படித்தோம் சொல்கின்றோம்: வ.ந.கிரிதரனின் ‘குடிவரவாளன்’ கதை. அகதியாக தஞ்சம் கோருபவர்களின் வாழ்வுக்கோலங்களை சித்திரித்த தன்வரலாற்று நாவல்.

முருகபூபதி -

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு திங்கட்கிழமை காலை 7 மணியளவில் நான் மெல்பனில் வாடகைக்கு இருந்த அந்த தொடர்மாடிக்குடியிருப்பில் எனது வீட்டின் வாசல் கதவு தட்டப்பட்டது. முதல் நாள் மாலை  வேலைக்குச்சென்று,  அன்று  அதிகாலை 3 மணியளவில் வீடு திரும்பி,  ஆழ்ந்த உறக்கத்திலிருந்த என்னை,  இந்த நேரத்தில் யார் வந்து  கதவு தட்டி எழுப்புகிறார்கள்…? எனது கட்டிலுக்கு அருகில் மற்றும் ஒரு படுக்கையில் உறங்கிய அந்தத் தமிழ் இளைஞர் காலை வேலைக்குச்சென்றிருந்தார். சென்றவர்தான் எதனையும் தவறவிட்டுச்சென்று,  மீண்டும் வருகிறாரோ…? அல்லது வீட்டின் சாவியை விட்டுச்சென்றுவிட்டாரோ…? அந்தக் காலைவேளையில் எவரும் வரமாட்டார்கள். ஆனால், யாரோ கதவை அடித்துத்  தட்டுகிறார்கள். போர்த்தியிருந்த  போர்வையை விலக்கிக்கொண்டு கதவைத்திறக்கின்றேன். வெளியே இரண்டு அவுஸ்திரேலியர்கள் தாம் குடிவரவு திணைக்களத்திலிருந்து வந்திருப்பதாக தமது அடையாள அட்டையை காண்பித்தார்கள். தயக்கத்துடன் கதவைத்திறந்தேன். நன்றி சொன்னார்கள்.  ” என்ன விடயம் ? ” எனக்கேட்கிறேன். வந்தவர்கள் எனது கேள்விக்கு உடனடியாக பதில் தராமல் வீட்டின் ஹோல், அதனோடிணைந்த சமையல்கட்டு , நான் உறங்கிய அந்த ஒற்றைப்படுக்கையறை யாவற்றையும் கழுகுப்பார்வை பார்த்துவிட்டு, சீராக இருந்த மற்ற கட்டிலைப்பார்த்து, ” இதில் படுத்திருந்தவர் எங்கே…?” எனக்கேட்டார்கள்.

” அவர் தனது நண்பரை பார்க்கச்சென்றிருப்பார்” என்று பொய் சொன்னேன்.

” நண்பரைப்பார்க்கச்செல்லும்போது பாணில் சாண்ட்விஷ்ஷ_ம் செய்து எடுத்துச்செல்வரா…?” என்று ஒருவர் கேட்டார்.

அதற்கு நான் பதில்சொல்லத்தெரியாமல் விழித்தேன். மற்றவர் கையிலிருந்த வோக்கி டோக்கியில் ஏதோ பேசினார்.

சில நிமிடங்களில் ஒரு பெண் அதிகாரி தனது அடையாள அட்டையை காண்பித்தவாறு எனது அறையிலிருந்து வேலைக்குச்சென்ற  அந்த இளைஞருடன் வாசலில் தோன்றினார். எனக்கு  யாவும்  அந்தக்கணமே  புரிந்துவிட்டது.

வீட்டில்  முன்னர்  இருந்துவிட்டு வேறு  இடங்களில் வேலைதேடிக்கொண்டு விடைபெற்றுவிட்ட  மூன்று பேருக்கு ஊரிலிருந்து வந்த கடிதங்களை ஒரு அதிகாரி கைப்பற்றினார்.

Continue Reading →

என் .ஜெயராமசர்மா (மெல்பேண், . அவுஸ்திரேலியா ) கவிதைகள்!

1. பொலிந்துவிட வா !

புத்தாண்டே! வருக!

- எம் . ஜெயராமன், மெல்பேண், அவுஸ்திரேலியா -

இரண்டாயிரத்துப் பதினேழே
இன்முகத்துடனே எழுந்தோடிவா
இயலாமைபோக்கிட எழுச்சியொடுவா
வறுமையொடு பிணியகல
வரம்கொண்டு வா
வளங்கொளிக்கும் வாழ்வுவர
மனங்கொண்டு வா
அறியாமை இருளகல
அறிவொளியாய் வா
அரக்ககுணம் அழித்துவிட
அஸ்த்திரமாய் வா
நிலையாக தர்மெங்கும்
நிறுத்திவிட வா
நிம்மதியாய் வாழ்வுவர
நீநினைந்து  வா !

Continue Reading →

பேசா மொழி தமிழ் ஸ்டுடியோ : புத்தாண்டு கலந்துரையாடல் @ பியூர் சினிமா புத்தக அங்காடி

நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!பேசா மொழி தமிழ் ஸ்டுடியோ : புத்தாண்டு கலந்துரையாடல் @ பியூர் சினிமா புத்தக அங்காடி
31-12-2016, சனிக்கிழமை மாலை 5.30 மணி முதல் இரவு 12 மணி வரை.

பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.
சந்திப்பு 1 : 5.30 மணிக்கு.

இயக்குனர் ஞானராஜசேகருடன் கலந்துரையாடல்

தமிழில் இதுவரை திரைப்படத் தணிக்கை தொடர்பான ஒரு விரிவான கலந்துரையாடல் நடைபெறவே இல்லை. தமிழ் சினிமாவின் நூற்றாண்டை முன்னிட்டு தமிழ் ஸ்டுடியோ வெவ்வேறு துறை சார்ந்த நூறு கலைஞர்களுடன் கலந்துரையாடலை நடத்தி வருகிறது. அதில் முக்கியமாக திரைப்படத் தணிக்கை துறை மண்டல அதிகாரியாக இருந்த ஞானராஜசேகரன் ஐ.ஏ.எஸ் அவர்களுடன் எதிர்வரும் சனிக்கிழமை மாலை கலந்துரையாடல் நடைபெறவிருக்கிறது. திரைப்பட தணிக்கைத் துறை (Censor) தொடர்பான ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடலாக இதனை மாற்றிக்கொள்வது நண்பர்களின் பொறுப்பு.

Continue Reading →

வேதா. இலங்காதிலகம் (டென்மார்க்.) கவிதைகள்!

1. புதிய ஆண்டினை….(2017)

புத்தாண்டே! வருக!வேதா இலங்காதிலகம்பண்டிகை நாட்கள் அனைவருக்கும்
இண்டிடுக்கு சந்துகளிலும் இன்பம்
கொண்டிருத்தல் ஆறுதல் ஆரோக்கியம்.
உண்டி உடையுடன் மகிழ்வும்
ஒண்டியற்ற உல்லாச அனுபமும்
கண்டிடல் தென்றலெனும் கொடுப்பனவு.

வண்டினமாய் ரீங்காரித்து நந்தவனத்தில்
சண்டித்தனமின்றித் தேனருந்தி மயங்கி
மண்டியிடாது நிமர்ந்து முரண்களை
முண்டியடித்துத் தள்ளி வெற்றித்
தண்டிகையில் வாழ்வு பயணித்து
துண்டில்  தோப்பாக இசைக்கட்டும்.

நொண்டிச் சாக்கு போக்கின்றி
வண்டில் வண்டிலாகப் பரிசின்றியும்
வெண்டிரை (கடல்) அலையான மகிழ்வுடன்
பண்டிகை களை கட்டியது.
அண்டியோருடனும் மகிழ்ந்து கூடி
கண்டிருப்போம் புதிய ஆண்டினை.

* துண்டில்  – மூங்கில்

Continue Reading →

எனது குறிப்பேட்டுப் பதிவுகள்.. (ஓர் ஆவணப்பதிவு) – 1

எனது குறிப்பேட்டுப் பதிவுகள்.. (ஓர் ஆவணப்பதிவு)....எண்பதுகளின் ஆரம்பத்தில் மார்க்சிய நூல்களை வாங்கிப்படிக்கத்தொடங்கிய காலகட்டம். அதுவரை தமிழ், இனம், பழம் பெருமை என்று உணர்வுகளின் அடிப்படையில் சமுதாய அரசியற் பிரச்சினைகளை அணுகிக்கொண்டிருந்தவனை , தர்க்கரீதியாக, அறிவு பூர்வமாக அணுகத்தூண்டியவை மேற்படி மார்க்சிய நூல்களே. ‘சி.ஆர்.கொப்பி’ என்று அழைக்கப்படும் நீண்ட தாள்களை உள்ளடக்கிய பேரேட்டில் (பொதுவாகக் கணக்கு வழக்குகளை எழுதக் கடை வியாபாரிகள் பாவிக்கும் குறிப்புப் புத்தகம் என்று நினைக்கின்றேன்) நேரம் கிடைத்தபோதெல்லாம் பல் வேறு விடயங்களைப்பற்றிய என் எண்ணங்களை எழுதிவரத்தொடங்கினேன். முகப்பு அட்டையில் எனக்குப் பிடித்த பாரதியாரின் , அறிஞர்களின் கருத்துகளை எழுதி, உள்ளட்டை மற்றும் முதற் பக்கத்தில் எனக்குப் பிடித்த ஆளுமைகளின் படங்களை ஒட்டி அக்குறிப்புப்புத்தகங்களை அலங்கரித்தேன்.

ஒவ்வொரு குறிப்புப் புத்தகத்தையும் தனி நூலாக, தலைப்புக்கொடுத்து வடிவமைத்தேன். இவ்விதம் எழுதிய நூல்களில் ஒரு சில இன்னும் என் கை வசமுள்ளன. ஏனையவை 83 இனக்கலவரத்துக்குப் பின் தோன்றிய அரசியற் சூழலில் தொலைந்து போய்விட்டன. அல்லது யார் கைகளிளாவது அவை இன்னுமுள்ளனவா தெரியவில்லை.

1. நூல் 1 : இயற்கையும், மனிதனும் (கட்டுரைகள், கவிதைகள், கருதுகோள்கள்)
2. நூல் 2: பிரபஞ்சமும் , மனிதனும் (கட்டுரைகள், கவிதைகள், கருதுகோள்கள்)
3. நூல் 3: தத்துவம், அரசியல், காதல் (கட்டுரைகள், கவிதைகள், கருதுகோள்கள்)
4. நூல் 4: கதை, கட்டுரை, கவிதைகள், எண்ண உருவகங்கள்

தற்போது இந்நூல்களின் அட்டைகள் கழன்று, தாள்களெல்லாம் ஒழுங்குமாறிக் கிடக்கின்றன. இவற்றையெல்லாம் இயலுமானவரையில் ஒழுங்குபடுத்தி, இவற்றிலுள்ளவற்றை அப்படியே எவ்வித மாற்றமும் இல்லாமல் மீண்டும் ஒரு பதிவுக்காகப் பிரசுரிப்பதா அல்லது பிழை, திருத்தம் செய்து பிரசுரிப்பதா என்றொரு சிந்தனை வளையவருகின்றது. ஏனெனில் அக்காலகட்டத்திலிருந்த உணர்வுகளைப் பிரதிபலிக்கும் இந்நூல்களிலுள்ள ஆக்கங்களில் பாவிக்கப்பட்டுள்ள சொற்கள், கருத்துகள் சிலவற்றை இக்காலகட்டத்தில் நான் பாவிப்பதில்லை. ஆனால் ஆக்கங்களின் அடிப்படைக்கருத்துகளில் பெரிதாக மாற்றமேதுமில்லையென்றே தோன்றுகின்றது. பிழை, திருத்தி எழுதினால் ஒரு காலகட்டப்பதிவுகளின் உண்மைத்தன்மை தொலைந்துபோகும் அபாயமுள்ளது. இது விடயத்தில் இன்னும் தெளிவான முடிவெதுவும் எடுக்கவில்லை.

Continue Reading →

இலண்டனில் எஸ்.அகஸ்தியரின் 20 ஆம் ஆண்டு நிறைவும் நவஜோதி ஜோகரட்னத்தின் ‘மகரந்தச்சிதறல்’ நூல் வெளியீடும்

லண்டனில் எஸ்.அகஸ்தியரின் 20 ஆம் ஆண்டு நிறைவும் நவஜோதி ஜோகரட்னத்தின் ‘மகரந்தச்சிதறல்’ நூல் வெளியீடும்‘இலங்கையிலும்;, அகஸ்தியர் பிரான்சுக்கு புலம்பெயர்ந்து வந்ததின் பின்னரும் அவருடன்  மிகவும் நெருக்கமான உறவு கொண்டிருந்ததையும்; தனது ‘வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்காவரை கப்பலோட்டிய தமிழர்கள்’ என்ற தனது நூலுக்கு அகஸ்தியர் அணிந்துரை வழங்கி அதனை நூலாக்கம் பெறுவதற்கு உதவினார் என்றும்’ லண்டன் ஹரோ நகராட்சி  மன்ற உறுப்பினர் மண்டபத்தில் இடம்பெற்ற ஈழத்து முற்போக்கு எழுத்தாளர் அகஸ்தியரின் 20ஆம் ஆண்டு நிறைவும், நவஜோதி ஜோகரட்னத்தின் ‘மகரந்தச் சிதறல்’ நூல் வெளியீட்டில் உரையாற்றும்போது லண்டன்; புதினம் ராஜகோபால் அவர்கள் தெரிவித்தார். அகஸ்தியரின் துணைவியான நவமணியின் பிரசன்னம் தன்னை மிகவும் மகிழ்ச்சிப்படுத்துவதாயும், அகஸ்தியரின் முற்போக்கு எழுத்துக்களுக்கு நவமணி பக்கபலமாகத் திகழ்ந்தாகவும், அவரின் நூல்களை வெளியிடுவதில் ஆர்வத்துடன் செயல்படுவதாகவும்’ மேலும் அவர் தெரிவித்தார்.

‘20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அகஸ்தியர் போன்ற சமூக சிந்தனையாளர்களின் கருத்துக்களுக்கு இலங்கையின் தேசிய பத்திரிகைகள் தயக்கம் காட்டின என்றும் ஆனால் அகஸ்தியர் அவர்கள் தனது பொதுவுடமைக் கொள்கையிலிருந்து தளராமல், பேனாவை வலிமை மிகுந்த ஒரு ஆயுதமாகக்கருதி, மக்களோடு  பின்னிப்பிணைந்த தத்துவங்களை படைப்புகளாக்கி, தொடர்ந்த அவரது எழுத்தாற்றலால் மிகுந்த செல்வாக்கை பெற்றார்’ என்று மூத்த பத்திரிகையாளர் பொன் பாலசுந்தரம் அவர்கள் அகஸ்தியர் பற்றிப்பேசுகையில் தெரிவித்தார். புரட்சிகர எண்ணங்களால் ஆகர்ஷிக்கப்பட்ட அகஸ்தியர் மக்களின் அபிலாசைகளை கருப்பொருளாகக் கொண்ட படைப்புக்களால் ஒரு புதிய மக்கள் யுகத்தை அமைக்க முடியும்; என்பதை வாழ்நாள் பணியாகக் கருதியவர் அகஸ்தியர்’ என்று மேலும் அவர் குறிப்பிட்டார்.

Continue Reading →

திரும்பிப்பார்க்கின்றேன்: தலையெழுத்தும் கையெழுத்தும் உறவாடுமா….? பேனாவை மாத்திரம் நம்பி வாழ்ந்த படைப்பாளி மு. கனகராசன்

திரும்பிப்பார்க்கின்றேன்: தலையெழுத்தும்  கையெழுத்தும் உறவாடுமா....? பேனாவை மாத்திரம் நம்பி வாழ்ந்த படைப்பாளி மு. கனகராசன்  =முருகபூபதி --“உங்களுடைய கையெழுத்து அழகாக  இருக்கிறது” என்றேன். “தலை எழுத்து அப்படி அல்ல” என்றார் கனகராசன். சொல்லும் போது மந்தகாசமான      புன்னகை.       பல  எழுத்தாளர்களின் தலை எழுத்து அவர் சொன்னது  போன்று      அழகாக    அமையவில்லை   என்பது  என்னவோ  உண்மைதான். வேறு எந்தத்  தொழிலும் தெரியாமல் எழுத்தை மட்டுமே நம்பிவாழ்வைத்    தொடங்கியவர்களின் வரிசையில்     இடம்    பெற்றவர்  மு.கனகராசன். இவர்       பணியாற்றிய   பத்திரிகைகள்   பல.       இலக்கியச் சிற்றேடுகள் சிலவற்றுடனும்      நெருங்கிய        தொடர்பு      கொண்டிருந்தார்.      நான்     அறிந்த வரையில்   மு.க.       என   எம்மால்       அழைக்கப்பட்ட  மு. கனகராசன்         சுதந்திரன் – தேசாபிமானி – புதுயுகம் , தினகரன்      முதலான  பத்திரிகைககளிலும்   சோவியத்நாடு இதழிலும் பணியாற்றியவர். 

சிற்பி      சரவணபவனின்      கலைச்செல்வி    செல்வராஜாவின்      அஞ்சலி   முதலான       இலக்கியச்       சிற்றேடுகளில்       வேலை     செய்திருக்கிறார். மல்லிகை      ஜீவாவுக்கும்      மல்லிகை       தொடர்பாக      அவ்வப்போது  ஆலோசகராக        இயங்கினார்.       மரணப்படுக்கையில்      விழுவதற்கு முன்னர்       இறுதியாக       தினகரனில்      வாரமஞ்சரியை      கவனித்துக்  கொண்டிருந்தார்.

கவிதை       சிறுகதை  நாடகம்       மொழிபெயர்ப்பு      இதழியல்      முதலான துறைகளில்       ஈடுபாடு      கொண்டிருந்த      மு.க      சிறிது காலம்    சோவியத் தூதுவராலயத்தின்      தகவல் பிரிவிலும்    வேலை செய்தார்.  எழுத்தாற்றல்        மிக்க      இவரது     படைப்புக்கள்  நூலாக வெளிவருவதில்தான்     எத்தனை       தடைகள்       தடங்கல்கள்  ஏமாற்றங்கள்.

Continue Reading →

ஆய்வு: இனவரைவியல் நோக்கில் புறநானூறு

- முனைவர் சு.தங்கமாரி, உதவிப்பேராசிரியர்,முதுகலைத் தமிழ், வி.இ.நா.செ.நா.கல்லூரி, விருதுநகர். -ஒரு சமூகத்தின் தத்துவார்த்த விழுமியங்களை அடுத்த தளத்தை நோக்கி நகர்த்தும் ஆக்கபூர்வ விளைவுகளில் ஒன்று ஆய்வு. அது தமிழ் அறிவுசார் மரபில் ஒரு பண்பாட்டு வடிவமாக இருந்து வருகிறது. 2000 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றுத் தொன்மை வாய்ந்த தமிழ் இனத்தின் பண்பாட்டு அசைவாக்கங்களை அத்தகைய ஆய்வுகளை துல்லியமாக புற உலகிற்கு எடுத்துக்காட்டும் விதமாக அமைந்து வருகின்றன. பண்பாட்டின் அடிப்படைகளை அறிந்துக்கொள்ள வரலாற்று ஆவணமாகத் திகழ்பவை இலக்கியங்கள் ஆகும். அதிலும் தமிழரின் வரலாற்று ஆவணங்களாக விளங்கும் சங்க இலக்கியங்களைப் பண்பாட்டு ஆய்வுகளுக்கு உட்படுத்துவதன் வழி தமிழர் தொல்கூறுகளை பண்பாட்டு விழுமியங்களின் தொடர்ச்சியை அறிந்து வெளிப்படுத்த இயலும். சங்க இலக்கியம் தொடாபான அண்மைக்கால ஆய்வுகளில் பலபுதிய போக்குகள் பதிவாகியுள்ளன. மானிடவியல், சமூகவியல், பண்பாட்டியல் ஆகிய புலங்கள் சார்ந்த சிந்தனைகளை உள்வாங்கிச் சங்க இலக்கியங்களைப் பொருள்கொள்ளும் முயற்சிகள் நடந்துள்ளன. அவ்வகையில் மானுடவியல் புலங்களுள் ஒன்றான இனவரைவியல் அடிப்படையில் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றைப் பொருள்கொள்ளும் முயற்சியாக இக்கட்டுரை அமைகின்றது.

இனவரைவியல் – விளக்கம்
19ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் மேலைநாட்டுக் கல்விப் புலங்களில் அறியப்பட்ட மானுடவியல் துறையின் ஒரு உட்பிரிவே இனவரைவியல் அல்லது இனக்குழுவியல் எனப்படுவது ஆகும். இனக்குழு என்னும் பொருளுடைய Enthnograpy என்னும் ஆங்கிலச்சொல் ‘Ethonos’, ‘graphein’ ஆகிய கிரேக்கச் சொற்களின் மூலங்களைப் பெற்றது. Ethnos என்பதற்கு இனம், இனக்குழு, மக்கள் என்பது பொருள். Graphein என்பதற்கு எழுதுவது அல்லது வரைதல் என்பது பொருள். ஆகவே இனவரைவியல் என்பது ஒரு தனிப்பட்ட இனக்குழு அல்லது மக்களைப் பற்றி எழுதுதல் என்னும் பொருளை உணர்த்துகிறது. ஒரு இனக்குழுவைப் பற்றிய முழமையான படிப்பு என்னும் வகையில் இப்பிரிவை இனக்குழுவியல் என்றும் கூறலாம்”.1

Continue Reading →

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்: “தமிழியல் ஆய்வு வரலாற்றில் பேராசிரியர்கள் க.கைலாசபதி மற்றும் கா.சிவத்தம்பி ஆகிய இருவரின் வகிபாகம்”

ஒருங்கிணைப்பு: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் சிறப்புபேச்சாளர்கள்உரை:“தமிழியல் ஆய்வுத்தளத்தில் பேரறிஞர் கைலாசபதி பதித்துள்ள தடம்” – பேராசிரியர் அ.ஜோசப் சந்திரகாந்தன்“பேராசிரியர் க.கைலாசபதியவர்களின் பார்வையில் சங்க இலக்கியம்” – கலாநிதி பார்வதி…

Continue Reading →