வாசிப்புக்குச் சவாலான பிரதி: சீனிவாசன் நடராசனின் ‘விடம்பன’த்தை முன்வைத்து…

வாசிப்புக்கு சவாலான பிரதி: சீனிவாசன் நடராசனின் ‘விடம்பன’த்தை முன்வைத்து…தேவகாந்தன்2016 ஆகஸ்டில் காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வெளிவந்திருக்கும் இந்த நூல்பற்றி எழுதவேண்டுமென்று எந்த எண்ணமும் தோன்றியிருக்கவில்லை, இதை வாசிக்க ஆரம்பித்தபொழுதில். அது பழக்கமும் இல்லை. வாசித்து முடிந்த பிறகு எழுத மனம் உந்தினால்தான் உண்டு. சீனிவாசன் நடராசனின் ‘விடம்பன’த்தை இரண்டரைத் தடவையாக வாசித்த பிறகு இன்றைக்கு எழுத மனம் ஏற்பட்டிருக்கிறது. ஒருமுறை வாசித்து மூடிவைத்துவிட்டு நான்கைந்து நாட்கள் கழிய புத்தகத்தை தொடர முயன்றபோது முடியாமல்போனது. பக்கங்களை பின்னோக்கி நகர்த்தியபோதும் தொடுப்பை பிடிக்க முடியவில்லை. மீண்டும் வாசித்தேன். வாசிப்பில் அலுப்புத் தோன்றவில்லை. புதியதான தோற்றம். அது மீண்டும் மீண்டும் தன் ரகசியங்களைக் கட்டவிழ்த்துக்கொண்டே இருந்தது. சுகம் எச்சமாய் வந்தது. அதுவே இப்பிரதியின் அறுதியான பலன். ‘விடம்பன’த்துக்கு அடையாளமொன்று தேவைதான். அவ்வகையில் இதை நாவலென்று கொள்ளமுடியும். இதன் முன்னுரையில் சுகுமாரன் வகைப்படுத்துவதுபோல் picaresque வகையாகவும் எடுத்துக்கொள்ளலாம். Picaresque வகையினத்தின் பல்வேறு அம்சங்களுள் ஒன்றிரண்டு பண்புகளையே அது இறுக்கமாகப் பற்றிக்கொண்டு செல்கிறது. பிக்காறெஸ்க் நாவலில் அல்லது உலுத்த வகை நாவலில் தன்னிலைக் கதைசொல்லும் பண்பை இது எடுத்த எடுப்பிலேயே நிராகரித்துவிடுகிறது.

ஜேர்மன் மொழியில் 1959இல் வெளிவந்து 1961இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பான குந்தர் கிராஸின் The Tin Drum இவ்வகை நாவலுக்கு ஆரம்ப கால முன்னுதாரணமென்று சொல்லப்பட்டாலும், அந்த அமைவில் ‘விடம்பனம்’ செல்லவில்லை. ஆனாலும் அந்த வகையினத்தில் தவிர வேறில் இதைச் சேர்க்கவும் முடியாது. பெரும்பாலும் நீண்ட வசனங்களைக்கொண்டு அமைந்திருக்கிறது பிரதி. சல்மான் ருஷ்டியினதைப்போன்ற நீள வசனங்கள். வாசிப்பை மெல்ல நகர்த்துகிற அம்சம் இதுவேயெனினும், இதில் மனம் லயித்துவிடுகிறதைச்  சொல்லுகிறபோது, சில நீண்ட வசனங்கள் இடறச் செய்வதையும் சேர்த்தேதான் குறிப்பிடவேண்டும். பாத்திரங்கள் சில நெஞ்சில் நிறுதிட்டமாய்ப் பதிந்துவிடுகின்றன. அவளும் இவளும் என வரும் இரு பெண்பாத்திரங்களான ராணி மார்க்கும், ஆடுதன் ராணியும் அவற்றில் தலையாயவை. அவளா இவளா என்று எழுவாயைக் கண்டறிய முடியாத குழப்பம், கவனம் சிதறினால் வாசகனில் விழுந்துவிடுவதைத் தவிர்க்க முடியாதிருக்கும். இது திட்டமாய் அமைக்கப்படவில்லை என்பதை மீறியும், இவ்வகைக் கதை சொல்லலுக்கு இதுவே உகந்த முறையென்று எண்ணுமளவிற்குத்தான் இருக்கிறது. புனைவுப் பாத்திரங்களான ஆடுதன் ராணியும், ராணி மார்க்கும், மணிமொழியும், தமிழ்வாணனும், காத்தானும், மூக்காயியும், சின்னக் கட்டாரியும்போலவே கருங்கண்ணியும், ஜிம்மியும்கூட மனத்தில் பதிகிற விதமாகவே நாவல் நடந்திருக்கிறது. அவ்வப்போது குறுக்கீடு செய்யும் அம்மாஞ்சிப் பாத்திரத்தைக்கூட, அதன் குணவியல்புகளிலிருந்து மங்கலாகவேனும் ஒரு உருவத்தை வாசகனால் கற்பிதம் பண்ணமுடிகிறது. அம்மாஞ்சி பாத்திரத்தின் சிந்தனையின் வரன்முறையான வளர்ச்சி  நாவலின் தவிர்க்கவியலாப் பக்கங்களாகின்றன. அதனாலேயே ஒரு மங்கலான உருவத்தோடேனும் பாத்திரம் மனத்தில் இருக்கச் செய்கிறது. எனில் இதில் எந்தவொரு தனிப் பாத்திரமும் கதையை நகர்த்தவில்லையென்பது பிரதானமானது. தொடர்ந்தேர்ச்சியாக கட்டமைக்கப்பட்ட கதையொன்றுடன் நாவல் வந்திருக்கவில்லை. ஆயினும் இதில் ஒரு கதை இருக்கவே செய்கிறது. ஆனால் அந்தக் கதை மய்யமழிந்து கிடப்பதுதான் பிரதியின் விசேஷம்.

Continue Reading →

நிகழ்வுகள்: ‘மகரந்தச் சிதறல்’ நூல் ஒரு வரலாற்று ஆவணம்! ஈலிங் நூல் நிலையத்தில் சிறப்பு அறிமுக உரை!

நவஜோதி யோகரட்னம்‘ஈழத்தின் இசை மரபு குறித்தும், நடன மரபு குறித்தும், ஓவிய மரபு குறித்தும் ஏனைய நுண் கலைகள் பற்றியதுமான முறைமையான வரலாறு எழுதப்படாமல் இருப்பது துரதிஷ்டவசமானதாகும். ஈழத்து இலக்கிய வரலாறு ஒழுங்குமுறையான வரலாற்று நெறிக்கு உட்படுத்தப்பட்டதுபோல ஏனைய துறைகளில் அந்தச் சாதனை நிகழ்த்தப்படவில்லை. அந்த வகையில் நவஜோதி ஜோகரட்னத்தின் ‘மகரந்தச் சிதறல்’ என்ற இந்த நோர்காணல் தொகுப்பு ஈழத்தின் இசை, நாடக, நாட்டிய, ஓவிய, இலக்கிய, அரசியல், மருத்துவ, தொழில்முயற்சி வரலாற்றின் மிக நேர்த்தியான பதிவுகளைக் கொண்டு காணப்படுவது பாராட்டத்தக்க எழுத்து முயற்சியாகும்’ என்று  விமர்சகர் மு.நித்தியானந்தன் ஈலிங் நூல்நிலைய மண்டபத்தில் இடம்பெற்ற ‘மகரந்தச் சிதறல்’ நூல் அறிமுகக் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றும்போது தெரிவித்தார்.

ஈலிங் நூல் நிலையத்தைச் சார்ந்த திருமதி சாந்தி அகிலன் ஒழுங்கு செய்திருந்த ‘மகரந்தச் சிதறல்’  நூல் அறிமுகக் கூட்டத்தில் மு. நித்தியானந்தன் தொடர்ந்து உரையாற்றும்போது மேலும் கூறியதாவது: ‘லண்டனில் வாழும் 33 பெண் ஆளுமைகளின் தேர்ந்த நேர்காணல்களின் தொகுப்பாக இந்த நூல் சிறப்புப் பெறுகின்றது. இந்நூலில் இடம்பெற்றிருக்கும் இசைப் புலமை சார்ந்த தையல்சுந்தரம் பரந்தாமன், சரஸ்வதி பாக்கியராஜா போன்றவர்களின் நேர்காணல்கள் அவர்கள் இருவரின் மறைவின் பின் கூடிய அர்த்தம், முக்கியத்துவம் கொண்டதாகத் திகழ்கிறது. இசை, நாட்டியம் போன்ற துறைகளில் நேர்காணல்கள்; மேற்கொள்ளப்பட்டுள்ள 12 பெண் ஆளுமைகளின் பல்வேறுபட்ட குடும்பப் பின்னணி, இசை நாட்டியப் பின்புலம், வௌtவேறுபட்ட சமயப் பின்னணிகள், செழுமை மிக்க இசை நாட்டிய வல்லுநர்களிடம் பயின்றமை போன்ற வித்தியாசமான அனுபவத்தை வழங்குவதாக அமைந்துள்ளது.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 243 : எழுத்தாளர் அருண்மொழிவர்மனுடன் சில மணித்துளிகள்…….

எழுத்தாளர் அருண்மொழிவர்மன்இன்று மாலை (ஜூன் 29, 2017) எழுத்தாளரும், புதிய சொல் ஆசிரியர் குழுவைச்சேர்ந்தவரும், இணையச் சுவடிகள் காப்பகத் தளமான ‘நூலகம்’ தளத்திட்டத்தின் பங்காளர்களிலொருவருமான அருண்மொழிவர்மனுடன் சுமார் இரு மணித்தியாலங்கள் வரையில் , பிரிம்லி மற்றும் லோரன்ஸ் வீதிச்சந்திப்பிலுள்ள ‘டிம் கோர்ட்ட’னில் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. மறைந்திருக்கும் ஈழத்தவர்களின் படைப்புகளையெல்லாம் இணையத்தில் ஆவணப்படுத்தி வரும் ‘நூலகம்’ தளம் பற்றி, நூல் வெளியீடுகள் பற்றி, அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் அனைவருக்கும் பொதுவாக நூல்கள், ஓலைச்சுவடிகள், கலை, இலக்கிய ஆளுமைகளின் இறுதிக்காலக் கையெழுத்துக் குறிப்புகள், ஆக்கங்கள் போன்றவையெல்லாம் ஆவணப்படுத்தும் பணியினைச் செய்துவரும் இணையச் சுவடிகள் அமைப்பான ‘நூலகம்’ தளத்தின் முக்கியத்துவம் பற்றி இவ்விதம் பல்வேறு விடயங்களைப்பற்றி உரையாடல் தொட்டுச் சென்றது.

நூலகம் தளத்தின் சுவடிகளை ஆவணப்படுத்தும் திட்டம் பற்றி, அதனை எவ்விதம் செய்வது பற்றி, இதற்காக இலங்கையில் நடைபெற்ற பயிற்சி வகுப்புகளைப்பற்றி இவர் இச்சந்திப்பின்போது எடுத்துரைத்தார். நூலகம் தளத்தின் முக்கியமான ஆவணப்படுத்தல் செயற்பாடுகளில் இவ்வோலைச்சுவடிகளை ஆவணப்படுத்தலும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க செயற்பாடு.

Continue Reading →

‘டொராண்டோ’வில் பெர்டோல்ட் பிரெக்ட்’டின் ‘யுகதர்மம்’ நூல் வெளியீடு!

– யூலை 9, 2017 அன்று ‘டொராண்டோ’வில் பெர்டோல்ட் பிரெக்ட் (Bertolt Brect) எழுதிய புகழ் பெற்ற நாடகங்களிலொன்றான The Exception and The Rule என்னும்…

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 242: நனவிடை தோய்தல்: க.பாலேந்திரா பற்றிய சிந்தனைகள் சில…..

பாலேந்திராயூலை 9, 2017 அன்று ‘டொராண்டோ’வில் பெர்டோல்ட் பிரெக்ட் (Bertolt Brect) எழுதிய புகழ் பெற்ற நாடகங்களிலொன்றான The Exception and The Rule என்னும் நாடகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பான ‘யுகதர்மம்’ நூலின் வெளியீடு நடைபெறவுள்ளது. அன்று மாலை 3800 Kingston Road , Toronto என்னும் முகவரியில் அமைந்துள்ள Scarborough Village Community Centre மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதற்காகத் திரு. பாலேந்திரா அவர்கள் தற்போது ‘டொரோண்டோ’ வருகை தந்திருக்கின்றார். அவரது நூல் வெளியீடு வெற்றியடைய வாழ்த்துகள். பாலேந்திராவின் வருகை அவர் பற்றிய சிந்தனைகளை ஏற்படுத்திவிட்டது. அது பற்றிய நினைவுப்பதிவே இது.


உலகத்தமிழர்கள் கலை, இலக்கிய வரலாற்றில் , நாடகக் கலையைப்பொறுத்தவரை க.பாலேந்திராவுக்கு முக்கியமானதோரிடமுண்டு. இலங்கையிலும் , புகலிடத்தமிழச்சூழலிலும் அவரது குழுவினரின் அவைக்காற்றுக்கழகத்தின் பங்களிப்பு முக்கியமானது. இத்தருணத்தில் அவரைப்பற்றிச் சிறிது என் சிந்தனையினையோட்டுகின்றேன்.

நான் அவரை முதன் முதலில் சந்தித்தது மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில்தான். அப்பொழுதுதான் நான் அங்கு கட்டடக்கலைப்பிரிவுக்குத் தெரிவாகியிருந்தேன். அவர் பொறியியற் கல்வி கற்று, பொறியியலாளராக வெளியேறியிருந்தார். இருந்தாலும் அவர் அடிக்கடி பல்கலைக்கழகத்துக்கு வருவார். பல்கலைக்கழகத்தமிழ்ச்சங்கத்துக்காக அவரது நாடகங்கள் பல அக்காலகட்டத்தில் மேடையேறின. நான் நாடகங்களை இரசிப்பவனாகவிருந்தேன். நடிப்பவனாக இல்லாத காரணத்தால் அச்சமயத்தில் அவருடன் நெருங்கிப்பழக முடியவில்லை. ஆயினும் காணும் தருணங்களில் எப்பொழுதும் அவருக்கேயுரிய , இதழ்க்கோடியில் மலரும், அனைவரையும் ஈர்க்கும் புன்னகையுடன்தான் தோன்றுவார். எனக்கு அவரைப்பற்றி நினைத்தவுடன் முதலில் தோன்றுவது அந்தப்புன்னகை தவழும் முகமும், அதனைத்தொடர்ந்து அவர் இயக்கி , ஈழத்தமிழ் நாடக உலக்குக்கு அறிமுகப்படுத்திய நவீன நாடகங்களும்தாம்.

Continue Reading →

பேசா மொழி தமிழ் ஸ்டுடியோ: தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவுடன் கலந்துரையாடல்

பேசா மொழி தமிழ் ஸ்டுடியோ:  தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவுடன் கலந்துரையாடல்

25-06-2017, ஞாயிறு மாலை 5-30 மணிக்கு.

பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர், அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.

தமிழ் சினிமாவின் நூற்றாண்டைக் கொண்டாடும் விதமாக தமிழ் ஸ்டுடியோ பல்வேறு திரைக்கலைஞர்களுடன் கலந்துரையாடலை நடத்தி வருகிறது. அதன்படி ஞாயிறு மாலை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்கிறார்.

எஸ்.ஆர்.பிரபு வணிக வெற்றியோடு நல்ல தரமான படங்கள் எடுப்பதிலும் நல்லார்வம் கொண்டவர். அண்மையில் வெளியாகி மக்களாலும் பாராட்டப்பட்ட ஜோக்கர் திரைப்படத்தின் தயாரிப்பாளர் இவரே. வெளியானது முதல் பல்வேறு விருதுகளையும் இப்படம் பெற்று வருகிறது.

Continue Reading →

நூல் அறிமுகம்: லாரி ஓட்டுனர்களின் செலவுக்கணக்கு

நெடுஞ்சாலை வாழ்க்கை –கா.பாலமுருகன்  நூல்

சுப்ரபாரதிமணியன்ஓட்டுனர் ( லாரி ) சமூகத்தோடு பழகி 2 ஆண்டுகள் 12,000 கிமீட்டர்கள் பயணித்த அனுபவங்களை கா. பாலமுருகன்   இந்நூலில் பதிவு செய்திருக்கிறார். சின்னவயது அனுபவங்களில்,  ஆசைகளில் அவருக்கு ஓட்டுனர் ஆகவேண்டும் என்று மனதில் ஆழப்பதிந்திருக்கிறது. அதை நிறைவேற்றிக்கொள்ளும் ஒரு முகமாய் இப்பயணங்களை வட மாநிலங்களுக்கு ஓட்டுனர் ( லாரி ) சிலருடன்  மேற்கொண்டிருக்கிறார். குப்பியில் அடைத்த மருந்து குலுங்குவது போல் லாரி பயணங்கள் இருந்ததாகச் சொல்லும் பாலமுருகன்  அப்படித்தான்  படிப்பவர்களையும் குலுக்கி விடுகிறார்.அப்படி குலுக்கி எடுக்கும் சமாச்சாரங்கள் தான் எத்தனை எத்தனை.

1. ஓட்டுனர்களுக்கு   ( லாரி ) காவல்துறை ஆள் யார், . காவல்துறைக்காரர் யார்,  காவல்துறை ஆள் என்று சொல்லிக் கொண்டு பணம் பறிப்பவர் யார் என்று கண்டுபிடிக்கமுடியாமல் அவர்கள்  திணறுவதைப் பார்க்கும்போது சிரமமாக இருக்கிறது.

2. விதவிதமான டோல் பூத் காணிக்கைகள்… சாமிகள்,   பூசாரிகள் யார் என்றே தெரியாது. ஆனால் கட்டாயக் காணிக்கைகள். காணிக்கை தருவதில் ஒரு பவ்யம் வேண்டும் . இல்லாவிட்டால் பலிதான்   செக்போஸ்ட்டுகள், மாநில எல்லைகள், பெருநகர எல்லைகளில் இந்த பலி பீடங்கள் உள்ளன.

3. லாரிகளில் கொண்டு  செல்லும் பொருட்களை  திருடுவதில் கூட பலவிதங்கள். தந்திரங்கள்.அதைக்கண்டுபிடித்து ஜாக்கிரதைப் பண்ணீக்கொள்ள பெரிய பிரயத்தனங்கள். ஆள் நடமாட்டமில்லாத இடங்கள் அவர்களுக்குச் சொர்க்கம்.

Continue Reading →

கவிதை: கனடா மண்ணே நல்வாழ்த்து உனக்கே! (கட்டளைக் கலித்துறை)

- தேசபாரதி தீவகம் வே.இராஜலிங்கம் -கனடா

கஞ்ச மலராளோ
கானத்திருமகளோ
காற்றோடும்
விஞ்சும்  பனியாளோ
மேபிள் துகிலுரியும்
மெய்யாளோ
நெஞ்சக் கரமோடும்
நித்திலமோ வெய்யும்
நிலத்தாளோ
மஞ்சிற் படிந்த
வரலாறோ இந்நாள்
மகத்துவமே!

Continue Reading →

மல்லிகைஜீவா என்ற டொமினிக்ஜீவாவுக்கு 90 வயது (பிறந்த திகதி 27-06-1927)! இலக்கிய உலகில் கனவுகளை விதைத்தவரின் கனவுலகம்!

– ‘மல்லிகை’ ஆசிரியர் எழுத்தாளர் டொமினிக் ஜீவாவுக்கு ஜூன் 27 அன்று வயது தொண்ணூறு. அதனையொட்டி எழுத்தாளர் முருகபூபதி எழுதிய இக்கட்டுரை வெளியாகின்றது. –


எழுத்தாளர் டொமினிஜக் ஜீவா

நான்  அவரை முதல் முதலில் பார்க்கும்போது எனக்கு 13 வயது.  அவருக்கு அப்போது 37 வயது. காலம் 1964 ஆம் ஆண்டு. யாழ்ப்பாணம் ஸ்ரான்லிக்கல்லூரியின் ஆண்கள் விடுதியிலிருந்து படிக்கும் காலம். விடுதியில் பாரதி, வள்ளுவர், கம்பர் என்று மூன்று மாணவர் இல்லங்கள். எனக்கு அந்த வயதிலும் பாரதிதான் மிகவும் பிடித்தமானவர். அவரது பாடல்கள் இலகுவாகப்புரிந்ததும் ஒரு காரணம். பாரதி இல்லத்திலே சேர்ந்துகொண்டேன். என்னுடன் படிக்க வந்திருந்த எனது மாமா மகன் முருகானந்தன்  வள்ளுவர் இல்லத்திற்குச்  சென்றுவிட்டான். ஆண்கள் விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் மத்தியில் கிரிக்கட், உதைபந்தாட்டம், கிளித்தட்டு போட்டிகளை இல்லங்களின்  மட்டத்தில் நடத்துவார்கள். அவ்வப்போது மூன்று இல்லங்களும் இணைந்து கலை நிகழ்ச்சிகளும், ஒன்றுகூடல் விருந்துகளும்  நடத்தும். அத்துடன் யாராவது ஒரு பெரியவரை அழைத்து கல்லூரி பிரதான மண்டபத்தில் பேசவைப்பார்கள். அன்று ஒருநாள் வந்தவர் வெள்ளை வேட்டி, வெள்ளை நேஷனல் அணிந்திருந்தார். சிவந்ததேகம். அவர்தான் பிரபல பேச்சாளர் டொமினிக்ஜீவா என்று ஒரு இல்லத்தின் தலைவர் அறிவித்தார். அப்பொழுது அவர் மல்லிகை என்ற இலக்கிய இதழை தொடங்கியிருக்கவில்லை.  அவர் மேடையில் பேசும்போது ஆத்திரத்தில் பேசுவதுபோலவே எனக்குப்புரிந்தது. அதனைத்தான் பின்னாட்களில் தர்மாவேசம் எனப்புரிந்துகொண்டேன். அவருக்கு எமது தமிழ் சமூகத்திடம் ஏதோ கோபம், ஆழ்ந்த வருத்தம் இருப்பதாகவே அந்த வயதில் தெரிந்துகொண்டேன். சங்கானை என்னும் இடத்தில் நடந்த சாதிக்கலவரம் பற்றி அவர் பேசினார். சாதி என்றால் என்னவென்று தெரியாமல்தான் யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தேன். விடுதியில்தான் அதன் அர்த்தம் எனக்கும் முருகானந்தனுக்கும் தெரிந்தது.

டொமினிக்ஜீவா,  அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் பற்றியும் பேசினார். அவர், ஒரு விறகுவெட்டிப்பிழைக்கும் தொழிலாளியின் மகன் என்ற தகவலும், தெருவிலிருந்த மின்கம்பத்தின் கீழே அமர்ந்து படித்திருக்கிறார் என்ற செய்தியும் டொமினிக்ஜீவா அன்று சொல்லித்தான் எனக்குத் தெரியும். டொமினிக்ஜீவா அன்று பேசும்போது அவரது நெற்றி நரம்புகள் புடைத்திருந்தன. பேசி முடித்த பின்னர் அவருக்காக மேசையில் வைக்கப்பட்டிருந்த குளிர்பானப்போத்தலை எடுத்து அருந்தினார். மிச்சமும் வைத்தார். அதனை அருந்துவதற்கு இரண்டு மாணவர்கள் போட்டியிட்டனர். அதுதான் நான் டொமினிக்ஜீவாவை முதல் முதலில் கண்ட காட்சி. அவரை பின்னாட்களில் சந்திப்பேன் என்றோ, அவர் வெளியிட்ட மல்லிகையில்தான் எனது முதலாவது இலக்கியப்பிரதி வெளியாகும் என்றோ, அவர் எனது குடும்ப நண்பராவார் என்றோ, அவர் பற்றி கட்டுரைகளும் நூலும் எதிர்காலத்தில் எழுதுவேனென்றோ அந்தச் சிறிய வயதில் நான் கனவுகூட காணவில்லை. ஆனால், நான் அன்று காணாத கனவெல்லாம் பிற்காலத்தில் கனவாக வந்து நனவாகியிருக்கின்றன. அவருடன் நெருங்கிய பின்னர்.  அவரும் என்னுள் கனவுகளை விதைத்தார். அவற்றை நனவாக்கியிருக்கின்றேன் என்ற மனநிறைவுடன்,  தமது 90 ஆவது அகவைக்கு வந்திருக்கும் அவரை வாழ்த்துகின்றேன்.

Continue Reading →

கவிதை: மல்லிகையின் ஜீவா வாழ்க !

கவிதை: மல்லிகையின் ஜீவா வாழ்க !

தொண்ணூறு வயதினைத் தொட்டுநிற்கும் ஜீவாவே
இன்னும்நீ வாழ்வதற்கு இறைவனிடம் வேண்டுகிறேன்
உன்னுடைய ஊக்கத்தால் உரம்பெற்று வளர்ந்தவர்கள்
உனைவாழ்த்தும் வாழ்த்தெல்லாம் உரமாக அமைந்திடட்டும் !

யாழ்நகர வீதிகளில் நீநடந்த காட்சியெலாம்
வாழ்நாளில் சாதனையாய் மல்லிகையாய் மலர்ந்ததுவே
தாழ்வுதனை துணையாக்கி தலைநிமிர்ந்த உன்துணிவை
நாள்முழுக்க நினைந்தபடி நான்வாழ்த்தி மகிழுகின்றேன் !

Continue Reading →