“இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகிறார் ஞானத் தங்கமே”
என்னும் கூற்றுக்கேற்ப, அதன் பொருளை உணர்ந்து கொண்ட நிகழ்வு என் வாழ்வில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. தமிழின் தொன்மையினை அதன் கால நிலையில், அந்தந்த காலத்தில் நிகழ்வுகளுக்கு ஏற்றாற்போல் புவியின் தன்மையை உணர்ந்துகொண்டும் சூரியனை நோக்கிய பூமியின் நீள்வட்டப் பாதையில் தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சுழலும் நடு நிலைக் கோட்டுக்குச் சற்று அருகில் கடலை வேலியாக் கொண்டு வள்ளுவர்களும்
` மணி நீரும் மண்ணும் மலையும் அணி நிழல்
காடும் உடைய அறன்(குறள் 742)
என்னும் குறளுக்கு ஏற்றாற்போல் ஐவகைத் திணைகளைக் கொண்டும் சூரியனின் வட, தென் செலவை மையமாகக் கொண்டும் ஆண்டுக்கு ஆறு பெரும் பொழுதுகள், நாளுக்கு ஆறு சிறுபொழுதுகளைக் கொண்ட இந்த நிலத்தில் அதன் கால நிலையில் இங்குப் பேசப்பட்ட பல்வேறு நாட்டார் வழக்கினைக் கொண்ட தமிழ் மொழி, அதை உலகமெங்கும் முதன் முதலாக கடலில் சென்று திரும்பி தன் நிலத்திற்குத் திரும்பி உலகக் கடல் வணிகத்தை உருவாக்கிய திரை மீளர்கள் என்ற தமிழர்களின் வரலாற்றை (டாக்டர் கால்டுவெல் திரமிளர் என்பார்) உலகெங்கும் பேணி வரும் என்போன்றவர்களுக்கு தமிழ் நிகண்டுகள், அகராதிகள், கலைக்களஞ்சியங்கள் போன்றவற்றைப் படிப்பவர்களுக்கு ஏற்படும் ஓர் ஐயம் 1700 ஆண்டு தமிழ் வரலாற்றில் பிற மொழிகளில் அவற்றைத் தெளிவாகக் காணமுடிகிறது. இந்த நிலையைச் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் உணர்ந்து கொண்ட தனித்தமிழ்ப் பற்றாளர்களின் வரிசையில் மாகறல் கார்த்திகேய முதலியார், நல்லூர் ஞானப் பிரகாசர், மறைமலையடிகள், பாவாணர் போன்றவர்கள் தமிழுக்கு அகராதி எனும் நிலையைக் கடந்து செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் வளர்ச்சியை நோக்கி அன்றைய கால நிலையில் தெளிவாக மக்களிடம் சொன்னார்கள். அன்றைய சமற்கிருதம், ஆங்கிலத்தை அடிப்படையாகக் கொண்ட அந்தக் கால நிலையில் அவர்களின் முயற்சி சில குறிப்பிட்ட மக்களிடம் மட்டுமே சொன்று சேர்ந்தது. ஆனால் இன்றோ கணினி மற்றும் இணைய வளர்ச்சியில் உலகில் வெவ்வேறு பகுதியில் வசித்த தமிழர்களுக்கும் தமிழியல் ஆய்வாளர்களுக்கும் தமிழின் மீது ஈடுபாடு மிகுதியாக உள்ள இணை வழியில் உலவி வரும் அனைவரும் புரிந்துகொள்கின்றனர்.` 2500 ஆண்டுகளுக்கு முன் உலவி, கடலால் இணைந்த தமிழ்மொழி அன்றைய உலகமொழிக் குடும்பங்கள் ஏழில் ஒன்றாக இருந்தது. அதன் விளைவாக இன்றைய உலகத்தில் பதினான்காவதாக பேசப்படும் மொழியாக இருந்தாலும், உலகின் முதல் நாகரிக மொழி எது என்ற கோட்பாட்டில், ஏழு மொழிக் குடும்பங்களில் ஒன்றாக தமிழை அடிப்படையாக்க் கொண்ட திரைமீளர் என்ற திராவிட மொழிக் குடும்பமாய் இருக்கிறது.
இந்த நிலையில்தான் தமிழின் தொன்மையை உலகெங்கும் தேடி 26 ஆயிரம் தமிழ்ப் பெயர்களை அந்தந்த இடங்களில் மரபு, பண்பாட்டு அடிப்படையில் ஒப்பீட்டியலில் செய்யும் எனக்கு செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் துறையில் மிகவும் ஆர்வம் ஏற்பட்டது. அதன் விளைவாக பாவாணர் குறித்த முதல் ஆவணப்படம் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். இந்த நிலையில்தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மயிலாடுதுறையில் ஏ.வி.சி. கல்லூரியில் தாய் மொழி நாள் விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டேன். எனக்குத் தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் துரை.குணசேகரன் ஐயா அவர்கள் தமது தமிழ்ச் சொற்பிறப்பியல் வளர்ச்சி வரலாறு என்னும் ஆய்வு நூலை எனக்கு அன்பளிப்பாக அளித்தார். அந்த அன்பளிப்பு எனக்கு இன்ப அதிர்ச்சியை உருவாக்கியது. அந்த நூலினை சென்னை வருவதற்குள் படித்து முடித்தேன். பல நாள் நான் தொடர்ந்து தேடிய பொருள் கிடைத்ததில் எல்லையில்லா மகிழ்வு கொண்டேன்.
ஐயா துரை குணசேகரன் தம் இளம் முனைவர் பட்டத்திற்காக’தமிழ்ச் சொற்பிறப்பியல் வளர்ச்சி வரலாறு என்னும் பொருளை தெரிவு செய்து 1984இல் ஆய்வு முடித்து அதனை ஜூன் திங்கள் 1989இல் நூலாக்கம் செய்துள்ளார். இன்றைக்குச் சற்றொப்ப முப்பத்தொரு ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்ட ஆய்வாக இருப்பினும், இன்றும் தனக்கென தனியிடத்தை வகிக்கிறதென்றால் அதன் சிறப்பை என்னென்று சொல்வது?
மேற்காணும் நூலினை நான் ஆய்வுக்குச் செல்லுமிடங்களுக்கெல்லாம் எடுத்துச் செல்வேன். எப்போதும் என் மேசை மீது பார்வையில் வைத்திருப்பேன். மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரிக்கு மீண்டும் சிறப்புரையாற்றச் சென்ற போது தமிழ்ச் சொற்பிறப்பியல் வளர்ச்சி வரலாறு மறு பதிப்பு காணவேண்டும் என்று ஐயாவை வற்புறுத்திக் கேட்டுக்கொண்டேன். அதன் விளைவாக அந்த நூல் மறுபதிப்பு காண்கிறது. அதனை என்.சி.பி.எச். நிறுவனம் வெளிக்கொணர்வது பாராட்டுதற்குரியது இம்முயற்சி எனக்கு மன நிறைவையளிக்கிறது. இன்று தமிழ் மொழியின் பிறப்பை உலகெங்கும் பல துறையில் காண்பவர்கள் தமிழின் பன்முகப் பார்வையைப் புரிந்து கொண்டு தத்தம் திறமையை வளர்த்து வருகிறார்கள். இந்த நிலையில் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்னும் தொல்காப்பியரின் கோட்பாட்டின்படி பலவாயிரம் ஆண்டுகள் ஆனாலும் பிறமொழிக் குடும்பங்களில் தேடக்கூடிய பிறமொழி கலக்காத செந்தமிழை, அதன் கூறுகளை உலக மொழிக்குடும்பங்களில் தேடக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. அதற்குச் செந்தமிழச் சொற்பிறப்பியல் வளர்ச்சி வரலாற்றைத் தெரிந்து கொண்ட பிறகு மிகத்தெளிவாக அறியும் சாத்தியமாகும். அவ்வகையில் பல்வேறு பிரிவுகளைக் கொண்டு மிக எளிதாக சொல் பற்றி ஆயும் இயல்கொண்ட இந்த நூல் சொற்பிறப்பியலாளர்களின் பல்வேறு கட்ட வளர்சியை மிகத்தெளிவாக விளக்குகிறது. மேற்படி ஆய்வுக்கு இது பெரிதும் உகந்த நூல்.
செந்தமிழ்ச் சொற்பிறப்பியலில் தமது காலத்தை செலவிட்டு மறைந்த பாவாணர் அவர்களின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியின் முதன் மடலம் வெளிவரும் முன்பே வெளிவந்த துரை.குணசேகரன் அய்யாவின் இளம் முனைவர் பட்ட ஆய்வு நூல் அன்றைய காலகட்டத்தில் அந்த நூலின் சிறப்பை புரிந்து கொண்ட பேராசிரியர்கள் முனைவர் மறைமலை ஐயா, முனைவர் ஜெயதேவன் ஐயா, அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா உள்ளிட்ட பல தமிழறிஞர்கள் முயன்று 1989இல் நூலாக வெளிக்கொண்டு வந்துள்ளனர்.
இந்த நூலை தமிழ் முதுகலை மாணவர்களுக்குப் பாடமாக வைத்தால் தமிழின் தொன்மை, சிறப்புகளை அறிந்துகொள்வதுடன் புதிய சொற்களை உருவாக்கிக் கொள்ளும் திறனும் மாணவர்கள் பெறுவர். நூலாசிரியர் ஐயாவைத் தமிழுலகம் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இத்துறையில் பல காலம் உழைத்து பல அரிய நூல்களை ஆக்கித் தர வேண்டும்.
தமிழ் மொழியில் இலக்கணம், இலக்கியம், இயல், இசை, நாடகம் எனப் பல்வேறு பிரிவுகள் வளர்ந்து வரும் சூழலில் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் ஆய்வின் வழி உலக நாடுகள் எங்கும் பரவியிருக்கும் தமிழ் மொழியின் கூறுகளை ஒப்பீட்டியல் ஆய்வில் வழி கண்டு அதனை உலக மக்கள் அறியும் வண்ணம் அதன் வாழ்வியல் திறனைக் கொண்டு செல்ல வேண்டும், அதற்கு இந்த நூல் பெரிதும் பயன்படும்.
வடுவூரைச் சார்ந்த துப்பறியும் புதினவாசிரியர் வடுவூர் துரைசாமி ஐயங்கார் சொற்பிறப்பியல் துறையில் உழைத்து 1935 இலேயே ஆளைளனபே டுனமே என்னும் நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டார். தமிழில் ஓரசைச் சொற்களே முதலில் தோன்ற அதன் முன்னும் பின்னும் ஆய்தத்தை சேர்த்து சொற்களை உண்டாக்கினர் என்பது அவரின் கோட்பாடு(ப.5) என்பதைச் சுட்டிக்காட்டும் இந்நூலாசிரியர் வடுவூர் துரை.குணசேகரன், வடுவூராரின் மேற்கண்ட நூலை மறுபதிப்பு செய்வதுடன், அவர் குறித்த ஆய்வு நூல் ஒன்றையும் படைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். நூலாசிரியரை மனமாரப் பாராட்டுகிறேன்.
அனுப்பியவர்: gunatrf@gmail.com