விமுக்தா – மீட்சி (சாகித்திய அகாதமி விருது கதை)
இந்த வாரம் நாம் சொல்வனம் 20.12.2015 இதழில் வெளியாகி இருக்கும் தெலுங்குப் பெண் எழுத்தாளர் வோல்காவின் மீட்சி என்னும் சிறுகதையை வாசிப்போம். இந்த சிறுகதையின் தலைப்பிலான தொகுதிக்காக அவருக்கு 2015 சாகித்ய அகாதமி விருது கிடைத்துள்ளது. புராணங்கள் அல்லது இதிகாசங்களிலிருந்து தேர்ந்தெடுத்த ஒரு கதையை, கதாபாத்திரங்களை நவீனக் கதையில் மையப்படுத்தி எழுதும் முறை நமது பண்பாடு பற்றிய ஒரு புதிய கோணத்திலான பார்வையை நமக்கு அளிப்பது.
புதுமைப்பித்தனின் சாப விமோசனம் தமிழில் மிகவும் விவாதிக்கப்பட்ட சிறுகதை. அதை வாசிக்காதவர்கள் இந்த இணைப்பின் வழி வாசிக்கலாம்— சாபவிமோசனம் இணைப்பு.
ராமனும் சீதையும் மணமுடிக்கும் முன்பே வனவாசம் புகும் முன்பே அகலிகைக்கு சாபவிமோசனம் கிடைத்து விடுகிறது. கௌதமரிடம் மன மாற்றம் இருக்கிறது. மனமறிந்து குற்றம் புரியாத அகலிகை குற்றமற்றவள் – சினத்தால் சாபமிட்ட தானே குற்றவாளி என்னுமளவு அவருள் தெளிவு பிறக்கிறது. பிர ரிஷி பத்தினிகளின் இளப்பப் பார்வையும் ஏளனமும் அகலிகையை மனமுடையச் செய்கின்றன. வனவாசம் முடிந்து வரும் சீதையைச் சந்திக்கிறாள். அவளை அக்கினிப்பிரவேசத்தின் மூலம் ஊருக்குத் தன் கற்பை நிரூபிக்கச் சொன்னார் ராமன் என்று தெரிந்ததும் மீண்டும் கல்லாகி விடுகிறாள். மற்றொரு சந்ததி சதானந்தனைத் தவிர வேண்டும் என்று அவளை அணுகும் கௌதமர் கைக்கு அவளது கற்சிலையே கிடைக்கிறது. இதுவே புதுமைப்பித்தனின் சிறுகதைச் சுருக்கம்.
ராமாயணத்தில் (பக்தியுடன்) வாசிப்பவர்களால் அனேகமாக கவனிக்கப் படாமற் போன ஒரு கதாபாத்திரம் ஊர்மிளை (லட்சுமணனின் மனைவி). மைதிலி சரண் குப்த என்னும் செவ்விலக்கிய கால ஹிந்திக் கவிஞர் ‘ஊர்மிளா கா விரஹ்’ என்னும் காவியம் அது வெளியான செவ்விலக்கிய காலத்தில் பக்திப் பரவசமாகாமல் ராமாயணத்தை அணுகிய முன்னோட்டமான முயற்சி என்று நாம் கருதலாம். இந்த நூல் அடிப்படையில் ‘ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி என்னும் ஆய்வு நூலை நான் எழுதத் தூண்டு கோலாக அமைந்தது. ராமாயணத்தில் சீதை நடத்தப்பட்ட விதம் பெரிதும் விவாதத்துக்கு உள்ளாகிறது. அந்த நூலில் நான் எல்லா கதாபாத்திரங்களின் முரணான நிலைப்பாடுகளைக் கேள்விக்கு உள்ளாக்கி இருந்தேன். சரி இப்போது வோல்கா அவர்களின் மீட்சி சிறுகதைக்கு வருவோம். மீட்சி சிறுகதை ஊர்மிளை பதினாங்கு வருடம் லட்சுமணனைப் பிரிந்து தனது மாளிகையில் தனிமை வாசம் செய்த போது அடைந்த மனப்பக்குவத்தை மையமாக்குவதுடன் சீதை வனவாசம் முடிந்து திரும்பி வந்து மீண்டும் வனத்துக்கு அனுப்பப்படும் கொடுமையையும் நம் சிந்தனைக்கு வைக்கிறது.
கதைக்கான இணைப்பு ————– இது.
கதையில் சில பகுதிகள் கீழே:
ராமனின் மனம் சீதைக்கு தெரியும். ராவணனை தான்தான் சம்ஹரிக்க வேண்டும் என்ற ராமனின் சங்கல்பத்திற்கு முன்னால் சீதையின் பிரதாபம் பின் வாங்க வேண்டியதாகி விட்டது.
“நமக்கிடையே இருக்கும் பந்தத்தில் உங்களுக்கு மிகவும் விருப்பமானது என்ன?” சீதை ராமனிடம் கேட்டாள் ஒருநாள்.
“உன்னை கண்ணின் இமை போல் காப்பது. உன் காலில் சிறிய முள் குத்தினாலும் நான்தான் எடுக்கவேண்டும். உன்னை நெருங்கும் கொடிய மிருகங்களை நான் கொல்லவேண்டும். உன்னைக் காப்பாற்றி வருகிறேன் என்ற எண்ணம் எனக்கு அயோத்தியைக்கு சக்கரவர்த்தியாய் இருப்பதை விட அதிகம் பெருமையை, சந்தோஷத்தைக் கொடுக்கும்” என்றான் ராமன்.
“என்னை நான் காப்பாற்றிக் கொள்ள முடியும். வில் வித்தையில் நான் உங்களுக்குக் குறைந்தவள் இல்லை” என்றாள் சீதை முறுவலுடன்.
ராமனின் முகம் சுண்டிவிட்டது. “நான் உயிருடன் இருக்கும்போது உன்னை நீ காப்பாற்றிக் கொள்ள வேண்டிய அவசியமே வராது. வரவும் கூடாது. நீ எனக்காகக் காத்திருக்க வேண்டும். என் வலிமையான கரங்களின் பாதுக்காப்பிற்காக எதிர்பார்க்க வேண்டும். அப்படி அல்லாமல் உன்னை நீயே காப்பாற்றிக் கொண்டுவிட்டால் இனி நான் எதற்கு? அதுபோல் ஒருநாளும் செய்யமாட்டேன் என்று எனக்கு சத்தியம் செய்து கொடு.”
சீதை ராமனின் கையில் கையை வைத்தாள்.
அம்மா! ராமச்சந்திரன் அஸ்வமேத யாகம் செய்யப் போகிறான். அழைப்பிதழை அனுப்பியுள்ளான். நான் போய் வருகிறேன்” என்று சொன்னார் வால்மீகி மகரிஷி.
மகரிஷி சற்று நேரம் சீதையின் பதிலுக்காகக் காத்திருந்துவிட்டு கடைசியில் கிளம்பிப்போனது சீதைக்குத் தெரியாது. அவள் எதையும் கவனிக்கும் நிலையில் இல்லை.
அஸ்வமேத யாகம் ராமன் எப்படிச் செய்வான்? தான் பக்கத்தில் இல்லாமல் எப்படி சாத்தியம்?
தன்னுடைய இடத்தில் யார் அமர்ந்து கொள்வார்கள்?
சீதையின் மனதில் ஜுவாலை எழும்பியது.
“யார் உட்கார்ந்தால் என்ன? உனக்கு என்ன சம்பந்தம்?”
சீதையின் மனதைப் படித்துவிட்டவள் போல் கேட்டுக்கொண்டே முறுவலுடன் வந்தாள் ஊர்மிளா.
“ஊர்மிளா! நீ இங்கே?” சீதையின் வியப்பிற்கு எல்லையில்லை.
‘நானாகத்தான் வந்தேன். நீ இங்கே இருப்பதாக இலக்குமணன் சொன்னார். அஸ்வமேத யாகத்தைப் பற்றிய செய்தி உன் வரையிலும் எட்டும் என்று தெரியும். உன் மனதில் அது எப்படிப்பட்ட பூகம்பத்தை விளைவிக்கும் என்பதைக்கூட ஊகித்து விட்டேன். அந்த நேரத்தில் நீ நீயாக எஞ்சியிருக்கச் செய்ய வேண்டும் என்று வந்தேன்.”
சீதை ஊர்மிளாவை அணைத்துக் கொண்டு அருகில் உட்கார வைத்துக் கொண்டாள். வெகு நேரம் நிசப்தம். அந்த மௌனத்திலேயே பல வார்த்தைகள் பரிமாறிக் கொண்ட பிறகு ..
“யாகத்தை ஸ்ரீராமச்சந்திரனே செய்கிறாரா?” கேட்டாள் சீதை.
“பின்னே வேறு யார் செய்வார்கள்? சக்ரவர்த்திகள் தானே செய்யவேண்டும்?”
“நான் இல்லாமல் எப்படி?”
“அந்தக் கேள்வி உனக்கு ஏன் வர வேண்டும்? வந்தால் ராமனுக்குத்தான் வர வேண்டும். யாகத்தை செய்து வைப்பவர்களுக்கு வர வேண்டும். தேவையற்ற கேள்விகளுடன் அமைதியை இழப்பது விவேகமற்ற செயல் இல்லையா?” சீதையை விட மூத்தவள் போல் மொழிந்தாள் ஊர்மிளா.
“உனக்குத் தெரியும். சொல் ஊர்மிளா. ராமன் பக்கத்தில் அமரப் போவது யார்?”
“நான் உனக்கு பதிலை சொல்லி உன் அக்னியை தற்காலிகமாக குளிரவைப்பதற்காகவோ, மேலும் தூண்டி விடுவதற்காகவோ வரவில்லை. .அனாவசியமான கேள்விகளுடன் உன்னை நீ துன்புறுத்திக் கொள்ளாதே என்று சொல்லத்தான் வந்தேன்.”
“ஆனால் என்னால் இதை விழுங்கிக் கொள்ள முடியவில்லை.”
“விழுங்காதே. அது உன் மனதில் நுழையவே வேண்டாம். நீ ராமனிடமிருந்து விமுக்தி ஆக வேண்டும்.”
“ஊர்மிளா…” சீதை விசும்பி விசும்பி அழுதாள். “எத்தனை பரீட்சைகள் ஊர்மிளா.”
“ஒவ்வொரு பரீட்சையும் உன்னை ராமனிடமிருந்து விமுக்தி செய்வதற்காகத்தான். நீயே உனக்கு மிஞ்சியிருப்பதற்காக தான். யுத்தம் செய். தவம் செய். ஊடுருவிப் பார். நீ என்ற யதார்த்தம் புலப்படும் வரையில் பார்த்துக் கொண்டே இரு.”
“மிகவும் கஷ்டமாக இருக்கிறதம்மா.” சீதையின் குரல்வளையத்திலிருந்து வார்த்தைகள் மிகப் பிரயாசையுடன் வெளிவந்தன.
“மிகவும் நிம்மதியாகக்கூட இருக்கும் அக்கா. முயற்சி செய்து பார். இனி நான் கிளம்புகிறேன்.” ஊர்மிளா எழுந்து கொண்டாள்.
சீதை, கண்ணகி இருவருமே ஏன் அப்படி ஆணாதிக்க ஓப்புதல் தந்திருக்க வேண்டும் என்னும் விவாதம் இன்னும் முற்றுப் பெறாததே. நாம் கொண்டாடும் பெண்கள் எல்லோருமே ஆணுக்கு அடங்கி அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டு அவனைச் சார்ந்து வாழ்வோரே.
சுயசார்புடன், சுதந்திர சிந்தனை மற்றும் இயங்குதல் உள்ள ஒரு பெண்ணை நம்மால் ஏற்க முடியுமா? ஒரு பெண் சாதனையாளரை நம்மால் மனமாரப் பாராட்ட முடியுமா? ஒரு பெண் எழுத்தாளர் செய்யும் புனைவுச் சாதனைகளை ஆண் எழுத்தாளர்கள் அங்கீகரிக்கிறார்களா? விடையில்லாத கேள்விகள் இவை.
சமூகம் மாற வேண்டும் என்று நான் எப்போது சொன்னாலும் எனக்கு சாதகமான விஷயங்களை ஒட்டியே மாற வேண்டும் என நான் முன்மொழிகிறேன் என்று பொருள் கொள்க. புதுமைப்பித்தன், வோல்கா இருவருமே பிரசார நெடியில்லாமல் கதையைப் படித்த பின் நம் சிந்தனை தூண்டப்படும் விதமாக எழுதியிருப்பதை நாம் ரசிக்கிறோம்.
இலக்கியம் சமுதாய மாற்றத்தை முன்மொழிந்தால் தான் செறிவானது என்று பொருள் கொள்ளலாகாது. கலைத் தன்மையும், சிந்தனைக்கு விருந்து தந்து வாசகனின் தேடலை உசுப்பும் விதமான படைப்புக்கள் எதுவுமே நம்மால் கவனிக்கப்பட்டு வாசிக்கப்படுகின்றன.
இந்தப் பதிவை முடிக்கும் போது ஒன்றை குறிப்பிடுவேன். ஒப்பிடத்தக்க மையக் கருவான இந்த இரு கதைகள் அதாவது சாபவிமோசனம் மற்றும் மீட்சியை வாசிக்கும் போது பதிவில் ஆணை விட பெண்ணின் கண்ணோட்டத்தில் உள்ள நுட்பம் காணக் கிடைக்கும்.
சத்யானந்தன் sathyanandhan.mail@gmail.com