கொள்ளுப்பிட்டி ரண்முத்து ஹோட்டலில் ஒரு நூல் வெளியீட்டுவிழா. நானும் ஒரு பேச்சாளன். என்னை நூலாசிரியரின் பதிலுரைக்கு முதல், விழாத்தலைவர் பேசுவதற்கு அழைக்கிறார். எப்படி? “நேரம் போய்க் கொண்டிருக்கிறது. இனி அடுத்துப் பேசப் போகிறவர் முருகப10பதி. அவருக்கு ஒரு வேண்டுகோள், கெதியாகப் பேசி முடித்துவிட்டு, நீர்கொழும்பு பஸ்ஸை பிடிக்க ஓடவும்.”
சபையில் சிரிப்பலை அடங்கச் சில விநாடிகள் தேவைப்படுகிறது. பம்பலப்பிட்டி சாந்திவிஹார் ஹோட்டலில் ஒரு பிரபல தமிழ்ப் பத்திரிகையாளருக்கு பாராட்டு பிரிவுபசார விழா. புகைபடக் கலைஞர் ஒருவர் சுறுசுறுப்பாக இயங்கி, படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார். விடைபெறவுள்ள பத்திரிகையாளரைப் பாராட்டிப் பேசுவதற்கு ஒரு முஸ்லிம் அரசியல் பிரமுகர் தலைவரால் அழைக்கப்படுகிறார். பிரமுகர் தமது பேச்சுக்கிடையே – அந்தப் புகைப்படக் கலைஞரையும் புகழ்ந்து சில வார்த்தைகளை உதிர்த்துவிட்டு “அந்தக் கலைஞர் சிறந்த படப்பிடிப்பாளர், அவருக்கும் நாம் பாராட்டு விழா நடத்த வேண்டும்” என்கிறார். உடனே, தலைவர் “அந்தக் கலைஞர் பத்திரிகைகளுக்காக எடுத்த படங்களையும் பார்த்துள்ளேன். அவர் எடுத்த வேறு படங்களையும் பார்த்துள்ளேன்” என்று சொன்னவுடன் சபையில் அட்டகாசமான சிரிப்பொலி எழுந்து அடங்கியது. அந்தப்புகைப்படக்கலைஞர் நாணத்துடன் தலைகவிழ்ந்து சபையின் பின்புறம் ஓடி வந்துவிட்டார்.
தெமட்டகொடையில் தமிழகத்திலிருந்து வருகை தந்த ஒரு கவிஞருக்கு வரவேற்புக் கூட்டம். அந்த இளம் கவிஞர் தமது பேச்சினிடையே கவியரசு கண்ணதாசனை சற்று காட்டமாக விமர்சித்துவிட்டார். கூட்டத் தலைவருக்கு சற்று கோபம் வந்து விட்டது. அவர் அதனை வெளிக்காட்டாமல், “கண்ணதாசன் இந்த நூற்றாண்டில் சிறந்த கவிஞர். பரம சிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா? இருக்குமிடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்கியமே – கருடன் சொன்னது, அதில் அர்த்தம் உள்ளது” என்று பாடத் தொடங்கி விட்டார். “இந்தப் பாடலில்தான் எத்தனை அர்த்தங்கள். கண்ணதாசனால்தான் இப்படியான படித்தவரும் பாமரரும் புரிந்து கொள்ளக் கூடிய பாடல்களை எழுத முடியும்” என்றார். இவ்வாறெல்லாம் தாம் தலைமை தாங்கிய கூட்டங்களில், விழாக்களில் மிகவும் கலகலப்பாகப் பேசிய தலைவர் இன்றில்லை. அவர்தான் தினகரன் முன்னாள் பிரதம ஆசிரியர் சிவகுருநாதன்.
அவர் நெற்றியில் இட்டுக்கொண்ட திருநீறு – 1977 , 1983 ஆடிக்கலவர காலத்திலும் அழியவில்லை. மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக, அவர் தினகரனில் பணியாற்றியது சாதாரண சாதனையல்ல. அசுர சாதனை. அரசியல் அதிகாரங்கள் மாறின. ஆட்சிகள் மாறின. ஆனால் சிவகுருநாதனின் அந்த ‘ஆசனம்’ கைமாறவில்லை. லேக்ஹவுஸ் நிறுவனத்தை ஏரிக்கரை பத்திரிகை நிறுவனம் என அழைப்பார்கள். கொழும்பு கோட்டையில் ஒரு நாற்சந்தியில் நீண்ட நெடுங்காலமாக அதன் நிறுவனர் விஜயவர்தனா அவர்களின் பெயரில் அமைந்துள்ள வீதியில் இருக்கிறது. எதிரே ரீகல் திரைப்பட மாளிகை. சுற்றுவட்டாரத்தில் நெடிதுயர்ந்த கட்டிடங்கள். பழைய பாராளுமன்றம். கலதாறி உட்பட சில உல்லாச நட்சத்திர ஹோட்டல்கள். மத்தியவங்கி. முன்னைய ஜனாதிபதிகளின் வாசஸ்தலம். தினகரன் பத்திரிகைக்கு நீண்ட வரலாறு இருக்கிறது. அந்த அலுவலகத்தின் படிக்கட்டுகள் சுமார் பத்து இருக்கலாம். அவற்றில் ஏறி இறங்கிய பத்திரிகையாளர்கள் அநேகர். கைலாசபதி பல்கலைக்கழகத்திற்கு விரிவுரையாற்றச்செல்லும் முன்பு இங்குதான் ஆசிரியராக பணியாற்றினார். பின்னாட்களில் கே. சிவப்பிரகாசம், து. சிவப்பிரகாசம், எஸ். பாலச்சந்திரன் முதலானோர் இந்த ஏரிக்கரையிலிருந்துதான் வீரகேசரிக்கு வந்தனர். கே. சிவப்பிரகாசம் வீரகேசரியின் பிரதம ஆசிரியரானார். து. சிவப்பிரகாசம் வீரகேசரியின் விநியோக, விளம்பரப்பிரிவுக்கு முகாமையாளரானார். எஸ். பலாச்சந்திரன் வீரகேசரியின் பொதுமுகாமையாளரானார். இவர்களின் ஊற்றுக்கண் தினகரன் வெளியான ஏரிக்கரைதான்.
ஏரிக்கரையிலிருந்து உருவான இவர்கள் அனைவருடனும் எனக்கு அன்பும் மரியாதையும் இருக்கிறது. கைலாசபதி, பாலச்சந்திரன், சிவகுருநாதன் ஆகியோர் மறைந்துவிட்டனர். இரண்டு சிவப்பிரகாசங்களும் கனடா. அமெரிக்கா என்று புலம்பெயர்ந்துவிட்டனர். இவர்களில் சிவகுருநாதன் முற்றிலும் வித்தியாசமான மனிதர். பந்தாக்கள் ஏதுமின்றி – வயது வித்தியாசம் பாராமல் எவருடனும் புன்னகை தவழும் முகத்துடன் பழகுவார். உதடுகள் துடிக்கும். கண் இமைகளும் சிமிட்டும். உரிமையும் நெருக்கமும் அதிகரித்தால் ‘டா’ போட்டும் பேசுவார்.
80-83 காலப்பகுதியில் – கொழும்பில் இயங்கிய ‘கலை, இலக்கியப் பத்திரிகை நண்பர்கள்’ என்ற அமைப்பின் – அமைப்பாளராக பத்திரிகையாளர் (எஸ்தி) எஸ்.திருச்செல்வம் இருந்த போதிலும் – இந்த அமைப்பின் கூட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்களுக்கெல்லாம் – சிவகுருநாதனே தலைமையேற்றார். ஆனால், பேச்சாளர்களுக்கோ – நாணத்துடன் கூடிய சங்கடம். எங்கே.. தலைவர் தம்மைப் பேச அழைக்கும் போது காலை வாரிவிட்டுவிடுவாரோ என்ற தயக்கம் இருக்கும். இவர், கலை, இலக்கியக் கூட்டங்களுக்கு தலைமையேற்பதைப் பார்த்த – தமிழக எழுத்தாளர் ஒருவர் என்னிடம் ஆச்சரியப்பட்டார். ‘தமிழ் நாட்டிலும் இப்படியான நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஆனால் பத்திரிகை ஆசிரியர்கள் தலைமை பொறுப்பை ஏற்கமாட்டார்கள். கூட்டங்களுக்கே வரமாட்டார்கள். அவ்வளவு பந்தா.. உங்கள் நாட்டைப் பார்க்கும் போது மனதுக்குச் சந்தோஷம்’ என்றார். ‘இலங்கையில் தமிழ்ப் பதினப்பத்திரிகைகளின் வளர்ச்சி’ என்ற சிவகுருநாதனின் ஆய்வுநூலை கொழும்புத் தமிழ்ச்சங்கம் வெளியிட்டது. இந்நூல் கலை- இலக்கிய, ஊடகத்துறை ஆய்வாளர்களுக்கு மிகவும் பயனுள்ளது. சிவகுருநாதன் தமிழ்ப்பத்திரிகை உலகத்திற்கு விட்டுச்சென்றுள்ள சிறந்த ஆவணம் இந்தநூல். இரண்டு பதிப்புகளைக்கண்டுள்ள இந்நூலை தம்மை பத்திரிகை உலகிற்கு அறிமுகப்படுத்திய விக்கிரமசிங்ஹ என்ற பிரபல சிங்கள பத்திரிகையாளருக்கே நன்றியுணர்வுடன் சமர்ப்பித்துள்ளார். தற்போதைய இலங்கை எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹாவின் தந்தையார்தான் இந்த விக்கிரமசிங்ஹா.
குறிப்பிட்ட ஆய்வு அவரது முதுமாணி பட்டத்திற்காக பல நாட்கள் பல இரவுகள் கண்விழித்து எழுதப்பட்டது. எனினும் 1983 ஆடி அமளியில் கயவர்களினால் அவரது வீடும் சூறையாடப்பட்டு கொளுத்தப்பட்டபோது அவரது சேகரிப்பிலிருந்த ஆயிரக்கணக்கான நூல்களுடன் அந்த ஆய்வேடும் எரிந்து சாம்பராகியது. பின்னர், தொலைந்துபோன தரவுகள், தகவல்களை மீண்டும் தேடிச் சேகரித்து எழுதி முடித்தார். குறிப்பிட்ட ஆய்வு நூலின் தொடக்கத்தில் எட்டுப்பக்கங்களில் 1983 ஆடி அமளியின்பொழுது தான் அனுபவித்த கொடுந்துயர் பற்றி விரிவாக எழுதுகிறார். அதனைப்படிக்கும்பொழுது கண்ணீர் வருகிறது.
‘அமைதியாகவிருந்து எழுத வீடுவாசலில்லை. உடுக்க உடையில்லை. நான் படித்த நூல்களில்லை. சிறுபராயத்திலிருந்தே சேர்த்துவந்த சுமார் ஐயாயிரம் நூற் பிரதிகளுக்கு மேல் இன்றில்லை. நான் எழுதிய பேனாவே இல்லையென்றால் என் நிலை என்ன? நடுத்தெரு நாராயணனாக ஒரு சில மணிநேரத்துக்குள் என்னை ஆக்கிவிட்டார்கள் அந்தக்குண்டர்கள். தியாகப்பிரம்மத்தின் சமாதியில் நல்லை ஆதினகர்த்தா ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாதத்தம்பிரான் பூஜை செய்து எமது மகளுக்குத்தந்த ருத்ர வீணையை காடையர்கள் முறித்து குப்பையில் போட்டிருந்தார்கள்.’ என்று எழுதுகிறார்.
அந்த நூலின் முன்னுரையில் அவர் பதிந்துள்ள கருத்தும் முக்கியமானது. ‘தினகரனை’ டி.ஆர். விஜேவர்தனா ஆரம்பித்த நோக்கத்தையும், இம்முயற்சியின் தாக்கத்தையும் தமிழ் மக்கள் அறியவேண்டும். ஏனென்றால் அரசியல் ரீதியில் தினகரனின் உதயம் மிக முக்கியமானது. 1932 வரை எந்தச்சிங்களவரும் தமிழ்ப்பத்திரிகை நடத்த முன்வரவில்லை. விஜேவர்தன எனும் சிங்களக்கனவான், ஏன் தமிழ்ப்பத்திரிகை நடத்த முன்வந்தார்? தேசிய ரீதியில் தமிழரும் இதுபற்றிச்சிந்திக்கவேண்டும். ஒன்றுபட்ட நாடாக இலங்கை என்றென்றும் திகழவேண்டும் என்று அவர் விரும்பினார். அதாவது தமிழ்மக்கள் அன்றுகொண்டிருந்த மனவியல்பை அவதானித்தபோது ஒரு காலத்தில் பிரிவினை இயக்கங்களைக்கூட இவ்வியல்பு உருவாக்கிவிடலாம் என்ற தீர்க்கதரிசனம் அவருக்கு இருந்தது. எனவே ஐக்கிய இலங்கையை உறுதிப்படுத்தவேண்டும் என்று விரும்பிய முதல் சிங்களத்தலைமகன் டி.ஆர். விஜேவர்தன என்பதனை உணர்ந்தேன். ஆதலினால் இவரது பணியைத் தமிழ் மக்களும் பிறரும் அறியவேண்டும் என விரும்பியே இவ்வாய்வை மேற்கொண்டேன்.” – இவ்வாறு பதிவுசெய்துள்ளார்.
சிவகுருநாதன் பேராதனை பல்கலைக்கழகத்தில் பயிலும் காலத்திலே அங்கு இயங்கிய தமிழ் மாணவர் மன்றத்தின் இளங்கதிர், இந்து மாணவர் சங்கத்தின் இந்து தர்மம் ஆகிய இதழ்களின் ஆசிரியராக விளங்கியவர். தினகரன் ஆசிரிய பீடத்தில் 1956 இல் துணை ஆசிரியராக இணைந்து பின்னர் செய்தி ஆசிரியராகவும் பிரதம ஆசிரியராகவும் படிப்படியாக உயர்ந்தவர்.
1961 முதல் 1995 வரையில் சுமார் 34 ஆண்டுகாலம் தொடர்ச்சியாக தினகரனில் பிரதம ஆசிரியராக பணியாற்றியது என்பது அசுரசாதனைதான். இலங்கையில் அரசுகள் மாறும்பொழுது முதலில் சிக்கலுக்குள்ளாவது இந்த ஏரிக்கரை பத்திரிகை நிறுவனம்தான். 34 ஆண்டுகளில் பல அதிபர்களைக்கண்டது இலங்கை அரசியல். ஆனால் தினகரன் இக்காலப்பகுதியில் கண்டது ஒரே ஒரு ஆசிரியரைத்தான். அவர்தான் சிவகுருநாதன்.
தமது ஆசிரியப்பணியினூடே அவர் சட்டக்கல்லூரிக்குச்சென்று சட்டமும் படித்து சட்டத்தரணியானார். பின்னர் அங்கு விரிவுரையாளராகவும் சிறிதுகாலம் பணியாற்றினார். கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் தலைவராகவும் விளங்கினார். அத்துடன் உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தில் இரண்டு தடவைகள் தலைவராகத்தெரிவானார். நான் எழுத்துலகத்தில் பிரவேசித்த காலம் முதலாக சிவகுருநாதனை நன்கறிவேன். எனினும் இவரிடம் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை.
வீரகேசரியில் நான் பணியாற்றத் தொடங்கிய பின்பு – கொழும்பில் நடக்கும் கூட்டங்கள் விழாக்களில் இவரைச் சந்தித்து உரையாடுவேன். நகைச்சுவையுணர்வு மிக்கவர். இந்த உணர்வும் பலரை இவர்பால் நெருங்கி வரச் செய்திருக்கலாம்.
1987இல் நான் வீரகேசரியிலிருந்து விலகிய வேளையில், இவர் மிகவும் கவலைப்பட்டதாக அறிந்தேன்.
‘வருமானப்பற்றாக்குறையினால் பதவி விலகுவதாக இருப்பின் அவனை என்னிடம் வரச் சொல்லுங்கள்” என்று ஒரு இலக்கிய நண்பர் மூலம் எனக்குத் தூது அனுப்பினார். ஆனால் நானோ வீரகேசரியிலிருந்து விலகி ஒரு வாரகாலத்துள் அவுஸ்திரேலியாவுக்கு வந்துவிட்டேன். வந்தபின்னும் அவருடனான தொடர்புகள் அவரது அந்திமகாலம் வரையில் நீடித்தது. அவுஸ்திரேலியாவிலிருந்து நான் எழுதியனுப்பியவற்றையெல்லாம் தினகரனிலும் ஞாயிறு பதிப்பு தினகரன் வாரமஞ்சரியிலும் பிரசுரித்தார். 1990இல் தமிழகம் சென்று திரும்பியதும் வாரமஞ்சரியில் ஒரு பயண இலக்கியத்தொடர் எழுதினேன். தவிர பல இலக்கியச் செய்திகள், கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். அவற்றுடன், அவரது சுகசேமங்களை விசாரித்து சுருக்கமான ஒரு கடிதமும் இணைத்திருப்பேன். அவ்வப்போது தொலைபேசி மூலமும் உரையாடியிருக்கின்றேன். அதனால் எமக்கிடையே இடைவெளி தோன்றவில்லை.
பதினொரு ஆண்டுகளின் பின்பு – இலங்கை திரும்பிய போது வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷனில் கம்பன் விழாவில் கண்டு மகிழ்ந்தேன். அச்சமயம் அவர் பத்திரிகைப் பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். அவரது உறவினர்கள் அவுஸ்திரேலியாவிலிருப்பது அறிந்து, “ஒரு தடவை வாருங்கள். ஆனால் குளிர்காலத்தில் வர வேண்டாம். கோடை காலத்தில் வாருங்கள்” என்றேன். இதனை மிகவும் சாதாரணமாகத்தான் அன்றையதினம் சொன்னேன்.
2002 ஆம் ஆண்டு எனக்கு அவுஸ்திரேலியா தினத்தில் சிறந்த பிரஜைக்கான விருது கிடைத்ததை முன்னிட்டு, மல்லிகை ஜீவா, கொழும்பில் சகோதரி ஜெயந்தி விநோதன் இல்லத்தில் வரவேற்புக் கூட்டம் ஒழுங்கு செய்திருந்தார். பல இலக்கியவாதிகள், பத்திரிகையாளர்கள், சமூகப்பணியாற்றும் பிரமுகர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் – கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் எனக்கு நூல்களும் அன்பளிப்புச் செய்து பேசிய சிவகுருநாதன், “எத்தனையோ பேர் வருகிறார்கள், போகிறார்கள். ஆனால் முருகப10பதி என்னை கோடை காலத்தில் வருமாறு அழைத்திருக்கிறார். எனது உடல் நலத்தில் அவருக்கு அவ்வளவு அக்கறை” என்று சொல்லி நான் சாதாரணமாகச் சொன்ன ஒரு கூற்றை நினைவில் வைத்து அதற்கு அர்த்தமும் கற்பித்தார்.
இறுதியாக மீண்டும் 2002 ஆண்டு சாகித்திய விருதுக்காக இலங்கை வந்த சமயம் – கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் இவரது தலைமையில் எனக்காக ஒரு கூட்டம் நடந்தது. அப்பொழுது அவருக்கு உடல்நலக் குறைவு. என் மீது கொண்டிருந்த அன்பினால் வந்து தலைமையேற்றார்.
இருமலினால் தவித்த அவருக்கு நான் எனக்காகக் கொண்டு சென்றிருந்த இருமல் நிவாரணி ‘சூத்தர்’ இனிப்பு பக்கட்டைக் கொடுத்தேன். அதனை வாயில் இட்டுக்கொள்ளவும் இருமல் குறைந்தது. “ப10பதி தனக்கு உடன் நிவாரணி தந்தார்” என்று பகிரங்கமாகச் சொல்லி என்னை நாணவைத்தார். இந்த வெளிப்படையான அவரது பேச்சுதான் அவரது பலம். விமானம் ஏறுவதற்கு முன்பும் அவரது சுகத்தை தொலைபேசி மூலம் கேட்டுவிட்டே விடைபெற்றேன். வந்த பின்பும் கடிதம் எழுதி சுகம் விசாரித்தேன். இனி எனக்கு அந்த வேலைகளையெல்லாம் தராமல் நிரந்தரமாகவே விடைபெற்று விட்டார்.