மலைகள் சொரிந்த சடுதி மழை

-பேராசிரியர் கோபன் மகாதேவா -இருபதாம் நூற்றாண்டின் மத்திய இரு தசாப்பத்தங்களின் காலம். ஈழத்தின் கைதடி-நுணாவில் கிராமத்தில் யாழ்-கண்டி நெடுஞ்சாலையின் எட்டாங் கட்டையடியில் ஒரு வீதியோரக் கல்வீடு.  ஊரார் அதை வெற்றிப் பரியாரியார் வீடென அழைப்பர்.

அவர் ஒரு பிரபலமான சித்த ஆயுள்வேத வைத்தியர். பெயர், இராமநாதர் அப்பா வெற்றிவேலு. மனைவி, கந்தர் வேலாயுதர் நாகமுத்து. மக்கள் இருவர். மகன் கந்தசாமி. மகள் இரத்தினம். இவர்களுடன் தன்மனைவியை 1938-இல் இழந்த கோபாலரும்; மகன்மார் தில்லை, துரை, சின்னத்துரை என வீட்டில் அழைக்கும் பையன்களும் வாழ்ந்தனர். கோபாலர், நாகமுத்துவின் அண்ணர். அவரின் மனைவி (இறந்த பொன்னம்மா) வெற்றியரின் தங்கை. இரு மாற்றுச்-சடங்குகளின் மூலம் எண்மரும் பிறப்பிலேயே இனத்தவர்கள். ஒன்றாகப் பல ஆண்டு வாழ்ந்து வந்தனர்.

வெற்றியர் தன்னுடைய றலி சைக்கிள் வண்டியில் உழக்கிச் சென்று சாவகச்சேரி நகரத்தின் பழைய சந்தையில் ஒரு அறை வாடகைக்கு எடுத்து வாரத்தில் ழூன்று நாட்கள் முற்பகலில் தன் வைத்தியத் தொழிலை நடத்தி வந்தார். சந்தையில் தன் மதிய உணவை அருந்தி விட்டுப் பிற்பகலில் இடைஇடைக் கிராமங்களில் வதியும் வீட்டு-நோயாளிகளைப் பார்த்துத் தன்னுடன் என்றும் எடுத்துச் செல்லும் மருந்துப் பெட்டியிலிருந்து மருந்தும் கொடுத்து ஆலோசனையும் வழங்கி விட்டுப் பின்னேரம் ஆறுமணிக்கு எல்லாம் வீடு திரும்பி விடுவார். கடுமையான நோயாளிகள், இருவர் இருவராக அவர் வீட்டில் தங்கி வாரக் கணக்கில் வைத்தியம் பெறுவதும் உண்டு. தன் நடை-மருந்துகளுக்கு மட்டும் நியாயமாகப் பணம் முன்னரே கேட்டுப் பெறுவார். தன் பெட்டிப்-பேதி மருந்துகள், பயணம், ஆலோசனை முதலிய சேவைகளுக்கு நோயாளர் தாமாக விரும்பிக் கொடுப்பதையே பெற்றுக் கொள்வார். அத்துடன் வீட்டில் ஒரு பசு, இரு எருதுகள், ஒரு மாட்டு-வண்டிலுடன், குடும்பத்து வயல், தோட்டங்கள், ஒரு மரக்-கடை, சிலநேரம் புகையிலை வியாபாரம் எல்லாம் செய்வார். அவ்வூர் கிராமசபையின் தெரிவு செய்யப்பட்ட அங்கத்தினர். மேலும் தன் செலவிலேயே கைதடிநுணாவில்-மட்டுவில்தெற்கு கிராமங்களுக்கு ஒரு ஆரம்ப பள்ளியை நிறுவி, நடாத்தியும் வந்தார். இந்த எல்லா வேலைகளுக்கும் வீட்டில் உள்ள எல்லோரும் நாளாந்தம் இரவுபகலாக உதவிசெய்து வந்தனர். கோபாலர் மட்டும், அவ்விரு கிராமங்களுக்கென ஒரு கூட்டுறவுச் சங்கத்தை நிறுவி நடாத்தி வந்து, காலை சென்று இரவு திரும்பி, தங்கை கொடுக்கும் உணவை அருந்திப் படுத்துவந்து, தன் மனைவி பிரிந்த ஆறாம் ஆண்டில் கசநோயால் இறந்துவிட்டார்.  

 பிள்ளைகள் வளர்ந்தனர். பரியாரியாரும், பின்-ஐம்பதுகளில் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுத் தன் வலதுகால் பெருவிரலையும் இழந்து, உடம்பும் உருகி, வாமனராகி, வீட்டின் முன்-அறைக்குள் தன் மனைவி நாகமுத்துவின் சதா-பராமரிப்பில் வாழ்ந்து, அறுபதில் இறந்தேவிட்டார். குடும்பத்தினருக்குப் பேரிடி விழுந்த மன அதிர்ச்சி.

பரியாரியார் இறந்த செய்தி, பறை அடித்து அறிவிக்கும் தேவை இன்றித் தானாகவே காட்டுத்தீ போல் ஓரேஒரு மணிக்குள் கிராமம் முழுவதும் பரவி விட்டது. ஊர் கூடிற்று. உறவினர் குவிந்தனர். அவரின் குடும்பக் குடிமக்கள் எல்லோரும் தாமகவே வந்து தம்தமது கடமைகளை இயல்பாகப் புரிந்தனர். பரியாரியாரின் மகன் முறையான செல்லையா வாத்தியார் அதி காலையிலேயே வந்துவட்டார். உருவத்தில் இருவரும் ஒரே அச்சு எனலாம். அதாவது முன்தலை வழிப்பு, பின் தலைக் குடுமி. சாதாரணமாக வெறும் மேலுடன் ஒரு நாலுமுழ வேட்டி. தோளில் ஒரு சிறு வெள்ளைத் துண்டு. வைத்தியர் சிறிது கறுப்பான வாமனர். வாத்தியார் யப்பானிய சூமோ மல்யுத்தவீரன் போன்ற வெள்ளை நிற ஆசானுபாகர். இருவரும் கட்டுப்பாடாக  வாழ்பவர். அவர்கள் சொல்வதை  எவருமே தட்டுவதில்லை. அந்த அளவு பயமும் மரியாதையும்! வைத்தியரின் மரணச் சடங்கு ஒழுங்குகளுக்குச் செல்லையா வாத்தியார், ஒருவரும் கேட்காமலே, பிரேரிக்காமலே – தலைவரல்ல, மேற்பார்வையாளர் ஆனார். கிராமத்து மரணவீடுகளிலும், மண-வீடுகளிலும், காளான்கள்போல் சிறு-தலைவர்கள் முளைத்து வந்து இயங்கி, ஆணைகளிடுவர் அல்லவா? இங்கும் அப்படியே. அவர்களிடையே எழுந்த வாக்குவாத முரண்பாடுகளை எமது செல்லையர் தன் உறுத்தல்-கண் பார்வையினாலேயே தீர்த்து வைத்து உதவினார்.

தில்லையும் துரையும் தகப்பனை இழந்து, மேலே படித்து, உத்தியோகமாகி, அன்று நீர்கொழும்பிலும் கொழும்பிலும் லிகிதராகவும் பட்டதாரி எந்திரிகராகவும் வேலை செய்தனர். இருவரும் உருவில் உயர்ந்து ஊதித் தேகசாலிகளாகக் காணப்பட்டனர். மேலும் துரை, நாட்டின் தொண்டர் படையில் சேர்ந்து பயின்று, பட்டாளத்திலும் ஒரு உயர் அதிகாரி, அப்போ.  அவர்களின் அத்தான் கந்தசாமியர் அனுப்பிய தந்தி கிடைத்தவுடன் வெளிக்கிட்டு இரவிரவாகப் பயணம் செய்து துரையரின் ஒஸ்ரின்- காரில் காலமை செத்தவீட்டுக் கஞ்சியும் சம்பலும் சாப்பிட எட்டுமணிக்கே வந்துவிட்டனர். உடனே வீட்டில் இருந்த அத்தான்-மச்சாள் குடும்பத்தினர், தம்பியன், எல்லாரையும் கண்டு பேசிவிட்டு, பிரேதத்தை விட்டு அகலாமல் அழுதுகொண்டே இருந்த மாமியையும் முகம்-தடவி, ஆறுதல் கூறிவிட்டு, நடந்து கொண்டிருந்த வேலைகளில் உடனேயே பங்கு எடுத்துக் கொண்டு குசலம் விசாரித்த எவருடனும் முடியுமானவரை அளவளாவினர்.

வீட்டின் பெரிய முன்-முற்றத்தில் நின்ற இரு அம்பலவி மாமரங்கள், ஒவ்வொன்றான மாதுளையும் எலுமிச்சையும், கிணறும்-குளியலறையும், கருவேப்ப இலை மரம், முதலியவற்றைத் தவிர்த்து, வளவு முழுவதிலும், ஒரு பெரிய தற்காலிக மண்டபம், கிடுகு, காட்டுத்தடிகள், மரச் சிலாகைகள், கயிறு, முதலியவற்றாலும் கிராமத்துத் தொழில்நுட்பப் பிரயோகத்தாலும் எழுந்தது. வெற்றியரின் பழைய ஆத்ம நண்பன் கார்த்திக்-கட்டாடியின் பொட்டணத்தால் மண்டபத்தின் கூரை, வெள்ளை மயமாக்கப் பட்டது. பதினொரு மணியளவில் ஒருபெரிய பறைமேளமும் இருண்டு பக்க-மேளங்களும் வந்துசேரந்தன. சின்னத்துரை, தன் மாமாவின் சைக்கிளில் மகிழ்ந்து ஓடி, அக்கம் பக்க ஊர்களிலுள்ள பிரதான நண்பர்களுக்கும் அம்மன் கோவில் குருக்களுக்கும் அறிவித்து (மறக்காமல்) இந்தியா-இங்கிலாந்து கிறிக்கெற் போட்டியின் கடைசி நிலையையும் அறிந்து வந்த நேரம், மயானப் பாடையும் கட்டி முடிந்தது. நாவிதர் சின்னத்தம்பியும் வெற்றியருக்குக் கடைசி முறை சவரம் செய்ய வந்தார்.

நாலு மணிக்குப் பிரேதத்தைத் தூக்கிச் சென்று கிராமத்துச் சுடலையில் தகனம் செய்தால் மாலை ஆறுமணிக்கு எல்லோரும் ஒரே பந்தியில் சாப்பிடலாம் என்பது ஏகமனதான குறிக்கோள். சீனி-கூட்டிய கறுப்புத் தேநீரும், ஊறுகாய்த் தண்ணீரும் சர்க்கரைத் தண்ணீரும் மூக்குப்பேணி, கிளாஸ், சிரட்டை முதலியவற்றில் பரிமாறப் பட்டுக்கொண்டே இருந்தன. மூன்று மணிக்கு வெற்றியரின் உடலை அவர் மனைவியிடமிருந்து மிகச் சிரமத்துடன் பிரித்து, நாவிதரிடம் ஒப்படைத்து, ஒருகதிரையில் இருத்திச் சவரம் முடிந்தவுடன் குளிப்பாட்டி வெள்ளை வேட்டி, நீண்டகைச்-சட்டை, தலைப்பாகை, திருநீறு, சந்தனம் அணிவித்து, பாடையினுள் அப்பெரியாரை அவரின் வாழ்க்கையின் கடைசி யாத்திரைக்குத் தூக்கிச் செல்வதற்காகக் கிடத்தினர்.

அப்போது நேரம் மாலை மூன்றரை மணி இருக்கும். குடும்பத்தாரும் செல்லையரும், உயரத்தில் வைத்திருந்த பாடையைச் சுற்றித் தேங்காய் எண்ணெயப் பந்தங்களைக் கைகளில் பிடித்தபடி தேவாரங்கள் பாடிக்கொண்டோ அல்லது பாடுவதைப் போல் முணுமுணுத்துக் கொண்டோ, இறந்த பெரியாரையே பார்த்தபடி தம்தமது மனத் திரைகளில் அவரையும் தங்களையும் சம்பந்தப் படுத்திச் சென்று-முடிந்த பற்பல வாழக்கைச் சம்பவங்களை மீழாய்வு செய்து கொண்டு பொம்மைகளாக நின்றனர். செல்லையரும் துரையும் தில்லையரும் எதிரெதிரே மூன்று பெரிய கற்தூண்களாகவும் ஆண்குலத்தின் கடின-மன உதாணர்களாகவும் எல்லோருக்கும் காட்சியளித்தனர்.

இருந்தாற்போல, பட்டாளத்து மேலதிகாரி துரையரின் கண்களிலிருந்து மாரிமழை பொழிந்து நெஞ்சில் வீழ்ந்து பாய்ந்து வேட்டிக் கட்டை நனைத்தது. தான் பூவரசந் தடியினால் முன்னொரு நாள் அவரிடம் அடிவாங்கி இரத்தம்ஓடிப் புண்வந்து மாறிய கைத்தழும்பைப் பார்த்து,  அவரின் அடியால் தான் நற்குணனாகி முன்னேறி இப்போ பெரிய உத்தியோகங்கள் வகிப்பதன் நன்றிக் கடன் தீர்க்க அவர் ஒரு சந்தர்ப்பமும் தரவில்லையே எனநினைக்க, அவரின் கண்கள் மேலும் நீரைச்சொரிந்தன. ஆனால் அவர்முகமோ கோணவில்லை. முகத்தில் ஓர்உணர்ச்சியும் அவர் காட்டவில்லை. இதைக் கண்ணுற்ற செல்லையரின் கண்களும் மடை திறந்ததைப் போல் பாயத் தொடங்கின. இருவரையும் கண்ட தில்லையரின் கண் குழாய்களும் திறந்து, நீர் பாய்ச்சத் தொடங்கின. அக் கூட்டத்தில் மிகப்  பெரிய உடம்புடைய செல்லையர் சிறிதுநேரத்தில் முகத்தைச் சுழித்துத் தேம்பத் தொடங்கினார். பின்னர் தில்லையரும் வெதும்ப, வெளிவட்டத்தில் தூரநின்ற கார்த்திக் கட்டாடியும் நாவிதர் சின்னத் தம்பியும் அழத் தொடங்கினர். இதைக் கண்ட பெண்கள் யாவரும், அதாவது தாம் பிரேதம் தூக்கும் போதே மாரடித்து முறையாக அழுவதற்கென ஆயத்தமாக இருந்தவர்கள், இனிமேலும் பொறுக்க முடியாது, பலமாக ஓலமிடத் தொடங்கினர். வெற்றியரின் மனைவியார் நாகமுத்து மட்டும் பக்கத்தில் ஒரு கதிரையில் இருத்தபட்ட வாறே, கண்களை மூடியபடி, கதறும் மகள் இரத்தினத்தின் அணைப்பில், இனித் தன்னிடம் ஒரு துளி கண்ணீரும் இல்லை என்பதை நிருபிப்பதைப் போல் பிரக்ஞையில்லாச் சடம்போலக் கனவுலகில் சஞ்சரித்தார்.

செல்லையர், தில்லை, துரை ஆகிய மூன்று மனித மலைகள் அன்று வெற்றிப் பரியாரின் மரணச் சடங்கின் போது சடுதியாகச் சொரிந்த கண்ணீர் மழை பல ஆண்டுகளாக அந்தக் கிராமத்து மக்களால் நினைவு கூர்ந்து பேசப்பட்டு வந்தது, கடின-மன ஆண்களும் கண்ணீர் சுரப்பர் என்பதற்கு உதாரணமாக!

(அடுத்த நான்கு நாட்களில், தன் கணவனாரின் துரிதப் படுத்திய எட்டுச்செலவு முடிய, அந்தக் குடும்பத்தார் நாகமுத்துவையும் பறிகொடுத்து, அவளின் செத்த-வீடும் அதே பந்தலில் நடந்தேறியது, அது எனது அடுத்த பரிதாபக் கதையில்).

prof.kopanmahadeva@yahoo.co.uk