“பேராசிரியர் கா.சிவத்தம்பி: ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தமிழின் குறியீடு” சூழலியலாளர் ஐங்கரநேசன் அஞ்சலி!

பேராசிரியர் கா.சிவத்தம்பிபொ.ஐங்கரநேசன்பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் ஈழத்துக்கும் தமிழகத்துக்கும் அப்பாலும் சென்று உலக அரங்கில் தமிழின் குறியீடாக நிலை பெற்றுள்ளார் என்று சூழலியலாளரும் இயற்கை, பண்பாட்டு, மரபுவளப் பாதுகாப்பு மையத்தின் தலைவருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். பேராசிரியர் கா.சிவத்தம்பிஅவர்களின் மறைவையொட்டி அவர் விடுத்துள்ள அஞ்சலிக் குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அஞ்சலிக் குறிப்பில், தமிழ் கூறும் நல்லுலகில் புலமையாளராக, ஆய்வாளராக, விமர்சகராக, சிந்தனையாளராகப் பன்முகத் தன்மை கொண்ட ஆளுமையாக மிளிர்ந்தவர் பேராசிரியர்கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள். தமிழ், தமிழர் பற்றிய சமூக வரலாற்றுப் பண்பாட்டுத் தேடுகையில் தனது ஆற்றல்களையும் அறிவுத் திறன்களையும் முழுமையாகக் குவியப்படுத்திச் செயற்படுத்திவந்த இவர், 20ஆம் நூற்றாண்டின் தமிழியல் ஆய்வுப் போக்கைத் திசைமுகப்படுத்தும் பேராளுமையாக விளங்கி வந்துள்ளார்.

 தமிழ்ச் சமூகத்தில் நிலவிய சமவீனங்களின் பாதிப்பால் தனது இளம்பிராயத்தில் பொதுவுடைமைக் கருத்துக்களின்பால் ஈர்க்கப்பட்ட பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் இதன் காரணமாக எதனையும் மார்க்ஸியக் கண்ணோட்டத்துடன் அணுகும் விஞ்ஞானபூர்வ மனப்பாங்கைப் பெற்றிருந்தார். ஆய்வுகளைத் தட்டையாக அல்லாமல்  சமூகவியல், மொழியியல், பொருளியல், வரலாறு, இலக்கியம் என்று பல துறைகளையும் இணைத்துப் பல்துறைச் சங்கம ஆய்வாக மேற்கொண்டு வந்தார்.

பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் அவரது ஆங்கிலப் புலமை காரணமாகப் பிறமொழிகளின் சிந்தனை வளர்ச்சிப் போக்குகளை உள்வாங்கித் தமிழுக்கு வளம் சேர்த்து வந்தார். தமிழியல் ஆய்வுக்கு இவர் திறந்துவிட்ட வாசல்கள் அதிகம். தமிழ்ச் சொற்களஞ்சியத்துக்கு இவர் பிரசவித்துத் தந்த கலைச் சொற்கள் பல்லாயிரம். இவையே பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களை ஈழத்துக்கும் தமிழகத்துக்கும் அப்பால் கொண்டு சென்று உலக அரங்கில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தமிழின் குறியீடாக நிலைபெறச் செய்துள்ளது.

கால ஓட்டம் மாறுவதற்கு ஏற்பச் சமூக அரசியல் பார்வைகளும் மாறவேண்டும் என்பது மார்க்ஸியத்தின் அடிப்படை விதி. இந்த இயங்கியலுக்கு ஏற்ப, ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஈடுபாடு கொண்டிருந்த பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் இனப்பிரச்சினை கூர்மையடைந்த 80களில் தனது அரசியல் பார்வையை அகலித்துக் கொண்டார். இலங்கையின் வரலாற்றில் ஒரு பிரிகோடாக அமைந்துவிட்ட இக்காலப்பகுதியில் வல்வெட்டித்துறையின் பிரஜைகள் குழுத் தலைவராகவும் வடக்கு கிழக்கு பிரஜைகள் குழு ஒன்றியத்தின் தலைவராகவும் இருந்து தமிழ் மக்கள் அனுபவித்து வந்த சொல்லொணாத் துயரங்களை சவால்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் உலக அரங்குக்குக் கொண்டு சென்று சேர்ப்பித்தார். அகதிகள் புனர்வாழ்வுக்கழகத்தின் தலைவராகவும் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவரக்ள் பணியாற்றியிருந்தார். வட – கிழக்கினுடைய மிகப்பிரதான அரச சார்பற்ற நிறுவனமான இதனூடாக விதவைகள், தபுதாரர்கள், குழந்தைகள், முதியவர்கள் போன்ற சமூகத்தின் பாதிக்கப்பட்ட சகல தரப்பினர்களினதும் துயர் துடைக்க முன்னின்று உழைத்தார்.

இறுதி மூச்சுவரை தமிழ், தமிழர் பற்றிய சிந்தனையும் தேடலுமாக இருந்த பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் தமிழ்ச் சமூகம் பல்வேறு வறுமைகளையும், வெறுமைகளையும் எதிர்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் எம்மிடமிருந்து விடைபெற்றுச் சென்றுள்ளார். தமிழும், தமிழ்ச் சமூகமும் பெரும் முதுசம் ஒன்றை இழந்து பரிதவிக்கும் இவ்வேளையில் இயற்கை, பண்பாட்டு, மரபுவளப் பேணுகை மையமும் தலைசாய்த்து பேராசானுக்குத் தனது இறுதி அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறது. என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Gnanakumaran Kumaralingam <maduvilan@hotmail.com