Poem: Oh, Super Human! Where have you concealed yourself?

Poem: Oh, Super Human! Where have you concealed yourself?  ‘ஓ! அதிமானுடரே! நீவிர் எங்கு போயொளிந்தீரோ?’ என்னும் என் கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு. ஆங்கிலத்தில் இக்கவிதையினை மொழிபெயர்த்தவர் முனைவர் ர.தாரணி .


Poem: Oh, Super Human! Where have you concealed yourself?

– In Tamil: V.N.Giritharan; Translation in English Dr. R. Dharani –

Concrete! Concrete and Concrete
Walls! Ingesting the rays to radiate flames
Blameless, pellucid white surface,
Chuckling Cement-clad pathway.
In the embrace of the audacious columns,
lies enraptured spaces
heat rays cut through the layers of air.
In the pleasure of delusion over
The grass being excited
by the smiles of dew drops,
There is a gloomy cloud of thought over
The cool Lady Earth under her blue canopy.

The embracing dreams of the
Drooping tree belles’ cuddle.

The impact of artificiality
Spreading over Nature’s repository.

In trees, on grass, in herds, in  caves,
In the dreadful hours of darkness,
Panicked by the lightning storm, under the torrential shower,
Coiled up in the times of bewilderment,
Continued the ancient  journey

Continue Reading →

“கி.ரா. சிறுகதைகள் காட்டும் கரிசல் மக்களின் வாழ்வியல்”

கி.ரா.கி.ரா எனும் இரண்டெழுத்து மந்திரம் :
கி.ரா. ஒரு எளிமையான கதைச்சொல்லி. இவருடைய எழுத்துகளில்,வருணணைகளில் மாடமாளிகைகள் இருக்காது. இளவரசிகளின் பாதாதி கேச வருணணைகள் இருக்காது.ஏழை எளிய மக்களின், நடுத்தர வர்கத்தினரின் உழைப்பும், குடிசைகளின் வாழ்வும், கூழ்குடித்து ஏர்பூட்டி உழும் மக்களின் வாழ்வியல் எனும் நிழல் ஓவியங்கள் நம் மனக்கண்ணில் படரவிடுவதில் அசாத்திய திறமைமிக்க எழுத்தாளர். பல்கலைக்கழகத்தில் படிக்காவிடினும், புதுவை பல்கலைக் கழகத்தின் சிறப்பு பேராசிரியராகப் பணியாற்றியவர். எதார்த்த எழுத்தாளர் கு.அழகிரிசாமியின் பால்ய காலம் முதலான நண்பர்.கரிசல் கதைகளின் தந்தையான கி.ரா. நாட்டுப்புறவியலில் சிறந்து விளங்குபவர்.கம்யூனிஸ சிந்தாந்தி. இரு முறை போராட்டங்களில் பங்கேற்றுச் சிறைச் சென்றவர். இவரது ‘கிடை’ குறுநாவல் ‘ஒருத்தி’ எனும் திரைப்படமாக எடுக்கப்பட்டு சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. நாட்டுபுறக் கதைக் களஞ்சியம் உருவாக்கியவர். சிறுகதை, நாவல், நாட்டுபுறவியல் என தமிழின் பல்வேறு பரிமாணங்களில் மிளிர்ந்தவர். தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்ற விருது, இலக்கியச் சிந்தனை விருது, சிறந்த எழுத்தாளர் போன்ற விருதுகளைப் பெற்றவர். அனைத்திற்கும் முத்தாய்ப்பாய் ‘கோபல்லபுரத்து மக்கள்’ எனும் நாவலுக்காக 1991 இல் சாகித்ய அகாதெமி விருதுப்பெற்றவர்.அவரது கதைகளில் மிளிரும் கரிசல் மக்களின் வாழ்வியலை ஆய்வதாய் இக்கட்டுரை அமைகிறது.

கதவு காட்டும் ஏழ்மை:
‘வித்தக கலைஞன் தொட்டுவிட்டால் விறகு கட்டைக்கூட வீணையாகலாம்’ எனும் பழமொழிக்கு ஏற்ப கதவு எனும் ஜடப்பொருள் இக்கதையில் கி.ராவின் படைப்பாளுமையால் புராதனச் சின்னமாகிறது.கதை முழுவதும் லட்சுமி, சீனிவாசன் எனும் இருசிறுவர்களின் வழி ஏழ்மை வாழ்வு சித்திரிக்கப்படுகிறது. கதவு அவர்கள் பயணம் செய்யும் பேருந்தாகிறது. அதன் சுழற்சி சுற்றளவில் திருநெல்வேலியும் சுற்று வட்டாரங்களின் தூரங்களும் அடங்கி விடுகின்றன. வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் பணக்கார பழமையை விடாது காத்துக் கொண்டிருப்பது அது ஒன்றுதான். அதன் மீது சிறுவர்கள் விளையாடி மகிழ்கிறார்கள், அதை தன் தோழனாக பாவிக்கிறார்கள். அவர்களுடைய அப்பா மணிமுத்தாறில் கூலிவேலை செய்கிறாh.; அம்மா காட்டு வேலைக்கு சென்று விடுகிறாள்.

ஒரு தீப்பெட்டியில் இருந்த நாய் படத்தைக் கம்மஞ்சோறு கொண்டு ஒட்டுகிறாள்.அதைப் பார்த்து கைத்தட்டி ஆரவாரிக்கிறார்கள். ஊர் தலையாரி வருகிறார். உங்க ஐயா எங்கே? என கேட்கிறான். குழந்தைகள் ஊருக்குப் போய் இருப்பதை கூற, வந்தா தீர்வை (வரி) கட்டச் சொல்லிவிட்டு போகிறார். மறுநாளும் வந்து கேட்கும் போது அம்மா ஐயா அவரு ஊரிலே இல்லை. மணிமுத்தாறு போயி அஞ்சு மாசமாச்சி ஒரு தகவலையும் காணோம். மூணு வருசமா மழை தண்ணி இல்லையே நாங்க என்னாத்தை வச்சி உங்களுக்கு தீர்வை பாக்கியை கொடுப்பொம்? ஏதோ காட்டிலே போய் கூலி வேலை செய்து இந்த கொளந்தைகளைப் காப்பாத்ரதே பெரிய காரியம். உங்களுக்குத் தெரியாதா? என்றாள். (ப.3 கி.ராஜநாராயணன் கதைகள்)

Continue Reading →

ஆய்வு: தொல்காப்பிய அங்கமும் அழகும்

முனைவர் த. மகாலெட்சுமி, முனைவர் பட்ட மேலாய்வாளர்(யு.ஜி.சி.) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னைதமிழ்மொழி மலையும் மலை சார்ந்த இடமான குறிஞ்சி நிலம் தோன்றுவதற்கு முன்பே தோன்றிய தொன்மைச் சிறப்பு மொழி. இதில் தற்போது கிடைக்கும் செவ்விலக்கிய நூல்களுள் மிகவும் தொன்மையான முதல்நூல் தொல்காப்பியமே என்பதில் ஐயமில்லை. தமிழ் மொழியின் பெருமையையும் தமிழ் மக்களின் வாழ்வியல் கோட்பாடுகளையும் அவர்தம் அறிவு மேம்பாட்டையும் உலகறியச் செய்யும் பெருமை உடையது. வாழ்க்கையை அகம், புறம் என்று பிரித்து அவற்றை இலக்கியமாகப் படைப்பதற்கு இலக்கணம் வகுத்துத் தந்தது தொல்காப்பியம். இதன் சிறப்பும் பயனும் அங்கமும் அழகும் மிகப்பெரிய அளவில் பட்டியலிட்டுக் காட்டலாம். எனினும் இவற்றைச் சுருக்கமாக ஆராய்வோம்.

தொல்காப்பியர்

தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியர் என அழைக்கப்படுகிறார். பல தொன்மைக்காலப் பெரும்புலவர்களின் வரலாறு சரிவர அறியப்படாதவாறு போன்று இவர் வரலாறும் அறியப்படவில்லை. தொன்மையான காப்பியக்குடி என்னும் ஊரினர் என்பதால் இப்பெயர் பெற்றார் என்பர் ஒரு சாரார். தொன்மையான தமிழ் மரபுகளைக் காக்கும் நூலை இயற்றியமையால் இவ்வாறு பெயர் பெற்றதாகவும் கூறுவர். இவர் அகத்தியர் மாணவர் என்றும் அறியப்படுகிறார்.

தொல்காப்பியர் காலம்

தொல்காப்பியரின் காலம் பற்றி அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. தொல்காப்பியம் கி.மு.3ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்றும், கி.மு.5ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்றும் கி.மு.ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்றும் கருத்துகள் உள்ளன. சங்க இலக்கியங்களில் தொல்காப்பியக் காலத்திற்கு மாறான, தொல்காப்பியர் கூறாத புதிய இலக்கண, இலக்கிய வழக்காறுகள் நுழைந்துள்ளன. எனவே தொல்காப்பியம் சங்க இலக்கியங்களுக்குப் பலநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட நூலே என்பதே பெரும்பாலோர் கருத்தாக அமைந்து ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

தொல்காப்பியருக்கு முற்பட்டோர்

தொல்காப்பியர் வாழ்ந்த காலத்திலும் அதற்கு முன்னரும் இலக்கண ஆசிரியர் பலர் வாழ்ந்து வந்தனர் என்பதைத் தொல்காப்பியத்தால் அறிய முடிகிறது. இது பற்றி முன்னரே குறிப்பிடப்பட்டது. ‘என்ப’, ‘என்மனார் புலவர்’, ‘யாப்பறி புலவர்’, ‘தொன்மொழிப் புலவர்’, ‘குறியறிந்தோர்’ எனத் தம் காலத்திற்கு முன்னுள்ளோரைத் தொல்காப்பியர் தம் நூலில் குறிப்பிடுகின்றார். தமிழின் பல இலக்கணக் கோட்பாடுகளைத் தமக்கு முன்பிருந்த இலக்கண ஆசிரியர்கள் கூறியுள்ளதாகத் தொல்காப்பியர் எடுத்துக்காட்டுவது, தமிழ் மிகு பழங்காலத்திலேயே இலக்கிய இலக்கணச் செம்மை பெற்றிருந்தது என்பதை அறியத் துணைபுரிகிறது. இதுவும் தொல்காப்பியத்தின் சிறப்பாகும். இடைச்சங்கத்தாருக்கும் கடைச்சங்கத்தாருக்கும் தொல்காப்பியம் இலக்கணமாக இருந்தது என இறையனார் களவியல் உரையாசிரியர் குறிப்பிடுவதும் அறியத்தக்கது.

Continue Reading →

ஜீவா நாராயணன் (கடலூர்) கவிதைகள்

கவிதை வாசிப்போமா?


1. கண்ணீரும் கலக்கட்டும்விடு

விடு  விடு
நீரை  திறந்துவிடு  – அது 
உங்கள்  காவேரியே  ஆனாலும்
அணைகளில்  இருந்து  திறந்துவிடு

மகிழ்ச்சியில்  கரை 
புரண்டோடவிடு
எங்கள்  மண்ணை 
தழுவவிடு
ஆனந்த  கண்ணீரை 
சிந்தவிடு

எங்கள்  பயிரும் 
செழிக்கட்டும்விடு
எங்கள்  உள்ளமும் 
குளிரட்டும்விடு

Continue Reading →

ஆய்வு: வெறியாடல் கற்கை நெறியின் வெளி முன்வைக்கும் மரபும் சூழலும்

ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?முன்னுரை
கற்கை நெறிமுறைகள் பள்ளிகள் பல்கலைக்கழகங்கள் தாண்டி அன்றாட வாழ்விலும் ஆதிக்கம் செலுத்துகின்றன. மனிதனை மனிதனாக்குவது மனிதனைப் பக்குவப்படுத்துவது போன்றவையே நோக்கமாகக் கொண்டு செயல்படும் நிறுவனங்களில் பாதம் படாத பாமர மக்களைப் பக்குவப்படுத்தும் காரணிகளில்  இலக்கியம், கலை, சமயம், சமுதாயம், சமூகம், குடும்பம், கூட்டம் போன்றவை இன்றியமையாத பங்காற்றுகின்றன. இலக்கிய, கலை, சமயப் பங்களிப்பிற்கு எழுத்தறிவு அவசியமில்லை என்பது ஒருபுறம். எழுத்தறிவு இல்லாத இலக்கியம் நாட்டார் இலக்கியம் என்று பெயரைப் பெறும் என்பது மறுபுறம். இவ்வகை இலக்கியங்களும் கற்கை நெறிகளாக இருந்து மக்களை மகாத்துமாக்களாக்குகின்றன. இத்தகைய மகாத்துமாப் பனுவல்களைப் பத்திரப்படுத்தும் நூலகங்களாகக் கிராமங்கள் திகழ்கின்றன. கிராமங்களில் நடைபெறும் ஒழுக்கப் பிறழ்வுகள் ஒரு சில இந்நெறிமுறைப் பாடத்திட்டத்தின் போதாமையை எடுத்துரைக்கும் ஆவணங்களாகவும் செயல்படுகின்றன.இவ்விடமே வெறியாடல் கற்கை நெறியின் வெளி  குறித்து விவாதிக்க தூண்டுகிறது. இவ்வெளியானது அறிஞர் பெருமக்களால் நான்கு நிலைகளாகப் பாகுப்படுத்தப்படுகின்றது. அவை முறையே

1 கிளைச் சாதி – கிராமத் தெய்வம்
2 குலம்      – கால்வழித் தெய்வம்
3 குடும்பம்    – வீட்டுத் தெய்வம்
4 கூட்டம்     – ஊர்த்தெய்வம்

என்பனவாகக் கொள்ளப்படுகின்றன. இப்பாகுபாடுகள் கிராமங்களின் மிகப் பெரிய நிறுவனங்கள் எனக் கொள்ளலாம். இப்பகுப்புமுறை நான்கனுள் முதல் மூன்றும் செவ்வியல் பண்பு பெற்றவையாகவும் இறுதியாக இடம்பெறும் ‘கூட்டம் – ஊர்த்தெய்வம்’ என்பதை நவீனப் பண்பு கொண்டதாகவும் வரையறுக்கலாம். இதுவே இக்கற்கை நெறியின் உள்முரணாகக் கொள்ளப்படுகின்றது. இதன்படி செவ்வியல் x நவீனம் எனும் இரு கூறுகள் வெறியாடலில் பயின்றுவருவதைக் காணலாம்.

Continue Reading →

ஆய்வு: சிலப்பதிகாரம் காட்டும் வாழ்வியல் சிந்தனைகள்

கண்ணகிமுன்னுரை: –
இலக்கியம் என்பது வாழ்க்கையின் கண்ணாடி.  நமது வாழ்க்கையே இலக்கியம்.  அவ்வகையில் உலக மொழியியல் அறிஞர்கள் அனைவரும் சங்ககால இலக்கியங்களை செவ்வியல் இலக்கியங்களாக ஏற்று அங்கீகரித்துள்ளனர்.  தமிழ்மொழியானது இன்றும் நிலைத்து நீடித்திருப்பதற்குக் காரணம், அது காலத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றித் தகவமைத்துக் கொண்டே வருவதால் வழக்கிலும், வாழ்க்கையிலும் பின்னிப் பிணைந்து செம்மொழியாக மிளிர்ந்து நன்னடைபோட்டு வருகிறது.

தமிழ் செவ்வியல் இலக்கியங்கள் வரிசையில் சிலப்பதிகாரத்திற்கு மிக ஏற்றமுண்டு.  இரண்டாம் நுற்றாண்டு காப்பியமான இதில் இளங்கோவடிகள் அதன் பாத்திரங்கள் வழியாக பல்வேறு வாழ்க்கை நெறிகளை மிக விரிவாக எடுத்துக் காட்டியுள்ளார். அவ்வகையில் சிலம்பில் காணப்படும் வாழ்க்கை நெறிகளில் முக்கியமான அம்சங்களை இக்கட்டுரையில் தொடர்ந்து காண்போம்.              

சிலப்பதிகாரம் காட்டும் வாழ்வியல் சிந்தனைகள் : –

” நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணி ஆரம் படைத்த தமிழ்நாடு” என்று டாக்டர் சாமிநாதய்யர் கூறியதுபோல் சிலப்பதிகாரமானது தமிழினத்தில் வரலாற்றுக் களஞ்சியமாகவும், பண்பாட்டுப் பெட்டகமாகவும் விளங்குகிறது.  தமிழர்களின் பண்பாடுகளை மிகத் தெளிவாகக் காட்டும் நுல் சிலப்பதிகாரமாகும்.  இதற்குப் பிறகு நமது பண்பாட்டினை படம்பிடித்துக் காட்டும் பெருங்காப்பியம் இதுவரை தோன்றவில்லை எனலாம்.                 சிலப் பதிகாரத்தில் கோவலன், கண்ணகி, பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன், துறவி கவுந்தியடிகள் போன்றோர் வாயிலாக பல்வேறு வாழ்க்கைக் கூறுகளை நயம்பட உரைக்கிறார் இளங்கோவடிகள்.                  

1.   பெருமைமிக்க பத்தினியை பெரியோர் தொழுவர்.
2.   அரசியல் பிழை செய்தவர்களுக்கு அறமே யமன்.
3.   ஊழ்வினை தொடர்ந்து வந்து பற்றியே தீரும்.
4.   கவுந்தியடிகள் வடக்கிருந்தது.
5.   மானுடவியல் நோக்கில் ஐவகைநில தெய்வ வழிபாடு, நடுகல் வழிபாடு, நாட்டாரியல் கலை மற்றும் இசை, நடனம்.

பெருமைமிக்க பத்தினியை பெரியோர் தொழுவர் : –
கண்ணகியின் கற்புத் திறத்தை கற்புடை மகளிர் என இரண்டு சொற்களில் கூறாமல் 

”பெண்டிரு முண்டுகொல் பெண்டிரு முண்டுகொல்
கொண்ட தொழுநர் உறுகுறை தாங்குறுஉம்
பெண்டிரு முண்டுகொல் பெண்டிரு முண்டு கொல் ” ( ஊர்சூழ் வரி 51 – 53 )

அதாவது கணவன் செய்யும் துன்பங்களைத் தாங்குபவரே கற்புடைப் பெண்டிர்.  கணவன் துன்பங்களுள் பெண்களுக்கு மிகக் கொடியதாய் இருப்பது அவனது போற்றா ஒழுக்கமான பரத்தமையே.  என்றாலும் கோவலனின் செய்கைகள் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு ஆறியக் கற்பு (அ) அறக் கற்பு மற்றும் சீறிய கற்பு (அ) மறக் கற்பு என கண்ணகி உயர்ந்து இருந்தாள்.

Continue Reading →

சொல்லத்தவறிய கதைகள்: புனிதம் பறிக்கப்பட்ட புனித பூமியின் கங்கை மகள் – பிரேமாவதி !

பிரேமாவதி மனம்பெரி” உலகத் தொழிலாளர்களே  ஒன்றுபடுங்கள் ”  என்ற  கோஷத்துடன் தொழிலாள   விவசாய  பாட்டாளி  மக்கள்  தமது  உரிமைகளுக்காக உரத்துக்குரல்   கொடுத்து  ஊர்வலம்  செல்லும்  நாள் மேதினம். வருடந்தோறும் மே மாதம் முதலாம் திகதி தொழிலாளர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. இலங்கையில் இந்தவருடம் புத்தர்பெருமானுக்காக இந்த மேதினம் ஏழாம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது. புத்தரின் பெயரால் எதிர்காலத்தில் இவ்வாறு எத்தனை மாற்றங்கள் வருமோ தெரியவில்லை.!? தங்கள் பொது எதிரணிக்கு மேதினம் கொண்டாடுவதற்கு காலிமுகம் கிடைக்கிவில்லை என்பதனால், தாங்கள் காலியில் கொண்டாடவிருப்பதாக சொல்லியிருக்கிறார் மகிந்தர். வழக்கமாக நடக்கும் மேதினங்களில் பல அணிகள் பிரிந்து பல மேடைகளில் “உலகத்தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்” என்பார்கள். வழக்கமாக கொழும்பில் மாத்திரம் சுமார் 17  மேடைகளில்   பிரிந்து  நின்று உலகத் தொழிலாளர்களே   ஒன்றுபடுங்கள்  என்பார்கள்   அல்லது  அடுத்த தேர்தல்  பற்றி  பேசுவார்கள்!!?? இலங்கையில்   தொடர்ச்சியாகவே  மேதின  மேடைகளில்  இந்த உழைக்கும்  வர்க்கம்  பற்றியா  பேசப்படுகிறது…?  அந்த  வர்க்கத்தின் நலன்கள்   குறித்தா  தீர்மானங்கள்  எடுக்கப்படுகின்றன….? அனைத்து   மே  தின  மேடைகளிலும்  அடுத்த  தேர்தலைக்குறியாக வைத்துத்தான்   பேசப்படுகிறது.   இலங்கையில்  ஒவ்வொரு  வருடமும்   ஏப்ரில்  மாதமும்  மே  மாதமும்   வரலாற்று முக்கியத்துவம்   வாய்ந்த  மாதங்கள்.  1971   ஏப்ரிலில்  மிகவும் கொடூரமான   முறையில்  அடக்கி  ஒடுக்கப்பட்டது  மக்கள்  விடுதலை   முன்னணியின்  போராட்டம்.   நதிகளில்  மிதந்த சடலங்கள்,   பொலிஸ்  நிலையங்களின்  பின்வளவுகளில்  எரிக்கப்பட்ட   சடலங்கள்,   ரயர்களுடன்  கொளுத்தப்பட்ட  இளம் உயிர்கள்.    கூட்டிக்கழித்துப்பார்த்தால்  25   ஆயிரத்தையும்   தாண்டும் அவற்றின்   எண்ணிக்கை.

2009   ஆம்  ஆண்டு  மே   மாதத்தில்  மற்றுமொரு   இனச்சங்காரம் முள்ளிவாய்க்காலில்    முடிவுற்றது.   இதில்  கொல்லப்பட்ட  மனித உயிர்கள்   பற்றிய  சரியான  மதிப்பீடுகள்  இன்றி,  இன்னமும் போர்க்குற்றம்   பற்றி   பேசப்படுகிறது.  காணாமல்  போனவர்களின் உறவினர்களின்   கண்களிலிருந்து  கண்ணீர்  இன்னமும் வற்றவில்லை. தென்னிலங்கையிலும்   வடக்கிலும்  ஆயுதம்  ஏந்திய  இரண்டு  பெரிய தலைவர்கள்   இன்று  இல்லை.   இருவருமே   கொல்லப்பட்டதுடன் அவர்கள்   இரண்டுபேரும்  தலைமை தாங்கிய  பேரியக்கங்களின் ஆயுதப்போராட்டம்   முடிவுக்கு  வந்தாலும்,   மக்கள்  விடுதலை முன்னணி   ஜனநாயக  நீரோட்டத்தில்  சங்கமித்து –  ஆயுதங்களை நீட்டாமல்,  கைகளை  நீட்டி  வாக்குகளை  கேட்டு  பாராளுமன்றம் சென்றது. ஆனால் –  புலிகளின்  மீதான   தடை  தொடர்வதனால் மே  மாதம்  முள்ளிவாய்க்காலுடன்  முற்றுப்பெற்ற  அந்த  இயக்கத்தின் முகவர்களாக   இருந்த  அகிம்சாவாதிகள்  பாராளுமன்றத்தில் அமர்ந்திருக்கிறார்கள்.

ரோஹண   விஜேவீராவின்  மனைவி  சித்ராங்கனியும்   ஐந்து பிள்ளைகளும்  அரச பாதுகாப்பில்  ஒரு  கடற்படை முகாமில்  வைக்கப்பட்டிருந்து விடுவிக்கப்பட்டார்கள். முத்த  பெண்பிள்ளை   ஈஷா, புத்தி   பேதலித்து  தனது  தாயையும்  தம்பியையும்  தாக்கியதனால் பெற்றதாயினால்  பொலிஸில்  முறையிடப்பட்டு  காவலில் வைக்கப்பட்டாள். விஜேவீராவின் மூத்த மகன் தற்போது மாஸ்கோவில் தந்தை படித்த அதே லுமும்பா பல்கலைக்கழகத்தில் படிக்கிறார். வேலுப்பிள்ளை  பிரபாகரனின்  மனைவி  மதிவதனி  மற்றும் பெண்பிள்ளை   என்ன  ஆனார்கள்…? என்பது  தொடரும்  மர்மம். அவரது ஆண்வாரிசுகள் எவ்வாறு கொல்லப்பட்டனர் என்பது தெரிந்த செய்தியே! இந்த  பத்திக்கு  நான்  வைக்கவிரும்பிய  தலைப்பு  இயல்புகள்  பற்றியதே.

சூழல்,   சுற்றம்,   சர்வதேச  மாற்றங்கள்  எதனையுமே  கவனத்தில் -கருத்தில்  கொள்ளாமல்  தமது  இயல்புகளில்  பிடிவாதமாக  இருந்த இரண்டு  பெரிய  ஆளுமைகளின்  இயல்புகள்  –  முடிவில் அவர்களையும்   அழித்து,   அவர்களை  நம்பியிருந்தவர்களையும் நட்டாற்றில்   கைவிட்ட  கதையை   மீண்டும்  மீண்டும்  ஒவ்வொரு வருடமும்   ஏப்ரில்,  மே  மாதங்களில்   நாம் படித்துக்கொண்டிருக்கின்றோம். இந்தப்பின்னணிகளுடன், இற்றைக்கு 47 வருடங்களுக்கு முன்னர் (1971) புனிதம்போற்றும் பூமி கதிர்காமத்தில் நடந்த கதைக்கு வருகின்றேன்.

Continue Reading →

க. இரமணிதரனின் ‘மொழிபெயர்ப்புக் கவிதைகள் சில!

இரபீந்திரநாத் தாகூர்க.இரமணிதரன்– புலம்பெயர் தமிழ் இலக்கியத்தில் தவிர்க்கப்பட முடியாத முக்கிய படைப்பாளிகளில் ஓருவர் கந்தையா இரமணிதரன், ‘ சித்தார்த்த சேகுவேரா’, ‘பெயரிலி’, ‘திண்ணைதூங்கி’யுட்படப் பல்வேறு புனைபெயர்களில் எழுதிவரும் இவர் தனித்துவமான மொழி நடைக்குச் சொந்தக்காரர். சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளிலும் தன் பங்களிப்பை நல்கி வருபவர். அவரது ‘அலைஞனின் அலைகள்: கூழ்’ என்னும் வலைப்பதிவிலிருந்து இம்மொழிபெயர்ப்புக் கவிதைகள் மீள் பிரசுரமாகின்றன. – பதிவுகள் –



Monday, April 11, 2005

தன்கா – I
தன்கா ஐந்து.
மூலப்பெயர்ப்பு: 1997 ஜூலை,
25
திருத்திய பெயர்ப்பு: 2005 ஏப்ரில், 11

*ஒரு மொழியின் சிறப்பான கவிதை இலக்கியவடிவத்தினை அப்படியே இன்னொரு மொழியிலே எல்லாச் சந்தர்ப்பங்களிலும் கொண்டு வரலாமென்று தோன்றவில்லை; புதிதாக அந்த வடிவத்துக்குரிய மூல மொழியல்லாத மொழியொன்றிலே படைக்கப்படும் கவிதைகளிலே சிலவேளைகளிலே இவ்வாறான படைத்தல் சாத்தியப்படலாம்; ஆனால், மொழிபெயர்ப்பிலே மூலக்கவிதையின் கருத்து, படிமம், வடிவம், சொல் ஆகிய நான்கினையும் ஒருங்குசேர உருக்கி எடுத்துப் பெயர்ப்புறும் மொழியின் தனித்துவத்தினையும் மீறாமற் தருவதென்பது அசாத்தியமானது. அதனால், மொழிபெயர்ப்பாளர் மூலக்கவிதையின் நான்கு ஆக்கு பண்புக்கூறுகளிலே எதை முக்கியப்படுத்துகிறார் என்ற தனிப்பட்ட விருப்பிலேயே பெயர்க்கப்பட்ட கவிதை அமைகிறது. என்னைப் பொறுத்தமட்டிலே, பெயர்ப்பிலே படிமம், கருத்து, சொல், வடிவம் என்கிற இறங்குவரிசையிலேயே கவிக்கூறுகளுக்கு முக்கியத்துவம் தர விரும்புகிறேன். (இறுகிய இலக்கணப்படி பார்த்தால், ஹைகூ, தன்கா, ஸீஜோ ஆகியவற்றிலே ஓரளவுக்கு கருத்தும் படிமமும் வடிவமுங்கூட பிணைந்தபடிதான் இருக்கின்றன என்பதையும் காணவேண்டும். ஹைகூவிலே பருவகாலம் பற்றிய கவிதை என்பதும் மீறப்படக்கூடாதென்பது, அதன் சீர்களைக் குறித்த விதிகளோடு சேர்ந்து வருகின்றதென்பது ஓர் உதாரணம்; தமிழிலேயே ஹைகூ வடிவத்தினை இலக்கணப்படுத்தலாம் என்ற வாதமும் ஹைகூ மாரிநுளம்புகள்போல பரவிய காலத்திலே மரபுக்கவிதைக்காரர்களிலே சிலராலே வைக்கப்பட்ட வாதம்).

ஆக, இந்த தன்காக்கள் அந்த வகையிலேயே பெயர்க்கப்பட்டிருக்கின்றன (ஏற்கனவே, ஐப்பானிய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்குப் போய், பின்னால், அங்கிருந்து தமிழுக்கு வருகின்றபோது, ஏற்பட்டிருக்கக்கூடிய சிதைவுகளையும் எண்ணிக்கொள்ளவேண்டும்; மொழிபெயர்ப்பிலே இழக்கப்படுவது கவிதை – கிட்டத்தட்ட, வேறுவேறு காவி அலைகளூடாகக் கடத்தப்படும் இசையிலே சேரும் இரைச்சலோடு கேட்பார் வானொலியிலே மீளப்பெறுதல்போல)

1.
the cold walk,
silence
between us
the creek running
under ice

கூதல் நடை,
எம்மிடை
மௌனம்
பனி கீழ்
சிற்றோடை ஓடும்

2.
hazy autumn moon
the sound of chestnuts dropping
from an empty sky
I gather your belongings
into boxes for the poor

புகார்க் கூதிர் மதி
வெற்று வான் நின்று
வாதம்பருப்பு வீழ் ஒலி
ஏழைகட்காய்ப் பெட்டிகளுள்
உன் உடமை சேர்த்து நான்

Continue Reading →

கனடாத் தமிழ் அமைப்புகள் இழைத்த மாபெரும் தவறும் , கிருஷ்ணகுமார் கனகரத்தினத்தின் மரணமும்!

'அவருடைய உயிரைக் காப்பாற்றுவதற்காக', MV Sun Sea கப்பலில் கனடாவுக்கு வந்தவர். அந்தச் சரக்குக் கப்பலில் அவருடன் இருந்த ரொறன்ரோ நபர் ஒருவரின் கருத்துப்படி, 2010இல், "அவருடைய உயிரைக் காப்பாற்றுவதற்காக", MV Sun Sea கப்பலில் கிருஷ்ண குமார் கனகரத்தினம் கனடாவுக்கு வந்தார் – ஆனால், முடிவில் கனகரத்தினம் உயிரை இழந்துள்ளார்.கனடாவில் தமிழர் அமைப்புகள் பல உள்ளன. ஊர்ச் சங்கங்கள் பல உள்ளன. தென்னிந்தியக் கலைஞர்களை அழைத்துப் பணத்தை வாரியிறைக்கின்றார்கள். ஆனால் தமிழர் நலன்களுக்காக இயங்குவதாகக் கூறும் இச்சங்கங்கள் புற்றீசல்கள் போல் இருந்தும் பயனென்ன? அரசு தரும் நிதி உதவியைப்பெறுவதற்காகவே சங்கங்கள் பல உள்ளன. வேறு சிலவோ இவ்வாறு கிடைக்கும் பெருமளவு பணத்தைப் பல்வேறு வழிகளில் செலவழித்துக் கணக்குக் காட்டுவதில் திறமையாய உள்ளன. ஆனால் இவ்விதமான அமைப்புகள் செய்ய வேண்டிய முக்கியமான பணிகளில் முதன்மையானது எது?

இலங்கையில் நிலவிய சமூக, அரசியற் சூழல் காரணமாக ஆயிரக்கணக்க்கில் ஈழத்தமிழர்கள் பல்வேறு வழிகளில் உயிரைப்பணயம் வைத்து , உலகின் பல்வேறு நாடுகளுக்கும் அகதிகளாகத் தஞ்சம் கோரிப் புலம் பெயர்ந்தார்கள். நூற்றுக்கணக்கில் பலர் செல்லும் வழிகளில், கடலில், காடுகளிலெனத் தம் உயிரை இழந்தார்கள். சூழலைப்பாவித்த முகவர்கள் சிலரின் சமூக, விரோதச்செயல்களால் பலர் பணத்தையும் இழந்தார்கள். அந்நிய நாடுகளில் கைவிடப்பட்ட நிலையில் வாடி மடிந்தார்கள். பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு பல்விதமான துன்பங்களுக்கு உள்ளானார்கள்.

இவ்விதமாக ஒருவழியாக புகலிட நாடுகளில் வந்திறங்கிய தமிழ் அகதிகள் அடைந்த அடையும் துன்பங்கள் பல? இவற்றில் தலையிட்டு , உதவி செய்ய வேண்டிய முக்கியமான தமிழர் அமைப்புகள் எல்லாம் அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் எவ்வகையான உதவிகளை அவ்விதமான தமிழர்களுக்குச் செய்கின்றன. இங்குள்ள அரசியல்வாதிகளைத் தமிழர்தம் பாரம்பரிய ஆடைகளில் அழைத்து வருகின்றார்கள். அரசியல்வாதிகள் என்னும் பெயரில் அடிக்கடி பத்திரிகைகளில் , நிகழ்வுகளில் தலை காட்டுவதில் தம் நேரத்தைச் செலவிடும் இவர்கள் , இவ்விதமான அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, மேன் முறையீடுகளும் நிராகரிக்கப்பட்டு , தலை மறைவாக வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள் விடயத்தில் என்ன செய்தார்கள். அவர்களிடமிருந்து பணத்தைச் சுருட்டுவதில்தான் இவர்கள் பலரின் கவனம் இருந்ததேதவிர , இவ்விதமான தமிழர்களுக்கு உதவுவதற்காக அல்ல என்பது வெட்கப்படத்தக்கதொன்று.

கனடிய அரசு யுத்த நிலை காரணமாகச் சிரியா போன்ற நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கானவர்களை அகதிகளாக அழைக்கின்றது. பிரதமரே விமான நிலையம் சென்று வரவேற்கின்றார். அவ்விதம் ஆயிரக்கணக்கானவர்களை அகதிகளாக எவ்விதமான தனிப்பட்ட ஓவ்வொருவரும் அகதியா என்று நிரூபிக்கப்படாத நிலையில் அழைத்து , அங்கீகரித்து, வரவேற்கும் கனடிய அரசு எதற்காக ஈழத்தமிழர்கள் விடயத்தில் மட்டும் , அங்கு நிலவிய யுத்தச் சூழல்கள் நிலவிய நிலை தெரிந்தும், அங்கு யுத்தத்திற்கு முன்னர் மக்கள் அடைந்த மனித உரிமை மீறல்கள் தெரிந்தும், ஒவ்வொரு அகதிக்கோரிகையாளரும் தம் நிலையினை நிரூபிக்க வேண்டுமென வலியுறுத்த வேண்டும்? இங்குள்ள தமிழர் அமைப்புகள் அப்பொழுதெல்லாம் என்ன செய்து கொண்டிருந்தன? சிரியா அகதிகளை வரவேற்றது போல் , ஈழத்தமிழ் அகதிகளையும் இரு கரம் நீட்டி, அனைவரையும் அகதிகளாக ஏற்றுக்கொண்டு வரவேற்றிருக்க வேண்டும் என்பதை இவ்வமைப்புகள் செய்திருக்க வேண்டுமல்லவா? இவ்விதமாக அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட அகதிக்குடும்பங்கள் , குடும்ப அங்கத்தவர்கள் பிரிக்கப்பட்ட நிலையில் நாடு கடத்தப்பட்டபோது அவர்கள் நிலையைப் பொறுப்பெடுத்து அவர்களுக்காகக் குரல் கொடுத்திருக்க வேண்டுமல்லவா?

Continue Reading →

ஆய்வு: பாவையும் பாவையும்“ (ஆண்டாளும் திருப்பாவையும்)

முனைவர் செல்வகுமார்முன்னுரை
‘பாவையும் பாவையும் என்னும் இருசொற்களும் எவற்றைக் குறிக்கின்றன? இரண்டு சொற்களும் சொல்லளவில் ஒன்றே. எனினும் இங்குப் பொருளளவில் வேறு வேறு ஆகும். ஆண்டாளும் திருப்பாவையும் என அடைப்புக் குறிக்குள் தந்திருப்பதால் முதலில் இருப்பது ஆண்டாளைக் குறிக்கும். அடுத்தது திருப்பாவை என்னும் நூலினைச் சுட்டும் எனலாம்.

‘பாவை’ என்னும் சொல்லுக்குப் பொருள் பொம்பை. பஞ்சாய்க்கோரையால் பொம்மை செய்து இளமகளிர் விளையாடுதல் பண்டைய வழக்கம். உவமையாகு பெயராய்ப் பெண்ணைக் குறிப்பதும் உண்டு. ‘இது என்பாவை, பாவை இது என’ எனவரும் ஐங்குறுநூற்றுப் பாடல் தொடரில் ‘பாவை’ என்பது பெண்ணையும், பொம்மையையும் முறையே சுட்டுதல் அறியத்தகும்.

சாதாரணமானவர்களைக்காட்டிலும் முனிவர்கள் உயர்ந்தவர்கள்; அவர்களை விட ஆழ்வார்கள் உயர்ந்தவர்கள்; அவர்களுள்ளும் பெரியாழ்வார் உயர்ந்தவர்; அவரையும் விஞ்சி உயர்ந்து நிற்பவர் ஆண்டாள் என்பது சுவாமி பெரியவாச்சான் பிள்ளை கருத்து.

1. பாவை (ஆண்டாள்) வரலாறு:
விஷ்ணுசித்தர் தமது நந்தவனத்தில் துளசிச்செடியின் கீழ்க் கண்டெடுக்கப்பெற்ற பெண் குழந்தைக்குக் கோதை எனப் பெயரிட்டு வளர்த்து வந்தார். அவரே பெரியாழ்வார். செல்வமாக வளர்ந்த குழந்தை திருமால் மீது மால் கொண்டு அவனையே மணாளனாக வரித்துக்கொண்டது. பெரியாழ்வார் மலர்மாலை கொடுத்துத் திருமாற்குச் சாத்தும் திருப்பணியை மேற்கொண்டவர். கோதையானவள் இறைவனுக்காகத் தொடுக்கப்பட்ட மாலையைத் தான் அணிந்து, பெருமானுக்குத் தானேற்றவள்தானோ என்று நோக்கிப்பின் அளிப்பது வழக்கம். இச்செய்தியாராய்ப் பெரியாழ்வார் அதனை இறைவற்குச் சூட்டிவந்தார். ஒருநாள், தன்மகளின் அடாத செயலைக் கண்டு வெகுண்டு, வேறு மாலை தொடுக்குமாறு செய்து, இறைவற்குப் புனைய, இறைவன் இரவில் அவரது கனவில் தோன்றி அவள் அணிந்து விடுத்த மாலையே தனக்கு மகிழ்ச்சி விளைப்பதாகக் கூறினான். பெரியாழ்வாரும் அவ்வாறே அம்மாலையையே அளித்து வந்தார். இது காரணமாக ஆண்டாளுக்குச் சூடிக்கொடுத்தவள் என்ற பெயர் எய்தியது. இவள் மணப்பருவம் அடைந்தவுடன் பிறர் எவரையும் மணக்க எண்ணம் இன்றித் திருவரங்கப் பெருமாற்கே தான் உரியவள் எனக் கூறிவந்தாள். இவ்வாறு அவள் கருதியதற்கு அவளது அருளிச் செயல்களிலேயே அகச்சான்றுகள் காணலாம். அவளுடைய தந்தை பலபட முயன்றும் அவட்கு மணமுடிக்கக் கூடவில்லை. திருவரங்கப் பெருமான் கட்டளையின் பேரில், ஆண்டாளம்மையைத் திருவரங்கத் தலத்திற் கொண்டு சேர்த்ததாகவும் அங்கே அவள் இறைவனை அடைந்ததாகவும் வரலாறு கூறும். ஆண்டாள் திருநட்சத்திரம் : ஆடிப்பூரம்.

2. ஆண்டாள் காலம்
திருப்பாவைப் பதின் மூன்றாம் பாசுரத்தில் ‘வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று’ என்று ஒரு தொடர் உள்ளது. அதிகாலை வேளையில் கிழக்கே வெள்ளி மேலெழுந்து மேற்கு வானில் வியாழன் மறைந்த நிகழ்ச்சியானது கணித நூற்கணக்கின்படி 7, 8, 9 ஆம் நூற்றாண்டுகளில் நான்குமுறை நிகழ்ந்ததாகவும் அவற்றுள் கி.பி.731இல் மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளில் (மார்கழிப் பௌர்ணமியன்று) வெள்ளி எழுச்சியும் வியாழன் வீழ்ச்சியும் நிகழ்ந்தன எனவும் வரையறை செய்யப்படுகிறது. எனவே ஆண்டாள்காலம் கி.பி.8ஆம் நூற்றாண்டின் முற்பகுதி எனலாம்.

Continue Reading →