அஞ்சலி: மறக்க முடியாத ‘ராஜு அங்கிள்’ (1946 -2019)

Rajanathan Muthusamipillaiஅண்மைக்காலமாக நோயுற்றிருந்த ‘ராஜு அங்கிள்’ (ராஜநாதன் முத்துச்சாமிப்பிள்ளை) நேற்று அதிகாலை (30.01.2019) மறைந்தார். என் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்திய ஆளுமைகளில் இவருக்குமோரிடமுண்டு. இவர் அம்மாவின் பிரியத்துக்குரிய கடைசி செல்லத்தம்பி.  எம் பால்ய காலத்தில் எமக்கு மகிழ்ச்சியளித்த ஆளுமைகளிலொருவராக விளங்கிய இவர், அக்காலகட்டத்தில் என் வாசிப்பனுவத்தைத் தூண்டுவதிலும் பங்களித்துள்ளார்.  உடல்நிலை படிப்படியாகச் சீர்குலைந்து , உறுப்புகளொவ்வொன்று ஒவ்வொன்றாகச் செயலிழந்து , இருப்பின் முடிவினை அண்மித்த நிலையிலும் நிலைகுலையாது , தன் உடல் வேதனையெதனையும் வெளிப்படுத்தாது , வழக்கம்போல் அனைவருடனும், சிரித்த முகத்துடன்  உரையாடிக்கொண்டிருந்த இவரது உள உறுதிமிக்க ஆளுமை என்னை மிகவும் கவர்ந்தது.  இறுதியில் நோயுற்று உடல் தளர்ந்தாலும் , முழுமையான , திருப்திகரமானதொரு வாழ்க்கை வாழ்ந்து முடித்திருக்கின்றார் என்னும் உணர்வே எனக்கு ஏற்படுகின்றது. அண்மையில் கூட  இவரைப்பற்றிய  பதிவொன்றினை ‘மறக்க முடியாத ஆளுமை ராஜு அங்கிள்’ என்னும் தலைப்பிலிட்டிருந்தேன். அதில் இவருடனான என் பால்ய காலத்து அனுபவங்களைக் குறிப்பாக வாசிப்பனுவங்களை விபரித்திருந்தேன். இவர் எவ்வகையில் என் பால்ய  காலத்து வாசிப்பனுவங்களுக்கு  உதவிருக்கின்றார் என்பதையும் அப்பதிவில் விபரித்திருந்தேன். அதனை அவர் நினைவாக மீண்டுமிங்கே பதிவிடுகின்றேன்.


பார்வைக்கு: 2 Feb., 2019 Saturday 4 PM – 8 PM @ OGDEN Funeral Home, 4164 Sheppard Avenue East, Scarborough, Ontario M1S 1T3
இறுதிக்கிரியை: 3 Feb. 2019 9AM – 11AM @ OGDEN Funeral Home, 4164 Sheppard Avenue East, Scarborough, Ontario M1S 1T3
தகனம்: 3 Feb., 2019 12 PM. @ St. John’s Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7


மறக்க முடியாத ஆளுமை ‘ராஜு அங்கிள்’

என் பால்ய காலத்து வாசிப்பனுபவங்களைப்பற்றி எண்ணியதும் மறக்க முடியாத ஆளுமைகளில் ஒருவராக என் நினைவில் நிற்பவர் ‘ராஜு அங்கிள்’ என்றழைக்கப்படும் ராஜநாதன் முத்துச்சாமிப்பிள்ளை. இவர் என் அம்மாவின் கடைக்குட்டித்தம்பி.  அவருக்கும் அம்மாவுக்குமிடையில்  பதினெட்டு வயது வித்தியாசம். ஆச்சி பதின்ம வயதிலிருந்தே இல்லறபந்தத்தில் தன்னைப்பிணைத்துக்கொண்டவர். அதன் விளைவு இவ்வயது வித்தியாசம். அம்மா இவரைத் தன் தம்பி என்று பார்த்ததை விடத் தனது இன்னுமொரு மகன் போன்றே எப்பொழுதும் கருதி வந்தாரென்று நான் உணர்வதுண்டு. அம்மாவின் இளமைக்காலப்புகைப்படமொன்றில் அம்மாவுடன் காற்,சட்டையுடன் இவரிருந்த புகைப்படமொன்றினைப் பார்க்கும் எவரும் அவ்விதமே கருதுவர். இவர் அம்மாவுக்கு  மட்டுமின்றி அம்மம்மா, அம்மாவின் ஏனைய சகோதர, சகோதரிகள், அம்மப்பா யாவருக்குமே செல்லப்பிள்ளைதான். குறிப்பாக அம்மப்பாவின் மிகுந்த பிரியத்துக்குரிய கடைக்குட்டி பையனாக இருந்ததால், அவருடன் எப்பொழுதும் அவரது ‘நாஷ்’ காரில் இவர் திரிவார். சில சமயங்களில் அதில் நண்பர்களுடன் நகரை வலம் வருவதுண்டு. அம்மாவின் இன்னுமொரு தங்கையின் திருமணத்தின் போது அக்காரில் யாழ்நகரில் எங்களையெல்லாம் ஏற்றி விரைவாக ஓட்டிச்சென்றது இன்னும் ஞாபகத்திலுள்ளது. அம்மப்பாவின் இறுதிக்காலத்திலும் கூட எந்நேரமும் அவருடன் அவரது மரணம் வரையில் ஆஸ்பத்திரியில் இருந்தவர் இவர். அம்மா எவ்விதம் இவரைத் தம்பி போன்று கருதாமல், மகன் போன்று கருதினாரோ அவ்வாறே நாங்களும் இவரை மாமா முறையென்றாலும் கூட அவ்வாறு கருதுவதில்லை; எங்களது நண்பர்களிலொருவரைப்போன்றுதான், மூத்த அண்ணர்களிலொருவரைப்போன்றுதான் கருதினோம்; பழகி வந்தோம். அவரும் எங்களுடன் அவ்விதமே மிகவும் இயல்பாகப் பழகி வந்தார்; வருகின்றார்.

Continue Reading →

கவிதை: எருமையின் அருமையுணர்ந்த தருணத்தில்…

கவிதை: எருமையின் அருமையுணர்ந்த தருணத்தில்...

“கார்மேகமே வண்ண முமானதோ
கருவண்டே யிரு கண்ணென வானதோ
தூம்பு வடிவே சிரம ணிந்த இருகொம்பென யானதொ
முடிசூடிய கோனே யென்றலும் மணிமகுட மொன்றே;
தன்தலை யதனிலே மகுடமென வீற்றிருக்கு மிருகொம்புடனே
முடிசூடா மன்னனென உலவும் கோலங்கொண்டே
புவியழியும் தருண மெனினும் சிறுசலனமே துமற்றே
கூற்றுவனின் ஊர்தியாகிய தென்றதாலெ
தூற்றுவோ ராயிரமிங்கே.

Continue Reading →

கவிதை: வழிமாறிய பயணங்கள்.

– நிலாமுற்ற குழுமத்தில் பாடிய கவிதை –

- பா வானதி வேதா. இலங்காதிலகம், டென்மார்க் -

இல்லத்தரசியாக இலங்கையில் தலைகோதியது கவிச்சாரல்
நல்ல முயற்சியால் வழிமாறியது பெட்டகோவாகி ஓய்வு.
சொல்லடுக்கி தமிழின் கழுத்தைக் கட்டியவாறு இன்று
செல்ல மழைத்துளியென் செழுமைக்கு வல்லதமிழ்.
நில்லாத தமிழ்ப் பல்லக்குப் பயணம்.
தொல்லையும் உண்டு நிராகரிப்பு அலட்சியம்.

பணம், பயண அனுமதி, பயணச்சீட்டின்றி
பகிர்ந்திட மனிதரில்லாத வழிமாறிய பயணம்
பத்திரம், ஆரோக்கியம், நித்திரையூர் தொலைத்து
சித்திரவதையாம்  நோயூருக்கு அனுப்பும்.

சுழலும் பூமிக்கு வயதாகியதால் அதன் சுந்தரமான
வாழ்வும் எம்மை உழல வைக்க
வெள்ளம் சுனாமி, வரட்சியாம் நோய்களென
நிழலும் நெருங்காது வழி மாற்றுகிறது.
குழலுள் காற்றாய் நாம் வெற்றியிசை மீட்டவேண்டும்.

வாழ்வின் சுழற்சியால் தடம் மாறாது
தாழ்வு  நிலையேகாத நம்பிக்கைக் கைத்தடியோடு
தழலாய் எழும் தைரியம் ஒன்றினாலே
குழிகள் மேடுகள் தாண்டிக் கவனம் களவாடி 
விழி வியக்கவோடும் பயணங்களே வாழ்க்கை.

Continue Reading →

வட இலங்கை வீடமைப்பு முறை அன்றிலிருந்து இன்றுவரை – ஒரு கண்ணோட்டம்!

குணசிங்கம் சிவசாமி - கட்டடக்கலைஞர்கட்டடக்கலைஞர்கள் ஆர்.மயூரநாதன், காலஞ் சென்ற சிவபாலன் மற்றும் என்.தனபாலசிங்கம் ஆகியவர்களின் ஆய்வுக் கட்டுரைகளை அடிப்படையாகவும், இலங்கை மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலைக் கல்வியின் இரண்டாவது பகுதியைக் (MSc in Architecture) கற்றுக்கொண்டபோது சமர்ப்பிக்கப்பட்ட எனது சொந்த ஆய்வுக்கட்டுரையையும் அடிப்படையாகக்கொண்டு இக்கட்டுரையின் மூலம் என் கண்ணோட்டத்தை உங்கள் முன் வைக்கின்றேன்.

வீடமைப்புமுறை பொதுவாக ஓரினத்துடைய கலை, கலாச்சார, சமூக பொருளாதார நிலைகளின் வெளிப்பாடு எனலாம். வட இலங்கைத் தமிழர்களுடைய வீடமைப்புமுறையை இதே அடிப்படையில், எனது பார்வையில் இக்கட்டுரையை ஒரு கண்ணோட்டமாகத் தருகின்றேன்.

வட இலங்கைத் தமிழர்களின் கலை, கலாச்சார, சமூக, பொருளாதாரம் எல்லாமே அதிகளவில்  தென் இந்தியர்களின் – குறிப்பாகத் தமிழ்நாடு, கேரளா மாநிலங்களின் – வாழ்க்கை முறையோடு பெருமளவில் தொடர்புபடுத்தப்பட்டதாகவும், அதனூடான தாக்கங்களையும் , பாதிப்புகளையும் கொண்டதாகவே இருந்தன. இதற்கு வட இலங்கை, தென் இலங்கையை விட தென் இந்தியாவுக்கு  அண்மையாக இருந்ததுவும், வியாபார -அடிப்படைத் தொடர்புகளைக் கொண்டிருந்ததுவும்  காரணமாக இருக்கலாம்.

வட இலங்கையின் சனத்தொகை அதிகளவில் தமிழ் பேசுபவர்களையும், இந்து சமய வழிபாட்டைப் பின்பற்றியவர்களையும் கொண்டிருந்தது. தமிழ்நாடு, கேரளா போன்றே அவற்றின் தாக்கத்தினூடாக சமய, சமூக நம்பிக்கைகளும் வட இலங்கைத் தமிழர்களிடையே அன்றிலிருந்து இன்றுவரை பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன. குறிப்பாகச் சாதி அமைப்பு முறை, பெண்கள் தனிமைப்படுத்தப்படல், சாத்திரம் போன்றவை தமிழ் இந்துக்களிடையே நடைமுறைப்படுத்தப்பட்டன. இவற்றின்பாதிப்புகள் வீடமைப்பு முறையிலும் அன்றிலிருந்து இன்றுவரை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

Continue Reading →

சந்திரன் கவிதைகள்!

1. மாற்றம்

- முனைவர் ஆ.சந்திரன் , உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், வேலூர் -ஏனோ அன்று புத்தாடை வாங்கியே தீரவேண்டுமென்று
பிடிவாதமாய் அங்காடித் தெருவில் நடந்துகொண்டிருந்தேன்
“அங்கவஸ்திரம் தலைக்கு அழகாய் இருக்கும்” என்ற கடைக்காரன்
“தோளில் மாட்டும் பூனூல் இலவசம்” என்றான்
திருப்தியின்றி வேறுகடையினுள் நுழைந்தேன்
“இது லேட்டஸ்டு மாடல் ஜிப்பா” என்று நீட்டியவன்
“இந்த டாலர் செயின் இலவசம்” என்றான்
விளைவு
சாம்ராணிப் புகை வீசிய கடையில் நான்
“இந்தத் துணி வாங்கினால் உங்களுக்குத் தாடி அழகாய்
முளைக்கும்” என்றான் கடைக்காரன்!
மூன்று நாள் சேவ் செய்யாத தாடியைத் தடவியவாறே
எதிரே வந்த துறவியைக் கடந்து வீட்டை அடைந்தேன் !
குளித்து முடித்து, எந்த ஆடையை உடுத்திக்கொள்வது? என்ற
யோசனையுடன் அலமாறியை அலசியபோது
அம்மாவின் கைப்பக்குவத்தை மீறி எழுந்த
மகனின் சிறுநீர் வாசம் “என்னை இருக்கப் பற்றிக்கொள்” என்று
என்முன் வந்து டேன்ஸ் ஆட
அதை எடுத்து உடுத்திப் பார்த்தேன்!
மடிப்பின் இடையில் ஒளிந்துகொண்டிருந்த
மஞ்சள் என்னைப் பார்த்து சைட் அடித்தது!

Continue Reading →

சிறுகதை: தலைவன் தேடு படலம்!

- முனைவர் ஆ.சந்திரன் , உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், வேலூர் -நிலத்தின் நீர் வேட்கை முற்றிலும் பூர்த்தியானதைப் பசுமையின் கரங்கள் வானத்திற்குத் தெரிவித்துக்கொண்டிருந்தன. நைட் வாச்மேன் வேலைக்குப் போய்த்திரும்பிய சோர்வைப் போக்கிக்கொள்ள போர்வைகள் சூரியக்குளியல் மூழ்கின. மாலைச் சூரியன் நீச்சல் பழக கடலை நோக்கி விரைந்து கொண்டிருப்பதைப் பார்த்துப் பதறிய தலைவிக்கு அன்றை இரவு யுகத்தின் எல்லையாக நீண்டது. அது அவளுக்கு ஒரு முடிவை எடுக்க போதுமான இடைவெளியைத் தந்திருந்தது. அதனால் சூரிய உதயம் அவளுக்கு இனிய பொழுதாய் இருந்தது.

திருமணத்திற்குப் பிறகு வீட்டைவிட்டுத் தனியாகப் போவது இதுதான் முதல் முறை என்றாலும், அவளுக்கு அதைப் பற்றிய சிந்தனை ஏதும் அப்போது ஏற்படவில்லை. கதிரவனின் சூட்டை இலவசமாக வாங்கிக்கொண்டிருந்த தரையின் மேற்பரப்பு அவளைப் பரிசோதிக்க ஆரம்பித்தது. அவற்றின் சோதனைகளைப் பற்றிச் சிந்திக்கவிடாமல் செய்தன பிரிந்து சென்ற காதலனின் நினைவுகள். 

அவளுடைய நடையின் வேகம் தளர ஆரம்பித்தது. நீண்டதூரம் நடந்த களைப்பும் சூரியனின் வெக்கையும் அவளுடைய பெண்மையை உணர்த்தி பயமுருத்திப் பார்த்தன என்றாலும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. 

தென்னை மர நிழலில் அழையாத விருந்தாளியாய் அவள் அடைக்கலம் புகுந்த போது சூரியன் பூமியை தொண்ணூறு டிகிரி கோணத்தில் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்தப் பார்வையின் உக்கிரத்திற்கு மரத்தடியில் நிழலுக்கு ஒதுங்கியவர்களின் நெற்றியில் இருந்து வழிந்த வியர்வையே முதன்மைச் சாட்சியங்களாய் இருந்தன.

அடிவயிற்றைத் தடவிய விரல்களின் பூரிப்பை முகம் வெளிக்காட்ட நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தாள். தென்றலின் ஸ்பரிசம் அவளைத் தீண்டும் தருணங்களில் மட்டும் வெயிலின் சோர்வு ஓய்வு கொண்டது. 

நூடுல்ஸ்க்கு வெள்ளையடித்தது போன்ற தலையைக் கொண்ட பெண்ணின் கண்கள் நிழலுக்கு ஒதுங்கிய தலைவியை ஸ்கேன் செய்துகொண்டிருந்தன. வயதிற்கு மீறித்தெரிந்த அழகினைப் பெருமூச்சுடன் கூடிய அவளுடைய பார்வைத் தோலுத்துக் காட்டியது. அதை முதல் பார்வையிலேயே புரிந்துகொண்ட தலைவி, தன்னுடைய பார்வையை மரத்தின் நிழலில் ஊர்ந்து சென்று கொண்டிருந்த எறும்பின் மீது திருப்பினாள். அப்போதும் அவளுடைய கைகள் அடிவயிற்றைத் தடவியவாறே இருந்தன.

இளமைத் தோற்றமுடன் காணப்பட்ட முதியவள் இவ்வாறு சொன்னாள் இளம்பெண்ணைப் பார்த்து. “இந்த வெக்கையில் தனியாய் எங்கே போகிறாய் பெண்ணே! துணைக்கு யாரையாவது அழைத்து வந்திருக்கக் கூடாதா?……..” என்று.

Continue Reading →

கவிதை: வண்ணத்துப் பூச்சியின் எண்ணச்சிதறல்கள்!

- சீ. நவநீத ராம கிருஷ்ணன் -வண்ணம் தோய்ந்த சின்னம் நான்.
வானவில்லின் சாரம் நான்.
சின்னஞ்சிறிய சிறகை அசைத்துச்
சீட்டாய்ப்பறக்கும் சிறுபறவைநான்.

கூட்டைப் பிளந்து  காற்றில் மிதந்து,
கண்டேன் காட்சி  கண்கொள்ளா….!
ஏட்டில் அதுவர , பாட்டில் மதுதர,
காட்டும் சொல்லுக்குத்  தமிழ் நில்லா….!

நித்தம் மலர்ந்தும், மதுவால் நிறைந்தும்,
சொக்கும் மலர்கள் தோழிகளே….!
சித்தம் குளிர்வேன்,  முத்தம் தருவேன்,
சுற்றம் அணைப்பேன், வாழியவே….!

கொட்டும் அருவியும் , முட்டும் மேகமும்,
சொட்டும் எழிலைச் சொல்வதற்கு….!
கட்டி அணைப்பதும், கனியாய் இனிப்பதும்,
சொக்கும் தமிழில்  வேறெதற்கு….?

குதித்தே ஓடும் ஓடைதன்னில்,
குளித்தே ஆடும் மீன்கூட்டம்….!
பதித்தே தடத்தைப் பரவும் அதனைப்
பார்ப்போர் கொள்வார்  முழு நாட்டம்….!

தென்றல்  தவழச்   சாரல் உதிரத்,
திங்கள் ஒளியில் திரள் காட்சி…..!
வந்திடும் உளத்தினில், வாழ்ந்திடும்  நினைப்பினில்,
வந்தனம் இயற்கை  வளம் சாட்சி…!

உங்கள்  நண்பன்  உற்றேன் உவகை….
உண்மை சொன்னால் பேருவகை….!
கண்ணில் கண்ட காட்சியை உரைத்தேன்,
கண்டீர் இதன்மேல்  ஏது(உ)வகை…?

Continue Reading →

வெலிகம ரிம்ஸா முஹம்மதின் ‘விடியல்’ ஆய்வு நூல் பற்றிய கண்ணோட்டம்

வெலிகம ரிம்ஸா முஹம்மதின் 'விடியல்' ஆய்வு நூல் பற்றிய கண்ணோட்டம்பன்னூலாசிரியராகத் திகழும் வெலிகம ரிம்ஸா முஹம்மத் தனது கலையுலகப் பயணத்தின் அடுத்த கட்டமாக ‘விடியல்’ எனும் தலைப்பிடப்பட்ட நூலை வெளியிட்டுள்ளார். அழகானதொரு முன்னட்டைப் படத்தைக் கொண்ட ‘விடியல்’ ஓர் ஆய்வு நூலாகத் திகழ்கின்றது.

கவிஞர் மூதூர் முகைதீனின் பிட்டும் தேங்காய்ப் பூவும், இழந்துவிட்ட இன்பங்கள், ஒரு காலம் இருந்தது ஆகிய மூன்று கவிதை நூல்களை அழகாக ஆய்வு செய்யும் இந்த விடியல் ஆய்வு நூல் இலக்கிய அபிமானிகளுக்கு மட்டுமன்றி மாணவர் உலகிற்கும் பயனளிக்கக்கூடியதாக அமைந்துள்ளது. ஐந்து அத்தியாயங்களை அடுக்கடுக்காகக் கொண்ட ‘விடியல்’, ஆய்வு நூலின் ஒழுங்கு முறைகளுக்கு இசைவாக அமைந்திருப்பதுடன் கட்டுக்கோப்பான ஒரு நூலுருவில் நூலாசிரியரால் யாத்தமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இன ஒற்றுமைக்குப் பாலமிடும் கவிதைகளை தனது ஆய்வுக்காகத் தேர்ந்தெடுத்திருப்பது இக்கால கட்டத்திற்கு உசிதமான ஓர் அம்சமாகும்.

வைத்தியக் கலாநிதி எம்.கே. முருகானந்தன் சிறப்பானதொரு முன்னுரையை இந்நூலிற்காக வழங்கியுள்ளார். அதில் அவர் வெலிகம ரிம்ஸா முஹம்மத் அவர்களைப் பற்றி இவ்வாறு கூறுகிறார். ‘இளம் – வளர்ந்து வரும் எழுத்தாளர் அதேநேரம் கவிதை, சிறுகதை, விமர்சனம், சிறுவர் கதை என்ற இலக்கிய உலகிற்கு அப்பால் கணக்கியல் துறையிலும் படைப்பாற்றல் பெற்ற பெண் எழுத்தாளரின் இப்புதிய நூலுக்கு முன்னுரை எழுதக் கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கின்றது’ என தனது சந்தோசத்தை வெளிப்படுத்தியவராக, தொடர்ந்து பல கருத்துக்களைக் கூறிக்கொண்டு செல்லும் அவர் இன்னுமோர் இடத்தில், ‘ஆய்வுக்காக கடமை நிமித்தம் படித்து எழுதியது போலன்றி ஒவ்வொரு கவிதையிலும் மூழ்கி முத்தெடுத்து சிலாகித்து எம்மையும் அக்கவிஞரின் உலகிற்குள் அழைத்துச் செல்கிறார்.’ என ரசனையுடன் படித்ததை சுவாரஸ்யமாகக் குறிப்பிடுகின்றார்.

மேலும் வைத்தியக் கலாநிதி முருகானந்தன் தன் முன்னுரையில், ‘இன ஒற்றுமைக்குப் பின்பு தவறான முடிவுகளால் சந்தேகமும் பிரிவும் ஏற்பட்டமை, இதனைத் தாண்டி மீண்டும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதை கவிதைகள் ஊடாக மூதூர் முகைதீன் எவ்வாறு வெளிப்படுத்துகிறார் என்பதை வெலிகம ரிம்ஸா முஹம்மத் சிறப்பாக எடுத்துச் சொல்கிறார்.’ எனத் தொடர்ந்து செல்லும் அவர், ‘ஆய்வு நூல் என்பதற்கப்பால் சகல தரப்பு வாசகர்களும் சுவாரஷ்யமாக வாசிக்கக்கூடிய முறையில் இந்த நூலை ஆக்கிய நூலாசிரியருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்| என்றவாறு தனதுரையை முடிக்கின்கிறார்.

கிண்ணியா எஸ். பாயிஸா அலி தனது வாழ்த்துரையில், ‘சகோதரி வெலிகம ரிம்ஸா முஹம்மத் நம் நாட்டு முஸ்லிம் பெண் படைப்பாளிகள், இலக்கியச் செயற்பாட்டாளர்கள் வரிசையில் முன்னிலையில் தனித்துவப் போக்கோடு மிளிர்பவர். கவிதை, மெல்லிசைப்பாடல், சிறுகதை, விமர்சனம், சிறுவர் இலக்கியம் என சமூகத் தளத்தில் தனக்கெனப் பல அடையாளங்களை வெளிப்படுத்தி வருபவர். பூங்காவனம் எனும் கலை இலக்கியச் சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகச் செயற்பட்டு பல்வேறு படைப்பாளிகளுக்குக் களம் அமைத்துக் கொடுப்பவர்.’ எனக்கூறிச் சென்று இறுதியில் ‘இன ஒற்றுமையையும் சமூக நல்லுறவையும் வலியுறுத்தும் மூதூர் முகைதீனின் கவிதைகள் பல்வேறு இலக்கியத் திறனாய்வாளர்களினாலும் ஆராயப்பட்டிருப்பினும் சகோதரி ரிம்ஸாவின் திறனாய்வுப் பார்வையும் அவரது அழகிய மொழி நடையும் கவிஞர் மூதூர் முகைதீனின் கவிதைகளுக்கு மென்மேலும் அழகையும் பொலிவையும் புதுப்புது ஆற்றல்களையும் காட்டி நிற்பதனைக் காண முடிகின்றது.’ என்று முடிக்கிறார்.

Continue Reading →

பாரிஸ் மாநகரில் பண்டிதர் மயில்வாகனனார் நூற்றாண்டு விழா! நினைவில் நிறைந்திருக்கும் பண்டிதர் அய்யா!

பாரிஸ் மாநகரில் பண்டிதர் மயில்வாகனனார் நூற்றாண்டு விழா! நினைவில் நிறைந்திருக்கும் பண்டிதர் அய்யா!இலங்கையின் வடமேற்குக் கரையில் இந்து சமுத்திரத்தாயின் அரவணைப்பில் திகழும் நீர்கொழும்பூருக்கு ஐதீகத்திலும் வரலாற்றிலும் அழியாத அடையாளம் இருக்கிறது. இலங்கேஸ்வரன் இராவணனின் புதல்வன் இந்திரஜித்தன் நிகும்பலை என்னும் யாகம் வளர்த்த ஊர் என்பதனால் அதற்கு நிகும்பலை என்றும் ஒரு காரணப்பெயர் இருக்கிறது. அந்த யாகத்திற்காக இந்திரஜித்தன் இவ்வூரில் ஐந்து இடங்களில் உருவாக்கிய குளங்கள் காலப்போக்கில் அடையாளம் தெரியாதவகையில் உருமாறிக் கட்டிடக்காடுகளாகிவிட்டன. எனினும், இன்றும் மழைக்காலத்தில் அந்த இடங்களில் தண்ணீர் தங்கித்  தேங்கிவிடுவதை அவதானிக்கமுடிகிறது. 

இலங்கை வரலாற்றில், இடம்பெற்ற துட்டகைமுனுவின் மனைவிக்கு வந்த உடல் உபாதையைப் போக்குவதற்கு இந்த ஊரில் தேன் கிடைத்தமையால் தேன் ஊர் என்ற அர்த்தத்தில் மீகமுவ என்றும் சிங்கள மொழியில் அழைக்கப்பட்டதுதான் இவ்வூர். அவ்வாறே Negombo என ஆங்கிலத்தில் அழைக்கப்படுவதற்கும் காரணங்கள் இருக்கின்றன. மன்னர் காலத்தில் தேனும் சுரந்து, ஒல்லாந்தர் காலத்தில் ஏலம், கறுவா, கராம்பு முதலான வாசனைத்திரவியங்கள் விளைந்த பிரதேசமாகவும் திகழ்ந்தமையாலும் இனிமையும் வாசனையும் நிரம்பிய நகரமாகியது. ஒல்லாந்தர்கள் நீர்கொழும்புக்  கடற்கரைக்குச்சமீபமாக ஒரு கற்கோட்டையை அமைத்து முகாமிட்டபோது, அதற்கு வடமேற்கிலிருந்து வருவதற்கு மகா ஓயா நதியிலிருந்து கிளை வெட்டி, புத்தள வெட்டுவாய்க்காலையும் அமைத்தனர். அதற்கு அணித்தாக எழுந்தருளிய ஶ்ரீசித்திவிநாயகர் கோயிலின் முன்புறம் நீண்ட காலமாக விருட்சமாக வளர்ந்திருந்த அரச மரத்தின் நிழலில் அக்காலப்பகுதியில் அங்கு வாழ்ந்த சைவத் தமிழ்ப்பெருங்குடி மக்களினால் உருவாக்கப்பட்டது இந்து வாலிபர் சங்கம். வந்தோரை வாழவைக்கும் சிங்கார நீர்கொழும்பு என்ற பெயரையும் இவ்வூர் பெற்றிருந்தது. கத்தோலிக்க மக்கள் செறிந்துவாழ்ந்த இந்த ஊருக்கு சின்னரோமாபுரி என்றும் ஒரு பெயர் வழக்கிலிருந்தது. நூற்றுக்கணக்கான கத்தோலிக்க வழிபாட்டிடங்கள் அமைந்திருந்தமையினால், இந்தக்காரணப்பெயரும் தோன்றியிருக்கிறது.

இவ்வாறு பல காரணப்பெயர்களுடன் விளங்கிய எமது ஊருக்கு காரணம் இல்லாமல் காரியம் இல்லை எனச்சொல்லத்தக்வகையில் 1954 ஆம் ஆண்டு ஒரு விஜயதசமி காலத்தில் தோன்றியதுதான் விவேகானந்தா வித்தியாலயம். முகாமைத்துவப் பாடசாலைகள் இலங்கை எங்கும் வியாபித்திருந்த காலத்தில், நீர்கொழும்பில் நீண்டகாலமாக வாழ்ந்த சைவத்தமிழ் மக்களுக்கும் வடக்கிலிருந்து தொழில், வர்த்தகம், திருமண உறவு முறைகளினால் இடம்பெயர்ந்து வருகைதந்த சைவத்தமிழ் மக்களுக்கும் ஒரு குறைபாடு நீடித்தது. அக்குடும்பங்களுக்கு கடற்கரை வீதியில் வழிபாட்டிற்கு மூன்று ஆலயங்கள் இருந்தபோதிலும், அக்குடும்பங்களின் குழந்தைகளுக்கென ஒரு சைவத் தமிழ்ப்பாடசாலை இல்லாத குறை நீடித்திருந்தது. எனினும் சைவ சமயத்தை போதிக்கின்ற – கூட்டுப்பிரார்த்தனை வகுப்புகளை நடத்துகின்ற தேவையை உணர்ந்த இந்து வாலிபர் சங்கம் சமூக அமைப்பாகவும் இயங்கியமையால் அதற்காக சாமி சாஸ்திரியார் என்ற ஆசான் மூலம் சமயபாட வகுப்பினைச் சங்க மண்டபத்தில் நடத்துவதற்கு தொடங்கியது. எனினும் அதற்கு வந்த குழந்தைகள், இதர பாடங்களை ( கணிதம், ஆங்கிலம், புவியியல், குடியியல்) படிப்பதற்கு அருகிலிருந்த புனித செபஸ்தியார் பாடசாலை, புனித மரியாள் பாடசாலை, நியூஸ்ரட் ஆங்கில மகளிர் பாடசாலை, ஆவேமரியா மகளிர் பாடசாலை ஆகியனவற்றுக்குத்தான் சென்றனர். 1954 ஆம் ஆண்டு வரையில் இந்த நிலைமைதான் நீடித்தது. இந்த நிலையை மாற்றுவதற்கு ஏதுவாக அச்சமயத்தில் இந்து வாலிபர் சங்கத்தின் தலைவராக இருந்த பெரியார் எஸ்.கே. விஜயரத்தினம் அவர்கள் ஒரு வழக்கறிஞராகவும் உத்தியோகப்பற்றில்லாத நீதிவானாகவும் விளங்கினார். அதேசமயம் நீர்கொழும்பு நகர பிதாவாகவும் (மேயர்) தெரிவாகியிருந்தார். தனது காலத்திலாவது இங்கு வாழும் சைவத்தமிழ் குழந்தைகளுக்காக ஒரு பாடசாலையை தங்கள் இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் தொடக்கிவைக்கவேண்டும் என்ற தீர்மானத்தை சங்கத்தின் உறுப்பினர்களின் ஆதரவுடன் முன்வைத்தார். இவ்வாறு அந்தப்பாடசாலை தொடங்கப்பட்ட அக்காலப்பகுதி, இன்று இந்தப் பதிவை எழுதும் எனக்கு நினைவாக ஆழ் மனதில் பதிந்திருக்கிறது.

Continue Reading →