சங்க இலக்கியத்தின் புறவாயிலாகக் கருதத்தக்கப் புறநானூற்றில் வேடன், வீரன், வேந்தன், சிற்றரசன் என நான்கு வகையான சமூக அடுக்குகள் காணப்படுகின்றன. ஒரே காலத்தில் இந்த நான்கு வகை சமூக அமைப்புகளும் நிலைநிறத்தப்பட்டுள்ளது. மேலும் இப்புறப்பாடல்களில் வேந்தர்களிலிருந்து விறலி வரை பாடியுள்ளது குறிப்பிடத்தக்கச் செய்தியாகும். தொல் புறத்திணையான வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், காஞ்சி, என இவ் ஏழினுள் உழிஞை திணை புறநானூற்றுப் பாடல்களில் எங்குமே இடம்பெறவில்லை.
மேலும் இப்புறப்பொருளை மையமிட்டு பாடப்பட்ட நூல்களாகப் பதிற்றுப்பத்து, புறநானூறு என இரு நூல்கள் தனித்து இயங்குகின்றன. இதில் பதிற்றுப்பத்து சேரமன்னர்களின் வரலாற்றை மட்டும் எடுத்தியம்புகின்றது. ஆனால் புறநானூறு வேட்டையாடி சேகரித்து பங்கிட்டு வாழ்ந்த இனக்குழுச் சமூகம், அதற்கு மாறாக நாகரிக வளர்ச்சியின் உச்சநிலையில் அதிகாரம் செலுத்திய மூவேந்தர்களின் சமூகம், அம்மூவேந்தர்களுக்கு போர் புரிதற் பொருட்டு உதவிய வீரயுகச் சமூகம், இனக்குழுச் சமூகத்தின் வாழ்வியலையும் மூவேந்தர்களின் நாகரிக வளர்ச்சியையும் ஒருங்கே பெற்று ஒரு சிறு நிலப்பகுதியை ஆண்ட குறுநிலமன்னர்கள் எனத் தமிழ்ச் சமூகத்தில் வாழ்ந்தப் பல சமூக மக்களை அடையாளப்படுத்தியுள்ளது. இவ்வாறு அடையாளப்படுத்துவதன் மூலம் புறநானூறு தமிழ் மக்களின் வரலாற்று ஆவணமாகத் திகழ்கின்றன.
ஒரு சமூகம் அமைப்பு என்பது முறைப்படுத்தப்பட்ட சமூக குழுக்கள், சமுதாயத்தில் நிலவும் பழக்கவழக்கங்கள் ஒழுக்கம் பிற நடத்தைகள் முதலியவற்றை ஒழுங்குபடுத்தி அதில் மக்களை இணைக்கும்போது உண்டாகும் சமூகக் குழு அல்லது சமுதாய அமைப்பு குழுக்களை நடத்தை, பண்புகள் மூலம் ஒன்றிணைத்து அவற்றிடையே உள்ள முரண்பாடுகளை களைதல் இதன் நோக்கமாகும். அல்லது அமைப்பின் இயக்களை ஆராய்வது. (சமூகவியல் பக் : 162 – 163) இதனடிப்படையில் எந்த ஒரு சமூக அமைப்பும் தன் வாழ்வியலை விழுமியம் சார்ந்த பண்பாட்டு கூறுகளை உள்ளடக்கியதாக இருக்கும். ஏனெனில் பண்பாடு என்பது மனித வாழ்வியலோடு கட்டமைக்கப்பட்டது. இது தனிமனித வாழ்விலும், மற்றவர்களோடு பழகுவதிலும் தனித்தன்மையுடன் மனிதனை உயர்த்தும் தன்மையுடையது.
இதில் மானிடவியல் நோக்கில் புறம் சார்ந்த நானூறு பாடல்களில் பத்துப் பாடல்களை மட்டும் ஆய்வுக்களமாகக் கொண்டு இனக்குழுத் தலைவன், வேந்தரை மட்டும் மையப்படுத்திச் தமிழ்ச் சமூகம் சார்ந்த இனவாழ்விலை நாகரிகம், பண்பாடு என இருபொருண்மை வழிநின்று அச்சமூகத்தின் வாழ்வியலின் வளர்ச்சி நிலையைப் புலப்படுத்தும் நோக்கில் இக்கட்டுரை அமைக்கிறது.
மானிடவியல் மையப்படுத்தும் பண்பாட்டுக் கலவை
நடன அசைவுகள், ஒவ்வொரு நடன அசைவிற்குமுள்ள விதிமுறைகள், கருவிகளைக் கொண்ட பின்னணி இசை போன்ற பல கூறுகள் ஒன்றிணைந்த நிலையில் நிகழ்த்தப்படுவதே நடனமாகும். அதோடு நடனம் பல பொருள்களில் நிகழ்த்தப்படுகிறது. சமயச் சடங்குகள், மந்திரச் சடங்குகள், காதல் வெளிப்பாடு, பொழுதுபோக்கு, விழாக்கள் போன்றவை சில. இதுபோன்ற வகைகளில் நிகழ்த்தப்படும் ஒவ்வொரு வகையான நடனத்திற்கும் தனித்தப் பொருளுண்டு. ஒவ்வொரு வகையிலும் பல கூறுகள் இணைகின்றன. நடனத்தைப் போன்றே வீடு என்பது ஒரு தனிப்பட்ட பண்பாட்டுக் கூறன்று. கல், மணல், சிமெண்டு, வாயிற்படிகள், சன்னல்கள், கிணறு போன்ற பல தனிப்பட்ட கூறுகள் ஒன்றிணைந்த தொகுப்பாகவே உள்ளது. அவ்வாறே கால்பந்தாட்டமும் பல கூறுகளின் தொகுப்பாகவே உள்ளது. விளையாட்டுத் திடல், பார்வையாளர்கள், விளையாட்டுக் கருவிகள், விளையாட்டு நுட்பம், ஆட்டக்காரர்கள், நடுவர் போன்ற பல கூறுகள் அதனுள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு பல கூறுகள் ஒன்றாகக் கலந்து ஒரு சேர்மமாகக் காணப்படுவது பண்பாட்டுக் கலவை எனப்படும். ஒன்றுக்கும் மேற்பட்ட கூறுகளால் இணைக்கப்பட்ட இப்பண்பாட்டுக் கலவையானது பண்பாடு என்னும் எந்திரத்தில் பல துணை உறுப்புகளாக இணைக்கப்பட்டுள்ளது. (பண்பாட்டு மாணிடவியல் பக் 156 – 157) பல பண்பாட்டுக்கூறுகளின் தொகுப்பாக உள்ள பண்பாட்டுக் கலவைகள். புறநானூற்றில் மையப்படுத்தும் இனக்குழுச் சமூகம், இருக்கை – வன்புலம் (உறைவிடம் – குடிசை/முன்றில், உணவு, வேட்டை – விலங்கு/ பறவை, வேளாண்மை – வரகு/ திணை, குடிநீர், சிறார் – விளையாட்டு, நம்பிக்கை, விருந்து பேணல், தலைவன் – வேந்தன் அரசியல் உறவு போன்ற பண்பாட்டு நாகரிக வாழ்வியல் கட்டமைப்புதான் “வேட்டையாடி உணவு சேகரித்தல், (விலங்கு/பறவை) தொடக்க வேளாண்மை (வன்புலம் திணை வரகு) மேம்பட்ட வேளாண்மை (மென்புலம் நெல், கரும்பு) நகர உருவாக்கும் (இயற்கையையும் /இனக்குழு அழித்தல்,திருந்திய வாழ்க்கை) நாகரிகம் (அரச உருவாக்கம்)” (மானிடவியல் கோட்பாடு ப : 67) வடவைதீக சடங்குகளாலும், சமனபெளத்த கருத்துக்களாலும் நிலைகொண்டு உயர்ந்த வாழ்வை அரச சமூகம் கட்டியமைத்தல். இதைபோன்றே அரச சமூகம் நிலையாகக் காலூன்ற ஐம்பூதங்களுடன் ஒப்பிடுதல், வட வைதீகம்,நாட்டின் எல்லைப் பரப்பு வேந்தர் அடையாளப் பூ / சின்னம் ( குடை, கோல்), மருத நில வளம், அறம் உரைத்தல், நீண்ட ஆயுளைப் பெற வாழ்த்துதல், போர்கள வெற்றிகள் பாடுபொருள் நாகரிக வளர்ச்சியால் பண்பாட்டுக் கலவையாக வாழ்வியலைப் புலவர்களின் பாடுபொருளில் உருவான சேர, சோழ, பாண்டியான மூவேந்தர்களையும் நிலைபெறச் செய்துள்ளனர்.
இனக்குழுச் சமூகத்தில் உருவான பண்பாட்டு கட்டமைப்பு
இனக்குழுத் தலைவன் எத்தகைய நிலையில் வாழ்ந்தான் என்பதை கா.சுப்பிரமணியன் பின்வருமாறு அடையாளப்படுத்துக்கிறார். “இனக்குழுத் தலைவன், அக்குழு மக்களைப்போலச் சாதாரண நிலையிலேயே வாழ்ந்தான். அவனுக்கெனத் தனிச் சலுகைகள் கிடையா. மக்களோடு சேர்ந்து உழைப்பில் பங்குகொண்டு, உணவு தேடியும், உணவைப் பங்கு வைத்து உண்டு வாழ்ந்தான்.” (சங்க காலச் சமுதாயம் ப – 33) என்று இனக்குழுத் தலைவனின் வாழ்வியலை வறுமை நிலையில் சித்தரிக்கிறார்.
சடங்குகள் தொடக்கத்தில் ஒன்றைப்போலச் செய்தல் வாயிலாக இயற்கையைக் கட்டுப்படுத்த முடியும் என்னும் நம்பிக்கையின் அடைப்படியில் அமைந்தது, இந்த நம்பிக்கையே இயற்கையால் வரும் தீயவற்றைத் தடுக்கமுடியும் என நம்பினர். இதனை,
தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ
வாங்குமருப்பு யாழொடு பல்இயங் கறங்கக்
கைபயப் பெயர்த்து மையிழுது இழுகி;
ஐயவி சிதறி, ஆம்பல் ஊதி
இசைமணி எறிந்து காஞ்சி பாடி
நெடுநகர் வரைப்பின் கடிநறை புகைஇக்
காக்கம் வம்மோ காதலந் தோழி! (புறம் பா:281)
வேந்தன் பொருட்டு போர்க்களத்திற்குச் சென்று விழுப்புண்பட்ட வீரனொருவன். தம் மனையில் இருந்தபோது இரவ மரத்திரனது இலையினோடு வெப்பந்தழையையும் வீட்டின் கூரையில் செறுகி, வளைந்த தண்டினையுடைய யாழினையும் அதனோடு பலவாகிய வாத்திய கருவிகள் ஓசையிட, மெல்லியதம் கைகளினால் மையாகிய மெருகினை எடுத்து தடவி,வெண்கடுகினை வாசலில் தூவி, ஆம்பல் தண்டினது குழாயின் மூலம் ஊதுகின்றனர். மேலும் மணியினை இசைத்து, காஞ்சிப்பண் பாடி, நெடிய பெரிய வீட்டில், நறுமணப் புகையினை உண்டாக்கி, அவன் மனைவியும் அவர்தம் தோழியும் மாந்திரிகத்தின் அடைப்படையில் இயற்கையை பணிய வைக்கச் சடங்குகள் செய்கின்றனர். இதன் மூலம் தீயவற்றைத் தடுக்கும் இத்தகைய சடங்கின் மூலம் மீண்டும் அவ்வீரன் மீண்டெழுவான் என்பது அக்கால நம்பிக்கை. இருந்ததை அறியலாம்.
மேலும் அவனது ஊரனது வெட்டவெளியான காய்ந்துபோன சருகுகள் கிடக்கின்ற ஊராகும். நடுகல் எழுப்பட்டிருக்கிறது. அது எங்கிருந்து பார்த்தாலும் தெரியக்கூடிய அளவு உயர்ந்துள்ளது. அங்கு நெல்லி மரங்கள் முளைத்திருக்கின்றன சிறிய விதையினையுடைய நெல்லிக் கொட்டைகள் நிறைந்த சிற்றூரிலே தங்கியிருப்பவன். (புறம் : 314) மன்றில் தங்கிருக்கும் தன்மையுடையவன். (மன்றில் –மன்றம் பொதுவாக இருக்கும் இடத்தின் பெயர்.) (புறம் : 322) மன்றத்து வளைப்புறங்களில் குறுமுயல்கள் துள்ளி விளையாடும். புலவர்களும் தங்கி செல்லும் இடமாகவும் மன்றம் பொது நிலையில் இருந்துள்ளது. உறைவிடமாகக் குடிசை, முன்றில், வன்புலப்பகுதியாகவும் இருந்துள்ளது. இவர்களுக்குக் குடிநீர் கிடைப்பது அரிதாகவே இருந்துள்ளது. இதனை, வீட்டினது முற்றத்தில் தொன்மையான வாயினையுடைய சாடி அமைந்துள்ளது. அந்த சாடியில் செம்மண் நிலத்தில் அழமான குழி தோண்டி அங்கிருந்து ஊற்றெடுத்த குறைந்த செந்நீரை எடுத்து வந்து சாடியில் நிரப்புகின்றனர். அதில் நான் கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டேன். மீதியுள்ள கொஞ்சம் நீரானது எந்தவித மாசும் இல்லாமல் இருக்கிறது. (அதனை நீங்கள் குடிக்கலாம் என்கிறாள்.) (புறம் : 319)
இத்தகைய இனக்குழுத்தலைவனின் வறுமை நிலையில் இருந்துள்ள நிலையிலும் பிறருக்குப் பகிர்ந்தளிக்கும் தன்மையுடையவனாகவும், அவனில்லாதபோது அவன் வீட்டிற்குச் சென்ற நிலையிலும் மனைவி விதைப்பதற்கு வைத்திருந்த தினை நெல்லை உணவாக அளிப்பதும், (புறம் :333) விருந்தினரைக் காக்க வைத்தல் கூடாது என்ற நோக்கில் குறுமுயலை சுட்டு உணவாகத் தருவதும் (புறம்: 319) இனக்குழுவின் கூட்டுச் சமூகமாக இருந்து பகிர்ந்து உண்ணும் பண்பை அவர்கள் வாழ்விலும் காணமுடிகிறது. இனக்குழுச் சமூகத்தில் விருந்தோம்பும் பண்பு தலையாய இல்லறக் கடமையாகவும், தலைவனைக் காணச் செல்லும் பாணன் புலவன், விறலி என எவர் வரினும் அவர்களை உபசரித்து விருந்து படைக்கும் பண்பு இவ்வினக்குழுச் சமூகத்திடம் பண்பாக்கமாக நிலைபெற்ற ஒன்றாக இருந்துள்ளது. இது இவர்கள் உணவைப் பங்கிட்டு பலரோடு உண்டு மகிழ்ந்த அவர்களின் பொதுவுடமைச் சித்தாந்ததின் வழிவந்ததால் நாகரிகம் அடைந்த காலத்தும் நிலைப்பெற்று இருக்கிறது. மேலும் உணவிற்காக வேட்டையாடுதல் என்பதே ஆதி இனக்குடித்தலைவர்களின் தொழிலாகவும், பின் நாகரிக வளர்ச்சி நிலை மாற்றத்தால் வன்புல நிலத்தில், அதாவது வறண்ட பகுதியில் வரகு, தினை முதலியவை உணவாகக்கொண்டு வாழ்ந்துள்ளனர்.
பாணன் தேடிவந்த இனக்குழுத் தலைவனின் ஊர் எப்படிப்பட்ட தன்மையுடையது என்றால் வளைந்த கொம்பினை உடைய காட்டுப் பசுவினுடைய கன்றுக்குட்டியினது தலை நடுங்கிக் கொண்டிருக்கிறது. அதனை அவ்வூர் சிறுபிள்ளைகளான அவர்களது தலையில் இன்னும் சரியாக முடிகூட வளரவில்லை. அப்படிப்பட்ட தலையை உடைய சிறுவர்கள் தங்களது நடைவண்டியில், அக்கன்றுக்குட்டியைக் கட்டி இழுத்துப் போகச் செய்வர். (புறம் :319) இதனையடுத்து மற்றொரு பாடலில் இனக்குழுத்தலைவன் ஊரின் காட்சியைக்கொண்டே வேந்தர்களுக்கு இணையான மறப்பண்பு மிக்கவர்களாக வாழும் தன்மையுடையவர்கள் என்பதை இவ்வினக்குழுத் தலைவர்களிடம் வாழும் சிறார்களின் வேட்டையாடி பொழுதுபோக்கும் செயலைக்கொண்டே எலியை வேட்டையாடுதலைக்கொண்டே விளக்குகிறார். (புறம் :322)
இனக்குழுத் தலைவன் – வேந்தன் அரசியல் உறவு.
இனக்குழுப் பணபாட்டின் நாகரிக வளர்ச்சியினால் தோற்றம் பெற்ற வேந்தர் சமூகம், தம் ஆட்சிப் பரப்பையும், தம் பகைவரை எதிர்த்து பேரிடவும், நாகரி வளர்ச்சியில் இனக்குழுச் சமூகம் உருமாற்றம் பெற்ற சீறூர் மன்னர்கள், குறுநில மன்னர்கள் ஆகியவர்களின் மறப்பண்பைத் உதவியாகப் பெற்றது. இதனை,புறநானூற்றுப்பாடல் வழியே பின்வருமாறுக் கணலாம்.
குடியு மன்னுந் தானே கொடியெடுத்து
நிறையழிந் தெழுதரு தானைக்குச்
சிறையுந் தானேதன் னிறைவிழு முறினே (புறம் பா:314)
வேந்தனுக்கு பகைவருங்காலத்து அவனுக்கு உதவி செய்தற்பொருட்டு வேந்தரை எதிர்த்து நின்ற பகைவர் படையை அழித்து அவ்வேந்தனைக் காக்கும் பொருட்டு இனக்குழுத் தலைவன் செயல்பட்டுள்ளான். மேலும் வேந்தனுக்காக பகைவரை எதிர்த்து நின்று போரிட்டு இனக்குழுத் தலைவன் புண்பட்ட நிலையும் முன்பே கூறப்பட்டுள்ளது (புறம் 281)
அதன்பொருட்டு வெற்றிபெறும் அவ்வேந்தனும் வேண்டிய செல்வம் கொடுத்து அவனுடன் நட்பும் பழகு அளவிற்கு இருந்துள்ளான். புண்பட்ட நிலையிலும் இனக்குழுத் தலைவன் வேந்தன் ஏவிய செயலை முடித்தற்பொருட்டு செல்லும் மறப்பண்புடையவன் (புறம் : 319)
பகை வேந்தர் சமூகத்து வாழ்நிலத்தில் கரும்பை அரைக்கின்ற எந்திரம் ஒசை, அவ்வோசையைக் கேட்டு பக்கத்து மருத நிலத்து நீர்நிலைகளில் வாளை மீனனது துள்ளும் மென்மையையும், வன்புலத்தில் வாழும் சிறார்கள் வரகு சூழ்ந்த வன்மையான நிலத்துப் பகுதியின் தன்மையையும் கொண்டு இனக்குழுத் தலைவன் வேந்தனை விடவும் வன்மையுடையவன். (புறம் :322)
ஆதி வேளாண்குடி, முதல் வேளாண் குடியாகவும் தமிழிச் சமூகத்தில் தங்களை நிலையாக நிலை நிறுத்திக் கொள்ள முயன்ற இனக்குழுச் சமூகம் தான் வாழந்த வன்புலப் பகுதியில் வரகு தினை முதலியவைகளை பயிரிட்டது. இதன் நாகரிக வளர்ச்சியே மென் புல மருத நிலம் சார்ந்த கரும்பு, அரிசி பயிரிடுதல் போன்ற நீலம் / நீர் கட்டமைப்பு மற்றும் பண்டமாற்றும் மூலம் செல்வம் பெருக்குதல், அதாவது பிற நாடுகளுடன் வாணிகம் செய்தல், கட்டிட வேலையமைப்பு நகர மையம் சார்ந்த ஒரு வேந்தர் இனச் சமூகம் உருவாகியது. அவ்வேந்தர் இனச் சமூகம் இனக்குழுச் சமூகம் உருவாக்கிய வன்புல வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டு நாகரி படிமலர்ச்சியில் நகர மையமாக உருவான வேந்தர் இனச் சமூகமாகும். ‘அச்சமூகம் வடவைதீகம் உருவாக்கிய சடங்கு ரீதியாகவும், சமண பெளத்தம் சார்ந்த அறக் கருத்துருவாக்கங்களையும் புலவர் மரபு வாயிலாகத் தமிழ்ச் சமூகத்தில் உயர்ந்த சமூக வெளிப்படுத்தியுள்ளனர்.’ (தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும் ப : 309) இதைப் போன்றே படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, என ஒரு அரசம் பெற வேண்டியவை குறித்து திருக்குறளும், குடை, கொடி, முரசு, தேர், தார், முடி என ஒரு அரசன் பயன்பாட்டுக்குரியவை இவை என்று அடையாளப்படுத்தும் தொல்காப்பிய மரபிலும் ஒப்பு நோக்கினால் வேந்தனை தமிழ்ச் சமூகத்தில் உயர்வுடையவனாக மாற்றும் போக்கு தெளிவாகப்புலப்படும்.
மூவேந்தர் சமூகம்
இனக்குழுச் சமூகத்தில் அரசன் என்பவன் கிடையாது. தலைவன் உள்ளான். தலைவனுக்காக இறப்பது கிடையாது. இதுபோன்றே வேட்டையாடி வாழ்ந்த இனக்குழு மக்கள் அரசு உருவானபோது அதுவே மனிதர்களைக் கொள்ளும்போது வீரம் என்பது தோன்றியது. அதுதான் வீரயுகம். ஐந்நிலங்களுக்கும் மன்னர்கள் தோன்றியதால் நிலம் நாகரிக வளர்ச்சியால் மாற்றமடைகின்றது. உடைமை என்பது முல்லை (வன்புலம்) நிலத்தில்தான் தோன்றியிருத்தல் வேண்டும். ஆநிரைகளை காத்தல் போன்ற செயல்களால் மருத நிலத்தில் ஏராளமான செல்வம் உருவாகின்றது. இந்நிலம்தான் அரசாட்சியில் முதன்மையாகத் திகழ்கிறது. பெரிய அரசர்கள் இங்குதான் உருவாகியிருக்கின்றனர். இவர்கள்தான் நானிலத்திற்கும் தலைவனாக விளங்கியவர்கள். ஐந்நில மன்னர்களையும் வெற்றி கொண்டுதான் சேர, சோழ பாண்டியன் என்ற மூவேந்தர் மரபு தோன்றியது. இத்தோற்றத்திற்கு வடவைதீகம் சார்ந்த சடங்கியல் பண்புகள் மேலும் மன்னர் சமூகத்திற்கு பெரும் மதிப்பையும் உயர்வையும் வழங்கியுள்ளது. இது தொல்காப்பியத்தில் தமிழர்களின் பண்பைத் தொழில் அடிப்படையில் மரபியலில் நான்கு சாதிகளை மையப்படுத்தும் நிலையில் வரணாஸத்திர பகுப்புமுறையே மையமிட்டுள்ளது இங்கு நோக்கத்தக்கது. (காண்க மரபியல் நூற்பாக்கள் : 616 – 629) இனிப் புறநானூற்றுப் பாடல் வழிப் புலவர் மரபு கட்டியமைத்த மேட்டுக் குடி மதிப்பிட்டினையும். அம்மதிப்பு நாகரிக வளர்ச்சியினால் மாற்றம் அடைகிறபோது இனக்குழுப் பண்பாட்டு வழிவியலை மையப்படுத்துவதும் இனிக்கணலாம்.
ஐம்பூதங்களோடு ஒப்பிடுதல்
ஐந்நிலத்தினை ஆளும் வேந்தர்களை ஐம்பெரும்பூதத்தோடு ஒப்பிட்டு நிலைநிறுத்தும் பாங்கு புறநானூற்றில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதனை சேரன் எத்தகைய தன்மையுடையவன் அவன் ஆட்சி சிறப்பை எடுத்துரைக்கும் நோக்கிலும், முரஞ்சூர் முடிநாகராயர் பின்வருமாறு கூறுகிறார். நிலம் போன்ற பொறுமையுடையவன்; அரசியல் அறிவு அகலமுடையவன்; காற்று போன்ற போராற்றல் உடையவன்; தீயைப் போன்று பகைவரை அழிப்பவன்: நீரினைப் போன்று கொடை அளிப்பவன் என்று ஐப்பூதத்தின் தன்மையோடு ஒப்பிடப்படுகிறான். (புறம் : 02)
வட வைதீகம்
அசைகின்ற பிடரி மயிரை உடைய குதிரையையுடைய பஞ்சபாண்டவர்களோடு, பகையின்பொருட்டு, தும்பைப் பூ அணிந்து நூறுபோரோடு போரிட்டபோது, நூறுபோறும் இறந்தனர். அவ்விரு படைகளுக்கும் பெருஞ்சோறு படைத்தவன் சேரன். (புறம் : 02) ஆரிய வட வைதீக மரபோடு வேந்தர்களைத் தொடர்புபடுத்தியுள்ளார். பாண்டிய வேந்தனை வட வைதீக புராணகதையோடு ஒப்பிட்டு அவன் ஆண்மையையும், போரின் பொருட்டு அவனிடம் வெளிப்படும் வண்மையையும் திருமிடறுடைய இறைவனும், அழகிய திருமுடியில் பிறை நிலவை சூடியவனுமான சிவன் மேருமலையை வில்லாகவும், பெரும் பாம்பினை வில்லின் நாணாகவும் பொருத்தித் திருமாலை அம்பாகவும் கொண்டு முப்புரம் எரித்துத் தேவரைக் காத்தான் சிவனைப்போல வேந்தர் மூவருள்ளும் உயர்ந்தவனே! பூமாலை அணிந்த மார்பனே! (புறம் :55) சிவபெருமான், பலதேவன், கண்ணன், முருகன் ஆகிய நால்வரும் உலகைக் காப்பதிலும் முடிப்பதிலும் வல்ல வலிமையையும் தோல்வியுறாத நல்ல புகழையும் உடையவர்கள். அந்நால்வரைப்போல அவ்வப் பண்புகளில் அவரவை ஒத்த தன்மையால் உனக்கு எங்கேயும் அரியனவாகிய செயலுமுண்டோ; இல்லையன்றோ. (புறம் :56)
நாட்டின் எல்லைப் பரப்பு
கிழக்கு கடலிலே பிறந்த சூரியன் எங்குப்போய் மூழ்குகிறதென்றால் மேற்கு கடலில் மூழ்குகிறது வெண்மையான நுரையைக் கொண்ட அலையை உடைய மேற்கு திசை கடலிலே மறையும். அவ்விரண்டு கடற்கரைக்கும் உரியவன். இப்படிப்பட்ட இருகரைகளுக்கும் நடுவே மிகுந்த பொருள்களைத் தருகின்ற நாட்டிற்கு உரியவன் வானையே எல்லையாக உடையவன் என்பதை வானவரம்பன் என்று சேரன் நாட்டின் எல்லை குறித்துப் பாடுகிறார் புலவர் (புறம் : 02) குளிர்ச்சியான பெரிய கடலே அவனது ஆட்சிப் பரப்பிற்கு எல்லையாக உள்ளது. காற்றின் எல்லையாகிய காற்றும் நுழைய முடியாத எல்லையாகிய வானத்தை உடையவன் அப்படிப்பட்ட மண்ணலாகிய இடமாக தமிழகம் இருக்கிறது.
நால்வகைப் படை
மூவேந்தர்களிடம் நாற்படையும் இருந்துள்ளன. இங்கு யானைப் படை, காலட்படை, குதிரைப்படை சோழ நலங்கிள்ளியைப் பகைவர் எதிர்கொள்ளும் படைகுறித்து புலவர் பின்வருமாறுகுறிப்பிட்டுள்ளார். உன் யானைக் கூட்டம், தம் தந்தங்களின் கூரிய முனை மழுங்கப் பகைவரின் காவற்கோட்டையின் மீது பாயும்; மேலும் அது அடங்காமல் பகைவர் கோட்டையை தேடியது. அப்படிப்பட்ட சினங்கொண்ட யானை. காலாட்படை வீரர் போர் எனின் விரும்பி சத்தமிடுவர். அவ்வீரக் கழலணிந்த வீரர் போர்புரிய செல்லும் நாட்டிற்குச் செல்ல காட்டை கடந்துசெல்ல வேண்டும் என்றாலும் நான் போக முடியாது என்று கூற மாட்டார்கள். கல்லென்று ஆர்வாரிக்கும் விழாக்களையுடைய பகைவர் இருப்பிடத்தில் தங்குவாய்; பின் உன் கீழைக் கடல் பின்னே செல்லுமாறு மேலைக் கடல் நோக்கிச் செல்வதால் வெண்மையான மேற்பரப்புடைய அலைகள் உன் குதிரைகளின் குளம்புகளை வருத்தும்; அவ்வாறு வருந்த வலமுறையாக வடதிசைக்கும் வருவாய் எனத் தடுமாறி, மனம் நடுங்குகின்ற துன்பமடைந்த வடபுலத்து அரசர் உறங்காத கண்களையுடையவர் ஆவர். (புறம் :31) பாண்டியனின் நால்வகைப் படையைக் குறிப்பிடும்போதும் கடுமையான சினத்துடன் கொல்லும் யானைகளும் விரைந்து செல்லும் இயல்புடைய செருக்குடைய குதிரைகளும் நெடிய கொடிகளுடன் விளங்கும் உயர்ந்த தேர்களும் மனவலிமை மிகுந்து போரை விரும்பும் மறவர்களும் பாண்டியனிடம் இருந்தாலும் மாண்புடைய அறநெறியை அன்றோ முதலாக வந்துநிற்கும். (புறம் : 55) அறித்தின் வழி நின்று போர் செய்யும் தன்மையை முதன்மைப் படுத்துக்கிறார்.
வேந்தர் அடையாளப் பூ / சின்னம் ( குடை, கோல்)
பாண்டியருக்கு இரட்டை மீன், சோழர் – புலிக்கொடி, சேரர் – விற், அம்பு கொடி. இவையெல்லாம் மூவேந்தர்களின் அடையாளமாக இருந்துள்ளன. நீதி நெறிதவறாது செங்கோல் கொண்டு ஆட்சி செலுத்ததல். முழு மதியினைப் போன்ற வெண்கொற்ற குடையின் சிறப்பினைப் புகழ்தல் (புறம் : 31), நால்வகைப் படை, தலைநகர், துறைமுகம் இவர்களின் தனித்த அடையாளமாகவும் நாகரிகத்தின் வளர்ச்சியாகவும் தன்னை, இனக்குழு, குறுநிலமன்னர், மற்றும் மறக்குடிச் சமூகத்திடமிருந்தும் மேம்பட்டவனாகவும் உயர்ந்தவனாகவும் வணங்கத்தக்கவனாகவும் அடையாளப்படுத்திக் கொண்டுள்ளது.
மருத நில வளம்
தீய சகுகங்களினால் நாட்டில் மழை பெய்யாது. வறண்ட நிலையிலும் காவரி பாய்கின்ற நின் நாட்டில் அங்கு ஏராளமான கரும்பு விளைகிறது. அக்கரும்பினுடைய பூவானது தொகையையுடைய வேல் போன்று காட்சியளித்தது. அசைந்தாடுகின்ற கணுவையுடைய பூவானது அவ்வாறு காணப்படுகிறது, அப்படிப்பட்ட செல்வ வளங்களைக் கொண்ட நாட்டினை உடைய நாடு உண்ணுடையது. (புறம் : 35)
அறம் உரைத்தல்
மூவேந்தர்கள் ஆட்சி நடத்தும் முறை குறித்தும் அவர்கள் மக்களை எவ்வாறு காக்க வேண்டும் என்பது குறித்தும் யாருடைய சொல்லைக் கேட்ககூடாது. என்றெல்லாம் மூவேந்தர்களிடம் அறத்தினை எடுத்துரைக்கும் பாங்கு புலவர் மரபில் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வந்துள்ளது, சோழ மன்னனுக்கு அரசியல் அறங்களை எடுத்துரைக்கும் விதமாகப் பின்வருமாறு கூறுகிறார். அயலார்கள் சொல்லக் கூடிய பொதுமொழியை ஏற்றுக் கொள்ளக் கூடாது. உன் அருகில் வைத்திருக்கக் கூடிய நொதுமலாளர்கள் கூறக்கூடியதை ஏற்கக் கூடாது. கடிமக்களிடம் வரிவசூல் செய்யும்போது அவர்களின் மனம் வேதனைப்படாமல் வரி வாங்க வேண்டும் ஆனால் அவர்கள் அவ்வாறு வாங்கவில்லை. எனவே அவர்கள் உனக்கு நண்பனா? நொதுமலரா? அப்படிப்பட்டவரது மொழியை ஏற்காதே! மேலும் வேளாண்மைக்குப் பயன்படக்கூடிய கால்நடைகளை வளர்த்து பாதுகாத்து வருபவர்களாகிய வேளாண்மைகளில் ஈடுபடுபவர்களின் சுமையை நீ போக்க வேண்டும் எனவே இவர்களின் துன்பத்தைப் போக்கினால் உன் குடிமக்கள் அனைவரது குறைகளும் தீர்ந்துபோகும், அப்படி நீ செய்தால் பகைவரை போர் புரிந்து வெல்ல வேண்டும் என்பதில்லை. அவர்களைப் பணிய வைப்பதற்கு இது உனக்கு வழி எனவும் அத்தகைய அறத்தை நீ பின்பற்றினால் உன் குடி சிறக்கும் என்பார். (புறம் : 35) பாண்டியனிடனிடமும் அறம் உரைத்து குடிமக்களையும், பிறர் தகுதியுடைய சான்றோர்களையும் மதிக்க வேண்டும் என்று வறுபுறுத்துகிறார். ஒருவர் தீமை புரிந்தவழி அவர் நம்மவர் என்று அவர் தீமையைப் பொறுத்துச் செங்கோல் வளையச் செய்தல் கூடாது; ஒருவர் அயலார் என்று அவருடைய நற்குணங்களைப் போற்றாமலிராதே; ஞாயிற்றைப் போல வெம்மையான ஆற்றலும் வீரமும் திங்களைப் போலக் குளிர்ந்த பெரிய மென்மையும், வான்மழையைப் போலக் கொடைச்சிறப்பும் உடையவனாகுக! அறம் வழி நடக்க வலியுறுத்துகிறார். (புறம்:55)
நீண்ட ஆயுள் பெற வாழ்த்துதல்
வேறுபாடியில்லாத அமைச்சர்கள், சுற்றத்துடனும் இமயமலைப் போன்றும் பொதி்யமலைப் போன்றும் நீண்ட நிலைத்து வாழ்க என்றுபோற்றுகிறார் (புறம் : 02) முருக வேள் நிலைபெற்ற அழகிய அகன்ற துறை; அத்துறையில் பெருங்காற்று திரட்டுவதால் குவிந்ததும் சுவடுகள் பதிவதுமான மணல் மேட்டிலுள்ள மணலின் எண்ணிக்கையினும் பலகாலம் வாழ்வாயாக! (புறம் : 55) இதனையடுத்து மற்றொரு பாடலில் இப்பாண்டிய மன்னை, வெம்மையான கதிர்களையுடைய ஞாயிற்றுக் கடவுள் போலவும், மேற்கில் தோன்றும் குளிர்ந்த கதிர்களையுடைய நிலவினைப் போலவும் உலகத்துடன் கூட நீயும் நின்று நிலைபெற்று வாழ்க (புறம் : 56)
போர்க்கள வெற்றிகள்
சேரனை ஐம்பெரும் பூதத்தின் தன்மையோடு ஒப்பிட்டு அவன் புகழையும் தம் பகைவரை வெல்லும் திறத்தையும் உடையவன். (புறம் : 02) தம்மை எதிர்த்து நின்ற பகைவரை நால்வகைப் படையுடன் வென்று, அப்படையின் குதிரையின் கால் குளம்புகளை வெண்மையான அலைகள் வருத்தும்; அவ்வாறு வருந்த வலமுறையாக வடதிசைக்கும் வருவாய் எனத் தடுமாறி, நடுங்கின்ற துன்பமடைந்த வடபுலத்து அரசர்கள் உறங்காத கண்களையுடையவர்களாக விளங்குகின்றனர். (புறம் : 31) கூரிய வேலுடைய வளவனே! இளம்பனை மரம் வெட்டப்பட்டு வீழ்ந்தது போல துண்டங்களாக, யானைகள் போரிட்டு வீழ்ந்தன. மேலும் உம்மை பகைவர்களை உனது படைவீரர்கள் புறமுதுகிட்டு ஒடவைக்கும் ஆராவாரிக்கும் தன்மையுடையவர்கள்; அவ்வெற்றியும் உழுபடையாகிய ஏரினால் நிலத்தில் ஊன்றி விளைந்த நெல்லின் பயனாகும். (புறம் : 35) முப்புரத்தைப் எரித்த சிவனின் தன்மைக்கு ஒப்பனவன் நீ உன் நால்வகைப் படையும் உனக்கு வெற்றி தரும் தன்மையுடையது. (புறம் : 55) உயர்த்திய வாளையுடைய மாறனே! சிவன், பலதேவன், கண்ணன், முருகனுக்கு இணையாக அவர்களின் பண்புநலங்களை பெற்றுள்ளாய் அதனால் உன்னை வெல்லுதல் என்பது நடவாது (புறம் : 56)
ஐம்பூதங்களுடன் ஒப்பிடுதல், வட வைதீகம், நாட்டின் எல்லைப் பரப்பு வேந்தர் அடையாளப் பூ / சின்னம் ( குடை, கோல்), மருத நில வளம், அறம் உரைத்தல், நீண்ட ஆயுளைப் பெற வாழ்த்துதல், போர்கள வெற்றிகள் பாடுபொருள் நாகரிக வளர்ச்சியால் பண்பாட்டுக் கலவையாக வாழ்வியல் புலவர்களின் பாடுபொருளில் உருவான சேர, சோழ, பாண்டியான மூவேந்தர்களையும் நிலைபெறச் செய்துள்ளது. இனக்குழுச் சமூகத்தில் பகிர்ந்து அளிக்கக்கூடிய விருந்தோம்பல் பண்பு அரச நாகரிகத்தில் வரும்போது பெறுபவன் x கொடுப்பவன் ஈகைப் பண்பாக மாற்றம் பெறுகிறது. இந்த இனக்குழுப் சமூகத்தில் விருந்தோம்பல், ஈகை சார்ந்த பண்பு அரச நாகரிகத்தால் அலட்சியப்படுத்தப்படும்போது புலவர் கண்டிபதையும் கா. சுப்பிரமணியம் எடுத்துக்காடுகிறார், “வம்ப வேந்தர்” இனக்குழுத் தலைவரைப் போலப் பகுத்துண்ணலைப் பேணவில்லை. (புறம் 287) எனக் குறைப்பட்டுக் கொண்டனர் (புறம் 151) இவ்வேந்தர் பிறர் உழைப்பை உண்ணும் சுரண்டல் வர்க்கமாகிவிட்டனர்” (சங்ககாலச் சமுதாயம், ப :36) பதிவுச் செய்வதன் மூலம் நாகரிகத்தால் உருமாற்றம் பெற்ற ஈகை அரசரிடம் பெற்றபோதும், இனக்குழுச் சமூகத்தின் கொடுத்தல் பண்பைப் புலவர் வாழ்வியலின் தேவை கருதி நிலையாக நிலை நிறுத்த முயன்றுள்ளனர். இத்தகைய உயரிய பண்புதான் அவர்களை இன்றுவரை பழங்குடிகளாக அடையாளம் காணமுடிகிறது.
முடிவுரை
புறநானூற்றில் இனக்குழுச் சமூகம் அழிந்து புதிய வேளாண் அரசு உருவாகிய காலகட்டம் வன்புல வேளாண் நாகரிக ,மென்புல நாகரிக வேளாண் அரசாக மூவேந்தர்ச் சமூகம் காலூன்றியது. இனக்குழுச் சமூகம் வீரயுகச் சமூகமாகவும், குறுநிலமன்னர் சமூகமாகவும் நாகரிக வாழ்வால் உயர்ந்தது. இதனால் இனக்குழுச் சமூகத்தின் எச்சமாக புறநானூற்றை இல்லாமல் இனக்குழுச் சமூகம் நிலையாகத் தன்னை காலூன்றிக்கொள்ள நாகரிக வாழ்வில் உருமாற்றம் பெற்றது. இன்று நாகரிக வாழ்வில் பழங்குடிகளாக இனக்குழுச் சமூகத்தின் எச்சமாகப் பண்பாட்டு மானிடவியல் அடிப்படையிலும், இனவரைவியல் அடிப்படையிலும் ஆய்வு செய்யும் ஆய்வறிஞர்கள் தமிழ்ச் சமூகத்தின் இனக்குழு எச்சங்கள் இந்தியா முழுவதும் நிலைபெற்று இருப்பதாகத் தங்கள் ஆய்வில் முன்வைக்கின்றனர்.
துணை நின்ற நூல்கள்
துரைசாமிப்பிள்ளை.சு (உரை.ஆ) இளகுமரனார், தமிழகன் (பதி.ஆ)செவ்விலக்கியக் கருவூலம் (சங்க இலக்கியம்), புறநானூறு, 1 & 2 தொகுதிகள், தமிழ்மண் அறக்கட்டளை, சென்னை – 2008
சுப்பையா. (அரங்க), சமூகவியல் அறிஞர்களும் கோட்பாடுகளும், ராஜேஸ்வரி புத்தக நிலையம், சென்னை – 2003
பக்தவத்சல பாரதி, பண்பாட்டு மானிடவியல், மெய்யப்பன் பதிப்பகம், சென்னை,(விரிவாக்கம் பெற்ற திருந்திய பதிப்பு) – 2014
இராமசுப்பிரமணியம்,தொல்காப்பியம் பொருளதிகாரம், (மூலம் உரையும்), பூம்புகார் பதிப்பகம், சென்னை, இரண்டாம் பதிப்பு -2012
ராஜ்கௌதமன், தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும், விடியல் பதிப்பகம், கோவை – 2008
பக்தவத்சல பாரதி, மானிடவியல் கோட்பாடு, வல்லினம் வெளியீடு புதுச்சேரி – 2005
சுப்பிரமணியன், சங்ககாலச் சமுதாயம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை (நான்காம் பதிப்பு) – 2011
santhosh03jan@gmail.com
* கட்டுரையளர் – இல.சந்தோஷ்குமார், முனைவர் பட்ட ஆய்வாளர், புதுவைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி -14 –