லை.உமையாள் இதுநாள் வரையில் தன்னிடம் அப்படிப் பேசியதில்லை! அவளது கூற்றில் காணப்படும் ஞாயம் மனதை வாட்டியெடுத்து விட்டது!
உமையாள் தனக்குள்ள சமூகக் கடப்பாடுகளை உணர்ந்து அதற்குச் செயல்வடிவம் கொடுக்கத் தயாராகிவிட்டாள்.அவள் செய்யப்போகும் நடவடிக்கையில் மிகவும் தெளிவாக இருந்தாள்.தான் வந்த பாதையை அவள் ஒருபோதும் மறக்க வில்லை.தன் சமுதாய வளர்ச்சியில் பங்கு பெற்று இயன்ற உதவிகளை ஆற்றுவதற்கு அவள் தயாராகிவிட்டாள்!
பல்கழகத்தில் படிக்கும் காலத்தில் நீண்ட விடுமுறைகள் போது தனக்கு ஆரம்பக் கல்வி புகட்டியப் பள்ளிக்குச் சென்று ‘முன்னாள் மாணவர் சங்கத்தின்’ மூலமாக மாணவர்கள் கல்வியில் மேம்பட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவாள்.மேலும் சங்க நடவடிக்கைகளில் தவறாமல் பங்கு பெற்று தன் பங்களிப்பை வழங்குவதில் அவள் ஒரு போதும் தவறியதில்லை!
பூவிழி குழம்பிப் போயிருந்தாள்! உமையாளின் எண்ணத்தில் பொது நலம் இமயமாக வியாபித்திருந்தது.பூவிழி அவளது நிலை ஓரளவு உயர்ந்த போது, சுயநலம் அவளையும் அறியாமல் முன்னெடுத்துச் செல்கின்றது.சூழ்நிலை சாதகமாகும் போது ஆழ்மனதில் குடி கொண்டிருக்கும் எண்ணக் குவியல்கள் வெளிப்பட்டுச் சுயரூபம் தாண்டவமாடும் அல்லவா? பூவிழியும் சராசரி மனிதர்களில் ஒருவளாக மாறிவிட்டாள் போலும்!
மறு வாரமே,பூவிழி கெடா மாநிலத்தின் அலோர்ஸ்டார் பட்டணத்திலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியில் சேர்ந்து விட்டாள்.பிரசித்திப் பெற்று விளங்கிக் கொண்டிருக்கும் அந்நிறுவனத்தின் , நிர்வாகிப்பொறுப்பை ஏற்றாள். நினைத்துக் கூடப்பார்த்திராத உயரிய வருமானம். தன் குடும்பத்தில் எவரும் இப்படியொரு பொருளாதார ஏற்றத்தைக் கண்டிருக்க வில்லை! அதனால்தான் என்னவோ பூவிழி மயங்கிவிட்டாளோ? தனக்குள்ள கடப்பாட்டையும் அவள் அடியோடு மறக்கத் துணிந்து விட்டாளோ? ஏழ்மையின் முன் எல்லாம் தவடுபொடியாகிவிட்டதோ? பொருள் இல்லாதவனுக்கு இவ்வுலகம் இல்லை என்பதை பல்கலைக்கழகம் அவளுக்குப் புகட்டிய பாடங்களில் இதுவும் ஒன்று என்பதை மறுப்பதற்கு அவளுக்குத் திராணியம் இல்லை போலும்?
பணியில் அமர்ந்த பிறகு பூவிழி ஓய்வின்றி தான் ஏற்றுக் கொண்ட பணிக்காக உழைக்கத் தொடங்கினாள்.வேலையில் சேர்ந்த புதிதில் உமையாளுடன் பல வேளைகளில் கைபேசி உரையாடல்களில் உருகிப் பேசி இருக்கிறாள் பூவிழி.தான் படித்தப்பள்ளிக்கு உதவும் பணிகள் பற்றிய குறிப்புகள் அதிகம் இடம் பெறாது.ஆனால்,தான் ஏற்றுக் கொண்ட நிர்வாகப் பொறுப்பு பற்றிய தகவல்களே உரையாடலில் அதிகம் இடம் பிடித்துக் கொள்ளும்.மேலும் அவள் பொருளாதாரத்தில் மேம்பட்டுள்ள தகவலையும் மறவாமல் குறிப்பிடுவாள்!
உமையாளுக்கு அவள் வந்த மாநிலத்திலேயே வேலை அமைந்திருந்தது.தான் பிறந்து வளர்ந்து கல்வி கற்ற தமிழ்ப்பள்ளி அருகிலேயே புகழ் பெற்ற தனியார் நிறுவனம் ஒன்றில் நிர்வாகத்துறையில் உயரிய வருமானத்தில் பணியாற்ற வாய்ப்புக் கிட்டியது.கல்விக் கண்ணைத் திறந்து வைத்த தன் ஆரம்பப்பள்ளிக்கு இயன்ற உதவிகளைத் தவறாமல் வழங்கி வந்தாள்.அவளது தலைமைத்துவம் பள்ளியின் ‘முன்னாள் மாணவர் சங்கத்திற்கு’ கிடைத்தது பெரும் பேறு என்று பள்ளி நிர்வாகத்திற்குத் தலையேற்றுள்ள தலைமையாசிரியை சீதாலெட்சுமி அவர்கள் அவ்வப்போது பள்ளியில் நடைபெறும் ஒன்று கூடும் நிகழ்வுகளில் கூறி மகிழ்வார்.
ஒவ்வொரு பிறந்தநாளின் போதும்,பூவிழி தவறாமல் தனக்கு வாழ்த்துக் கூற மறந்ததில்லை.சில நிமிடங்கள் மட்டும் பேசுவாள்.விரைவில் சந்தித்துப் பேசுவோம் என்று கூறி பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்துவிடுவாள்.வேலை மிகுதிக்குள் அவள் பேசுவது தெரிந்து கொண்ட பின் அவளது நேரத்தை உமையாள் அதிகமாக எடுத்துக் கொள்ள மாட்டாள்.
அவர்கள் வேலையில் சேர்ந்த ஐந்து ஆண்டுகளில் நெருங்கியத் தோழிகளின் திருமண நிகழ்வில் இருமுறை சந்தித்ததுப் பேசியதுதான். படிக்கும் காலத்தில்தான் இறுக்கமான சூழலில் வாழ்ந்தார்கள் என்றால் பணியில் சேர்ந்த பின்னராவது சற்று இலகுவான வாழ்வு அமையும் என்றால் இப்போது இளைப்பாறுவோம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விட்டது! எனினும்,பொறுப்பும் பொருளாதாரப் பலமும் மேலோங்கி நிற்பதால் மகிழ்ச்சிக்குப் பங்கமே இல்லை.தன்னிலை மறக்காமல் சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய கடமைகளைச் செய்ய தன்னைப் போன்று பூவிழியும் மறக்காமல் இருந்தது உமையாளுக்கு மகிச்சியைத் தந்தது!
அத்திப்பூத்தார்போல் பூவிழி அவள் பிறந்த தோட்டத்திற்குச் சென்று பள்ளியின் நடவடிக்கையில் கலந்து சிறப்பித்த நிகழ்வுகள் பற்றி தினசரிகளில் வெளிவரும் போதெல்லாம் மகிழ்ச்சி கொள்வாள்.தன்னைப் போன்று பூவிழியும் மறக்காமல் தன் பங்கினைத் தான் கற்ற தமிழ்ப்பள்ளிக்கு ஆற்றும் போது,கைபேசி மூலம் தோழிக்கு வாழ்த்துக் கூற தவறியதில்லை.
சுமார் என்பது ஆண்டு பழைமை வாழ்ந்த கட்டிடம் என்பதாலும் தாழ்வான நிலத்தில் பள்ளி அமைந்திருந்ததால் அடிக்கடி வெள்ளம் ஏற்பட்டு மாணவர்களின் கல்வி தடைபட்டதால் புதிய கட்டிடம் கட்டும் நிர்பந்தம் ஏற்பட்டது! பள்ளி நிர்வாகத்திற்கு உதவும் வகையில் பள்ளி வாரியமும் பெற்றோர் ஆசிரியர் சங்கமும் முழுமூச்சாகக் களத்தில் இறங்கிய வேளை வலுவுடன் இயங்கிக்கொண்டிருந்த முன்னாள் மாணவர் சங்கமும் தோள் கொடுக்க முன் வந்தது! இரவு பகல் பாராமல்,மூன்று அமைப்புகளும் ஒன்றிணைந்து செயல்பட்டன.
மாநிலத்திலேயே நவீனமான தமிழ்ப் பள்ளி ஒன்றைக் கட்ட பூவிழி தன் பங்கினை ஆற்றுவற்கு முன் வந்தாள்.மாநில அரசு கருணையுடன் வழங்கிய கணிசமான தொகையுடன்,கலை நிகழ்ச்சி வழியும் பொது மக்களிடமிருந்தும் நன்கொடைகள் திரட்டப்பட்டன.செயலில் இறங்கி வேலை செய்த போதுதான் நம்மில் நல்லுள்ளம் கொடை நெஞ்சர்கள் பலர் பெருகியுள்ளதைப் பூவிழி கண்கூடாகக் கண்டு வியந்து போனாள்!
தமிழ்ப்பள்ளிக்கூடத்திற்குத் தங்களின் பிள்ளைகளை அனுப்பாதப் பலர் இன்று கொடைநெஞ்சர்களாக மாறிப் போனது பூவிழிக்கு விந்தையாக இருந்தது! சீன சமூகத்தில் அமைச்சர்கள்கூட தங்களின் குழந்தைகளைத் தாய்மொழிப் பள்ளிகளுக்கு மகிழ்ச்சியுடன் அனுப்பி அவர்களின் மொழி,பண்பாட்டைக் காக்கும் காவலர்களாக இருக்கின்றனர்.ஆனால்,நம்மில் பலர் சிறிது வசதிபடைத்தவர்கள் கூட தமிழ்ப்பள்ளிகளைக் கேவலமாக எண்ணி மற்ற பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்த்து மகிழும்போது நிலையைப் பார்க்கும் போது தமிழ்மொழிக்காக அரசு வழங்கிவரும் வாய்ப்பை நம்மவர்களே அழித்துவிடுவார்களோ என்ற அச்சம் பூவிழியின் உள்ளத்தில் திகிலாகத் தோன்றி மறைகிறது! தமிழ்மொழி வாழ்ந்தால்தான் இந்நாட்டில் தமிழர்களின் புகழ் வரலாற்றில் நிலைத்து நிற்கும் என்ற உண்மையை நன்கு உணர்ந்து கொண்ட பூவிழி தனக்கு அறிவுக்கண்ணைத் திறந்து வைத்த தமிழ்ப்பள்ளிக்கு மகுடம் சூட்டிப்பார்க்க ஆசைப்படுகிறாள்!
தேசியப் பள்ளிகளுக்கு ஈடாகத் தமிழ்ப் பள்ளிகளின் கட்டிடங்கள் இல்லாமையே தமிழ்ப்பெற்றோர்கள் தமிழ்ப்பள்ளிகளுக்குத் தங்களின் பிள்ளைகளை அனுப்ப தயக்கம் காட்டுகின்றனர்.அத்தகைய மனப்போக்கை போக்கவே நவீன கட்டிடம் கட்டுவது அவசியம் என்பதை உணர்ந்த பூவிழி செயலில் தீவிரமாக இறங்கினாள்!
பல மாதங்கள் கடுமையான உழைப்புக்குப் பின் மூன்று இயக்கங்களும் இணைந்து ஏற்பாடுசெய்த மாபெரும் விருந்து நிகழ்வுக்குப் பல பிரமுகர்களும் பொது மக்களும் வருகையினால் மண்டபம் நிறைந்து காணப்படுகிறது. மாநில முதல்வர் வருகை தந்து நிகழ்வைத் தொடக்கி வைத்தரர்.உள்ளத்தைக் கவரும் வகையில் தமிழ்ப்பண்பாட்டுக் கலைநிகழ்ச்சியும் நடைபெற்று கொண்டிருக்கிறது.நிகழ்ச்சியின் இடையே பள்ளிக்கட்டிட வளர்ச்சிக்காக நன்கொடைகளை மாநிலமுதல்வரிடம் பிரமுகர்களும் பொதுமக்களும் வரிசை பிடித்து நின்று உற்சாகமுடன் வழங்கிக்கொண்டிருக்கின்றனர்.
அந்நிகழ்வில்,முக்கிய நபர் ஒருவர் வழங்கப் போகும் நிதியைப்பற்றி அறிவிப்பாளர் குணசீலன் தமிழ்,மலாய் மொழிகளில் அறிவிப்புச் செய்கிறார்.அவரது அறிவிப்பில் ஈர்க்கப்பட்ட பொதுமக்களின் பார்வை நன்கொடை வழங்க மேடை நோக்கிச் சென்று கொண்டிருந்தவரின் மீது ஒருசேர விழுகிறது! மிடுக்குடன் நடந்து சென்று தன் சொந்த நன்கொடை ஐம்பதாயிரம் ரிங்கிட்டுக்கான காசோலையை மாநில முதல்வரிடம் கொடுத்துவிட்டுப் புன்னகை மலர்களை உதிர்த்தவாறு மேடையை விட்டு இறங்கி வருகிறாள் பூவிழி! அப்போது, கூட்டத்தினரின் கையொலி மண்டபத்தை அதிர வைத்துக் கொண்டிருந்தது!