வாசிப்பும், யோசிப்பும் 236 : சில முகநூல் பதிவுகள்…

பாரதி ஒரு கருத்து முதல்வாதியா அல்லது பொருள் முதல்வாதியா

பாரதி ஒரு கருத்து முதல்வாதியா அல்லது பொருள் முதல்வாதியா‘முகநூல்’ நண்பர்களிடம்  ஒரு கேள்வி. நான் அறிந்த வரையில் பாரதி ஒரு கருத்து முதல்வாதியா அல்லது பொருள் முதல்வாதியா என்னும் நோக்கில் குறிப்பாக அவரது ‘நிற்பதுவே நடப்பதுவே’ என்னும் கவிதை கூறும் பொருளின் அடிப்படையில் 1981/1982 வெளியான மொறட்டுவைப் பல்கலைகழகத்தமிழ்ச் சங்க வெளியீடான ‘நுட்பம்’ இதழில் நான் எழுதிய ‘பாரதி கருத்துமுதல்வாதியா அல்லது பொருள்முதல்வாதியா’ என்னும் கட்டுரையே முதன் முதல் எழுதப்பட்டதாகத் தெரிகின்றது. வேறு யாராவது இதே கவிதையினை , இதே நோக்கில் கட்டுடைத்துள்ளார்களா? அவ்விதம் யாராவது எழுதியிருந்தால் 1981ற்கு முன்னர் எழுதியிருக்கின்றார்களா? இந்நோக்கில் பாரதியை முதலில் அணுகியவர்கள் யார் யார் என்று அறிய ஆவலாயுள்ளேன். அறிந்திருந்தால் அறியத்தரவும். முற்கூட்டியே நன்றி பல நண்பர்களே. [என் முகநூல் நண்பர்களாக ஊடகவியலாளர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், இதழாசிரியர்கள், முனைவர்கள், நாடறிந்த எழுத்தாளர்கள்.. எனப்பலர் இருக்கின்றார்கள். அதனால்தான் நண்பர்களே உங்களிடம் கேட்கின்றேன்.]

‘பதிவுகள்’ இணைய இதழில்: பாரதியின் பிறந்ததின நினைவுக் கட்டுரை: ‘பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!’ பாரதியின் பிறந்ததின நினைவுக் கட்டுரை: ‘பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!’ -வ.ந.கிரிதரன் -http://www.geotamil.com/index.php…


Shodhganga ( shodhganga.inflibnet.ac.in ) என்னும் இணையத்தளம்

 

Shodhganga ( shodhganga.inflibnet.ac.in ) என்னும் இணையத்தளம்  இந்தியாவில் வெளியான முனைவர் பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் சேகரிப்புத்தளமாகும். Shodhganga ( shodhganga.inflibnet.ac.in ) என்னும் இணையத்தளம்  இந்தியாவில் வெளியான முனைவர் பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் சேகரிப்புத்தளமாகும். தற்செயலான கூகுள் தேடலில் Chapter 2 REVIEW OF LITERATURE என்னும் இத்தளத்திலுள்ள ஆய்வுக்கட்டுரையொன்றின் பக்கம் அகப்பட்டது. அந்த ஆய்வுக் கட்டுரையில் வவுனியா வளாகத்தைச்சேர்ந்த முனைவர் ஞானசீலன் ஜெயசீலன் என் படைப்புகளைப்பற்றி எழுதிய ஆய்வுக்கட்டுரை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளதை அவதானித்தேன். அது வருமாறு:

“The migration of the ̳Tamils‘ is an interesting study, Gnanaseelan Jeyaseelan [127], a lecturer at Vavunya Campus, University of Jaffna, wrote a research paper on, The , ‘Translocal Nationalism of the Sri Lankan Tamil Diaspora: A Reading of Selected Short Stories (2007) of V.N. Giridharan’, University of Jaffna, Sri Lanka. In this, Jeyaseelan does a critical analysis of the treatment of characters in the stories by the growing Sri Lankan – Canadian writer. The North American dominated land of Canada and the soils of Sri Lanka are vividly described and the themes of ̳Identity‘ and ̳Home‘ are brought to the fore by a very powerful diction.”

Chapter 2 REVIEW OF LITERATURE என்னும் ஆய்வுக்கட்டுரைப்பக்கத்துக்கான இணைய இணைப்பு: http://shodhganga.inflibnet.ac.in/…/10603/79025/5/chapter%2…

இந்த ஆய்வுக்கட்டுரையின் முழு வடிவத்தையும் உடனடியாக அறிய முடியவில்லை. Shodhganga இணையத்தளத்தில் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும்.


வாலிபக் கவிஞர் வாலியின் வரிகளைத் திருடிய கவிஞர் வைரமுத்து!

வாலிபக் கவிஞர் வாலியின் வரிகளைத் திருடிய கவிஞர் வைரமுத்து! இன்று காலை கவிஞர் வாலியின் சிறந்த திரைப்படப்பாடலான ‘காற்று வாங்கப்போனேன்’ பாடலைப் பகிர்ந்திருந்தேன். அப்பாடலில் வரும் ‘நல்ல நிலவு தூங்கும் நேரம் அவள் நினைவு தூங்கவில்லை’ என்ற வரிகளை மீண்டும் நினைத்துப்பார்த்தபொழுது இவ்வரிகளை இன்னுமொரு பாடலிலும் கேட்டது ஞாபகத்துக்கு வந்தது. சிறிது முளையைப்போட்டுக் குடைந்து பார்த்தேன். ஞாபகத்துக்கு வந்தது. அது ‘குங்குமச்சிமிழ்’ திரைப்படத்தில் வரும் ‘நிலவு தூங்கும் நேரம். நினைவு தூங்கிடாது’ பாடல்தான். இளையராஜா, எஸ்.பி.பி / எஸ்.ஜானகி கூட்டணியில் உருவான பாடல்களிலொன்று. நிச்சயம் அந்தப்பாடலைக் கவிஞர் வைரமுத்துதான் எழுதியிருக்க வேண்டுமென்று என் மனது முடிவு செய்தது.

இந்நினைவு தோன்றியதுமே மனதிலொரு மகிழ்ச்சி. ஆ.. முகநூல் பதிவுக்கு ஒரு விடயம் கிடைத்து விட்டது. எப்படி அப்பதிவுக்குத் தலைப்பிடலாம் என்று சிந்தித்துப்பார்த்தேன். ‘கவிஞர் வாலியைச் ‘சுட்ட’ கவிஞர் வைரமுத்து’ என்று தலைப்பிடலாமா என்றொரு சிந்தனையோடி மறைந்தது. ‘வாலிபக் கவிஞர் வாலியின் வரிகளைத் திருடிய கவிஞர் வைரமுத்து’ என்று போடலாமா என்றும் சிந்தித்துப்பார்த்தேன். இதுவே பொருத்தமானதாகப்பட்டது. இத்தொடரில் நான்கு மோனைகள் வருவதால்தான் இந்த முடிவு. 🙂

இரவு முகநூல் பதிவினையிட முன் மீண்டுமொருமுறை ‘நிலவு தூங்கும் நேரம். நினைவு தூங்கிடாது’ பாடலை ‘யூ டியூபில்’ கேட்டேன். கேட்டபின் அப்பாடலின் இசை, வரிகள், பாடகர்கள் பற்றிய விபரத்தை நோக்கினேன் 🙂

அதில் பாடலாசிரியர் ‘கவிஞர் வாலி’ என்றிருந்தது 🙂

இது எப்படி இருக்கு?

ngiri2704@rogers.com