உலகத்தமிழ் இலக்கியம்: மலேசிய நாட்டில் தமிழ் இலக்கிய வளர்ச்சியும் எதிர்காலமும்!

 முன்னுரை

வே.ம.அருச்சுனன் -  மலேசியா மலேசியத் தமிழ் இலக்கியம் ஏறக்குறைய 126ஆண்டுகளுக்கும் மேலான   பழமை வாய்ந்ததாகும். மலேசியத் தமிழ் இலக்கியத்தின் செவிலித்தாய்களாக  விளங்கியவை பத்திரிக்கைகளாகும். மலாயாவில் தோன்றிய முதல்  பத்திரிக்கை யாகக் கருதப்படுவது சி.கு.மகுதும் சாயபு அவர்களால் 1875-இல் வெளியிடப் பட்ட “சிங்கை வர்த்தமானி” என்னும் இதழே.( மா.இராமையா,1996) அதனை- யடுத்து மலேசியாவில், பினாங்கில் 1876 இல் “ தங்கை நேசன்” என்னும் பத்திரிக்கை வெளிவந்துள்ளது . “உலக நேசன்”,  “சிங்கை நேசன்”,  “இந்து நேசன்”  ஆகிய பத்திரிக்கைகள் 1887-இல் வெளிவந்துள்ளன.(இரா.தண்டாயுதம்,1986). சிங்கப்பூரில் 1887-இல் சி.ந. சதாசிவப் பண்டிதரின் “வண்ணையந்தாதி”என்ற நூல் தொடக்கமாக அமைந்தது. (ஏ.ஆர்.எ.சிவகுமாரன்: “சிங்கப்பூர் மரபுக்கவிதைகள்) மலேசியாவின் முதல் தமிழ் இலக்கியப் படைப்பாகக் கருதப்படுவது  நாகப்பட்டினம் மரு.வெங்கடாசலம் பிள்ளை அவர்களால் இயற்றப் பெற்ற “ ஆறு முகப் புதிகம்” என்ற கவிதை நூலாகும்.( இராஜம் இராஜேந்திரன்,1988) மலேசியத் தமிழ்ப் படைப்பிலக்கிய வகைகளுள் கவிதை இலக்கியமே முதலில் தோன்றியது. அதற்கடுத்த நிலையில் நாவலைக் குறிப்பிடலாம். மலேசியாவின் முதல் நாவல் க.வெங்கடரத்தினம் அவர்களால் 1917-இல் எழுதப்பட்ட “கருணாசாகரன் அல்லது காதலின் மாட்சி.( வே.சபாபதி,2004).முதல்மலேசியத் தமிழ்ச் சிறுகதை வே.சின்னையா 1930 இல் வெளியிடப்பட்ட “ நவரச கதா மஞ்சரி” எனும் தொகுப்பில் அடங்கியுள்ள ஐந்து சிறுகதைகளாகும்.( ந.பாஸ்கரன்,1995).   

மலேசியாவில் வெளிவந்த ஆரம்ப கால எழுத்துக்கள் தமிழ்நாடு மற்றும் இலங்கையிலிருந்து தருவிக்கப்பட்டவை.அவை மலேசியாவின் சூழலை மையமாகக் கொண்டு எழுதப்படவில்லை.மேலும் எழுதிய எழுத்தாளர்கள் தமிழ்நாடு மற்றும் இலங்கையச் சேர்ந்தவர்களாவர்.( முரசு நெடுமாறன்& கிருஷ்ணன் மணியம்,2005). உண்மையான மலேசியத் தமிழ் இலக்கியம் 1946-ஆம் ஆண்டுக்குப் பின்னரே தோன்றியது என்ற கருத்தை மா.இராமையா(1978) முன் வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.     
      
இந்தத் தொடக்கங்களிலிருந்து இலக்கிய வரலாறு எழுச்சியும் தளர்ச்சியும் கண்டு தொடர்ந்து வளர்ந்திருக்கிறது. அச்சு வசதியும் ஊடக வளச்சியும்,அவற்றைப் பெறவும் பெருக்கவும் நிதி வசதியும் உள்ள இந்த நவீன காலகட்டத்தில் வாழும் நாம்,இவையெல்லாம் மிக அரிதாக இருந்த ஒரு மங்கிய தொடக்க காலத்தில் உண்மையான தமிழ்மொழி பண்பாட்டு அர்ப்பணிப்பு உணர்வுடன், இந்த இலக்கிய வளர்ச்சிக்கு வித்திட்ட வித்தகர்களான நம் முன்னோடிகளை மானசீகமாகப் போற்றி வணங்குதல் வேண்டும்

2. மலேசியத் தமிழ் இலக்கியத்தை வளர்ப்பதில் கல்வி சார்ந்த மையங்களின் பங்களிப்பு

பொருளீட்டுவதற்கும் நாட்டை மேம்படுத்தவும் மலாயாவுக்கு வந்த உடல் உழைப்புத் தொழிலாளார்களான தமிழர்கள் தங்களின் தாய்மொழியை மறக்காமல் இருந்ததோடு அம் மொழியை வளர்ப்பதிலும் கவனம் செலுத்தினர். ஆங்கில அரசு 1912-இல் கொண்டுவந்த தொழிலாளர் சட்டம் (Labour Ordinance) தோட்டங்களில் சிறு சிறு தமிழ்ப்பள்ளிகள் உருவாக வழி வகுத்தன. ஏழு வயதிற்கும் பதினான்கு வயதிற்கும் இடைப்பட்ட பத்து பிள்ளைகள் இருப்பார்களேயானால் அவர்களுக்குத் தோட்ட நிருவாகம் கட்டாயமாகக் கல்வி வழங்க வேண்டும் என்பதை இச்சட்டம் வலியுறுத்தியது. இந்தச்சட்டம் அமுலுக்கு வந்த பதினாறு ஆண்டுகளுக்குள்(1938) இந்நாட்டில் 535 தமிழ்ப்பள்ளிகள் இருந்ததோடு 28,098 மாணவர்கள் பயின்றனர்.(சோ.சுப்பிரமணி,2005)அன்று முதல் இந்நாட்டிலே பிறந்து வளர்ந்த தமிழர்களின் பிள்ளைகளுக்குத் தமிழ் கற்பிக்கப்பட்டதால் இந்நாட்டில் இன்றும் தமிழும் தமிழ் இலக்கியமும் தொடர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கின்றன; வளர்கின்றன என அழுத்தமாகக் கூறலாம். நாடு சுதந்திரம் அடைந்த நேரத்தில் (1957-இல்) 888 தமிழ்ப்பள்ளிகள் இருந்தன.அந்த எண்ணிக்கை தற்போது (2011-இல்) 523 ஆக குறைந்துள்ளதாக சமூகவியூக அறவாரியம் அறிவித்துள்ளது.
(Social Strategic Foundation,2003).
      
இராசக் கல்வி அறிக்கை(Razak Repot,1956) தொடக்கத் தமிழ்ப் பள்ளி- களில் ஆறு ஆண்டுகளுக்குத் தாய்மொழி வழி கற்றல் கற்பித்தலுக்கு வழிவகுத்தது. இரஹ்மான் தாலிப் அறிக்கையின் (1960) வழி இடைநிலைப்பள்ளிகளில் பயிலும் தமிழ் மாணவர்களும் தங்கள் தாய்மொழியைக் கற்க வழி பிறந்தது. பெற்றோர் விருப்பத்தின் பேரில்,குறைந்தது பதினைந்து மாணவர்கள் இருப்பின்,தாய்மொழிக் கல்வி ( Pupils Own Language) வழங்கப்படுவதற்கு இக்கல்விச் சட்டம் வகை செய்கிறது .
      
மூன்றாம் படிவதில் நடத்தப்படும் கீழ்நிலை மதிப்பீட்டுத் தேர்விலும் (Lower Secondary Evaluation) ஐந்தாம் படிவத்தில் நடத்தப்படும் மலேசியக் கல்விச் சான்றிதழ் (Malaysian Certificate of Education) தேர்விலும் தமிழ்மொழி ஒரு பாடமாக வைக்கப்பட்டுள்ளது இத்தேர்வில் தமிழ் இலக்கியத்தைத் தனியொரு விருப்பப் பாடமாக எடுத்துத் தேர்வெழுத விரும்பும் மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது (சுப்பிரமணி,2005). மேலே குறிப்பிடப்படுள்ள இம்மூன்று தேர்வுகளையும் மலேசிய த் தேர்வு வாரியம் ( Malaysian Examination Syndicate) நடத்துகிறது . பல்கலைக்கழக நுழைவுத்தேர்வாக விளங்கும் மலேசிய உயர்கல்விச் சான்றிதழ்த் தேர்விலும் ( Malaysian Higher School Certificate) தமிழ்மொழியும் தமிழ் இலக்கியமும் ஒரு பாடமாக வைக்கப் பட்டுள்ளது. இத்தேர்வினை மலேசியத் தேர்வுப் பேரவை ( Malaysian Examination Council) நடத்துகிறது.

3. மலேசிய தேர்வு வாரியத்தின் அரிய பணியும் ‘ இலக்கியகம் ‘ தோற்றமும்

மலேசியத் தேர்வு வாரியம் ( Malaysiyan Examination Syndicate) தொடக்கப்பள்ளி முதல் இடைநிலைப்பள்ளி வரையிலான எல்லா அரசாங்கத் தேர்வுகளையும் நடத்துகிறது . இதில் தமிழ்மொழியும் அடங்கும். தேர்வு வாரி- யத்தில் பணியாற்றும் தமிழ் அதிகாரிகள் தொடக்கப் பள்ளிகள் நடைபெறும் ஆறாம் ஆண்டு மதிப்பீட்டுத் தேர்வுக்கான ( Ujian Penilaiyan Sekolah Rendah) தமிழ்த்தாளில் சிறுகதை,நாவல் முதலிய நவீன இலக்கியப் பனுவல்களைக் கருத் துணர்க் கேள்விகளுக்குப் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும். இது கட்டாயமான கேள்வியாகவும் விளங்குவதைக் காண முடிகிறது. அதுமட்டுமின்றி கட்டுரைக் கேள்வியாக சிறுகதை எழுதப்பனிக்கும் கேள்விகள் வழ்ங்கப்படுவதையும் காண முடிகிறது. மூன்றாம் படிவத்தில் நடத்தப்படும்கீழ்நிலை மதிப்பீட்டுத் தேர்வுக்கான (Lower Secondary Evaluvation) தமிழ்த் தாள்களிலும் நவீன இலக்கியப் பனுவல்கள் கருத்துணர்க் கேள்விகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. அதுமட்டுமன்றி ஒரு கதையின் தொடக்கத்தையோ முடிவையோ வழங்கி கதையெழுதப் பணிக்கும் கேள்விகளும் தேர்வுக்கு வழங்கப்பட்டுள்ளதைக் காணலாம். ஐந்தாம் படிவத்தில் நடத்தப்படும் மலேசியக் கல்விச் சான்றிதழ் ( Malaysian Certificate of Education) தேர்வுக்கான தமிழ்த் தாள்களில் மாணவர்களின் உள்ள உணர்வை வெளிப்படுத்தக் கோரும் கருத்துணர்க் கேள்விகள் (Affective Questions) பயன்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய அணுகுமுறைகள் யாவும் இள வய- திலேயே மாணவர்களின் மனதில் இலக்கியச் சிந்தனைகளை விதைக்கும் பாராட்டுக்குரிய செயல்களாக் விளங்குகின்றன.            
     
மலேசியத் தேர்வு  வாரிய அதிகாரி திரு. ப.மூர்த்தி அவர்கள் இடைநிலைப் பள்ளி ஆசிரியர்களோடு இணைந்து பெரும் அதிரடி முயர்சிகளை மேற்கொண்டு இலக்கியம் எடுக்கும் மாணவர்களுக்கு இலவசமாக வழிகாட்டி நூல்களை வழங்கியதுடன் இடைநிலைப்பள்ளி இலக்கிய ஆசிரியர்களுக்கு பாடத்திட்டம்,பாடத்திட்ட விளக்கவுரை, வழிகாட்டி நூல்கள்,பயிற்சிகள்(modules) முதலியவற்றைத் தயாரித்து வழங்கினார். தேர்வுக்கான நூல்களான“பொன் விலங்கு” நாவல், காவிய நாயகி” நாடகம் ஆகிய நூல்களை முன்பணம் கட்டி தமிழகத்திலிருந்து 15,000 நூல்களைத் தருவிக்க  உமா பதிப்பகத்தார் பெரிதும் உதவியதுடன், “கவிதைப்பூங்கொத்து” எனும் தொகுப்பு நூலையும் இங்கேயே அச்சிட்டு வழங்கினர். அதுமட்டுமின்றி இலக்கியக் கலஞ்சியம் எனும் வழிகாட்டி நூலையும் வெளியிட்டு உதவினர். பொருள்ஈட்டுவதைக் கிறிக்கோளாகக் கொள்ளாமல், ஈக உணர்வோடு இந்நாட்டில் இலக்கியக் கல்வி சிறக்க.அந்நூல்களை அடக்கச் செலவுக்கும் குறைவாக வழங்கி அளப்பரிய சேவையை வழங்கியுள்ள உமா பதிப்பகத்தாரின் தொண்டு வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இரவல் நூல் திட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னர் 2005-ஆண்டில் தேர்வெழுதும் மாணவர்களின் எண்ணிக்கை 4000 ஆக உயர்வு கண்டது.
     
இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் இலக்கியத்தை மேலும் வளர்க்க மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர்க் கழகம் (இலக்கியகம்) 22.4.2008 இல்அமைக்கப்பட்டுப் பதிவுப்பெற்றுள்ளது. இக்கழகத்தில் இடைநிலைப் பள்ளியில் இலக்கியம் கற்பிக்கும் ஆசிரியர்கள் உறுப்பியம் பெற்றுள்ளனர். இதன்வழி நமது எதிர்கால சந்ததியினர் இலக்கியப் பயிர் வளர்க்க அரசு வழி திறந்து விட்டிருக்- கிறது.மேலும், மலேசிய எழுத்தாளர் சங்கம் பிற இலக்கிய அமைப்புகளின் தொடர் முயற்சிகளின் பயனாக எதிர்வரும் 2012-ஆம் தொடக்கம் மலேசிய எழுத்தாளர், பாவலர் ஐ.இளவழகு அவர்கள் எழுதிய “இலட்சிய பயணம்” எனும் நாவல் எஸ்.பி.எம். தேர்வுக்காக முதல் முதலாகத் தேர்வு செய்யப் பட்டுள்ள செய்தி மலேசிய எழுத்தாளர்களின் வயிற்றில் பாலை வார்த்த ஒரு செய்தியாகும். எதிர்காலத்தில் தொடர்ந்து மலேசிய எழுத்தாளர்களின் படைப்புகள் இடம் பெறும் எனும் திடமான நம்பிக்கை எழுத்தாளர்களின் உள்ளத்தில் ஏற்படுத்தி விட்டது எனலாம். இந்நாட்டின் இலக்கியப் பயிர் மேலும் வளர்வதற்கு அமைந்த மற்றுமொரு சிறப்பான வழியாகும். தேர்வுகளில் இலக்கியம் எடுக்கும் எஸ்.பி.எம் மற்றும் எஸ்.டி.பி.எம். மாணவர்களின் எண்ணிக்கை பெருக வேண்டும்.           

4. மலாயாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறையின் பங்களிப்பு

மலாயாப் பல்கலைக்கழ்க இந்திய ஆய்வியல் துறை தொடங்கப்பட்ட 1957- ஆண்டு முதல் மலேசியாவில் தமிழ்மொழி,தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ்ப் பண்பாடு வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றி வருகிறது. இத்துறையின் முதலாவது தலைவராக விளங்கிய பேராசிரியர் முனைவர் சேவியர் தனிநாயகம்அவர்களைத் தலைவராகவும் பேராசிரியர் முனைவர் ச.சிங்காரவேலு அவர்களைச் செயலாளர்- களாகவும் கொண்டு 1996-ஆம் ஆண்டில் உலகத் தமிழ் ஆரய்ச்சி நிறுவனத்தோடு (International Association for Tamil Reserch) இணைந்து முதலாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினை இத்துறை நடத்தி வரலாறு படைத்துள்ளது ( மலேசிய உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்,1999). அது மட்டுமின்றி மலேசிய இந்தியர் காங்கிரசுடன் இணைந்து ஆறாவது உலகத் தமிழ் ஆரய்ச்சி மாநாட்டினையும் இந்திய ஆய்வியல் துறை வெற்றிகரமாக நடத்தியது. இவற்றோடு,1978-ஆம் ஆண்டில் மலேசியத் தமிழ்ச் சிறுகதைக் கருத்தரங்- கினையும்  1988-ஆம் ஆண்டில் தமிழ்க் கவிதைக் கருத்தரங்கினையும் 1996-ஆம் ஆண்டில் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து மலேசிய புதுக்- கவிதைக் கருத்தரங்கினையும் நடத்தியுள்ளது. பொது அமைப்புகளுடன்- இணைந்து வேறு சில மாநாடுகளையும் நடத்தியுள்ளது. அவற்றுள் குறிப்பிடத் தக்கவையாக விளங்குபவை 2005=ஆம் ஆண்டில் நடைபெற்ற முதலாவது திருக்குறள் மாநாடு மற்றும் 2007-ஆம் ஆண்டில் நடைபெற்ற முதலாவது உலகச் சித்தர் மாநாடு ஆகியவையாகும். மேலும் மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை அண்டு தோறும் ஆய்விதழ் ஒன்றையும் வெளியிட்டு வருவது குறிப்பிடத் தக்கதாகும். தமிழ்மொழி,இலக்கியம்,பண்பாடு,சமுதாயவியல்,  வாழ்வியல், சமயம் போன்ற துறைகளைச் சார்ந்த தரமான கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன. இத்துறையின் செயல்படுகள் இந்நாட்டின் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு அடித்தலம் அமைக்கிறது என்றால்  அது மிகையாகாது.      

5.மலாயாப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் செயல்கள்

மலாயாப் பல்கலைக் கழகத்தின்இலக்கியப் பணியை நினைவுகூறத்தக்கதாகும். மலேசிய இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் வகையில் மலாயாப் பல்கலை மாணவர்களால் 1986-ஆம் ஆண்டு தொடக்கம் கடந்த இருபத்து ஐந்து ஆண்டுகளாக ஆண்டு தோறும் தேசிய அளவிலான சிறுகதைப் போட்டியை நடத்தி இன்று முதற்பரிசு இரண்டாயிரம் ரிங்கிட், இரண்டாம் பரிசு,  ஆயிரத்து ஐநூறு ரிங்கிட், மூன்றாம் பரிசு ஆயிரம் ரிங்கிட் மற்றும் ஒன்பது ஆறுதல் பரிசுகள் தலா இருநூறு ரிங்கிட் வழங்கப் படுகின்றன. பழைய புதிய எழுத்தாளர்கள் ஆர்வமுடன் எழுத உத்வேகத்தைக் கொடுக்கிறது. மாணவர்களுக்கும் தனியாகப் பரிசுகள் வழங்கி புதிய எழுத்தாளர்களை உருவாக்கின்றது. தொடர்ந்து இருபது ஆண்டுகளாக இப்போட்டி நடத்தப்படுவதுடன் வெற்றி பெற்ற சிறுகதைகளைத் தொகுத்து சிறப்புடன் தொய்வின்றி வெளியீடு செய்வது தமிழ் இலக்கிய வரலாற்றில் பெரும் சாதனையாகும். இப்பணியினை மேற்கொண்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களும் அவர்களுக்கு வழிகாட்டிகளாகத் திகழும் பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் பாராட்டுக்குரியவர்களாவர்.

6. மலேசியத் தேசிய பல்கலைக்கழக இந்து பிரதிநிதித்துவ சபையின் சாதனைகள்

மலேசிய தமிழ் இலக்கியத்திற்கு தன்னால் இயன்ற பணிகளை மலேசியத் தேசிய பல்கலைக்கழக இந்து பிரதிநிதித்துவ சபையின் மாணவர்கள் 1998-ஆம் ஆண்டு தொடங்கி பதின்மூன்று ஆண்டுகளாக “இலக்கியப் பயணம்” எனும் அரிய பணியை மிகவும் நேர்த்தியுடன் செய்து வருகின்றனர். ஆண்டு தோறும் சிறுகதை மற்றும் புதுக்கவிதைப் போட்டிகளை நடத்தி வெற்றி பெற்ற முதல் சிறுகதைக்கு ஆயிரத்து ஐந்நூறு ரிங்கிட்டும் இரண்டாம் பரிசாக எழுநூறு ரிங்கிட்டும் மூன்றாம் பரிசு ஐந்நூறு ரிங்கிட்டும் வழங்கப்படுகிறது. புதுக்கவிதைக்கு  முதல் பரிசு ஆயிரம் ரிங்கிட்டும் இரண்டாம் பரிசாக ஐந்நூறு ரிங்கிட்டும் வழங்கிச் சிறப்பிக்கின்றர்.இந்த மாணவர்களின் தொடர் நடவடிக்கைகள் இந்நாட்டு இலக்கிய வளர்ச்சிக்கு பெரும் நம்பிக்கையை ஊட்டுகிறது.    
          
7. பொது அமைப்புகளின் இலக்கிய பணிகள்

1946-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்நாட்டு தமிழ்ப் புத்திலக்கியத் துறையில் இடம்பெற்ற மிக முக்கியமான நிகழ்வு அக்காலத்து முன்னோடி எழுத்தாளர் களாகவும் விமசர்களாகவும் இருந்த சுப. நாராயணனும் பைரோஜி நாராயணனும் “தமிழ் நேசன்” நாளேட்டில் 1950-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி 1951-ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் வரையில் “கதை வகுப்புகள் நடை பெற்றுள்ளன. இக்கதை வகுப்பு மூலம் கதை எழுதுவோர் மட்டுமின்றி கவிதை, உரை நடை ,நாடகம் ஆகியனஎழுதுவோர்ருக்கும் தக்கவழிகாட்டியாக அமைந்தது.இந்த வகுப்பின் மூலமாக பல சிறந்த எழுத்தாளர்கள் உருவானார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் அ.இராமநாதன்(சுங்கை சிப்புட்); பி.ஏ.கிருஷ்ணதாசன் (தைப்பிங்); சி.மாரியப்பன்(காஜாங்):பெ.மு.இளம் வழுதி (குவாலசிலாங்கூர்); கா.பெருமாள் (ரிங்லட்); சி.வடிவேல்(லாபு); சி.வேலு- சாமி(ரந்தாவ்):எஸ்.எஸ்.சர்மா(சிங்கப்பூர்);மா.இராமையா (மூவார்);  கு.நா.மீனாட்சி (குவால சிலாங்கூர்) போன்றவர்களைக் குறிப்பிடலாம்.
     
மலேசியத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் சிங்கையிலிருந்து 1935-ஆம் ஆண்டுதொடங்கி  தமிழ்வேள் கோ.சாரங்கபாணி அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த “தமிழ்முரசு” ஆற்றிய அரும் பணிகள் குறிப்பிடத் தக்க தாகும் (மா.இராமையா,1996).மாணவர் மணிமன்றத்தின் வழியாகப் பல இளம் எழுத்தாளர்களை பெருமை இவரைச்சேரும். தமிழர்களிடையே இனமான உணர்வையும் மொழிப்பற்றையும் ஏற்படுத்திய “தமிழர்த் திருநாள்” கொண் டாட்டத்திற்கும் மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை அமைவதற்கும் வழிவகுத்தார். மாணவர் மணிமன்றத்தின் விரிவாக்கமே 1956-ஆண்டில்   தோற்றம் பெற்றதே தமிழ் இளைஞர் மணி மன்றமாகும். இம்மன்றம் மலேசியத்  தமிழ் இலக்கியப் பணிகளுக்குப் பெரும் பங்காற்றியுள்ளது. பல்வேறு கவியரங்கங்களையும், சிறுகதை,கவிதை,கட்டுரைப் போட்டிகளையும் பட்டி மன்றங் களையும், இலக்கியப் பயிலரங்குகளையும் நடத்தி மலேசியத் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்துள்ளது.       
     
பத்து பகாட்டிலிலிருந்து செயல்பட்ட கவிதா மணடலம் கவிதை வளர்ச்சியில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க பணியினை ஆற்றிய அமைப்புகளாகச் சிலவற்றைக் குறிப்பிடலாம்.அவற்றுள் 1943-ஆம் ஆண்டில் பத்து பாகாட்டில் தோற்றுவிக்கப்பட்ட “கவிதா மண்டலம்.” முரசு.நெடுமாறன்(2005) இந்த அமைப்பே இந்நாட்டில் தமிழ் இலக்கிய வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு  தொடங்கப்பட்ட முதல் அமைப்பு என குறிப்பிடுகிறார். இந்த அமைப்பு கவிதைகள்மட்டுமன்றி கதை,கட்டுரை,நாடகம் இலக்கிய வடிவங்களின் வளர்ச்சிக்கும் இட மளித்துள்ளது.(முரசு நெடுமாறன்,2005)

8.சுவாமி இராமதாசரின் செந்தமிழ்க் கலா நிலையம்         

பினாங்கு மாநிலத்தில் 1939-ஆண்டு முதல்  செந்தமிழ்ப்பாடசாலையத் தொடங்கி, இலக்கண இலக்கிய வகுப்புகளைப் பெரும்புலவர் சுவாமி இராமதாசர் நடத்தி வந்தார். கலா நிலையத்தை தொடங்கி, இலக்கண இலக்கிய வகுப்பு களைப் பெரும்புலவர் சுவாமி
இராமதாசர் நடத்தி வந்துள்ளார். 1943-ஆம் ஆண்டில் இளந்தமிழ்ப்பாடசாலை என்றும் கலா நிலையமென்றும் இரண்டு பிரிவுகளாக நடத்தியுள்ளார். செந்தமிழ்க் கலா நிலையத்தில் நளவெண்பா, இனி யவை நாற்பது, திணைமொழி ஐம்பது, நன்னூல் முதலிய   நூல்களை  மாணவர்களுக்குக் கற்பித்துள்ளார்.(முரசு நெடுமாறன்,2005). மலேசியாவில் தமிழ் எழுத் துத் துறை வளர்ச்சிக்கு குறிப்பாக கவிதைத்துறை வளர்ச்சிக்குச் செந்தமிழ் கலா நிலையம் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்துள்ளது. மரவுவழி நின்று புலமை மிக்கவர்களை உருவாக்கியதில், செந்தமிழ் கலாநிலையத்திற்கு இணையாக வேறு எந்த இயக்கமும் செயல்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.(முரசு நெடுமாறன்,2005: 159)

9.கிள்ளான் மாணவர் பண்பாட்டு இயக்கம்                          

கவிஞர் முரசு நெடுமாறன் அவர்கள் 1978-ஆன் ஆண்டு கிள்ளானில் தோற்றுவிக்கப்பட்ட  “மாணவர் பண்பாட்டுஇயக்கம்” தொடர்ந்து பதினெட்டு ஆண்டுகள் கிள்ளான் வட்டாரத்திலுள்ள 35 இடைநிலைப் பள்ளி மாணவர் களிடையே  தேர்வு வழிக்காட்டிக் கருத்தரங்குகளை நடத்தியதுடன் கலை,இலக்கியப் பண்பாட்டு போட்டிகளை நடத்தினர்.இதன் வழி மாணவர்கள் சிறந்தமொழி,இலக்கிய அறிவினைப் பெற்ரு விளங்கியதோடு பண்பாட்டிலும் நல்லொழுக் கத்திலும் சீலர்களாகத் திகழ்ந்தனர்.

10.கவிதைக் களமும் தமிழ்ச் சங்கமும்                                                                           

கோலாலம்பூரில் 1989-ஆம் ஆண்டு கவிஞர்களான பாதாசன் மற்றும் காரைக்கிழார்,வீரமான்,மைதி சுல்தான்,சமூகக் கலைமணி சா.ஆ.அன்பானந்தன் ஆகியோரின் தொலை நோக்குப் பார்வையில் உதயமானது.மாதம் ஒருமுறை கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் இக்களம் கூடும். படைத்தவை,சுவைத்தவைஅங்கத்தில் கவிஞர்களாலும் கவிதைப்பிரியர்களாலும் சுவைத்த கவிதைகள்படைக்கப்பட்டு அவற்றைப் பற்றிய குறை நிறைகள்அலசப்பட்டன. இந்நிகழ்வில்திடீர்கவிதைப் போட்டியும் நடத்தப்பட்டது. தேர்வு பெறும் கவிதைக்குப் பரிசும் வழங்கப்பட்டது.தேர்வு பெற்ற கவிதைகள் தமிழ் ஓசையில் பிரசுரிக்கப்பட்டன.மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கவிதைப் போட்டி நடத்தினர். முதல் கட்டமாக “கோம்பாக் ஆறு” எனும் தலைப்பில் குறுங்காவியப் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் கவிஞர் கரு.வேலுசாமியும் முதல் பரிசையும் கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி இரண்டாம் பரிசையும் பெற்றனர். இரண்டாவது நடத்தப்பட்டபோட்டிக்கான பரிசுகளை டான்ஸ்ரீ உபைதுல்லா அவர்கள் வழங்கினார்.1984-ஆம் ஆண்டில் கவிதைக் களத்தின் செயலாளராக இருந்த கவிஞர் பாதாசன் விபத்துக்குள்ளானதும்.1994-ஆம் ஆண்டில் தமிழ் ஓசை நாளிதழ் நிறுத்தப் பட்டதும் கவிதைக்களம் நிறுத்தப்பட்டது. எனினும் கவிதைக்களத்தின் தொடர்பணிகளுள் ஒன்றாக விளங்கியதுதான் 2000-ஜூலை திங்கள் 1,2, ஆம் நாள் களில் நடைபெற்ற மலேசியத் தமிழ்க்கவிதை மாநாடு. மொழியை ஆரோக்கிய வழியில் வளர்க்க பதிவுபெற்ற ஓர் அமைப்பு தேவைக்கருதி பாதாசன்,காரைக்கிழார், வீரமான்,மைதி சுல்தான் ஆகியோர் 2001-ஆம் ஆண்டில் முச்சங்கம் எனும் அமைப்பை உருவாக்கினர். தமிழ் உணர்வை மீண்டும் தமிழர்களிடையேஏற்படுத்தும் வகையில் தலைநகரில் தைமாதத்தில்“தமிழர்த்திருநாள்” நிகழ்ச்சியை மிகச்சிறப்புடன் நடத்திவருகிறது. இவ்வமைப்பு 2002-ஆம் ஆண்டு முதல்“தமிழ்ச்சங்கம்”எனப்பெயர் மாற்றம் பெற்று சிறப்புடன் செயல்பட்டு வருகிறது .

11.மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் 1962-ஆம் ஆண்டு பதிவு பெற்றது. இந்நாட்டில் படைப்பிலக்கியம் சிறந்து விளங்குவதற்கு பல்வேறு வகையிலும் அரும்பணி ஆற்றிவருகிறது. இதன் முதல் தலைவர் முத்தமிழ் வித்தகர் முருகுசுப்பிரமணியன், திரு.எம்.துரைராஜ், திரு.ஆதிகுமணன்,இப்போது தலைவராக பொறுபேற்றிருக்கும் திரு.பெ.இராஜேந்திரன் வரைக்கும் இலக்கிய வளர்ச்சிக்கு ஆற்றிய பங்கினால் மலேசிய இலக்கியம் உலக தரத்திற்கு உயர்ந்துள்ளதை மகிழ்சியுடன் காணலாம்.அண்மைய காலமாக இலக்கியப்போட்டிகள் குறிப்பாக சிறுகதை, கவிதை, புதுக்கவிதை  மற்றும்  நாவல்  போட்டிகளைநடத்தி பெருந் தொகைகளைப்  பரிசாக  வழங்கி  எழுத்தாளர்களை நாளும்  ஊக்குவித்து வருகிறது. மலேசிய  எழுத்தாளர்களில் பலர், குறிப்பாக தமிழ்நாட்டு இலக்கிய இதழ்களில் இன்று தங்களின் தரமான படைப்புகள் மூலமாக திறனை வெளிப் படுத்தியுள்ளனர்.தமிழக ஏடுகளில் மிக அதிகமாக  எழுதிப்பெயர் பெற்றவர் முத்தமிழ்ச் செல்வர் நா.ஆ.செங்குட்டுவன் .கலைமகளில் மிக அதிகமாக இவரு டைய படைப்புகள் வெளிவந்திருக்கின்றன.தவிர, குமுதத்திலும் எழுதியிருக்கின்றார். இப்படைபுகளையெல்லாம் தொகுத்துத்‘தமிழகத்தில் தவழ்ந்தவை’(சிறுகதை,குறுநாவல்,நாவல்) எனும் தலைப்பில் தொகுப்பு ஒன்றும் 2005-இல் வெளியிட்டிருக்கிறார். தமிழகத்தில் மட்டுமல்லாது உலகலாவிய நிலையிலும் அறிமுகமாகியுள்ள எழுத்தாளர்களுள்  மிக  முக்கியமானவர் பேராசிரியர்  ரெ.கார்திகேசு.தமிழ்நாட்டு ஏடுகள் மட்டுமின்றி இணைய ஏடுகளிலும் எழுதி யுள்ளார்.கல்கி இதழின் வைரவிழாச் சிறுகதைப் போட்டியில் தம்முடைய ‘ஊசி இலை மரம்’ என்னும் சிறுகதைக்கு 10,000 ரூபாய் பரிசைப் பெற்றார்.குமுதம் இதழ் நடத்திய சிறுகதப்போட்டியில் சீ.முத்துசாமி ‘இரைகள்’எனும் சிறுகதை கதையும் ஆனந்தவிகடன் நடத்திய போட்டியில் சங்கு சண்முகம் எழுதிய ‘இரை தேடும் பறவைகள்’   எனும்   சிறுகதையும்   முதல்  பரிசுகள்  பெற்று   மலேசிய எழுத்துகளுக்குப் பெருமையும் அங்கீகாரமும் தேடித்தந்தன. மா.இராமையா, நா.மகேசுவரி,மு.அன்புச்செல்வன், கோ.புண்ணியவான் போன்று பலரும் எழுதி மலேசிய  இலக்கியத்தை மேலோங்கச்  செய்துள்ளனர். தமிழ்நாடு, இலங்கை மற்றும் சிங்கப்பூர் நாட்டுடான அணுக்கமான உறவின் பயனாக இந்நாட்டு இலக்கியங்கள் அங்கிகாரம் பெறுவதுடன்,”பாரதிதாசன்” மற்றும் “கரிகாலச்சோழன்”விருதுகளை நமது படைப்பாளர்கள் பெறுவதற்கு சங்கதின்  தற்போதைய தலைவரின்  அரிய பணிகளால் விளைந்த பயன் என்றால் மிகையில்லை.          

12. தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கம்

இந்நாட்டில்,தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு பெரும் ஊக்கமூட்டி வரும்மற்றுமொரு அமைப்பு தேசிய நில நிதிக்கூட்டுறவுச் சங்கமாகும். துன் வீ.தி.சம்பந்தனால்அவர்களால் 1960ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இச்சங்கம் நாட்டில் தலைச்சிறந்த  சங்கமாக இருப்பதுடன், இலக்கியத்திற்கும்  ஆண்டு தோறும் 19-ஆம் ஆண்டாகசிறுகதை,கவிதை ,புதுக்கவிதைமற்றும் கட்டுரைப் போட்டிகளை மாணவர் மற்றும் பொதுப்பிரிவு என்று இரு பிரிவுகளாகப் போட்டிகள் நடத்தப்பட்டுமுதல்பரிசு  ரிங்.2000,   இரண்டாம் பரிசு ரிங். 1250,   மூன்றாம் பரிசு ரிங்.750 வழங்கப்  படுவதுடன் வெற்றியாளர்களின்  படைப்புகள்  நூலுல்  வடிவம் பெற்று அதனை இலவசமாக பொதுமக்களுக்கு அளித்து வருகிறது. இச்சங்கம் இந்நாட்டில் தமிழ்மொழி,தமிழ் இலக்கியம்,தமிழர்கலை முதலியவை மேலும்தொடர்ந்து
நிலைக்கச் செய்ய அறவாரியம் அமைத்து அவ்வறவாரியத்திற்கு 120இலட்சியம் ரிங்கிட்டை  தேசிய  நிலநிதி  கூட்டுறவுச்  சங்கம்  ஒதுக்கீடு  செய்துள்ளது. மொழி இலக்கியப்  பிரிவுக்கு  டான்ஸ்ரீ  குமரன்  அவர்களும்  கவிஞர்   காரைக்கிழாரும் பொறுப்பு   வகிக்கின்றனர்.  கலைப்பிரிவுக்கு   திருமதி   இந்திரா   மாணிக்கமும், பழனிச்சாமி  அவர்களும்  பொறுப்பு  வகிக்கின்றனர். இலக்கிய வளர்ச்சி இந்நாட் டில் தொடர்ந்து வளரும் என்பதற்கு இச்சங்கம் பெரும் நம்பிக்கையைக் தருகிறது.
               
13.  அரசியல் கட்சியின் செயல்கள்

இந்நாட்டு இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் பெரிய அரசியல் கட்சி 1946-ஆம்ஆண்டில் ஜான்திவி அவர்களால் தொடங்கப்பட மலேசிய இந்தியர் காங்கிரஸ்(ம.இ.கா) விளங்குகிறது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் (ம.இ.கா) தமிழ்க் கல்வி,தமிழ் இலக்கியம்,தமிழர் பண்பாடு சமயம் ஆகியவற்றைக் காத்துவருகிறது. 1980-ஆம் ஆண்டு முதல் அதிகமான மலேசிய எழுத்தாளர்களின் நூல்களை வெளியிட்டு தலைவர்கள் கணிசமான தொகைகளைக்கொத்து உற்சாகப் படுத்தி வந்தனர்.இன்று அவர்களின் பணி தொடர்வது பாராட்டுக்குரியதும் நம்பிக்கைத்தருவதாகவும் அமைகிறது.

14.தினசரிகளும்,வார,மாத சஞ்சிகைகளும்     

தமிழ்நேசன் 1924-ஆம் ஆண்டு முதல் இன்று வரைநாட்டில் வெளிவந்து கொண்டிருக்கும் வெற்றிப் பத்திரிக்கையாகும்.அன்று முதல்இன்று வரை தொய்வின்றி இலக்கியப் பணியாற்றிக் கொண்டிருக்கிறது.தரமான இலக்கிய வாதிகள் ஆயிரக்கணக்கிலும், இலட்சக்கணக்கில் வாசகர்களையும் தனகத்தே கொண்டு பீடுநடைபோடுகிறது. மக்கள்ஓசை மலேசிய நண்பன் பத்திரிக்கைகள் இந்நாட்டு இலக்கியப் பயிர்கள் தழைத்தோங்க அரிய பணிகளைச் செவ்வனே செய்து வருகின்றன.  தமிழ் இலக்கியம் இந்நாட்டில் மிகச்சிறப்பாக அமையும் என்பதற்கு இப்போது வெளிவந்து கொண்டிருக்கும் வார,மாத சஞ்சிகளைக் குறிப்பிடலாம். வாசகர்களின் பெருக்கமும் நம்பிக்கை   தருவதாக இருக்கிறது. மிக நீண்ட காலமாக வெளிவரும் வானம்பாடி பெரிய எண்ணிக்கையிலான வாசகர்களைக் கொண்டிருக்கிறது. நயனம் வார இதழும்  நிரந்திரமான வாசகர் களைத் தன்னகத்தே ஈர்த்துள்ளது. நாயகன் இதழும் அவ்வப்போது அரசியல் கருத்துக்களால் வாசகர்களைக் கவர்ந்துள்ளது. தேசம்,ஆலமரம் போன்ற இதழ்களோடு தென்றல்,நிலா,சங்கமணி வார இதழ்கள் மற்றும் மவுனம்,அநங்கம் போன்ற சிற்றிலக்கிய இதழ்களும் வாசகர்களின் இலக்கியத் தாகத்தைத் தீர்க்கும் களமாகத்திகழ்கின்றன. மயில்,உங்கள்குரல்,வல்லினம் போன்ற இதழ்களும் வாசகர்களிடையே இலக்கிய அறிவைப் பரப்புவதில் சளைக்க வில்லை.மேலும் சுட்டிமயில்,குயில்,இளந்தளிர் போன்ற மாணவர்இதழ்கள்எதிர்கால சந்ததியினரை அறிவுமிக்க சமுதாயமாக வளர்த்துக் கொண்டிருக்கின்றன்.

15 எதிர்கால இலக்கிய வளர்ச்சிக்கு நாம் செய்யவேண்டிய பணிகள்

அன்மையில் மலேசிய்த் துணைப் பிரதமரும் கல்வி அமைச்சருமான டான்ஸ்ரீ முகைதின் யாசின் அவர்கள் மலேசியக் கல்விச்சான்றிதழ் ( Malaysian Certificate pf Education) தேர்வில் மாணவர்கள் பத்துப் பாடங்கள் மட்டுமே எடுக்க அனுமதி வழங்கப்படும் என்ற முடிவு மலேசியாவில் தமிழ்க்கல்விக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு முடிவாகவே உள்ளது.மாணவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டாலும் அதன் முடிவுகள் தனிச் சான்றிதழில் வழங்கப்படுவதால்மாணவர்கள் பெறுகின்ற மொத்த மதிப்பெண்களைக் கணக்கிடுவதில் அப்புள்ளிகள் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது. இதனால் மாணவர்கள் தமிழ் இலக்கியத்தை தேர்ந்தெடுத்துப் படிப்பதைத் தவிர்த்துவிடுவர் என்பது திண்ணம்.பல பள்ளிகளில் அதன் நிர்வாகம் மாணவர்களைத் தமிழ் இலக்கியப்
பாடத்தை எடுப்பதற்கும் அனுமதிப்பதில்லை.இதனால்,மலேசிய உயர்கல்விச் சான்றிதழ்த் தேர்விலும்( Malaysian Higher School Certificate) மாணவர்கள் தமிழ்மொழி பாடத்தைத் தவிர்க்கக்கூடும்.காலவோட்டத்தில் பல்கலைக் கழகங்களுக்கும் இந்நிலை பரவலாம். இறுதி யில் தமிழ்ப்பள்ளிகள் எதற்கு? என்ற நிலையும் வரக்கூடும்.மலேசியாவில் தமிழர்கள் தங்கள் அடையாளத்தை ( Etnic Identity ) தொலைப்பதற்கான முதல் படியாக இது அமையும் என்றால் மிகையாகாது. இந்நாட்டு ஒட்டுமொத்தஇந்தியர்கள் அனைவரும் இதனைச் சிந்தித்து, திட்டமிட்டே ஒரு சிறுபான்மை இனத்தின் மொழியை அழிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளத் தடுப்பது  அவசியமாகும். ‘மொழி இனத்தின் உயிர்’ கண் கெட்ட பின் சூரிய வணக்கம் பயன் தராது. எதிர்காலத்தில் தமிழர்கள் தங்களின் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிகளுக்குக் கண்டிப்பாக அனுப்ப வேண்டும். நமது சமயம்,கலை,கலாசாரம் வழுவாமல் பேணிகாக்க வேண்டும். தமிழ்ப்பத்திரிக்கைகளைத் தினம் வாங்கி வாசிக்க வேண்டும். தமிழிலேயே பேசவேண்டும். அரசாங்கத் தேர்வுகளில் நமது பிள்ளைகள் தமிழைக் கட்டாயமாக எடுப்பதை ஊக்குவைக்க வேண்டும். தமிழ்மொழி இலக்கியங்களைத் தேடிப்படித்து வாழ்வைச் செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். இலக்கிய அறிவை பெற்றோர்தங்களின் பிள்ளைகளுக்கு இளமையிலேயே ஊட்ட வேண்டும். இது அவர்களின் வாழ்வைச் செம்மைப்படுத்துவதோடு எதிர்காலத்தில் ஒழுக்கச் சீலர்களாகத் திகழ்வதற்கு வழிவகுக்கும 
    
முடிவுரை

இணையத்தளம் இந்நாட்டு இலக்கியங்கள் உலகளவில் பரந்து விரிந்து வளர்வதற்கு வாய்ப்புகள் சிறப்பாகவே இருக்கின்றன. இளையவயதினர் இந்த வாய்ப்புகளை நன்கு பயன் படுத்திக் கொள்ள வேண்டும். இலக்கியம் வளர்ப்பதில் நாம் அனைவரும் பொறுப்புள்ள வர்களாக மாறவேண்டும். இளைய சமுதாயத் தினருக்கு நாட்டிலுள்ள ஊடகங்கள் அவசியம்   வழிகாட்டிகளாகத் திகழவேண்டும். படிக்கும் சமுதாயமே மதிக்கப்படும் சமுதாயமாகமாகும். இளைஞர் இயக்கங்கள் வாசிக்கும் செயல்களில் மும்முரமாமும் ஈடுபாடும் காட்ட வேண்டும். கத்தியைத் தூக்கும் கலாசாரத்தை வீசியெறிந்துவிட்டு கற்கும் வழியினைத் தேட வேண்டும். நாட்டிலுள்ள இளைஞர் இயக்கங்கள் நூலகத்திற்குச் சென்று வாசிக்கும் தீவிர பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். இந்நாட்டில் இயங்கும் பொது நூலகங்களில் செம்மொழி அந்தஸ்து பெற்றுள்ள தமிழ் நூல்களை மக்களின் தேவை உணர்ந்து வாசிப்புக்கு வைக்குமானால்   பண்பட்ட இளைஞர்களை உருவாக்கிய பெருமை இன்றைய அரசைச்சாரும். ‘டேவான் பஹசா டான் புஸ்தகா’ (DBP) மொழி நிறுவனம் உள்நாட்டு தமிழ் இலக்கியங்களை  மலாய் மொழியில் மொழி மாற்றம் செய்தால் இந்நாட்டின் இலக்கிய வளர்ச்சி மேலும் உயரும்.

arunveloo@yahoo.com