அத்தியாயம் நான்கு!
சுந்தரம்பிள்ளை வீடு திரும்பியதும் வீட்டில் குதூகலம் நிரம்பி வழிந்தது. இந்த வேலை கிடைத்த விடயம் குடும்பத்தில் எல்லோருக்கும் மகிழ்ச்சி அளித்தது. வேலை புருச லட்சணம் என சும்மாவா சொல்கிறார்கள்? முக்கியமாக வேறு நாட்டில் இருந்து பஞ்சம் பிழைக்க வருபவனது மனநிலையில் வேலை, அவனது உயிருக்கு அடுத்த நிலையில் உள்ளது. அவனில் அவனது குடும்பம், பிள்ளைகள் அவர்களின் எதிர்காலம் என பல சுமைகளை இலகுவாக்கிறது. சுந்தரம்பிள்ளையின் சிந்தனையில் ‘என் போன்று தொழிலுக்காக பட்டப்படிப்பில் நாலு வருடம் படித்தபின் பின் பலவருடங்கள் சொந்த ஊரில் ஏற்கனவே வேலை செய்து விட்டு வரும் போது அது தொழிலை தொடர்ந்து செய்வது என்பது மிக முக்கியமானது. இளமையில் பல வருடங்களை அழித்து எதிர்காலத்தில் விருப்பான தொழிலுக்காக கண்முழித்து, இரவு பகலாக முயற்சியுடன் படித்து பட்டம் பெற்ற பின்பு அந்த வேலை வாய்ப்பற்று வேறு வேலை செய்வது என்பதே வாழ்கையின் தோல்வியாகிறது. வேலைகள் எல்லாம் சமன் என்று சொல்வது இலகுவான போதிலும் குறிப்பிட்ட ஒரு வேலையை இலட்சியமாக எடுத்து அதற்காக வருடக்கணக்காக அர்ப்பணித்து தயர்ப்படுத்திய பின் மற்ற வேலை எவ்வளவு உயர்வாக இருந்தாலும் அதில் மனநிம்மதி கிடைக்காது. ஜீவனோபாயத்திற்காக வேறு வழியில்லாமல் என்னை நானே சங்கிலியில் பிணைத்துக் கொள்வது போன்று வேலை செய்தாலும் வாழ்க்கையின் தோல்வி என்ற எண்ணம் நிழலாக தொடரும். எனது வாழ்க்கையில் அவுஸ்திரேலியாவுக்கு வந்து மூன்று வருடங்களாக நிரந்தரமான ஒரு வேலை இல்லை. சிட்னியில் பெயின்ற் தயாரிக்கும் தொழிற்சாலையில் சில மாதங்கள், பின்பு உணவுச்சாலையின் சமயல் கூடத்தில் சிலமாதங்கள் என கிடைத்த வேலைகளை செய்துகொண்டு படித்து மிருக வைத்திய பரீச்சையில் பாஸாகினாலும் அலைச்சல் தொடர்ந்தது. நிரந்தர வேலை குதிரைக் கொம்பாக இருந்தது. மெல்பனில் சிலநாட்கள் கிழமைகள் மிருக வைத்தியராக வேலை, அதன் பின்பு அடிலயிட்டுக்கு அப்பால் உள்ள ஊரில் சுமார் ஆறு மாதகாலம் வேலை என்பது தொடர்ச்சியான பயணமாக இருந்தது. கிடைத்த இடங்களில் கிடைத்த வேலையை வேண்டாம் என்று சொல்லாமல் எடுத்துக் கொண்டு சில இடங்களுக்கு குடும்பத்துடனும், மற்றய இடங்களுக்கு தனியாகவும் செல்ல வேண்டி இருந்தது. எனது குடும்பம் மட்டுமல்ல சாருலதாவின் தாயும் தந்தையும் மகளையும் பேரப்பிள்ளைகளையும் பிரிய முடியாமல் பின் தொடர்ந்தனர். ஐரோப்பாவில் அலைந்து திரியும் ஜிப்சிகள்போல் இருந்தது.ஆனால் என்ன குதிரையும் கரவனும் இருக்கவில்லை. இந்த வேலையோடு ஜிப்சி வாழ்க்கை எனக்கு முடிந்து விடும்’ என சுந்தரம்பிள்ளை உணர்ந்த போது மனத்தில் அமைதி வந்தது.