அகவை எண்பத்து ஐந்தினைக் காணும் அன்பு நண்பரை அணைக்கிறேன்!

பொன்-பாலா என்று எம்மால் ஆசையுடன் அழைக்கப்படும் எம்இனியநண்பர் பொன்னையா பாலசுந்தரம் அவர்கள் 85 ஆகிவிட்டார்கள். பேராசிரியர் கோபன் மகாதேவாபொன்-பாலா என்று எம்மால் ஆசையுடன் அழைக்கப்படும் எம் இனிய நண்பர் பொன்னையா பாலசுந்தரம் அவர்கள் வயது எண்பத்து ஐந்தினை அடைந்துவிட்டார். குறொய்டனுக்குக் கிட்டிய ‘பேர்ளி’யில் ஒரு கிறீத்தவக் கோவிலில் கொண்டாட்டம். அவரின் மூத்த மருமகன் கிருபாகரன், எமக்குத் தொலை பேசியில் அழைப்பு விடுத்தார். 2013 மேமாதம் 27 திங்களில் அந்தஒன்றுகூடல். என் மேசைத்தொலை பேசிக்குக் கிட்டப் பேனா, கடுதாசி இருந்தபடியால் எல்லா விபரங்களையும் கேட்டு மடமடவென்று மகிழ்ச்சியுடன் குறித்தேன். (இப்போஅதைத் தேடுகிறேன்! தேடித்தேடிக் கொண்டே இவ்வாழ்த்துக் கட்டுரையை எழுதுகிறேன்!!). பொன்-பாலாவுக்கும் எனக்கும் நல்ல ஒற்றுமைகள் பல உள்ளன. . ஒன்று, நாம் இருவரும் தமிழ் கவிதையின் தாசர்கள். நாங்களும் கவிப்போம். எனது கவிதைகளை அவர் தன் இதயத்தினால் இமயத்தில் வைத்துப் பாராட்டுவார். நானும் அவரின்கவிதைகளை உடனுடன் மிகவும்மெச்சுவேன். அவரின் கட்டுரைகளில் ஒன்றை மட்டும் நான் சுருக்கி இருக்கிறேன். என் ஆங்கிலக் கவிதை ஒன்றில் மட்டும் சில தட்டெழுத்துப் பிழைகளை அவரால் திருத்த முடியவில்லை. இவை எம் தொகுப்புக் கடமைகளை ஆற்றும் போது நாம் எதிர்கொண்ட நிர்ப்பந்தங்கள்@ இன்றுமட்டும் இவை எம்மால் பேசப்படாதவை.
     
இரண்டாவது, அவருக்கும் எனக்கும் பல பொது இளைய நண்பர்கள் இருக்கிறார்கள். சிலரின் பெயர்களை மட்டும் சொன்னால் மற்றையோர் பெருந்தன்மையாய் எமைமன்னிப்பர் என நான் நம்புகிறேன். தற்காலிகமாகக் களைப்பாறும் பத்திரிகாசிரியர் ஈ.கே. ராஜகோபாலும் நானும் மைற்-நிறுவனத் தலைவராக நான் யாழ் மாதிரிச்சந்தையை கட்டியகாலத்தில் ‘ஈழகேசரி’க்குப் பேட்டிகாண வந்த நாள் தொடக்கம், இங்கு லண்டனிலும், கூட்டுப் பணிகள் செய்து வந்திருக்கிறோம். ஐ.தி. சம்பந்தன், இங்கிலாந்தில் பிடித்த நண்பர். அவரின் ‘சுடரொளி’யில், அது எண்ணெய் குறைந்து சிணுங்கு மட்டும், நாம் மூவரும் வெவ்வேறு அளவுக்கு வாசகர்கள் கண்முன் காட்சியளித்தோம். நா. சச்சிதானந்தன், சைவசமயச் சம்மேளனங்களில் எம் இருவரையும் சம்பந்தப்படுத்தியவர். திரு. நா. சீவரத்தினம், தன் ‘சிவயோகம்’ கோவில் வெளியீடுகளில் பொன்-பாலாவைத் தொகுப்பாசிரியராக்கி அவர்வெளியிட்ட நூல்களில் என்னை எழுத வைத்தவர். பூபாளராகங்கள் புகழ் மகாலிங்கம் சுதாகரன், சம்சார-சாகரத்துள் நீந்தத் தொடங்குமட்டும் தனது பலவருட நிகழ்ச்சிகளில் எம் இருவரையும் பங்கு கொள்ள வைத்தார். த. சிறீகந்தராஜா, தம் ‘தமிழ் ஓலைகள்’ மூலமும் இவருடன் திருப்புகழ்-தாசர் பெறியியலாளர் க. தியாக மூர்த்தியும், பொன்-பாலா 2007ல் வெளியிட்ட ‘பிரித்தானியாவும் ஈழத்தமிழரும்’ எனும் நூலின் மூலமும் தொடர்பானோம். மறைந்த நீதிபதி கிருஷ்ணா வைகுந்தவாசனும் அவரின் மனைவியார் மகேஸ்வரி அம்மையாரும் நானும், வாசனின் 80ம்ஆண்டு நினைவுமலர் மூலம் பொன்-பாலாவுடன் இணைந்தோம்.
    
மூன்றாவது, குடும்பரகத் தொடர்புகள். பொன்-பாலாவின் குருவாகிய மறைந்த கலையரசு சொர்ணலிங்கத்தின் மகள் வைத்திய நிபுணி சாரதா ராஜசிம்மனும் என் மனைவி வைத்தியை சீதாதேவியும் ஒன்றாக இலங்கை வைத்தியக்கல்லூரியில் படிக்கும்போது பொன்-பாலாவின் கொழும்பு வீட்டில் பலதடவை அறுசுவை விருந்துண்டு மகிழ்ந்துசென்றதாகப் பின்னர் அறிந்தேன்.
மேலும் அவரின் மூன்றுமகள்மாரில் மூத்த, கிருபாவின் மனைவிக்கும், எம் மூத்த மகளுக்கும் ‘உமா’ என தசாப்தங்களின் முன் பெயரிட்டுள்ளோம்!
    
இப்பொழுது, பொன்-பாலா எம் ஹறோ-வீட்டுக்கு முதலில்வந்த தினம் என் மனத்திரையில் தெரிகிறது. 2006ம் ஆண்டின் மழையும்குளிரும் சேர்ந்த இலையுதிர்காலக் கார்த்திகையின் அந்தக் கதையை, அவரே சொல்கிறார்:- எனது படைப்பான ‘பிரித்தானியாவும் ஈழத் தமிழரும்’ என்னும் நூலைப் பூர்த்தி செய்திருந்தபோது அதற்கு முகவுரை எழுதப் பொருத்தமானவர் பேராசிரியர் அவர்கள்தான் என்ற முடிவுக்கு வந்திருந்தேன். அதன்படி அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது மிகுந்த ஆர்வத்துடன் சம்மதித்தது மட்டுமல்ல, நூலின் நகலுடன் தம்மை வந்து சந்திக்கும் படியும் கேட்டுக் கொண்டார். நூலை அவரின் கையில் ஒப்படைத்த நேரத்திலிருந்து பேராசிரியர் அவர்கள் என்னை உண்ணவும் விடவில்லை, உறங்கவும் விடவில்லை என்று கூறினால் அது மிகைபடக் கூறுவதாக இருக்காது. ஒரு கட்டத்தில், நூலின்மீது அவர் எடுத்த ஆர்வமும் அக்கறையும், அப்புத்தகத்தைப் பேராசிரியர் எழுதுகிறாரா? அல்லது நான் தான் எழுதினேனா? என்ற தடுமாற்றம் எனக்கு ஏற்பட்டும் விட்டது.
    
அந்த நூலில் இடம் பெற்ற எல்லா விடயங்களையும் படித்து, திருத்தம் செய்து, சேர்க்க வேண்டிய ஒன்றிரண்டு புதிய அம்சங்களைச் சேர்த்து, நீக்க வேண்டியனவற்றை நீக்குவதற்கான தமது சிறந்த யோசனைகளையும் எனது கவனத்திற்கு, குறிப்பு வடிவில்  ஒப்படைத்ததுடன், ஆங்கிலத்தில், விரிவான முகவுரையையும் எழுதி, ஒரு சிறந்த படைப்பாக்கிய பெருமைக்கு உரியவர் பேராசிரியர் என்பதைப் பொன்-பாலாவே, அவரும் எம் நாலுகிட்டியநண்பரும் கூடி 2009ல் தொகுத்தளித்த என் ’75வதுஅகவை நிறைவு மலரில்’ பதிவு செய்துள்ளார்.
   
இலங்கையின் முன்னணி பத்திரிகையாளராக 50-வருடத்துக்கு தொழில் செய்து, 1983ல் இவரின்வீடு அரசியல் வன்முறையான விஷமிகளால் தீயில் சாம்பராக்கப் பட்டபின், பல ஆண்டுகள் தமிழ்நாட்டில் வாழ்ந்து, தன்தொழில் தொடர்ந்து, புதியநண்பர் பலரைத்தேடி, பின் பிரித்தானியாவுக்குக் குடியேறி, தெரிந்தெடுத்த தன்துறையில் இங்கும்விடாது, அணிகலனாக விளங்குகிறார். சுதந்திரன், வீரகேசரி, தினகரன், ‘சிலோன்டெயிலிநியூஸ்’, சுடரொளி போன்ற பத்திரிகைகளின் ஆசிரியக் குழுக்களின் சிறந்த, சிரேஷ்ட ஊடகவியலாளர். திறமையான பேட்டியாளர். ஆழ்ந்த சிந்தனையாளர். பிரவாகப் பேச்சாளர்.
    
இவரைப் பார்த்தால் வயது 85 என்று ஒருவரும் சொல்லார். எனினும் அடக்கமாக, ‘கூரம்பாயினும் வீரியம் பேசேல்’ எனும் கொள்கையுடன் எவரையும் மதித்து ‘ஐயா’ என்று அன்பும் மரியாதையுடனும் பேசி ஒன்றுகூடிப் பல ஆக்கங்களைத் தொகுத்து வெளிக் கொணர்ந்துள்ளார். எவரும் நோகாமல் நல்லவற்றையே பேசுவார். அல்லவற்றை, குதப்பி உள்ளே விழுங்கிவிடுவார்.
    
எம்மால் 2006 தொடக்கம் நடாத்தப்பட்டு வரும் ELAB – பிரித்தானிய ஈழவர் இலக்கியச் சங்கத்தில் ஆர்வம் கொண்டு இருந்துவிட்டுக் கவிதைகள் அனுப்பி, இனிமேல் மாதாந்தம் இணையத்தளம்மூலம் எம்கருப்பொருள்களில் கவிதைகள் எழுதி அனுப்புவதாக அண்மையில் சொல்லியிருக்கிறார். எமது ‘பூந்துணர்-2012’ தபாலில் கிடைத்த அடுத்த தினமே, ‘ஐயா, ஒரு பக்கமும் விடாமல் படித்து முடித்து விட்டேன். இது ஒரு பாட நூலாகவோ ஆராய்ச்சி உசாவு-நூலாகவோ (Reference Book) இருக்க வேண்டியது. மிகப்பிரமாதம்’ என்று தொலைபேசியில் வாழ்த்திய நுண்ணிய, உண்மை மனத்து விமர்சகர். கௌரவ கலாநிதிப்பட்டம் உட்படப் பலவிருதுகளைப் பெற்றுள்ள வித்தகர்.
    
நான் அவரை நெருங்கி அறிந்தது லண்டனிலேயே. இலங்கையில் நான் எந்திரிகத்துறையிலும் அவர் ஊடகத்துறையிலும் மும்முரமாக வேலை செய்துகொண்டிருந்தோம். அன்றுநான் அறிந்திருந்த எழுத்தாளர் மிகச்சிலரே: ராஜ் அரியரத்தினம், சாவகச்சேரி இந்துக் கல்லூhயில் என் ஆசிரியர். பின் பகுதிநேர நிருபராகச் சின்னையா சிவநேசனை அனுப்பி, நான் இயக்குனராக பதவியேற்ற சிறுகைத்தொழில் சேவைக்கழகத்தில் பேட்டிகண்டு ~சிந்தாமணி| ஞாயிறு இதழில் கட்டுரை எழுதுவித்தவர். அதே சிந்தாமணியின் அடுத்த ஆசிரியர் என்னைப் பற்றி ஓரிரண்டு கிண்டல் செய்திகள் பிரசுரித்து நியாய மன்றத்தில் பிணக்குப்பட்டிருக்கிறோம். அப்போ ஈ.கே. ராஜகோபால் எழுதிய ‘ஈழநாடு’ பேட்டிக் கட்டுரையை சிவநேசன் தன் ‘பொதுமக்கள்’ வாக்குமூலத் தில் வாசித்துக்காட்டி, மற்றும் ஆதாரங்களுடனும் அவ்வழக்கை நாம்வென்று மானநட்டம் பெற்றோம். இன்று கனடா ‘தமிழர் தகவல்’ ஆசிரியராகிய எஸ். திருச்செல்வத்தை, அன்று சிவநேசன் இயக்குனராகவும் நான்தலைவராகவும் நடத்திய கவின்கலை மன்றத்தின் கவிதைக் கருத்தரங்குகளில் சந்தித்தேன். ஆனால் பொன்-பாலா, பிரித்தானிய மகாராணி, ஜவஹர்லால் நேரு, ராஜேந்திரபிரசாத், சௌ-என்-லாய், எஸ்.டபிள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக, இலங்கை பாராளுமன்றப் பா.உ.களும் மந்திரிகளும் முதலிய பிரமுகர்களைப் பேட்டி கண்டு தோள்தட்டிக் கொண்டாடிப் பிரகாசித்த காலம் அது, எனப் பின்னர் வாசித்து அறிந்தேன். மேலும், 1961-66 காலத்தில் நான் எனது முதுமாணி, கலாநிதி பட்டங்களுக்கும் எந்திரிகப்பட்டயங்களுக்கும் இங்கிலாந்தில் ஓய்வு இன்றி உழைத்துக் கொண்டிருந்தேன் என்பதும் என் ஞாபகத்தில் வருகிறது.
   
இவ்வாறு பரந்த அனுபவமுள்ள ஆசிரியரின் நான்முன்கூறிய நூலை தமிழர் வாங்குதற்கு அவரின் 85ம் ஆண்டு நிறைவு ஒரு அரிய சந்தர்ப்பம். அதை, நாம் வசிக்கும், எம் இரண்டாம் தாயகமாகிய பிரித்தானியாவுக்குப் புதிதாகக் குடிவந்துள்ள தமிழர்கள் எல்லோரும் அவசியம் படிக்கவேண்டும். அத்துடன் அண்மை ஆண்டுகளில் குடியேறும் எண்ணமுள்ள எல்லோருக்கும் இந் நூல் மிகவும் பயன்படக் கூடியது. மேலும், சமாதானமும் அரசியல் நிலைப்பாடும் கொண்ட இந்தியா, மலேசியாபோன்ற நாடுகளில் வதிந்துவரும் தமிழர்களில், இங்கு உல்லாசப் பிரயாணிகளாக, மாணவராக, அல்லது வேலையோ வர்த்தகமோ சம்பந்தமாய் உள்-வர விரும்பும் தமிழர்கள் எல் லோருக்கும் இந்நூல் உதவும். ஏனெனில், எம் ஆசிரியர், தான் சொந்தத்தில், படிப்படியாகப்பெற்ற அனுபவத்தைக் கொண்டே இந்நூலை எழுதினார். இதில், பிரித்தானியாவின் வரலாற்று அரசியல்நிலை, முக்கிய நிறுவனங்கள், காட்சிகள், கலாச்சார அம்சங்கள், பழக்க வழக்கங்கள், ஊடக, பத்திரிகை களின் போக்குகள் கொள்கைகள் எல்லாவற்றையும் நல்லது கெட்டது ஒன்றையும் ஒளித்துமறைக்காமல் 128-அதிகாரங்களில் பல அழகிய படங்களுடனும் நகைச்சுவையுடனும் ஜனரஞ்சகமாகத் திறமையுடன் எழுதியுள்ளார்.
   
முடிவில், எம் அருமை நண்பர் பொன்-பாலா ஈழத்தமிழரால் பாதுகாக்க வேண்டிய லண்டன்வாழ் பொக்கிசங்களில் ஒன்று. எங்கள் ஈலாப் சங்கத்தில் இவரின் அறிவையும் அனுபவத்தையும் நாம் பாவிப்பதைப் போல், கணினி மூலமும் இணையத்தளம் மூலமும் இவர் செயலாற்றுவதே மிக்க உசிதம். ஏனெனில் ஒரு முதியவராக இருந்தும் இவரின் கணினித் திறமை மிகவும் பிரமாதம். எனவே பொன்-பாலா ஐயாவின் 90ம், 100ம், ஆண்டு விழாக் களைக் கொண்டாடும் நாட்களை இனி வரும் ஆண்டுகளில் நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்ப்பேன் என வாழ்த்தி, வணங்கி, விடைபெறுகிறேன்.

professorkopanmahadeva@yahoo.co.uk